Saturday, April 25, 2015

படைப்புக்குக் கால இடைவெளி தேவை - எழுத்தாளர் அசோகமித்திரன் நேர்காணல்ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தமிழின் முன்னோடி எழுத்தாளர். எளிய உரையாடல்களால் ஆன அவரது சிறுகதைகள் வாழ்வை நுட்பாகச் சித்தரிப்பவை. அவரது மாந்தர்கள் மிகையுணர்ச்சி அற்ற இயல்பானவர்கள். சென்னையும் ஹைத்ராபாத்தும் அவரது கதைகளின் வேர்களாக இருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர் தொகுப்புக்காக சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். அசோகமித்திரனின் இலக்கியப் பங்களிப்பிற்காக அவருக்கு தமிழ்நாடு அரசின் மொழி வளர்ச்சித் துறை இந்தாண்டு திரு.வி.க விருதை வழங்கவுள்ளது.

இப்போது தமிழ்மொழி வளர்ச்சித் துறையின் திருவிக விருது கிடைத்துள்ளது. மிக நீண்ட பயணத்திற்குப் பிறகுதான் சமீபகாலமாகத் தொடர்ந்து விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறீர்கள்...

விருது கொடுக்கிறார்கள். சந்தோஷம். விருதுகொடுப்பதில் நிறையபேருக்கு மகிழ்ச்சி. அவ்வளவுதான். தொண்டு கிழம் ஆன பிறகு விருதுகொடுக்கிறார்கள். பலபேர் விருது இல்லாமலே இறந்துவிடுகிறார்கள். எனக்கு நிறைய வயசாகிவிட்டது. 82 வயசாகிவிட்டது. இந்த வயதில் எனக்கு விருது கொடுக்கிறார்கள். இந்த முறை சாரல் விருது விக்கிரமாதித்யனுக்குக் கொடுக்கிறார்கள். எனக்குக் கவிதை குறித்தே நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச் சந்தேகம் உண்டு. கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.

இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?

ஆம். ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்த சாதனம் வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்துக்குள் உதிர்ந்துபோய்விடும். அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை, அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள். மகத்தான படைப்புகள் எல்லாம் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை. இந்தியா விடுதலை பெற வேண்டும் என பாரதியாருக்கு ஒரு குறிக்கோள் இருக்கிறது. திட்டவட்டமான அந்தக் குறிக்கோள் கவிதையில் மட்டுமல்ல அவரது உரைநடையிலும் தெளிவாகத் தெரிகிறது. அது நடைவடிக்கையிலும் தெரிகிறது. அது பொருந்திப்போகிறது. இப்போது அதுபோல் இருக்கிறது? இது எனக்கே உள்ள கேள்விதான். ஆனால் முயன்றால் யாரும் பொன்மொழிகள் எல்லாம் சொல்லிவிடலாம்.

இந்த அபிப்ராயம் தமிழ்க் கவிதை மட்டுமானதா?

அப்படி இல்லை. முன்பு சொல்வார்கள், ‘எமிலி டிக்கன்சன்’ ‘எமிலி டிக்கன்சன்’ என்று. அந்தப் பெயரைச் சொன்னாலேயே கிழே விழந்துவிடுவார்கள். அவர் வீட்டுடனே இருந்தார். கல்யாணம் எதும் செய்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். அவருடைய வாழ்க்கையில் நிறைய சோகங்கள் இருக்கலாம். தன் மனதுக்கு ஆறுதல் தரக்கூடியதாக எழுதியிருக்கிறார். அதை வெளியிட்டுப் பெயர், புகழ் வர வேண்டும் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் எனக்குச் சந்தேகம்தான். நான் கவிதை எழுதியதில்லை. இனிமேல் என்ன கவிதை எழுதிக்கொண்டு? ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். 

ரொமண்டிஸிஸம் உச்சத்தில் இருந்தது காலகட்டத்தில் நீங்கள் எழுத வந்தீர்கள். ஆனால் உங்கள் கதைகளின் மாந்தர்கள் அதைக் களைந்த இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். 

அது என்னுடைய இயல்பு. நான் என் கதைகளுக்குள் இது இதையெலாம் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. சிலர் ரொமண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய இயல்பில் எங்காவது ரொமண்டிஸிஸம் இருக்கும். காண்டேகர் என்று ஒரு எழுத்தாளர். எல்லா இந்திப் படங்களும் அவர் கதைகள் மாதிரியே இருக்கும்; 2 ஆண்கள், 2 பெண்கள். மு.வ., காண்டேகரின் படைப்புகளை மிகவும் வியப்பார். ஆனால் மு.வ.விடம் அவ்வளவு ரொமண்டிஸிஸம் இல்லை. நன்னெறி கூறுவது போல இருக்கும். கல்கி எழுத்து நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கதை முடிவில் ஒரு ரொமண்டிஸிஸத்தைக் கொண்டுவந்துவிவார்.

18ஆவது அச்சக்கோடு கதைச் சம்பவம் நடந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எழுதிய நாவல். இந்தக் கால இடைவெளி எதனால்?

பொருமையாகத்தான் எழுத வேண்டும். அப்போதுதான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியானபடி எடுத்துக் கூற முடியும். அதவாது படைப்புக்கு நியாயம் செய்யும்படி. உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை மாதிரி ஆகிவிடும். நேற்று சசி தரூருக்கு எல்லோரும் அனுதாபம் காட்டிக்கொண்டு இருந்தார்கள். இன்று கொலைசெய்துவிட்டார்கள் என்கிறார்கள். அதனால் ஒரு இடைவெளி விட்டுச் செய்வது நல்லது. இது எல்லோருக்குமான வழியாகச் சொல்லவில்லை.

கால இடைவெளிக்குப் பிறகு எழுதும்போதுதான் உங்களால் துல்லியமாக எழுத முடிகிறதா?

ஒரு வரலாற்றுப் பின்னணியில் எழுதும்போது இம்மாதிரியான இடைவெளி தேவை. சில அந்தரங்கமான கதைகளுக்கு இடைவெளி தேவையில்லை. ஐந்து மாதம் முன்பு பக்கத்து வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதியுள்ளேன்.

நீங்கள் எழுத வந்த பிறகுதான் தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் உருவாகி வந்தன. ஒரு எழுத்தாளராக எதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கதை இந்தக் கோட்பாட்டுக்குள் வரும் எனப் பிரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு நிஜக் கதை அனைத்துக் கோட்பாடுகளையும் கொண்டதாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் மக்களுக்கு நலம் தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் தலித்தான் தலித்தைப் பற்றி எழுத வேண்டும் என்றில்லை. பிரேம் சந்த் தலித் இல்லை. அவர் எழுதிய சத்கதி ரொம்ப விஷேசமானது. ஒரு தலித் கூட அந்த மாதிரி எழுதியிருக்க முடியாது.

மிழ்ப் படைப்பு மொழியின் தொனி இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது...

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது இது. சில ஐரோப்பியப் படைப்புகள் நிறைய விவரிப்புகள் மிகுந்ததாக இருந்தன. இந்தப் பாதிப்பில்தான் எழுதினார்கள். ஆனால் அதைத் திட்டமிட்டுச் செய்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களே அறியாதபடி அந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் சிறந்த எழுத்தாளன் உரையாடல்கள் மிகுந்தும் எழுதுவான். விவரிப்புகள் மிகுந்தும் சிறப்பாக எழுதுவான்.

