ஊகங்களின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படுகிறது - பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் நேர்காணல்




மனைவியுடன் சீனி. விசுவநாதன்

சீனி.விசுவநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து பாரதி குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பாரதி குறித்து இதுவரை அச்சில் வராத பல அரிய தகவல்களையும் எழுத்துகளையும் இவர் பதிப்பித்துள்ளார். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பாரதி நூற்பெயர்க் கோவை ஆகிய நூல்கள்  இவரது அருஞ்சாதனைகள்.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

1934ஆம் ஆண்டு நவம்பர் 22இல் பரமத்தி வேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1944இல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில்  என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம்  வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

பாரதியின் மீது எப்போது ஈடுபாடு ஏற்பட்டது?

அந்தக் காலத்தில் இன்றைக்கு உள்ளதுபோல பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் கிடைக்காது. அதை வெளியில் புத்தகக் கடைகளில்தான் வாங்க வேண்டும். அதுபோல ஒருமுறை புத்தகம் வாங்கச் சென்றிருந்தபோது, கல்கி எழுதிய ‘பாரதி பிறந்தார்’ என்னும் புத்தகத்தை வாங்கினேன். இந்தப் புத்தகம் வழியாகத்தான் எனக்கு பாரதியின் மீது ஈடுபாடு வந்தது. அதற்கு முன்பு பாரதியின் கவிதைகளை வாசித்திருந்தபோதும் இந்தப் புத்தகம் பாரதியைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலை நடத்தி வந்த சங்கப் பலகை பத்திரிகையில் எப்போது பணிக்குச் சேர்ந்தீர்கள்?

1955இல் குமுதம் ‘இவரே என் தலைவர்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. அதில் ம.பொ.சியைப் பற்றி எழுதி முதல் பரிசு வாங்கினேன். அந்தக் கட்டுரை நிறைய பாராட்டைப் பெற்றது. ம.பொ.சி, ‘என்னைப் பற்றி எழுதியதது மகிழ்ச்சி. பரிசில் எனக்குப் பங்குண்டா?’ என வேடிக்கையாகக் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆண்டு தமிழரசுக் கழகத்தின் ஒரு மாநாடு சிதம்பரத்தில் நடந்தது. அந்தக் காலத்தில்  தமிழரக் கழகம் நடத்திய மாநாடுகள் என்னுடைய எழுத்தார்வர்த்திற்குக் காரணம் எனலாம். அங்கு சின்ன அண்ணாமலையைச் சந்தித்தேன். அவர் நடத்திவந்த ‘சங்கப் பலகை’ வாரப் பத்திரிகைக்குத் துணுக்குகள் அனுப்பி இருக்கிறேன். ஆனால் அவர் நேரடி அறிமுகம் கிடையாது. என்னைப் பற்றிக் கேட்கும்போது வேலை தேடிக்கொண்டிருக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னேன். அவர் பத்திரிகையில் வேலைசெய்ய விருப்பமா? எனக் கேட்டார். நான் விருப்பம் தெரிவித்தேன்.  அதே ஆண்டிலே நான்  சங்கப் பலகையில்  துணை ஆசியராகப் பணியாற்றத் தொடங்கினேன்.

பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா?

இருந்தது. 1953இலேயே  எழுதத் தொடங்கிவிட்டேன். மதுரையில் கருத்துமுத்து தியாகராஜ செட்டியார் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 1953இல் ஒளவையார் படம் வெளிவந்தபோது அந்தப் படம் குறித்து ஒரு பாராட்டுரை எழுதினேன். அதுதான் வெளிவந்த என் முதல் எழுத்து. அதன் பிறகு நாமும் பத்திர்கையில் எழுதலாம் என நம்பிக்கை வந்தது. அதே ஆண்டு ஆனந்தவிகடனிலும் ஒளவையார் படம் குறித்து எழுதினேன்.

பாரதி குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்னும் எண்ணம் எப்போது வந்தது?

1957இல் சங்கப் பலகை நின்றுபோனது. அப்போது நான் ஊருக்குத் திரும்பும் திட்டத்தில் இருந்தேன். ஆனால் சின்ன அண்ணாமலை என்னைப் பதிப்பகம் தொடங்கச் சொன்னார். இல்லை எனக்கு அந்தளவு அனுபவம் கிடையாது என்றேன். அப்பாடியானல் இங்கேயே வேறு எங்காவது பணியில் சேர விரும்புகிறீர்களா? எனக் கேட்டார். நான் சம்மதித்தேன். அவர் வழிகாட்டுதலின் பெயரில் 1961இல்  சிதம்பரம் செட்டியாரின் பாரதி பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினேன்.  

