Tuesday, November 10, 2009

அரேபியர்கள் இளைப்பாறிய 11-ம் தலை முறை நிழல்



















(இளவரசர் மொரீஸ்)


10-ம் நூற்றாண்டில்
அரேபியர்கள் இளைப்பாறிய
11-ம் தலை முறை நிழல்
பம்பளிமாஸ் பல் தாவரப் பூங்காவில்
விரிந்து கிடக்கிறது

புயலிருந்து
போர்ச்சுகீசியர்களை
காப்பாற்றிய
கட்டர்போன் மலை
வழிபாட்டுத் தலமாயிருக்கிறது

டச்சு போர்வீரர்களின் களைப்பாற்ற
இளவரசர் மொரீஸ் பகிர்ந்தளித்த
பானத்தின் சூத்திரம் கொண்டு
பீனிக்சில் ஒரு தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது

குடியிருப்புகள் நிறுவிய
ஃப்ரஞ்ச்காரர்களின்
கேளிக்கை பாடல் ஒன்றின் நகல்
வாக்வா கலாச்சாரத்தில் மையத்தில்
ஆவணப்பிரிவில் சேகரிக்கப்பட்டுள்ளது

ஃப்ரஞ்சு படைகளை
ரெனியூனுக்கு விரட்டியடித்த
மாபெரும் பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்தின்
அதிகாரம்
மோக்கா பல்கலைகழகத்தில்
பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது

அடிமைகளும் தின்று அழித்த
கடைசி டூடூவின் தாடை எலும்பு
வடக்கே கிரம்பேவில் வசிக்கும்
ஆப்பிரிக்க அடிமையொருவனின்
கனவில் வந்துகொண்டிருக்கிறதாம்
அதைப் பற்றி நாளை சொல்கிறேன்.

Friday, November 6, 2009

பராக்குப் பார்த்தல்

ஸ்பர்டேங்க் ரோட்டிலிருந்து என் எம் ரோடு, மேத்தாநகர், சிவன் கோயில் தெரு வழியாக ராம் தியேட்டரை பிடித்து ஒரு வழியாக வடபழனி வரை வந்துட்டான் மலைச்சாமி. ஒரு பத்து ரூபாய் மிச்சபிடித்து விட்டதில் அவனுக்கு சந்தோசம் தாங்கமுடியலை. ஒரு ஆட்டம் போடக் கூட நினைத்தான். ஆனால் நடந்து நடந்து களைத்த அவன் கால்களில் கிணற்றுப் பூச்சிகள் தெறித்துக் கொண்டிருந்தன. எச்சிலை குடித்து குடித்து களைப்படைந்த அவன் நாக்கும், தண்ணீர் பாக்கெட்டாவது வாங்கித்தாவென அடம் பிடித்துக் கொண்டிருந்தது. காலையில் அவன் அறை நண்பனொடு அலுவலகம் வரை போனதினால் இறக்கப்பட்டு ஒரு டீ, ஒரு ரூபாய் பிஸ்கட்டும் இந்தப் பத்து ரூபாயும் கொடுத்தான். அதை சில்லரையாக்க மனமின்றி நின்று கொண்டிருந்த மலைச்சாமியின் பையில் ஒரு ஐம்பது காசு தட்டுப்பட்டது. அவனுக்கு ஐம்பது ரூபாய் கிடைத்த மகிழ்ச்சி.

பக்கத்திலிருந்த பெட்டி கடைக்கு போனான். உள்ளே மெழுத்திரியில் பாக்கெட் போட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்துவந்தான். இவன் கேண்டி மேன் சாக்லெடில் அவனுக்கு விருப்பமான ஃப்லேவர் ஒன்றை கேட்டதும் மலைச்சாமியை முறைத்தவாறே சாக்லேட் வைத்து விட்டு அவனுடைய பணிக்குத் திரும்பிவிட்டான். சில்லரையைக்கூட எடுக்கவில்லை. மலைச்சாமி வைத்த ஐம்பது காசு பாட்டில் மேலேயே இருந்தது. கடைக்காரனையும் குறை சொல்லமுடியாது. மலைச்சாமியின் உருவத்தை வைத்து அவன் ஒரு கிங் சிகரெட்டோ, எம்சியோ குறைந்த பட்சம் கணேஷ் பீடியோ, சூப்பராவது வாங்குவான் என நினைத்திருக்கலாம். மலைச்சாமிக்கு எல்லாம் பழகி விட்டது. இந்த நகரம் நடத்தும் தேர்வில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருக்கிறான்.