நாவல் என்ற ஒரு வடிவத்திற்குப் போன பிறகும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறீர்கள்...

நான் எழுதுகிறேன். பல பேரைச் சென்றடைகிறது. அது அவர்களுக்குப் புதிய விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் தி இந்து பொங்கல் மலரில் வைரம் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். பல பேருக்கு ஆச்சரியம், 500 ரூபாய்க்கு வைரத் தோடு கிடைக்குமா என்று. இதெல்லாம் இந்தக் கதை மூலம் அவர்களுக்குத் தெரிய வருகிறது. மனித உறவுகள் எப்படியெப்படி எல்லாம் இருந்தது? எப்படியெல்லாம் மாறியிருக்கிறது? எனச் சொல்கிறது. நாங்கள் ஊரை விட்டு வந்துவிட்டோம். பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம்.

ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?

இருக்கலாம். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. அந்த வேர் அறுந்து போய்விட்டது. இப்போது புதிதாக வேர்கள் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறதில்லை.

இன்றைக்குள்ள சிறுகதைகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

நல்ல தேர்ச்சி இருக்கிறது. ஆனால் சிறுகதைகளின் தேவை இன்றைக்குக் குறைவு. அதனால் ஒன்றொடு ஒன்றை ஒப்பிடுவது சிரமம்.

இன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து?

அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும். கைபிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற 6 மாதம் ஆனது.

இன்றைக்கு மானுடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்களே அதிகம் கவனம் பெறுகின்றன. இவை இலக்கியத் தரமானவையா?

பெரிய நாவலாக இருந்தாலே அதன் இலக்கியத்தரம் குறைந்து போய்விடும். நாவல் வடிவத்திற்கே குறைபாடு உள்ளது. உடனே,  ‘டால்ஸ்டாய் எழுதவில்லையா?’ என்பார்கள். war an peaceஇல் நிறைய பிழைகள் உண்டு. அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்காக ஒரு பின்னுரை, பிறகு ஒரு பின்னுரை, அதற்குப் பிறகு இன்னொரு பின்னுரை என அந்த நாவலில் நான்கு பின்னுரை இருக்கும். நாவல் எழுதிவிட்டு ஒருத்தன் பின்னுரை எழுதுகிறான் என்றால் அந்த நாவலில் அவனுக்குத் திருப்தி இல்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அதே மனுஷன் ரொம்ப சின்ன நாவல்களும் எழுதியிருக்கிறார். முன்பு இந்த மாதிரியான நாவல்களுக்கு வாசகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். பதிப்பாளர்களும் வெளியிடமாட்டார்கள்.

இந்த மாதிரியான நாவல்களுக்கு இன்று தேவை இருக்கிறதா?

தேவை, தேவையில்லை என்று இல்லை. எழுதியிருக்கிறார்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு ஒரு பரிசு கிடைத்துவிட்டால் படிக்கிறார்கள். படிக்கணும்.

நீங்கள் ஆங்கிலத்திலும் கவனம் பெற்ற எழுத்தாளர்...

ஆங்கிலத்தில்தான் முதலில் எழுதினேன். டெக்கன் ஹெரால்டில், இல்லுஸ்ரேட் வீக்லியில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து எழுதவில்லை. தமிழின் நிறைய செய்வதற்கு இருக்கிறது என நினைத்தேன். அது ஒரு மாதிரி ரொமண்டிஸிஸம்தான். 
சந்திப்பு: மண்குதிரை

ஊகங்களின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படுகிறது - பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் நேர்காணல்
மனைவியுடன் சீனி. விசுவநாதன்

சீனி.விசுவநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து பாரதி குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பாரதி குறித்து இதுவரை அச்சில் வராத பல அரிய தகவல்களையும் எழுத்துகளையும் இவர் பதிப்பித்துள்ளார். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பாரதி நூற்பெயர்க் கோவை ஆகிய நூல்கள்  இவரது அருஞ்சாதனைகள்.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

1934ஆம் ஆண்டு நவம்பர் 22இல் பரமத்தி வேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1944இல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில்  என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம்  வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

பாரதியின் மீது எப்போது ஈடுபாடு ஏற்பட்டது?

அந்தக் காலத்தில் இன்றைக்கு உள்ளதுபோல பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் கிடைக்காது. அதை வெளியில் புத்தகக் கடைகளில்தான் வாங்க வேண்டும். அதுபோல ஒருமுறை புத்தகம் வாங்கச் சென்றிருந்தபோது, கல்கி எழுதிய ‘பாரதி பிறந்தார்’ என்னும் புத்தகத்தை வாங்கினேன். இந்தப் புத்தகம் வழியாகத்தான் எனக்கு பாரதியின் மீது ஈடுபாடு வந்தது. அதற்கு முன்பு பாரதியின் கவிதைகளை வாசித்திருந்தபோதும் இந்தப் புத்தகம் பாரதியைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலை நடத்தி வந்த சங்கப் பலகை பத்திரிகையில் எப்போது பணிக்குச் சேர்ந்தீர்கள்?

1955இல் குமுதம் ‘இவரே என் தலைவர்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. அதில் ம.பொ.சியைப் பற்றி எழுதி முதல் பரிசு வாங்கினேன். அந்தக் கட்டுரை நிறைய பாராட்டைப் பெற்றது. ம.பொ.சி, ‘என்னைப் பற்றி எழுதியதது மகிழ்ச்சி. பரிசில் எனக்குப் பங்குண்டா?’ என வேடிக்கையாகக் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆண்டு தமிழரசுக் கழகத்தின் ஒரு மாநாடு சிதம்பரத்தில் நடந்தது. அந்தக் காலத்தில்  தமிழரக் கழகம் நடத்திய மாநாடுகள் என்னுடைய எழுத்தார்வர்த்திற்குக் காரணம் எனலாம். அங்கு சின்ன அண்ணாமலையைச் சந்தித்தேன். அவர் நடத்திவந்த ‘சங்கப் பலகை’ வாரப் பத்திரிகைக்குத் துணுக்குகள் அனுப்பி இருக்கிறேன். ஆனால் அவர் நேரடி அறிமுகம் கிடையாது. என்னைப் பற்றிக் கேட்கும்போது வேலை தேடிக்கொண்டிருக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னேன். அவர் பத்திரிகையில் வேலைசெய்ய விருப்பமா? எனக் கேட்டார். நான் விருப்பம் தெரிவித்தேன்.  அதே ஆண்டிலே நான்  சங்கப் பலகையில்  துணை ஆசியராகப் பணியாற்றத் தொடங்கினேன்.

பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா?

இருந்தது. 1953இலேயே  எழுதத் தொடங்கிவிட்டேன். மதுரையில் கருத்துமுத்து தியாகராஜ செட்டியார் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 1953இல் ஒளவையார் படம் வெளிவந்தபோது அந்தப் படம் குறித்து ஒரு பாராட்டுரை எழுதினேன். அதுதான் வெளிவந்த என் முதல் எழுத்து. அதன் பிறகு நாமும் பத்திர்கையில் எழுதலாம் என நம்பிக்கை வந்தது. அதே ஆண்டு ஆனந்தவிகடனிலும் ஒளவையார் படம் குறித்து எழுதினேன்.