பிறகு நாமே பதிப்பகம் தொடங்கலாம் என்னும் ஆசை வந்தது. மேகலை என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கினேன். சின்ன அண்ணாமலை கூட்டங்களில் பேசும்போது சுவாரசியமான கதைகள் சொல்வார். அதையெல்லாம் நான் குறித்துவைத்திருந்தேன். அவற்றைப் புத்தகமாகத் தொகுத்து ‘சிரிப்புக் கதைகள்’ என்னும் பெயரில் வெளியிட்டேன். அதுதான் நான் கொண்டுவந்த முதல் புத்தகம். அதன் பிறகு 1962இல் சென்னை மாகாண அரசு பாரதி 80ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட முடிவெடுத்தது. அதை ஒட்டி ‘தமிழகம் தந்த மகாகவி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் கொண்டு வந்தேன். அதில் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ராஜாஜி, ஜீவா, பாலதண்டாயுதம் எனப் பலரிடம் கட்டுரைகள் வாங்கிப் பதிப்பித்தேன். 

கிட்டதட்ட முழு அச்சும் ஆன பிறகு பாரதிதாசனின் கட்டுரைக்காகக் காத்திருந்தேன். பாரதிதாசன் ஏற்கனவே வந்திருக்கும் கட்டுரைகளைக் கேட்டார். அதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கட்டுரை தருவதாகச் சொன்னார். அச்சு ஆகியிருந்த புத்தகத்தை அவரிடம் காண்பித்தேன். அவற்றை வாசித்த பிறகு கட்டுரை தந்தார். பிறகு அதையும் சேர்த்து வெளியிட்டேன். பாரதிதாசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். அறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. ‘தமிழகம் தந்த மகாகவி’ கிடைத்த இந்த வரவேற்பு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. பார தி குறித்து ஆய்வில் ஈடுபடும் எண்ணம் மேலோங்கியது.

பாரதிதாசன் பாரதியைச்  சந்தித்தது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன…

1908இல் பாரதி-பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரதி 1916 அக்டோபர் 27இல் சுதேசமித்ரனில் தராசுக் கடை பகுதியில், ‘இன்று ஒரு தமிழ்க் கவிராயர்’  தன்னைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தத் தமிழ்க் கவிராயர் சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன். பாரதியின் கூற்றில் அடிப்படையில் 1916ஆம் ஆண்டு நடந்த இந்தச்  சந்திப்புதான் முதல் சந்திப்புதான் முதல் சந்திப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பே வேணு நாயக்கர் திருமணத்தில் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. வேணு நாயக்கர் திருமணம் நடந்த ஆண்டைப் பற்றி காலக் குறிப்பும் இல்லை.

பாரதி ஆய்வில் நீங்கள் முதலில் கொண்டுவந்த அரிய நூல் எது?

சக்கரவர்த்தினிக் கட்டுரைகளைச் சொல்லலாம்.  ஏ.கே.செட்டியார் நடத்திவந்த குமரிமலர்  வாரப் பத்திரிகையின் மூலம் பாரதி  ஆசிரியராகப் பணியாற்றிய சக்கரவர்த்தினி பற்றித் தெரிந்துகொண்டேன். அந்தப் பத்திரிகை சக்கரவர்த்தினி கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டார்கள். சக்ரவர்த்தினி ஒரு பெண்கள்  மாத இதழ். இதில் 13 மாதங்கள் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சக்கரவர்த்தினிக் கட்டுரைகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். இதற்காகப் பழைய புத்தகக் கடைகள் பலவற்றுக்கும் அலைந்தேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்தேன். அவரும் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் கடைசியில் வேறு ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். அவை குளித்தலை தமிழ் கா.சு. நினைவு நூலகப் பொறுப்பாளர் இளமுருகு பொற்செல்வியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து பெற்று சக்கரவர்த்தினி கட்டுரைகள் நூலை 1979இல் பிரசுரித்தேன்.  பாரதி இயலுக்கு இந்நூல் முக்கியமான வரவாக இருந்தது. 1998இல் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் முதல் தொகுதி கொண்டுவந்தேன். இதுவரை 12 தொகுதிகள் வந்துள்ளன.