களைத்திருந்த அவன் உடம்புக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டான். வடபழனி சிக்னல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சினிமா விளம்பரத்தை வியந்து பார்த்தான். அதில் வெடித்த வெள்ளரிப் பழமாக நின்றிருந்த புதிய நாயகனையும், நாயகியும் அண்ணாந்து பார்த்தான். கறந்த பால் போல அவர்களுடைய கண்களில் ஒரு கோடும் இல்லை. ராமர் பிள்ளை லவாய்சியரோடு மல்லுக்கட்டியது போல அவர்கள் நீயுட்டனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து சிரித்துக் கொண்டான். அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கக்கூடிய இரவு வந்து கொண்டிருந்தது. விளக்குகள் ஒவ்வொன்றாக மலரத்தொடங்கியது. பணியிலிருந்து திரும்பும் யாவரும் இவனுக்கு வேற்றுமையாகத் தெரிந்தார்கள்.

ஒரு தொலை தூரப் பேருந்து இவன் சாய்ந்திருந்த நிழல் குடையருகே ஒதுங்கி நின்றது. ஏற்கனவே அங்கே காத்திருந்தவர்களின் முகவெட்டு அங்கிட்டு உள்ளது போல்தான் தெரிந்தது. ஒரு குழ்ந்தையோடு ஒரு பெண் மட்டும் ஏறிக் கொள்ளத்தயாரானாள். அவளோடு வந்திருந்தவன் சாமான்களை ஏற்றிவிட்டு இறங்கிக் கொண்டான். அப்போது அந்த பஸ்சின் ஜன்னல் வழியாக ஒரு குரல்,

ஏ பாப்பா நீ நம்ம ராக்கப்பண்ணாச்சி மகதானே

ஆமா நீங்க யார்ன்னு தெரியலையே

உங்க வீட்டுக்கெல்லா வந்திருக்கே. லெக்கம்பெட்டி ஏ மக கூட உங்கூடதான் படிச்சது காஞ்சி

அயத்துப் போச்சு காஞ்சி நல்லா இருக்கா

கிழே நின்றிருந்தவரிடம் திரும்பி

மாப்ள நா பாத்துக்கிறே

பாத்துக்கோங்க அண்ணாச்சி வாறே

மகனுக்கு டாட்டா காட்டிவிட்டு அருகிலிருந்த டிவிஸ் ஃப்டியைக் கிளப்பினார்.

மலைச்சாமி இந்த சந்தோசத்திலும் நம்பிக்கையிலும் சின்மயா நகரென்ன போரூர், கிருகம்பாக்கம் குன்றத்தூரே போய்விடுவான்.

Thursday, November 5, 2009

ஊர்க்குருவிகளின் ஆனந்த நடனம்



















அரசண்ணன் ஒரு பறவை வளர்த்தார்
கிளி என்ற பிரஞ்கையற்று
உடல் மெலிந்த அந்தப் பறவைக்கு
கனிந்த பழங்களை ஊட்டுவேன்

மாசிக் கடைசி வெள்ளிக்கு
ஊருக்குப் போகும் போது
பேருந்தின் ஜன்னல் வழியாக
குதூகலம் கொண்டலையும்
பறவைகளின் சந்தோச மொழி கேட்பேன்

கண்மாயில் நீர் தளும்பும் காலங்களில்
வரத்துப் பறவைகளின் விதமான வண்ணம் கண்டு மகிழ்ந்திருப்பேன்

ஊர்க்குருவிகள் கூடடைவதற்கு முன்னால்
ஆகாயத்தில் நிகழ்த்தும் ஆனந்த நடனம்

எந்தக் கலைஞருக்கும் புலப்படாமல்
வானத்தில் அவை எழுதும் ஓர் இசை குறிப்பு

இந்த அற்புதத்திற்காக தினமும் செல்வேன்

புலம் பெயர்ந்து வந்துவிட்ட
இந்த தேசத்திலும்
நிறைய பறவைகள்

எனக்கு மிகவும் பிடித்த
சிட்டுக்குருவிகளில்தான்
எத்தனை வகைகள்

பறவையின் சங்கீதத்தில்தான்
ஒவ்வொரு நாளும் விடிகிறது

நாணல் மீதமரும்
மிகச் சிறிய சிட்டுக் குருவியை
இங்குதான் நேரில் பார்க்கிறேன்

மஞ்சளும்
சிறகில் நீல நிறமும்
கழுத்தில் தேயிலை வண்ணமும் கொண்ட
புதிய பறவை
என் தோட்டத்தில் கூடு கட்டியிருக்கிறது

