Friday, October 30, 2015

கட்சி மட்டுமல்ல கம்யூனிஸம்

இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளரான எம்.எம்.மணி ஒரு கட்சிக் கூட்டத்தில், “கட்சிக்கு எதிரானவர்களைக் கொன்றிருக்கிறோம். எதிரிகள் குறித்துப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொருவராகக் கொல்வோம்” என உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அதற்குச் சில மாதங்கள் முன்புதான், மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கியிருந்த டி.பி.சந்திரசேகரன் கொல்லப்பட்டிருந்தார். மணியின் இந்தப் பேச்சு நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது கேரளத்தின் அரசியல் படுகொலைகளை இந்திய அளவிலான கவனத்திற்கு எடுத்துச் சென்றது.இம்மாதிரியான அரசியல் கொலைகளைப் பின்னணியாகக் கொண்ட மலையாளப் படம் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’(2013). 1960, 1970, 1980களில் நடக்கும் மூன்று சம்பவங்கள், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன. அவர்களின் ஆளுமையைப் பாதிக்கின்றன. இந்த மூன்று சிறுவர்களின் வாழ்க்கையின் ஊடே கேரள கம்யூனிஸ்ட் கட்சி அரசியலும் பதிவுசெய்யப்படுகிறது. இந்தச் சிறுவர்களில், கய்தேறி சகதேவனும் செகுவரா ராயும் இடதுசாரிப் பின்புலம் கொண்ட குடும்பத்தின் வாரிசுகள். இடதுசாரிகளாகவே ஆகின்றனர். 1980களின் இறுதியில் வளரும் ஜெயன், பணம் இல்லாத காரணத்தால் தன் அக்கா அரசுப் பொது மருத்துவமனையில் இறக்க நேரிட்டதால் பணமே வாழ்க்கையில் முக்கியம் எனக் கருதுகிறான். லஞ்சம் வாங்குவதற்காகவே காவல் துறை உதவி ஆய்வாளர் ஆகிறான்.

கட்சிக்காகச் சித்தப்பாவையும் தந்தையையும் பறிகொடுத்த சகதேவன் மார்க்சிஸ்ட் கட்சியின் RPI(M) இளைஞர் பிரிவான ஒய்.எஃப்.ஐ. வழியாக வளர்ந்து அதன் தலைவராகிறான். மாநில ஆட்சி நிர்வாகத்திலும் செல்வாக்கு மிக்க தலைவராகிறான். சகதேவனின் வளர்ச்சி ‘தோழர் எஸ்.ஆர்.’ என அழைக்கப்படும் அதன் மூத்த தலைவருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஒரே கட்சியில் இருந்தாலும் இருவரும் எதிர்க்கட்சியினரைப் போல் செயல்படுகின்றனர். இவர்களுக்கு இடையிலான பொறாமையும் பகையும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் வெளிப்படுகின்றன. இந்த இரு பாத்திரங்களும் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான வி.எஸ்.அச்சுதானந்தனையும் பிணராயி விஜயனையும் சித்திரிப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை நேரடியாகச் சித்திரிப்பதால் கேரள மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மலபார் பகுதியில் இந்தப் படத்திற்கு அதிகாரபூர்வமற்ற தடை நிலவியது.

தந்தையைக் கட்சிக்காகப் பலிகொடுத்த செகுவரா ராய்க்குக் கட்சி அலுவலகமே வீடாகிறது. அங்கேயே வளர்ந்து படிக்கிறான். காத்திரமான கம்யூனிஸ்ட்டாக உருவாகும் ராயின் உக்கிரமான பேச்சுக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கிறது. டெல்லி வரை வரை சென்று ராய் உரை நிகழ்த்துகிறான். ஆனால் ராயின் இந்த வளர்ச்சியை அப்போது கட்சியில் உயர்மட்டத்திலிருக்கும் சகதேவனால் சகிக்க முடியவில்லை. சகதேவன் நடவடிக்கைக்கு எதிராகவும் கட்சிக் கூட்டங்களில் ராய் பேசுகிறான். இதனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்போல வேடமிட்ட சகதேவன் ஆதரவாளர்கள் ராயின் இடது கையைத் (Left Hand) தாக்கிச் செயலிழக்கச் செய்கிறார்கள். இது படம் சித்திரிக்கும் முக்கியமான குறியீடு. உண்மையான கம்யூனிஸ்டான ராயின் இடது கை ஊனமாக்கப்படுகிறது.