உங்களுடைய மகாகவி பாரதி வரலாறு நூலுக்கு முன்பும் பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல்கள்  வந்துள்ளன.  அவற்றில் இருந்து இது எவ்வகையில் முழுமையாகிறது?

1922இல் செல்லம்மா பாரதி சுதேச கீதங்களை இரு தொகுதிகளாகக் கொண்டுவந்தார்.  அதன் முதல் தொகுதியில் பாரதியின் நண்பரான சோமசுந்தர பாரதி, பாரதியின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் இரண்டாம் தொகுதியில் தொழிற்சங்கவாதியான சக்கரைச் செட்டியார் பாரதியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் எழுதினர். இவை இரண்டும் மிக முக்கியமான ஆதார நூல்கள். பிறகு பாரதி வாழ்க்கை குறித்துப் பல நூல்கள் வந்தாலும் அவை காலக் குறிப்பு குறித்த வலுவான ஆதாரமில்லாமல் செவிவழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன. ‘மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு’ நூல், பாரதியின் அரசியல் பங்களிப்பை,  பாரதியின் தகப்பனார் சின்னச்சாமி ஐயர் நிறுவிய எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பாக்டரியின் கணக்கு விவரங்கள், சின்னச்சாமி ஐயர் இறந்த பிறகு பாரதியின் படிப்புச் செலவுக்காக பாகீரதி அம்மையாரின் பேரில் வாங்கிய கடன் பத்திரம், சென்னை ஜன சங்கத்தில் பாரதியின் பங்களிப்பு போன்ற பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் பதிவுசெய்கிறது.

இந்த நூலுக்கான ஆதாரங்களில் எப்படிப் பெற்றீர்கள்?

பாரதியின் தகப்பனாரின் இரண்டாம் தாரத்து மகனான சி.விசுவநாத ஐயர் 1977இல் கலைமகளில் பாரதி குறித்து ‘கவி பிறந்த கதை’ என்னும் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் அந்தக் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தபடி பாரதி பற்றி முழுமையான ஆய்வு நூலை நீங்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொன்னேன். ஆனால் அவர் அறிஞர்கள் இதைச் செய்வதுதான் சரியாக இருக்கும் எனப் பதில் அனுப்பினார். நான் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். வயோதிகம் காரணமாக என்னால் முடியாது என்று மறுத்து வந்தார். பிறகு அவருக்கு உதவ நான் வருவதாக எழுதினேன். அதுபோல மாதம்மாதம் அவர் இருந்த மானாமதுரைக்குச் சென்று அவருக்கு உதவினேன். ஆனால் உடல் நலப் பதிப்பால் அவரால் தொடர முடியவில்லை. 1980இல் தமிழக அரசு பாரதி நூற்றாண்டை ஒட்டி பாரதி படைப்புகளைப் பதிப்பிக்க முடிவெடுத்தது. அப்போது விசுவநாத ஐயர் வரலாற்று நூலை அரசு கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு 1981இல் அந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தார். அவர் எனக்கு அளித்த ஆதாரங்களை அளித்தார். புதுதில்லி நேரு நினைவு நூலகம், கல்கத்தா தேசீய நூலகம், புதுச்சேரி போன்ற இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி ஆதாரங்களைப் பெற்றேன்.

 பாரதி ஆய்வில் உங்களுக்கு  முன்னோடிகள் யார்?

பெ.தூரன், ஏ.கே.செட்டியார், ரா. அ.பத்மநாபன் போன்றோர்கள் என் முன்னோடிகள். அவர்களின்  ஆய்வுகள் பாரதி இயலுக்கு மிக முக்கியமானவை.