பாரதி குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்னும் எண்ணம் எப்போது வந்தது?

1957இல் சங்கப் பலகை நின்றுபோனது. அப்போது நான் ஊருக்குத் திரும்பும் திட்டத்தில் இருந்தேன். ஆனால் சின்ன அண்ணாமலை என்னைப் பதிப்பகம் தொடங்கச் சொன்னார். இல்லை எனக்கு அந்தளவு அனுபவம் கிடையாது என்றேன். அப்பாடியானல் இங்கேயே வேறு எங்காவது பணியில் சேர விரும்புகிறீர்களா? எனக் கேட்டார். நான் சம்மதித்தேன். அவர் வழிகாட்டுதலின் பெயரில் 1961இல்  சிதம்பரம் செட்டியாரின் பாரதி பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினேன்.  

பிறகு நாமே பதிப்பகம் தொடங்கலாம் என்னும் ஆசை வந்தது. மேகலை என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கினேன். சின்ன அண்ணாமலை கூட்டங்களில் பேசும்போது சுவாரசியமான கதைகள் சொல்வார். அதையெல்லாம் நான் குறித்துவைத்திருந்தேன். அவற்றைப் புத்தகமாகத் தொகுத்து ‘சிரிப்புக் கதைகள்’ என்னும் பெயரில் வெளியிட்டேன். அதுதான் நான் கொண்டுவந்த முதல் புத்தகம். அதன் பிறகு 1962இல் சென்னை மாகாண அரசு பாரதி 80ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட முடிவெடுத்தது. அதை ஒட்டி ‘தமிழகம் தந்த மகாகவி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் கொண்டு வந்தேன். அதில் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ராஜாஜி, ஜீவா, பாலதண்டாயுதம் எனப் பலரிடம் கட்டுரைகள் வாங்கிப் பதிப்பித்தேன். 

கிட்டதட்ட முழு அச்சும் ஆன பிறகு பாரதிதாசனின் கட்டுரைக்காகக் காத்திருந்தேன். பாரதிதாசன் ஏற்கனவே வந்திருக்கும் கட்டுரைகளைக் கேட்டார். அதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கட்டுரை தருவதாகச் சொன்னார். அச்சு ஆகியிருந்த புத்தகத்தை அவரிடம் காண்பித்தேன். அவற்றை வாசித்த பிறகு கட்டுரை தந்தார். பிறகு அதையும் சேர்த்து வெளியிட்டேன். பாரதிதாசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். அறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. ‘தமிழகம் தந்த மகாகவி’ கிடைத்த இந்த வரவேற்பு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. பார தி குறித்து ஆய்வில் ஈடுபடும் எண்ணம் மேலோங்கியது.

பாரதிதாசன் பாரதியைச்  சந்தித்தது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன…

1908இல் பாரதி-பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரதி 1916 அக்டோபர் 27இல் சுதேசமித்ரனில் தராசுக் கடை பகுதியில், ‘இன்று ஒரு தமிழ்க் கவிராயர்’  தன்னைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தத் தமிழ்க் கவிராயர் சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன். பாரதியின் கூற்றில் அடிப்படையில் 1916ஆம் ஆண்டு நடந்த இந்தச்  சந்திப்புதான் முதல் சந்திப்புதான் முதல் சந்திப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பே வேணு நாயக்கர் திருமணத்தில் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. வேணு நாயக்கர் திருமணம் நடந்த ஆண்டைப் பற்றி காலக் குறிப்பும் இல்லை.

பாரதி ஆய்வில் நீங்கள் முதலில் கொண்டுவந்த அரிய நூல் எது?

சக்கரவர்த்தினிக் கட்டுரைகளைச் சொல்லலாம்.  ஏ.கே.செட்டியார் நடத்திவந்த குமரிமலர்  வாரப் பத்திரிகையின் மூலம் பாரதி  ஆசிரியராகப் பணியாற்றிய சக்கரவர்த்தினி பற்றித் தெரிந்துகொண்டேன். அந்தப் பத்திரிகை சக்கரவர்த்தினி கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டார்கள். சக்ரவர்த்தினி ஒரு பெண்கள்  மாத இதழ். இதில் 13 மாதங்கள் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சக்கரவர்த்தினிக் கட்டுரைகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். இதற்காகப் பழைய புத்தகக் கடைகள் பலவற்றுக்கும் அலைந்தேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்தேன். அவரும் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் கடைசியில் வேறு ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். அவை குளித்தலை தமிழ் கா.சு. நினைவு நூலகப் பொறுப்பாளர் இளமுருகு பொற்செல்வியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து பெற்று சக்கரவர்த்தினி கட்டுரைகள் நூலை 1979இல் பிரசுரித்தேன்.  பாரதி இயலுக்கு இந்நூல் முக்கியமான வரவாக இருந்தது. 1998இல் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் முதல் தொகுதி கொண்டுவந்தேன். இதுவரை 12 தொகுதிகள் வந்துள்ளன.

உங்களுடைய மகாகவி பாரதி வரலாறு நூலுக்கு முன்பும் பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல்கள்  வந்துள்ளன.  அவற்றில் இருந்து இது எவ்வகையில் முழுமையாகிறது?

1922இல் செல்லம்மா பாரதி சுதேச கீதங்களை இரு தொகுதிகளாகக் கொண்டுவந்தார்.  அதன் முதல் தொகுதியில் பாரதியின் நண்பரான சோமசுந்தர பாரதி, பாரதியின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் இரண்டாம் தொகுதியில் தொழிற்சங்கவாதியான சக்கரைச் செட்டியார் பாரதியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் எழுதினர். இவை இரண்டும் மிக முக்கியமான ஆதார நூல்கள். பிறகு பாரதி வாழ்க்கை குறித்துப் பல நூல்கள் வந்தாலும் அவை காலக் குறிப்பு குறித்த வலுவான ஆதாரமில்லாமல் செவிவழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன. ‘மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு’ நூல், பாரதியின் அரசியல் பங்களிப்பை,  பாரதியின் தகப்பனார் சின்னச்சாமி ஐயர் நிறுவிய எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பாக்டரியின் கணக்கு விவரங்கள், சின்னச்சாமி ஐயர் இறந்த பிறகு பாரதியின் படிப்புச் செலவுக்காக பாகீரதி அம்மையாரின் பேரில் வாங்கிய கடன் பத்திரம், சென்னை ஜன சங்கத்தில் பாரதியின் பங்களிப்பு போன்ற பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது.

இந்த நூலுக்கான ஆதாரங்களில் எப்படிப் பெற்றீர்கள்?