சகதேவன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தனியாகப் பத்திரிகை நடத்திவரும் சுரேஷ் குமார், அலியார் கைகளில் கிடைக்கிறது. அதைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க நினைக்கிறார்கள். இதைக் குறித்துத் தங்கள் ஆலோசகரான செகுவரா ராயிடம் கூறுவதற்கு அலியார் வரும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. இந்தக் காட்சியின் ஊடே சகதேவனுக்கு ஆதரவாகக் கட்சியின் இளைஞர் பிரிவினர் நடத்தும் போராட்டமும் அதற்கு எதிரான போலீஸின் தடியடியும் வந்துபோகிறது. இந்த ஆதாரங்களை வெளியிடுவதைவிட இதைக் குறித்துக் கட்சிக்குத் தெரியப்படுத்தினால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்பது ராயின் எண்ணம். ஆனால் சுரேஷுக்கும் அலியாருக்கும் இதில் பெரிய உடன்பாடில்லை. என்றாலும் ராயின் பேச்சுக்கு இணங்குகிறார்கள்.


ராய் கட்சியின் மற்றொரு தலைவரான எஸ்.ஆரிடம் இந்த ஆதாரங்களை அளித்துக் கட்சிக்குத் தெரியப்படுத்தலாம் என நினைக்கிறார்கள். எஸ்.ஆரிடம். இது குறித்துப் பத்திரிகையில் மூன்றாம் பக்கத்தில் சிறிய அளிவில் செய்தி வெளியிடச் சொல்கிறார். ஆனால் சுரேஷுக்கு அதில் உடன்பாடில்லை. முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என விரும்புகிறான். அலியாரையும் சம்மதிக்க வைக்கிறான். காலையில் முதல் பக்கத்தில் சகதேவனின் படத்துடன் செய்தி வெளிவருகிறது. இது தொலைக்காட்சிகளின் அன்றைய தலைப்புச் செய்தியாகிறது.

குடும்பஸ்தனான சுரேஷ், தன் மனைவி குழந்தைகளுடன் தலைமறைவாகிறான். அவனது வீடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ராய் இந்தச் சகோதரப் படுகொலைகளைத் தடுக்க முயல்கிறான். எஸ்.ஆரைப் பார்க்கிறான். ஆனால் அவர் இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள நினைக்கிறார். இறுதியில் ராயின் முயற்சி பலனளிக்கவில்லை. இருவருமே கொல்லப்படுகிறார்கள். இதற்கடுத்து தொடர்ந்து நிகழும் கொலைகளும் மரணமும் கட்சி வலியுறுத்தும் அரசியல் சித்தாந்தத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன.

அருண்குமார் அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் மிகச் செறிவாகச் செதுக்கியிருக்கிறார். முரளிகோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இதன் முக்கியப் பாத்திரமான செ குவரா ராயாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது வசனங்களும் படத்திற்கு வலுச் சேர்க்கின்றன. “இடது கால் கொண்டு கோல் அடிக்க வலது காலில் நின்றால்தான் முடியும்” “பார்ட்டி மட்டுமல்ல கம்யூனிசம்” “இடதுசாரிக் கட்சி இரண்டானால் ஒன்று இடதாகவும் இன்னொன்று வலதாகவும்தானே மாற வேண்டும்” போன்ற சில உதாரணங்களைச் சொல்லலாம்.