இதுவரை வெளியாகியுள்ள பாரதியியல் ஆய்வுகளில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

தக்க ஆதாரமில்லாமல்  ஊகத்தின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கக் கூடாது என்று என்னுடைய ஞானாசிரியர் விசுவநாத ஐயர்  கூறுவார். ஆனால் இங்கு பெரும்பாலும்  ஊகத்தின் அடிப்படையில்தான் வரலாறு உருவாக்கப்படுகின்றன. இதைப் பற்றி பாரதி ஆய்வும் சில சிக்கல்களும் என்னும் தனியாகப் புத்தகமே கொண்டு வந்துள்ளேன். உதாரணமாக பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதி ஆய்வு நூலில் சக்கரவர்த்தினி பத்திரிகையின் தலைப்பு அலெக்சாண்டர்   ராணியை க் குறிப்பதாகச் சொல்கிறார். ஆனால் அது விக்டோரிய மகாராணியைத்தான் குறிக்கிறது. 1905ஆம் ஆண்டு  சக்ரவர்த்தினி தலையங்கத்திலேயே பாரதி விக்டோரிய சக்ரவர்த்தினி  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசோ  பெரிய நிறுவனமோ செய்ய வேண்டியதை தனிமனிதனாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணிகளுக்கான வரவேற்பும் உதவியும் எப்படி இருந்தன?

நல்ல வரவேற்பு இருந்தது. அறிஞர்கள் பலரும் பாராட்டினார்கள். க. கைலாசபதி, பாரதிதாசன், ராஜாஜி, ரா.அ.பதமநாபன், கண்ணதாசன் போன்றோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1981ஆம் ஆண்டு பாரதி நூற்பெயர்க் கோவையை வெளியிட்டேன். அதில் அதுவரை வெளிவந்த பாரதியின் 370 நூல் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன். என்னுடைய இந்த நூல் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நூலைப் பாராட்டி சுந்தர ராமசாமி கடிதம் எழுதினார்.   2004ஆம் ஆண்டு தமிழக  அரசின் பாரதி விருதை வழங்கிக் கெளரவித்தது. பிரம்ம கான சபையாலும், காலச்சுவடு அறக்கட்டையாளலும் கெளரவிக்கப்பட்டுள்ளேன்.

பாரதியைக் குறித்துப் பலதரப்பட்ட  புரிதல்கள் இருக்கின்றன. நீங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலான பாரதி ஆய்வில் பாரதியை  எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

பாரதி ஒரு கவிஞன் என்பதைத் தவிர பொதுவெளியில் கவனம் பெறவில்லை. ஆனால் பாரதி ஒரு பத்திரிகையாளன். மொழிபெயர்ப்பாளன். பல முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிகையாளனாகக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பிறகு  பாரதியின் வறுமை பற்றிக் கூறுகிறார்கள். அது அவரே உருவாக்கிக்கொண்ட வறுமைதான். அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால்  சமூக வாழ்க்கையில் இயங்குபவர்கள் எல்லோருக்கும் உள்ள சிக்கல்தான் இது. எனக்கும்கூட இந்தச் சிக்கல் உண்டு.   பாரதி ஆய்வுக்காக வேலைசெய்யும்போது வீட்டைச் சரியாக கவனிக்க முடியாமல் போனது.

அதுபோல பாரதியின் வீச்சை அன்றைக்கு பிரிட்டிஷார் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள் எனலாம். 1908ஆம் ஆண்டு சுதேச கீதங்கள் வெளிவந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்  அச்சகத்தில் இருந்தே  வாங்கிச் சென்று மொழிபெயர்த்து அதில் தேச விரோதக் கருத்துகள் இருக்கிறதா எனச் சோதித்துள்ளனர். ஆஷ் கொலை வழக்கு விசாரணை ஒட்டி சுதேச கீதங்கள் 1912இல் திரும்பவும் மொழிபெயர்க்கப்பட்டது.  1910இல் புதுச்சேரியில் இருந்து வெளியிடப்பட்ட கனவு, ஆறில் ஒரு பங்கு புத்தகத்திற்கும் பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது.

50 ஆண்டுக்கால  பாரதி ஆய்வு உங்களுக்கு நிறைவாக உள்ளதா?

நிறைவாக  உணர்கிறேன். என்னளவில் நிறைவாகச் செய்துவிட்டேன். என் மனைவி ஆய்வுக்காகப் பெரிதும் துணை நின்றவர். அவர் சென்ற ஆண்டு மரணமடைந்து விட்டார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாது. இனி என்னால் இயங்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் பாரதி ஆய்வில் இன்னும் கண்டறியப்பட வேண்டியது ஏராளம் உள்ளன.

சந்திப்பு: மண்குதிரை