பாரதியின் தகப்பனாரின் இரண்டாம் தாரத்து மகனான சி.விசுவநாத ஐயர் 1977இல் கலைமகளில் பாரதி குறித்து ‘கவி பிறந்த கதை’ என்னும் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் அந்தக் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தபடி பாரதி பற்றி முழுமையான ஆய்வு நூலை நீங்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொன்னேன். ஆனால் அவர் அறிஞர்கள் இதைச் செய்வதுதான் சரியாக இருக்கும் எனப் பதில் அனுப்பினார். நான் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். வயோதிகம் காரணமாக என்னால் முடியாது என்று மறுத்து வந்தார். பிறகு அவருக்கு உதவ நான் வருவதாக எழுதினேன். அதுபோல மாதம்மாதம் அவர் இருந்த மானாமதுரைக்குச் சென்று அவருக்கு உதவினேன். ஆனால் உடல் நலப் பதிப்பால் அவரால் தொடர முடியவில்லை. 1980இல் தமிழக அரசு பாரதி நூற்றாண்டை ஒட்டி பாரதி படைப்புகளைப் பதிப்பிக்க முடிவெடுத்தது. அப்போது விசுவநாத ஐயர் வரலாற்று நூலை அரசு கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு 1981இல் அந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தார். அவர் எனக்கு அளித்த ஆதாரங்களை அளித்தார். புதுதில்லி நேரு நினைவு நூலகம், கல்கத்தா தேசீய நூலகம், புதுச்சேரி போன்ற இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி ஆதாரங்களைப் பெற்றேன்.

 பாரதி ஆய்வில் உங்களுக்கு  முன்னோடிகள் யார்?

பெ.தூரன், ஏ.கே.செட்டியார், ரா. அ.பத்மநாபன் போன்றோர்கள் என் முன்னோடிகள். அவர்களின்  ஆய்வுகள் பாரதி இயலுக்கு மிக முக்கியமானவை.

இதுவரை வெளியாகியுள்ள பாரதியியல் ஆய்வுகளில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

தக்க ஆதாரமில்லாமல்  ஊகத்தின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கக் கூடாது என்று என்னுடைய ஞானாசிரியர் விசுவநாத ஐயர்  கூறுவார். ஆனால் இங்கு பெரும்பாலும்  ஊகத்தின் அடிப்படையில்தான் வரலாறு உருவாக்கப்படுகின்றன. இதைப் பற்றி பாரதி ஆய்வும் சில சிக்கல்களும் என்னும் தனியாகப் புத்தகமே கொண்டு வந்துள்ளேன். உதாரணமாக பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதி ஆய்வு நூலில் சக்கரவர்த்தினி பத்திரிகையின் தலைப்பு அலெக்சாண்டர்   ராணியை க் குறிப்பதாகச் சொல்கிறார். ஆனால் அது விக்டோரிய மகாராணியைத்தான் குறிக்கிறது. 1905ஆம் ஆண்டு  சக்ரவர்த்தினி தலையங்கத்திலேயே பாரதி விக்டோரிய சக்ரவர்த்தினி  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசோ  பெரிய நிறுவனமோ செய்ய வேண்டியதை தனிமனிதனாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணிகளுக்கான வரவேற்பும் உதவியும் எப்படி இருந்தன?

நல்ல வரவேற்பு இருந்தது. அறிஞர்கள் பலரும் பாராட்டினார்கள். க. கைலாசபதி, பாரதிதாசன், ராஜாஜி, ரா.அ.பதமநாபன், கண்ணதாசன் போன்றோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1981ஆம் ஆண்டு பாரதி நூற்பெயர்க் கோவையை வெளியிட்டேன். அதில் அதுவரை வெளிவந்த பாரதியின் 370 நூல் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன். என்னுடைய இந்த நூல் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நூலைப் பாராட்டி சுந்தர ராமசாமி கடிதம் எழுதினார்.   2004ஆம் ஆண்டு தமிழக  அரசின் பாரதி விருதை வழங்கிக் கெளரவித்தது. பிரம்ம கான சபையாலும், காலச்சுவடு அறக்கட்டையாளலும் கெளரவிக்கப்பட்டுள்ளேன்.

பாரதியைக் குறித்துப் பலதரப்பட்ட  புரிதல்கள் இருக்கின்றன. நீங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலான பாரதி ஆய்வில் பாரதியை  எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

பாரதி ஒரு கவிஞன் என்பதைத் தவிர பொதுவெளியில் கவனம் பெறவில்லை. ஆனால் பாரதி ஒரு பத்திரிகையாளன். மொழிபெயர்ப்பாளன். பல முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிகையாளனாகக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பிறகு  பாரதியின் வறுமை பற்றிக் கூறுகிறார்கள். அது அவரே உருவாக்கிக்கொண்ட வறுமைதான். அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால்  சமூக வாழ்க்கையில் இயங்குபவர்கள் எல்லோருக்கும் உள்ள சிக்கல்தான் இது. எனக்கும்கூட இந்தச் சிக்கல் உண்டு.   பாரதி ஆய்வுக்காக வேலைசெய்யும்போது வீட்டைச் சரியாக கவனிக்க முடியாமல் போனது.

அதுபோல பாரதியின் வீச்சை அன்றைக்கு பிரிட்டிஷார் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள் எனலாம். 1908ஆம் ஆண்டு சுதேச கீதங்கள் வெளிவந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்  அச்சகத்தில் இருந்தே  வாங்கிச் சென்று மொழிபெயர்த்து அதில் தேச விரோதக் கருத்துகள் இருக்கிறதா எனச் சோதித்துள்ளனர். ஆஷ் கொலை வழக்கு விசாரணை ஒட்டி சுதேச கீதங்கள் 1912இல் திரும்பவும் மொழிபெயர்க்கப்பட்டது.  1910இல் புதுச்சேரியில் இருந்து வெளியிடப்பட்ட கனவு, ஆறில் ஒரு பங்கு புத்தகத்திற்கும் பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது.

50 ஆண்டுக்கால  பாரதி ஆய்வு உங்களுக்கு நிறைவாக உள்ளதா?

நிறைவாக  உணர்கிறேன். என்னளவில் நிறைவாகச் செய்துவிட்டேன். என் மனைவி ஆய்வுக்காகப் பெரிதும் துணை நின்றவர். அவர் சென்ற ஆண்டு மரணமடைந்து விட்டார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாது. இனி என்னால் இயங்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் பாரதி ஆய்வில் இன்னும் கண்டறியப்பட வேண்டியது ஏராளம் உள்ளன.

சந்திப்பு: மண்குதிரை

கொடுந்தமிழில் கதைகள் எழுதுகிறேன் - எழுத்தாளர் குமாரசெல்வா நேர்காணல்
குமராசெல்வா, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர்; சுவாரசியமான பேச்சுக்காரர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதி வட்டார வழக்கைத் தனது எழுத்தின் மூலம் பரவலான கவனத்திற்கு எடுத்துச் சென்றவர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் இவர், மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். உக்கிலு, கயம் ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. குன்னிமுத்து அவரது முதல் நாவல். 

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

சொந்த ஊர் மார்த்தாண்டம். குடும்பத்தில் பெரிதாகப் படித்தவர்கள் யாரும் கிடையாது. எண்ணெய் வியாபாரி, பந்தல் ஒப்பந்தகாரர் என அப்பா பல தொழில்கள் செய்தார். நான் ஏழாவது படிக்கும்போது திடீரென இறந்துவிட்டார். எங்கள் அம்மாதான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தார். நேசமணி நினைவுக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் படித்தேன்.

எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?

சிறிய வயதிலேயே கதைகள் எழுதத் தொடங்கி விட்டேன். ஊரில் ஒரு கடையில் வேலை பார்த்த ஒரு சின்னப் பையனுக்கு நேர்ந்த சம்பவத்தைப் பரீட்சைத் தாளில் கதையாக எழுதிவைத்தேன்.
அதைப் படித்துப் பார்த்து வாத்தியார் அடிப்பார் என நினைத்தேன். மாறாக அவர் அதைப் பாராட்டினார். ஏன் கதைகள் எழுதினேன், எனக்கு இந்தப் பாதிப்பு எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

இலக்கிய வாசிப்பு எப்போது கூர்மையடைந்தது?

கேரளப் பல்கலைக்கழகம் வழியாகத்தான். மலையாள இலக்கியங்களை வாசித்தேன். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் இயங்கிய ஒரு இடதுசாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.
அதன் வாயிலாக பாலஸ்தீன, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை வாசித்தேன். 1981-ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். அவர் மூலமாக அன்றைக்குள்ள தமிழ் இலக்கியங்கள் எனக்கு அறிமுகமாயின.

உங்கள் கதைகள் பிரசுரமானது எப்போது?

என் முதல் கதையான ‘ஈஸ்டர் கோழி’ தி. பாக்கியமுத்து நடத்திய ‘நண்பர் வட்டம்’ பத்திரிகையில் 1988-ல் வெளிவந்தது. ஆனால் அந்தக் கதையை நான் 1985-லேயே எழுதிவிட்டேன். இந்தக் கதைக்குப் பெரிய கவனம் கிடைத்தது.

ஆனால் சிறுகதையின் நுட்பங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சுந்தர ராமசாமிதான், ‘சம்பவங்களைக் கோவையாகச் சொல்வது மட்டும் சிறுகதை கிடையாது’ எனச் சிறுகதைகளின் நுட்பங்கள் குறித்து என்னிடம் சொன்னார்.

அதன் பிறகு என்னுடைய பல கதைகளை நானே எடிட்செய்து பார்த்தேன். அதற்குப் பிறகு அதற்கான வரவேற்பு தனியானதாக இருந்தது.

இவ்வளவு இறுக்கமான வட்டார வழக்கை ஏன் கதை சொல்ல எடுத்துக்கொண்டீர்கள்?

பொதுவாகக் கன்னியாகுமரி எனச் சொன்னால் நாஞ்சில்நாடு எனச் சொல்வார்கள். ஆனால் இதற்குள் பல நாடுகள் உள்ளன. முதலில் சேர நாடாக இருந்த இப்பகுதி வடக்கங்கூர், தெக்கங்கூர், வேணாடு, புறத்தாயநாடு எனப் பல பகுதிகளாகப் பிரிந்தது.

இதில் வேணாட்டின் ஒரு துண்டுப் பகுதிதான் விளவங்கோடு. இந்த விளவங்கோடு வட்டார மொழியில் சங்க இலக்கியத்தில் உள்ள பல சொற்கள் உள்ளன. ஆனால் பலரும் எனக்கு மலையாளத் தாக்கம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

உதாரணமாக ‘படிஞாயிறு’ என்ற ஒரு மலையாளச் சொல் உண்டு. இதன் அர்த்தம் ஞாயிறு படிகின்ற இடம். அதாவது மேற்கு திசை. இந்தச் சொல் சங்க இலக்கியத்தில் உள்ளது. இப்போது இது தமிழா, மலையாளமா?

அணங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டு. அதை வடமொழிச் சொல் என்கிறார்கள். ஆனால் அணங்கு (வருத்துகின்ற தெய்வம்), சங்க இலக்கியச் சொல். எங்கள் பகுதியில் உள்ள அரிப்புச் செடிக்கு ‘சொறி அணங்கு’ என்ற பெயர் உண்டு.

ஆக இம்மாதிரியான பழந்தமிழ்ச் சொற்கள் எங்கள் பகுதியில்தான் உயிர்ப்புடன் உள்ளன. நாங்கள் பேசுகின்ற தமிழ் செந்தமிழ் அல்ல; கொடுந்தமிழ். அந்தக் கொடுந்தமிழில்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மேலும் மற்ற ஊர்களில் வழங்கப்படும் மொழி ஒரு தொடர்பு ஊடகமாகத்தான் இருக்கும். எங்கள் மொழி, மொழிக்குள் ஒரு மொழியை வைத்துள்ளது.

விளக்கமாகச் சொல்லுங்கள்...

அதாவது எங்கள் ஊரைப் பொறுத்தவரை பொதுவான வட்டார வழக்கிற்கு உள்ளே அடிமைப்பட்ட மக்களுக்கு எனத் தனி மொழி உள்ளது. நான் அந்த அடிமைப்பட்டவர்களின் மறுக்கப்பட்ட மொழியில் எழுதுகிறேன்.

எங்கள் முன்னோர்கள், ‘வெற்றிலை’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது; ‘பழுத்திலை’ என்றுதான் சொல்ல வேண்டும். அதுபோல, ‘காலை உணவைச் சாப்பிட்டேன்; உண்டேன்’ எனச் சொல்லக் கூடாது. ‘இளங்குடி குடிச்சேன்’ என்றுதான் சொல்ல வேண்டும். மதிய சாப்பாட்டிற்கு ‘உச்சக் குடி’. இன்னொரு விஷயம் பார்த்தோமானால் இரவுச் சாப் பாட்டைக் குறிக்கும் சொல்லே அவர்களுக்கு இல்லை.

ஆக அவன் இரவு சாப்பிட்டிருக்கவே மாட்டான். நாவிதர், சேரமார், பண்டாரம், பறையர், நாடார் போன்ற சாதியினர் எவரும் இம்மாதிரியான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் இருந்தன.

நாஞ்சில் நாட்டிலிருந்து விளவங்கோட்டை எந்த அடிப்படையில் தனித்துப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்?

மொழி மட்டுமில்லாமல் எங்கள் பகுதிக்குத் தனித்த அரசியல், பண்பாட்டுப் பின்புலம் உண்டு. உதாரணமாகக் கேரளத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டப் பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க நடந்த போராட்டம் நாஞ்சில்நாட்டைவிட எங்கள் பகுதியில்தான் ஏ. நேசமணி தலைமையில் தீவிரமாக நடந்தது.

ஆனால் தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் இந்த அளவுக்குப் போராட்டம் நடைபெறவில்லை. ஈழத்தில் தந்தை செல்வா போராட்டத்தை முன்னெடுத்த அதே காலகட்டத்தில் இங்கே நேசமணி தலைமையில் தமிழ்த் தனி மாகாணம் கேட்டுப் போராடினோம்.

ஏன் உங்கள் பகுதில் இந்தப் போராட்டம் தீவிரமாக இருந்தது?