சமகால அரசியல் செயல்பாடுகளைத் திரைக்கதையாக்குவது என்பது சவாலான காரியம். ஆனால் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறார் முரளிகோபி. நிகழ்காலச் சம்பவங்களைச் சின்ன மாற்றங்களுடன் திரைக்கதையில் கோத்திருக்கும் நேர்த்தி பாராட்டத்தக்கது. வெவ்வேறு சரடுகளாகப் பிரிந்து செல்லும் காட்சிகள் கதையின் மையச் சரடான கேரள கம்யூனிஸக் கட்சியின் செயல்பாட்டை காத்திரமாக விமர்சிக்கிறது. சமூகக் கோபங்களையும் உறவுச் சிக்கல்களையும் ஆர்ப்பாட்டமில்லாமல் இந்தப் படம் பதிவுசெய்கிறது. ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் வலுவாக வெளிப்பட்டுள்ளது. மேலும் படுகொலைகளும் வன்முறைச் சம்பவங்களும் மனித மனத்தின் விநோதங்களின் வெளிப்பாடு என இப்படம் உளவியல் ரீதியாகவும் அலச முயல்கிறது.

ஆனால் பல பத்தாண்டுகளாக கம்யூனிஸம் செல்வாக்குச் செலுத்திவரும் கேளரச் சமூகத்தைச் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு வலுவாகச் சித்திரிப்பதுதான் இதன் முக்கியமான அம்சம். அதிகாரப் போட்டியால் பூர்ஷ்வாக்களுக்கு (முதலாளித்துவத்திற்கு) எதிராகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பூர்ஷ்வாக்களை, - இந்தப் படத்தின் கதாபாத்திரமொன்று சொல்வதைப் போல - பூர்ஷ்வாக்களின் அப்பன்களை உருவாக்கிவருகிறது என்பதற்கு இந்தப் படம் கதாபாத்திரங்களைச் சாட்சியாக்குகிறது.

(2014 செம்படம்பரில் எழுதியது)

Tuesday, October 13, 2015

இறுதிப் போருக்குப் பின்னே

பிரபாகரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். கொழும்பில் கொண்டாட்டம் தொடங்குகிறது. பிரபாகரனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. சாலைகளெங்கும் சிங்களக் கொடிகளை அசைத்தபடி இளைஞர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சிறுவர்கள் அதி நவீனப் பொம்மைத் துப்பாக்கியால் தங்களுக்குள் சுட்டுக்கொள்கிறார்கள். பட்டாசுகளின் வெடிச்சத்தங்கள் விண்ணைப் பிளக்கின்றன. Between tomorrow and yesterday என்னும் சிங்களப் படத்தின் தொடக்கக் காட்சி இதுதான். இந்த ஆண்டு வெளிவந்துள்ள இந்தப் படம் போருக்குப் பிறகான இலங்கையின் இன்றைய சிக்கலைச் சித்தரிக்கிறது. இப்படம் போரில் ஈடுபட்ட இருதரப்பையும் விமர்சிக்கிறது. இதன் இயக்குநர் நீலேந்திர தேசப்பிரிய.

போர் முடிவடைந்த பிறகு தென்னிலங்கையைச் சேர்ந்த பலரும் வடபகுதிக்குச் சுற்றுலா செல்கிறார்கள். விடுதலைப் புலிகள் இருந்தவரை வட பகுதி என்பது சிங்களவனுக்கு வெறும் சொற்களால் ஆன கற்பனை நிலம்தான். அவர்களுக்கு வடபகுதியைப் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் இருக்கிறது. மேலும் தங்கள் படைகள் எதிரியை வீழ்த்திய இடத்தைக் காணும் பெருமித உணர்வு அவர்களிடம் இருக்கிறது. விமல், சுராஜ், ஸ்ரீதுங்கா ஆகிய மூன்று இளைஞர்களும் விமலின் ஆட்டோவில் செல்லத் திட்டமிடுகிறார்கள். இவர்கள் மூவரும்தான் கதையின் மையப் பாத்திரங்கள். இதில் சுராஜ் பல்கலைக்கழக மாணவன். அவனுக்கு காதலியின் அண்ணனுடன் பகை இருக்கிறது. “பார்த்தாயா? அது போல் உன்னையும் சுட்டுவிடுவோம்” என ஒரு காட்சியில் சுராஜைப் பார்த்து அவன் மிரட்டுகிறான். சுராஜ் எப்போதும் பயத்துடனும் உணர்ச்சிவசமாகவும் இருக்கிறான். அவன் உருவம் திரையில் தோன்றும் காட்சியில் ஒரு மெல்லிய சோகப் பின்னணி இசை வந்து செல்கிறது. விமல் ஆட்டோ ஓட்டுபவன். கல்யாணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். விமலுக்கு தன் பெரியப்பாவுடன் சொத்துத் தகராறு இருக்கிறது. அகிம்சையின் குறியீடான வெள்ளைப் புறாக்களை வளர்த்துவருபவன். ஸ்ரீதுங்கா குடும்பஸ்தன். இரு குழந்தைகளுக்குத் தகப்பன். தன் எளிய வாழ்க்கை குறித்த அச்சமும் பதற்றமும் கொண்டிருக்கிறான்.
நீலேந்திர தேசப்பிரிய