நான் தூவும் ஒரே ஆகாரத்தின் பகுதிகளைக்கூட
கவனமாகத் தேர்ந்தெடுத்து
சத்தமிட்டுக் கொண்டிருக்கும் அதன் குஞ்சுக்கு ஊட்டிவிடும் அழகை பார்த்துக்
கொண்டே இருக்கலாம்

இங்கேயும் வரத்துப் பறவைகள் வருவதுண்டு
கடற்கரை கிரமான பிலிக்-கான்-ப்ளாக்கில்
அது போல் ஒரு புதிய பறவையைப் பார்த்தேன்
பறக்கத் தெரியாதது போல்
நடந்து கொண்டிருந்த
அதைப் பின்தொடர்ந்து சென்றேன்
கொஞ்சம் விளையாட்டுக்காட்டிவிட்டு
பறந்து போன அந்தப் பறவையின்
உதிர்ந்த இறகொன்றை
நான் விரும்பிப் படிக்கும் புத்தகத்தில் வைத்திருக்கிறேன்

கண்டங்கள்
பல நாடுகள் கடந்த
வெம்மை தணிந்த
அதன் இறகை
வாசிக்கும் போதெல்லாம்
ஸ்பரித்துக் கொள்வேன்

Friday, October 30, 2009

கவிதை ஒரு பேரின்ப நிகழ்வு ; எஸ் செந்தில்குமாரின் சில கவிதைகளும்

கவிதை நிகழ்வது ஒரு உன்னதமான அனுபவமாகக் கருதுகிறேன். ஒரு மொட்டு அவிழ்கிறது என்ற செய்தியை ஒரு வாசனாகத்தான் உணரமுடிந்தது. "தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா" என்ற வரிகளின் அற்பதத்தை அறிய எத்தனை ஆண்டுகளாயிற்று!
மெழுகு தீபத்தின் ஒளியைப்போல் எண்ண அலைகள் பரவிக்கிடக்கும் என் தனிமை அறையில் ஒரு உயர்வு அழுத்தமாக அந்தப் பரசவம் நிகழ்கிறது, அது ஒரு பேரின்ப நிகழ்வு. அந்த நிலையை அதே பரவசத்தோடு வெளிபடுத்த முடிவதில்லை. என் வாசிப்புலகம் மிகச் சிறியதுதான். நான் அறிந்த எளிய வார்த்தைகளைத் தேடி எடுத்து கோர்க்க முயற்சிக்கிறேன். பெரும்பாலும் அது தோல்வியிலெ முடிந்திருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்த இந்தக் குழந்தை விளையாட்டை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

எஸ் செந்தில்குமாரின் இந்தக் கவிதையில் அந்த உன்னததை நெருங்கினேன். ஒரு கவிஞனின் பார்வையில் பூ பூவாய் விரிகிறது. அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

.........................























எழுதி முடித்த கவிதை வரியின்
பிரமிப்பில் தீராத மோகங்கொண்டு
யாருமறியாத மலை உச்சிக் கோவிலில்
படிகளில் ஏறி அமர்ந்திருந்த
மாலை வேளையினை இப்போது
ஞாபகச் சிப்பித் திறந்து காண்கிறேன்
யாருமே வாசித்திராத
அந்த கவிதையின் முதல் வரியினை
நகரத்தில் எரியத் தொடங்கிய
முதல் விளக்கிடம் சொன்னேன்
வெட்கம் குமிழ்குமிழால உடந்தபடி
கவிதையின் அடுத்தவரி அடுத்தவரி என
வாசிக்க எல்லா விளக்குகளும்
என்னிடம் கேட்டபடி
எரியத் தொடங்கியதை
யார் அறியக்கூடுய்ம்
என் கவிதை தவிர்த்து

...........................


திருப்பத்தில்
ராட்சஸப் பறவையென நின்றிருந்த
அந்த ஒற்றை மரத்தைப் பார்த்தேன்

கருநிறப் பறவையின் இறக்கையென
காற்றில் அசைகின்றன அதன் கிளைகள்

உடல் நிமிர்த்து
கழுத்து வளைந்து இரை தேடும் காட்சியாய்
அந்த ஒற்றை மரம் நின்றிருந்தது

அதன் இறக்கை
பாதை கடக்கும் சமயம்
என்னைக் கவ்விக் கொள்ளுமென
பயந்து நிற்கிறேன்

நெடுநாள் தண்ணீரற்று வறண்ட அதன் உடல்
மரக்கட்டையாயிருந்தது

காற்றை சுவாசிக்கும் கிளைகள்
ஏதோ ஒன்றை விழுங்கத் துடிக்கும்
பெரும் பசியோடு காத்திருந்தன

செம்மண் மேடுகளைத் தாவித்தாவி
ஏதுமறியா ஆட்டுக்குட்டிகள்
அந்த ஒற்றை மரத்தைக் கடந்துவந்தன
அம்மரத்தைப் பார்க்காமலேயே

.............................