கேரளாவிற்கு உணவுப் பொருள்கள் வழங்கும் பகுதி இதுதான். இப்போதும் களியக்காவிளை சந்தையில் ஸ்டிரைக் என்றால் அடுத்தநாள் திருவனந்தபுரத்தில் தக்காளி நூறு ரூபாய் ஆகிவிடும்.
இது மட்டுமில்லாமல் செங்கல், மணல், கற்கள் எல்லாம் இங்கு இருந்துதான் போகின்றன. அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திலேயே உழைப்பாளிகள் நிறைந்த பகுதி இதுதான். இவ்வளவு வளமான பகுதியைத் தங்கள் வசமாக்க அவர்கள் நினைத்தார்கள்.

நாங்கள் அதை எதிர்த்துப் போராடினோம். அதுபோல நெய்யாறு இடதுகரை சானல் இந்த மாவட்டத்தின் வளத்தைக்கொண்டு கட்டப்பட்டது. ஆனால் அந்தத் தண்ணீரை இந்தப் பகுதிக்குத் தர மறுக்கிறார்கள். இதைப் பற்றிப் பேச ஆள் இல்லை. ஆனால் அன்றைக்கு நேசமணி இந்தப் பிரச்சினைக்காகக் கேரள மந்திரி சபையை ஒரு முறை கலைத்துப் போட்டார்.

உங்களுடைய ‘உக்கிலு’ கதையில் ஒரு பொது வாசகன் வாசிப்பதற்கான எளிமை இல்லையே?

எங்கள் ஊர் சந்தையில் சுமை தூக்கக்கூடிய ஒரு பெண் தொழிலாளியின் வாழ்க்கையைச் சொல்கிறேன். அந்த வாழ்க்கையைத் தரப்படுத்தப்பட்ட மொழியில் நான் எப்படி எழுத முடியும்? என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.

பனங்கிழங்கு விற்ற ஒரு பெண்ணுக்கு டிடிஆர் ‘Fine' அடித்திருக்கிறார். அதற்கு, “வாங்கித் தின்ன நன்னியைக் காட்டுங்கோ” எனப் பதில் சொல்கிறாள். இதை ‘வாங்கித் தின்ற நன்றியைக் காட்டுங்கள் துரைமார்களே’ என எழுத முடியுமா? குறைந்தபட்சம் அவள் சொற்களையாவது பதிவுசெய்கிறேன். அவள் குரலைப் பதிவுசெய்ய முடியவில்லை என்று வருத்தமும் எனக்கு உண்டு.

உரையாடல் இல்லாமல் கதை விவரிப்புக்குக்கூட வட்டார வழக்கைப் பயன்படுத்துகிறீர்கள்...

பெரும்பாலும் அப்படி இல்லை. சமயங்களில் என்னை அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது. நான் வட்டார வழக்கிற்குப் பிரயத்தனப்படவில்லை. அது இயல்பாக வந்துவிடுகிறது.

உங்கள் கதைகளில் கிறித்துவ மதத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறீர்கள்...

கிறித்துவம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. ஜாதிக் கட்டுகளிலிருந்து விடுவித்த மதமே மக்களை மதக் கட்டுகளுக்குள் கொண்டுபோய்விட்டது.

கிறித்துவ மதம் ஓர் அதிகார மையமாகிவிட்டது. மதக் கட்டுப்பாடுகளை எதிர்க்கக் கூடிய சிந்தனை இங்கு உருவாகியது. அதை என் கதைகளில் ஆதரிக்கிறேன்.

இப்போது என்ன எழுதிவருகிறீர்கள்?

மூக்கு என்ற ஒரு நாவலை எழுதி முடித்திருக்கிறேன். அதிகாரமையங்களின் மூக்கை உடைப்பதுதான் இந்த நாவல். மேலும் விளவங்கோட்டு வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்து வருகிறேன்.

சந்திப்பு: மண்குதிரை

Tuesday, April 21, 2015

டான் குயிக்ஸாட்டின் விநோத மிருகம்


ஐரோப்பாவின் முதல் நவீன நாவல் டான் குயிக்ஸாட் (Don Quixote). இதன் ஆசிரியர் மிகெல் டி செர்வாண்டிஸ் (Miguel De Cervantes). இவரை ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் முன்னோடி எனக் கொண்டாடுகிறார்கள். 1604ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஸ்பானிய நாவல் அதுவரை இருந்து வந்த நெடும்புனைவுகளுக்கு மாற்றான வாசிப்பனுவம் தந்தது. போர்கள், வீர சாகசங்களைக் கிண்டலுடன் விவரித்தது. இந்த நாவல் அன்றைய ஐரோப்பா இலக்கிய உலகத்தில் கொண்டாடப்படத் தொடங்கிய அதேநேரத்தில் செர்வாண்டிஸ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னாலும் இரண்டுமுறை அவர் சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அல்ஜீரியாவில் சிறைக் கைதியாகவும் அடிமையாகவும் இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு.
...
மிகெல் டி செர்வாண்டிஸ் 1547ஆம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிடில் பிறந்தவர். இவரும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல் முதலில் கவிதைகளைத்தாம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து சொற்களுடனான தன் போரை விட்டுவிட்டு நிஜமான ஒரு போரைச் சந்திக்கச் சென்றார். எழுதுகோலை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கையில் எடுத்தார். இத்தாலியில் இருந்த ஸ்பானிஷ் ராணுவப் பிரிவில் வீரனாகச் சேர்ந்தார். லெப்னட்டோ போரில் (Battle of Lepanto) செர்வாண்டிஸ் ஸ்பானிஷ் படைப் பிரிவின் சார்பாகப் போர் புரிந்தார். அது நடந்தது 1571ஆம் ஆண்டில். இப்போரில் செர்வாண்டிஸ் படுகாயம் அடைந்தார். அவருடைய இடதுகை காயத்தால் முழுவதும் செயலிழந்து போனது.

1575ஆம் ஆண்டு செர்வாண்டிஸும் உடன் போர் புரிந்த அவருடைய தம்பி ரோட்ரிக்கோவும் உடல் பலவீனமானதால் ஸ்பெயின் திரும்ப முடிவெடுத்தனர். அவர்கள் திரும்பும்போது கடற்கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அல்ஜீரியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அவர்களுடைய பெற்றோர் செர்வாண்டிஸையும் ரோட்ரிக்கோவையும் மீட்கப் பெரிதும் முயன்றனர். அவர்களுடைய உடைமைகளையும் சொத்துகளையும் விற்றனர். பலரிடமும் கடன் கோரிப் பெற்றனர்.