திட்டமிட்டபடி பயணம் விமலின் ஆட்டோவில் நந்திக் கடலை நோக்கிச் செல்கிறது. அங்கு அவர்களைப் போல் சுற்றுலா வரும் ஜெஸிதா என்ற பெண்ணுடன் விமலுக்குக் காதல். சுற்றுலா வந்தவர்கள் எல்லாரும் ஒன்றாக இணைந்து இரவில் பாடுகிறார்கள். அதில் கும்மாளமான சிங்களப் பாடல்களைப் பாடுகிறார்கள். மறுநாள் பகலில் நந்திக் கடலில் குளித்துக் கும்மாளமிடுகிறார்கள். ஜெஸிதாவின் செல்போன் அழைப்பு வர விமல் கரையேறி வருகிறான். பேச்சின் ஊடே கால்களால் மண்ணைத் துழாவும் விமல் மண்ணுக்கடியில் ஒரு பாலித்தீன் பையைக் கண்டுபிடிக்கிறான். அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தன் இரு நண்பர்களையும் கூட்டிக்கொண்டு சட்டெனப் புறப்படுகிறான். கண்டெடுத்த புதையலை நண்பர்களுக்குக் காண்பிக்கிறான். அது ஒரு நவீனக் கைத்துப்பாக்கி. அதன் பிறகு அந்த மூவரின் சுற்றுலாப் பயணத்தில் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. துங்கா அதை வீசி எறிந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறான். ஆனால் திருமணம் ஆகாத இளைஞர்களான, வன்மம் வளர்த்துவைத்திருக்கும் சுராஜுக்கும் விமலுக்கு துப்பாக்கி வேண்டியிருக்கிறது. துப்பாக்கி நண்பர்களுக்குள் நம்பிக்கையின்மையை வளர்க்கிறது. திரும்பும் இடமெங்கும் வாகனச் சோதனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பதற்றமும் நீள்கிறது.


எல்லாவற்றையும் தாண்டி துப்பாக்கியுடன் கொழும்பிற்கு வந்து சேர்கிறார்கள். துப்பாக்கியை விமல் தன் புறாக் கூண்டில் மறைத்து வைக்கிறான். அந்தத் துப்பாக்கி விமலின் பெரியப்பாவை மிரட்டுகிறது. அந்தத் துப்பாக்கியால் சுராஜ் காதலியின் அண்ணன் காயம் அடைகிறான். அது துங்காவால் அவன் வீட்டில் மறைத்து வைக்கப்படுகிறது. இறுதியாக குண்டுகள் நிரப்பப்பட்ட அந்தத் துப்பாக்கி அச்சுறுத்தும் வகையில் துங்காவின் குழந்தைகளின் கைகளில் விளையாட்டுப் பொருளாகிறது. இதன் பிறகு நடக்கும் விபத்தால் மூவரும் வெவ்வேறு தருணங்களில் கைதுசெய்யப்படுகிறார்கள். அந்த ஆயுதம் புலிகளுடையது என்பது நிரூபணமாகிறது. விமலையும் துங்காவையும் இலங்கை ஊடகங்கள் சிங்களப்புலிகள் என்கின்றன. சுராஜின் தாய், ஒரு தமிழச்சி என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. அவன் புலியாகிறான். ஜெஸிதாவும் சிங்களப்புலியாகக் கைதுசெய்யப்படுகிறாள். சிறைக்குச் செல்லும் ஜெஸிதா இறந்த உடலாக ஒரு ஏரிக் கரையின் அருகில் கிடக்கும் காட்சி வந்து செல்கிறது. அவள் ராணுவத்தாரால் கொல்லப்பட்டிருக்கக்கூடும்.