சிறு பூச்சியை
அதன் இடத்திலிருந்து நாடு கடத்துகிறேன்
அங்கேயும் பறக்கிறது
நிற்கிறது
உட்கார்கிறது மரத்தின்மேல்
அதற்கான உணவைத் தேடுகிறது
குறிப்பாக
இன்னொரு நாடு கடத்தலுக்குத் தயாராகிறது
தன் இருப்பிடத்திலிருந்து

...............................


சிறுவன் சூரியனோடு விளையாடுகிறான்
கைக்கண்ணாடி ஒளிக்கற்றையை
பிறர் மீதும் பாய்ச்சும் ஆர்வம் பெருகி
தன் கையில் இரண்டாவது சூரியனையும் தக்கவைக்கிறான்
என் கண் கூசுகிறது
இரண்டு சூரியனின் ஒளி வாசமாய்
அவன் உடலில் படிகிறது
கடந்து செல்வோரை உஷ்ண வாசம்
தொற்றிக் கொள்கிறது அவன் உடலில் வழிந்து
என் காதுகளில் நிரம்புகிறது இரண்டு சூரியனின்
ஒளிக்கற்றை இரைச்சல்
பிறகு சூரியனை விடிவித்தால்
மேற்கொண்டு பயணிக்கலாமென நின்றிருந்தேன்.
சுரியன் கண்ணாடியிலிருந்து கண்ணாடிக்கு
தெருவிலிருந்து தெருவுக்கு
சிறுவனிடமிருந்து சிறுவனுக்கு என
நகர்ந்தபடி இருக்கிறது

..................................


இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமான படைப்பாளியான எஸ் செந்தில்குமார் இந்த வருடத்திற்கான "சுந்தரராமசாமி விருதுக்கு" (நெய்தல் அமைப்பு) தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

புகைப்படம் நன்றி : உயிர்மை பதிப்பக இணைய தளம்.

Wednesday, October 28, 2009

இது என்ன விளையாட்டு?

























என்னாயிற்று உனக்கு?
நிலை கொள்ளாமல் ஒடுகிறாய்
பொருள்களையெல்லாம் இடமாற்றி
இது என்ன விளையாட்டு?

வீதியில் கிடக்கும் ஏதேதோ பொருள்களையெல்லம்
வீட்டுக்குள் எடுத்து வருகிறாய்
யாருக்காகவோ மலர்ந்திருந்த மலரைக் கொய்து
என்னிடத்தில் தருகிறாய்
நான் வாசித்துக் கொண்டிருந்த காகிதத்தை
உனக்குப் புரியாதென்றாலும்
பறித்துக் கொண்டு கண்ணாமூச்சியாடுகிறாய்
துரத்தி வரும் போது
மரங்களின் மேல் ஏறி
எக்காளமிடுகிறாய்
இது என்ன விளையாட்டு?

இன்னும் ஒரு வாரம் நீடிக்குமென
எனக்குப் பிடிக்காத ஒப்பனைத் தொகுப்பாளினி அறிவித்துவிட்டாள்
அதோ அந்தரத்தில் அலைந்து கொண்டிருக்கும் தேவதைகளைப்பார்
சுற்றிலும் மலைகள் சூழ்ந்த சிறிய தீவுதான்
போ! உனக்கு கொண்டாட்டம்தான்.

Thursday, October 22, 2009

மயிர்கள் சிரைக்காத நிர்வாணம்.........
















Monday, October 19, 2009

மலைச்சாமியின் கைகள்

























புகைப் படம் நன்றி : செழியன் அவர்கள்.


தாழ் பழுதடைந்த
என் அறைக்குள் நுழைந்த
நள்ளிரவுக் காற்று
இருளில் நெளிந்து கொண்டிருந்த தண்ணீர் குடுவையை
நிலை இழக்கச் செய்தது
களைந்து விழித்தேன்

அனிச்சையாக எழுந்த என் கைகளைப் பார்த்தேன்
அது மலைச்சாமியின் கைகளாக இருந்தது
மயிர் அடர்ந்திருந்த மார்பும் அவனுடையதாக
தோள்களும் அப்படியே
இன்னும்.........

நான் யார் என்று உறுதிசெய்ய முடியாத நிலையில்
பதட்டம் நீடிக்கிறது....