பெற்றோரின் விடா முயற்சியின் விளைவாக செர்வாண்டிஸின் தம்பியாகிய ரோட்ரிக்கோ (Rodrigo) 60 பொற்காசுகளுக்கு (60 Ducats) 1577ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டார். செர்வாண்டிஸுக்கு அவர்கள் 250 பொற்காசுகளைத் தொகையைப் பிணயமாகச் செலுத்தச் சொன்னார்கள். அவர் செய்த பெரும் பாவம், ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதுதான். அதுவும்  ஸ்பானிஷ் அரசர் இரண்டாம் பிலிப்பின் (Philip II) மூன்றாவது மனைவி எலிசபத் மறைவுக்குப் பிறகு அவர் குறித்து 1569ஆம் ஆண்டு எழுதிய நினைவஞ்சலிக் கவிதைகளுக்காக அவருக்கான பிணயத் தொகை அதிகரிக்கப்பட்டது. அரசர் காசு கொடுப்பார் என நினைத்து கொள்ளையர்கள் பிணயத் தொகையை அதிகரித்திருப்பார்கள். ஆனால் செர்வாண்டிஸின் பெற்றோர்கள்தான் அந்தத் தொகையைச் செலுத்தினர். அதற்கு அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியும் அவரையும் அவர் தம்பியையும் விடுவிக்க அவர் குடும்பம் பெற்ற கடன் சுமை அவர் மீது விழுந்தது. உடைமைகள் எல்லாம் விற்கப்பட்டிருந்தன. கடனை அடைப்பதற்கான உடல் வலிமையை சிறைவாசம் காரணமாக இழந்திருந்தார். அதனால் அவர் ஒரு யோசனைக்கு வந்தார். இயல்பிலேயே எழுத்தார்வம் இருப்பதால் நாடகங்கள் எழுதலாம் என முடிவுசெய்தார். அந்நாட்களில் ஸ்பெயினில் நாடகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அதனால் நாடகங்களில் பணிபுரிபவர்களின் நல்ல வருமானம் கிடைத்தது. செர்வாண்டிஸும் மேடை நாடகங்களுக்குக் கதை எழுதினார். நாட்டுக்குத் திரும்பிய 1580ஆம் ஆண்டிலே தன்னுடைய சிறை அனுவங்களை வைத்து இரு நாடகங்களை - El Trato de Argel (The Treaty of Algiers), Los Baos de Argel (The Baths of Algiers) - எழுதினார். அதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அவரது நினைப்பு நனவாகவில்லை. இரு நாடகப் பிரதிகள் மட்டுமே மேடை ஏறின. எழுத்தை நம்பி வாழ முடியாத சூழலே அவருக்கும் வாய்த்தது.

வேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என முடிவுக்கு வந்தார். அப்போது வேலை கிடைப்பது கொஞ்சம் எளிதான காரியமாக இருந்திருக்க வேண்டும். ஸ்பானிய படைகளுக்கான உணவுப் பொறுப்பாளராகப் பணியாற்ற வேலை கிடைத்தது. கிராமம் கிராமமாகச் சென்று உணவுப் பொருள்களைப் பெற்றுத் படைப்பிரிவுக்குத் தர வேண்டும். அது ஒரு பிரயோஜனம் இல்லாத வேலை. அதை வெகுதாமதமாகத்தான் செர்வாண்டிஸ் தெரிந்துகொண்டார். அதற்குள் சில பிரச்சினைகள் எழுந்தன. செர்வாண்டிஸ் உணவுப் பொருளைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 
...

சிறையில் இருந்து திரும்பிய பிறகு இனி வேலை பார்க்கக் கூடாது. முழு நேர எழுத்தாளனாக இருக்க நினைத்தார்.  ஆனால் தினப்பாடுக்கு அவர் பெரும்பாடு பட்டார். 1585ஆம் ஆண்டு செர்வாண்டிஸ் தன் முதல் குறுநாவல் லா கலடியாவை (La Galatea) கொண்டுவந்தார். ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் அந்த நாவல் வரவேற்பைப் பெறவில்லை. 

1604ஆம் ஆண்டின் இறுதியில் செர்வாண்டிஸ் தன் புதிய நாவலான டான் குயிக்ஸாட்டை (முதல் பகுதி - El ingenioso hidalgo don Quijote de la Mancha) எழுதி முடித்தார். அதன் எழுத்துப் பிரதியைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுமதிக்காக அரச பொறுப்பிலிருப்பவர்களுக்கும் கொடுக்கிறார். 26-செப்டம்பர்-1604ஆம் நாளில் வல்லோடொலிட் அரசவை அதிகாரிகளால் நாவலை அச்சடிக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 1605ஆம் ஆண்டு தொடக்கத்திலே டான் குயிக்ஸாட்டின் முதல் பதிப்பு வெளிவருகிறது. அதை அச்சிட்டபோதும் விற்பனைக்குக் கொண்டுவந்தபோதும் நாவலாசிரியர், பதிப்பாளர் இருவருக்குமே அது வெற்றி பெறும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை. 

ஆனால் நாவல் பெரும் வரவேற்பைப் பெற்று, விற்பனை துரிதமடைகிறது. அருகிலிருக்கும் அரகான் நாட்டிலும் போர்ச்சுகல் நாட்டிலும்கூட நாவலை அச்சடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 1605ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் நாவல் ஏறத்தாழ ஐந்து பதிப்புகளைக் கண்டிருந்தது. நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்நாவலை அடுத்தடுத்த பாகங்களில் நெடும் புனைவாகத் தொடர்ந்து எழுத நினைத்து அயராது இயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய துருதிஷ்டம் விடவில்லை.


1605ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வல்லாடிலோட் நகரத்தில் எஸ்குய்வா (Esgueva) ஆற்றுப்பாலத்துக்கு அருகில் கத்தோலிக்க ராணுவத்தைச் சேர்ந்த டான் கஸ்பார் டி எஸ்பிலிட்டா (Don Gaspar de Ezpaleta) என்னும் தளபதியை அடையாளம் தெரியாத இருவர் வாளால் தாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே யாரோ வருவதைக் கண்டு அந்த இரு நபர்களும் தப்பிச் சென்றனர்.

கஸ்பாரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கஸ்பார் உதவி வேண்டி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த குடியிருப்பு ஒன்றின் அருகில் வந்து விழுந்து வேதனையில் கத்தினார். அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த செர்வாண்டிஸ் காயம் அடைந்த அந்த மனிதர் வலியால் துடித்த குரலைக் கேட்டு வழிப்போக்கன் ஒருவன் துணையுடன் கஸ்பாரைத் தூக்கிச் சென்று வீட்டிற்குள் கொண்டுவந்தார். அவனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் முயற்சிகள் பலன் அளிக்காமல் கஸ்பார் இறந்தார்.

வல்லாடொலிட் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. டி செர்வாண்டிஸூம், அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆக செர்வாண்டிஸூக்கு இது மூன்றாம் சிறைவாசம். அவருடைய புதிய நாவலுக்கு அங்கீகாரம் கிடைத்துவரும் வேளையில் அதை அனுபவிக்க முடியாமல் சிறைச்சாலையில் கிடந்தார் செர்வாண்டிஸ்.

நீதி விசாரணையின்போது இறந்துபோன கஸ்பார் செர்வாண்டிஸின் மகளையோ அவருடைய தங்கையின் மகளையோ விரும்பி இருந்ததாகவும் அதனாலேயே செர்வாண்டிஸ் கோபம்கொண்டு கஸ்பாரைக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றக் காவலுக்குப் பிறகு செர்வாண்டிஸின் குடும்பத்தினருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கு விசாரணை முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டனர். செர்வாண்டிஸின் நாயகன் கிஹாட்டி விநோத மிருகம் என நினைத்து காற்றாலையுடன் சண்டைபோடுவான். கேலிக்குரியதாக நினைத்த அந்தக் காட்சி செர்வாண்டிஸின் வாழ்க்கையுடன் பார்க்கும்போது உண்மையில் கேலியாகத் தோன்றவில்லை.