இறுதிக் கட்டப் போர் எனச் சித்தரிக்கப்படும் இந்தப் போரின் முடிவு இலங்கையின் சாமான்ய மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றியிருப்பதுதான் இப்படத்தின் மையம். போரின் வெற்றி தங்கள் வாழ்க்கைக்கான சுபிட்சத்தைக் கொண்டுவந்துவிடும் என நம்பும் இலங்கையின் சாமான்ய மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிடவும் சிக்கலாக மாறுகிறது. இந்தப் போரின் வன்முறை ராணுவத்தின் கைகளில் இருந்து மக்களின் கைகளுக்கு மாறுகிறது. அந்த வன்முறையைத்தான் இப்படம் துப்பாக்கியாக உருவகிக்கிறது.

(2014 ஜனவரியில் எழுதியது)

Saturday, October 3, 2015

பேராசியர் எஸ். ஆல்பர்ட்: நவீன இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளி
பழந்தமிழ் இலக்கியத்தின் பள்ளியாகத் திகழ்ந்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரது ‘வட்டத் தொட்டி’ என்னும் இலக்கிய அமைப்பு தமிழ் அறிஞர்கள் பலர் உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. டி.கே.சி. போல் பின்னாளில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கியவர் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட். இவரது கலந்துரையாடல்கள் அடுத்த தலைமுறை ஆளுமைகள் பலர் உருவாகக் காரணமாயின.

டி.கே.சி பழந்தமிழ் இலக்கியத்தின் அருஞ்சுவையைக் குன்றாமல் எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் உள்ளவர். அதுகுறித்த தன் ரசனையைக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஆனால், படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. அதேபோல நவீனத் தமிழ் இலக்கியத்தின், நவீன சினிமாவின் ரசனை அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கக்கூடியவர் ஆல்பர்ட். இவரும் படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. இந்த வகையில் பேராசிரியரை நவீன இலக்கியத்தின் டி.கே.சி. எனலாம்.

குற்றாலக் குறவஞ்சியிலும் கம்பராமாயணத்திலும் பொதிந்திருக்கும் சுவையை டி.கே.சி. விளம்புவதுபோல நகுலன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் ஆகிய நவீனக் கவிகளின் கவிதானுபவத்தைச் சித்திரமாக எழுப்பிக் காட்டக்கூடியவர் ஆல்பர்ட். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தபோதிலும் பழந்தமிழ் இலக்கியத்தின் சுவை அறிந்தவராகவும் இருக்கிறார்.

எஸ். ஆல்பர்ட் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருச்சியில் சினிபோரம் என்ற பெயரில் நவீன சினிமாவுக்கான இயக்கத்தைத் தொடங்கியவர். நாற்பதாண்டுக் காலம் இலக்கிய நல்லாசிரியராக விளங்கிய இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். எம்.டி. முத்துக்குமாரசாமி, அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், இமையம், ராஜன்குறை, கோ. ராஜாராம், நாகூர் ரூமி, ஜே.டி.ஜெர்ரி போன்ற ஆளுமைகள் உருவாகக் காரணமாக இருந்தவர். அவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் அவரது மாணவர்களில் ஒருவரான எஸ். அற்புதராஜ் பேராசிரியர் ஆல்பர்ட் குறித்த தொகுப்பு நூலைக் கொண்டுவந்திருக்கிறார். மலைகள் பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்துள்ளது

இதில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கட்டுரைகளின் மூலம் பேராசிரியரின் பன்முக ரசனை வெளிப்படுகிறது. இலக்கியம் அல்லாமல் சினிமாவிலும் ஓவியங்களிலும் ஆர்வமும் அறிவும் உள்ளவராகவும் பேராசிரியர் இருந்துள்ளார். வங்கத்தின் புதிய அலை சினிமாவைத் தன் எழுத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சத்யஜித் ராயின் தீவிரமான ரசிகராக அறியப்படும் ஆல்பர்ட் ‘சாருலதா’ குறித்து நுட்பமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஓவியத்தின் நுட்பங்கள் குறித்த அவரது ஆழமான பார்வை அவரது கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. நாடகங்கள் குறித்தும் எழுதியுள்ளார்.

முத்தமிழ் இலக்கியத்தையும் பேசும் பேராசிரியரின் இந்தத் தொகுப்பில் நவீனக் கவிதையியல் குறித்த கட்டுரைகள்தான் அதிகமாக இருக்கின்றன. அவர் நவீனக் கவிதையின் போக்கை நுட்மாக அவதானித்துவந்ததை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எது கவிதை, தமிழ் நவீனக் கவிதைக்கான இலக்கணங்கள் எவை என அவர் ஆங்கில மரபை முன்வைத்து விளக்க முற்படுகிறார். சொல்லுக்கு அப்பால் செல்லும் நவீனக் கவிதையின் சித்திரத்தை, ‘சூளைச் செங்கல் குவியலிலே/ தனிக் கல் ஒன்று சரிகிறது’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையைக் கொண்டு எழுப்பிக் காட்டுகிறார்.

தமிழ்க் கவிதைக்கு எழுபது மிக முக்கியமான காலகட்டம். ஆத்மாநாம், சுகுமாரன், ஆனந்த், கலாப்ரியா, கல்யாண்சி, கோ.ராஜாராம், தேவதச்சன், தேவதேவன் எனப் புதிய படையே கிளம்பி வருகிறது. அந்தக் காலகட்டத்தின் கவிதைகளை மதிப்பிட்டு ‘எழுபதுகளில் தமிழ்க் கவிதை’ என்று எழுதியிருக்கிறார். ஒரே ஒரு தொகுப்புடன் எழுதாமல் விட்டுவிட்ட நாரணோ ஜெயராமன் கவிதையையும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் உருவான வானம்பாடிக் கவிதைகளைக் குறித்துச் செறிவாகக் கட்டுரையில் மதிப்பிடுகிறார். ‘எழுபதுகளில் கவிதையில் நிகழ்ந்த ஒரு உரத்த நிஜம் வானம்பாடிகள்’ என்கிறார். அவர்களின் கவிதைகள் நேரடியாக இருந்ததற்கான காரணங்களை சமூகப் பின்னணியிலிருந்து அலசிப் பார்க்கிறார்.

தன் கட்டுரையொன்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து, இன்று நிகழ்வில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுடன் நவீனக் கவிதையை ஒப்பிடுகிறார். ஒளியின் மந்த கதியால் நிகழும் இந்த அற்புதத்தை நவீனக் கவிதை எனச் சொல்கிறார். இதற்கு ஐன்டீனின் சார்பியல் தத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமிளின் கவிதையும் விளம்புகிறார்.  

பேராசிரியர் குறித்துத் தமிழின் முக்கியமான ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளும் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் எஸ்.வி. ராஜதுரை, எம்.டி. முத்துகுமாரசாமி, அம்ஷன் குமார், ராஜன்குறை ஆகியோரது கட்டுரைகள், பேராசிரியரின் ஆளுமை குறித்த துல்லியமான மனச் சித்திரத்தை உருவாக்கு கின்றன.

பேராசிரியரின் கட்டுரை மொழி சிநேகமானது; எடையற்றது; உள்ளடக்கத்தில் செறிவுடையது. சுருங்கச் சொல்லுதல் என்பதையும் இந்தக் கட்டுரைகள் மூலம் உணர முடிகிறது. சொற்கள் மிதமிஞ்சி உற்பத்திசெய்யப்படும் இந்தக் காலகட்டத்தில் பேராசிரியரின் இந்தக் கட்டுரைகள், வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன.

நூல் விபரம்:

பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் 
தொகுப்பாசிரியர்: எஸ். அற்புதராஜ் 
வெளியீடு: மலைகள் பதிப்பகம், சேலம்.
விலை ரூ. 250. 
தொலைபேசி: 89255 54467