மிக்கேல் செர்வாண்டிஸின் டான் குயிக்ஸாட் தமிழில் சிவ. முருகேசனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

Thursday, April 16, 2015

தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்


தேவதச்சன்

கவிதை, இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் பழமையானது; அலங்காரங்களுடன் ஆனது. மொழி வரிவடிவம் பெற்றதும், இலக்கியம் அலங்காரங்களைக் களைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டது; நாவல், சிறுகதை வடிவங்கள் பிறந்தன. கவிதையின் தேவை கேள்விக்குள்ளானபோது அதுவும் தன் ஒப்பனைகளைக் களைந்து உரைநடையானது; புதுக்கவிதை தோன்றியது. ஆனால் இதற்குப் பிறகும், புதுக்கவிதை பிறந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும், ‘கவிதையின் தேவை என்ன?’ என்ற கேள்வி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1970-களில் எழுதத் தொடங்கி இன்றுவரை புதுமையைத் தக்கவைத்திருக்கும் தேவதச்சனின் கவிதைகளைத் வாசிக்கும்போது இந்தக் கேள்விக்கான பதிலை உணர்ந்துகொள்ள முடிகிறது.‘கொக்கின் வெண்ரோம’ சிலுசிலுப்பு போன்ற மென் உணர்வுகள் கவிதை வழியாக மட்டுமே வெளிப்படக்கூடியவை. உரைநடைக்கு அந்தத் திராணியில்லை என்றுதான் தோன்றுகிறது. தேவதச்சனின் கவிதைகள், ‘கவிதையின் தேவை’-க்குத் தற்காலச் சான்று.

...

தேவதச்சனின் கவிதைகள் அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவர் ‘இமைகளின் மொழி’யிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). இந்த நெருக்கமான காட்சி இடுக்குகளின் வழியாக நமக்குப் புலப்படாத ஒரு கணத்தை எழுப்பிவிடுவார். இதன் மூலம் கவிதை ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது. இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது. உதாரணமாக இந்தக் கவிதையின் காட்சி,
70களில் தேவதச்சன்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று

ஏதாவது ரயில்வே கேட்டில் பார்த்திருக்கக்கூடிய ஒரு பழக்கப்பட்ட காட்சி. ஆட்டிடையன் ஒருவன்தான். ஆனால் தூக்குவாளியும் தொரட்டியும் தலைப்பாகையும் எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன. மழையும், காற்றும்கூடப் பன்மையாகின்றன. இதுதான் அசாதாரணம். யாளிகள் கொண்டும், புரண்டு கிடக்கும் மலைத் தொடர்கள் கொண்டும் உருவாக்க முடியாத கவிதைக்குரிய விநோதம். புதுக்கவிதைக்கு இந்த அசாதாரணம் அவசியம் என்கிறார் அதன் தந்தையாகப் போற்றப்படும் க.நா.சுப்ரமண்யம். ‘எண்ணிலிறந்த பகல்கள்’ என்ற சொல்லில் இந்தக் கவிதையைத் திறக்கச் செய்கிறார். அதே ரயில்வே கேட். ஆனால் காட்சி, தினம் தினம் புதிதாக நிகழ்கிறது. ‘எப்படா திறக்குமென்று’ அலுப்புடன் தினமும் காத்திருக்கிறான் இடையன்.

...

தேவதச்சனின் கவிதைமொழியும் எளிமையானது; மிக நெருக்கமானது. ஒருவிதத்தில் பார்த்தால் இது கவிதைக்கு நேர் எதிரான தன்மை. மக்கள் மொழியில்தான் கவிதை எழுதுகிறார். ‘பேருந்து நிலையம்’ என்ற சொல்லுக்கு மாறாக ‘பஸ் நிலையம்’ என்றே பயன்படுத்துகிறார். அவர் வாழும் கரிசல் நிலத்தின் சில ‘வழக்குச் சொற்க’ளும் அப்படியே கவிதைகளில் வெளிப்படுவதும் உண்டு. மேற்சொன்ன கவிதையிலும் ‘எப்படா திறக்குமென்று’ சொல்கிறார். ஆனால் எளிய மொழி, நெருக்கமான காட்சி வழியாக ஒரு புதிர் அனுபவத்தை உருவாக்கிவிடுகிறார். அது வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்தும் அனுபவம்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கவிதைகள் இப்போது மூன்றாம் தலைமுறையில் இருக்கின்றன. இந்த இடைவெளியில் பல முக்கியமான சமூக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இவற்றை தேவதச்சனின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆண்டாளும், சிபிச்சக்கரவர்த்தியும், பாரதியும் கவிதைகளுக்குள் புத்தாக்கம் பெறுவதுபோல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கையும் பதிவாகிறது. பஸ், முரட்டு லாரி, ரயில், சைரன் ஒலி, ரவுண்டானா, சிக்னல், வாகனச் சோதனை எல்லாமும் வருகின்றன. கண்ணாடி பாட்டில் உடையும் க்ளிங் ஓசை, சைக்கிள் பெல்லின் க்ளிங் க்ளிங் சத்தம், காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் இரைச்சல் எல்லாமும் இருக்கின்றன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை, தற்கொலை செய்துகொண்ட நகைச்சுவை நடிகை, அடிக்கடி நிகழும் மின்வெட்டு போன்ற சமகாலமும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் இந்தச் சமகாலச் சுமையை தேவதச்சனின் கவிதைகள் இலகுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றன.

...

சிறகு அசையும் மென்மையும், நிசப்தம் உண்டாக்கும் சப்தமும் தேவதச்சன் கவிதை அம்சங்களில் முக்கியமானவை. இவை தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே வருபவை.‘துவைத்துக் கொண்டிருந்தேன்/ காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்/அடுத்த துணி எடுத்தேன்/காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்’ இதே சப்தம் மற்றொரு கவிதையில் காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் சப்தமாக ஒலிக்கிறது. பூட்டப்பட்டிருக்கும் பானு வீடு உருவாக்கும் சப்தமாக கேட்கிறது. நிசப்தம் போடும் குருவிகளின் சப்தத்திற்கும் பானு வீட்டின் சப்தத்திற்கும் ஆன கால இடைவெளி சில ஆண்டுகள் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அனுபவத்தை தேவதச்சன் புதிதாகத்தான் சந்திக்கிறார். இல்லாமை உருவாக்கும் இருப்பு அவரது கவிதைகளில் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் ஓர் அம்சம்.

...

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்/நீராலானவன் என்று
அதன் குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே தெறிக்கிறேன் நான்

இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை அவர் மற்றொரு கவிதையில் வெண்ரோமச் சிலுசிலுப்பு என்கிறார். ஒரு மைனாவைப் பார்க்கிறோம். அதன் சிறகசைவு நம் நினைவில் இருக்கும் வேறோர் அனுபவத்தைத் தூண்டுகிறது. அந்த நினைவு உண்டாக்கும் சிலுசிலுப்பால் நம் மீது நாமே தெறித்துக்கொள்கிறோம். இது விளக்க முடியாத ஒரு பேருணர்வு, பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி, பல்லாயிரம் காட்சிகளில் ஒரு காட்சி. இதுதான் தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்.