கெ.ஜி.ஜோர்ஜ்: சினிமா கலைஞர்களின் இயக்குநர்!

கடந்த வாரம் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கெ.ஜி.ஜோர்ஜ் காலமாகிவிட்டார். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் ‘சினிமா கம்பம்’ சிறுகதை, கெ.ஜி.ஜோர்ஜின் ‘உள்கடல்’ படத்தைப் பற்றியதுதான். அதில் ஒரு பாடல் (ஷரபிந்து மலர்தீப...). ஷோபாவும் வேணு நாகவள்ளியும் ஒரு வீட்டின் மாடியிலிருந்து பாடும் அழகான காதல் காட்சி. அதற்குப் பின்னால் ஒரு ஃபாஸ்ட் பேசஞ்சர் பேருந்து அவுட் ஆஃப் போகஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துசெல்லும். ‘காதலின் பெரும் வேதனையோடு அந்தப் பேருந்தில் நான் இருந்தேன்’ எனக் கதையில் சக்கரியா சொல்கிறார். சந்தோஷமான காதலுக்குப் பின்னால் ஒரு துக்கம் பேருந்தில் கடக்கிறது. 

பாடல் காட்சியில் வேணுவின் மூக்கு ஷோபாவின் நெற்றியில் உரசும். இருவரும் கண் மூடிக் கொள்கிறார்கள். காதலின் உன்மத்தம் அது. மீண்டும் மாடியறைக்கு வெளியே வருகிறார்கள். இன்பம் பொங்கும் பிரகாசமான சூரிய வெளிச்சம் அங்கு வீசுகிறது. ஜோர்ஜ் இந்தப் பாட்டைப் படமாக்கியிருக்கும் விதத்தைக் கதையில் சக்கரியா திருத்தமாக விவரித்திருப்பார். காதல் உணர்வுகளை மொக்கு அவிழ்வதைப் போல் மெல்லமெல்ல விவரிக்கும் சினிமா மொழி அது. அதுதான் தனி மனித உணர்வைப் பொதுவாக்குகிறது; சக்கரியாவின் கதைக்குள்ளும் ஓர் இடத்தைப் பெற்றுத் தருகிறது. ஜோர்ஜ் வாங்கிக் குவித்த விருதுகளுக்கெல்லாம் மேலானது இது. ஜோர்ஜ் என்கிற சினிமா கலையின் விற்பன்னரை நமக்கு அடையாளம் காண்பிப்பதும் இந்தத் தன்மைதான்.

ஷரபிந்து மலர்தீப... பாடல் காட்சி

கெ.ஜி.ஜோர்ஜ், மலையாள சினிமாவின் விசேஷமான இயக்குநர். பூனா திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே வேறுபட்ட கதைக் களத்தில் படங்களை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தவர். 'ஸ்வப்னாடனம்' தொடங்கி ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கதைக் களத்தில் அதைச் சாத்தியப்படுத்தினார். நாடக ஈர்ப்பால் அந்தப் பின்னணியில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று உருவாக்கிய படம்தான் ‘யவனிகா’. அய்யப்பன் என்கிற தபேலாக்காரன் காணாமல்போவதில் தொடங்கி காமம், கொலை, காதல் என விசாரித்துச் செல்லும். முன்னுக்குப் பின்னாக நகரும் இந்தப் படம், விசாரணையில் வழி துலங்கும்படி உதாரணமான திரைக்கதையை அமைத்திருப்பார்.

உளவியல் சிக்கல், கொலைப் புலனாய்வு, பெண்ணியம், காதல், அரசியல் பகடி எனப் பல உட்பொருளில் படங்கள் செய்தவர். எல்லாவிதப் படங்களிலும் ஜோர்ஜ் ஒரு விசாரணையைச் செய்திருப்பார். அது அவரது படங்களின் தனித்துவம். அது மனதுக்குள்ளானதாகவோ சமூகத்துடனானதாகவோ இருக்கும்.

மதிப்பு மிக்க அரசு அதிகாரி; சல்மான் ருஷ்டியின் நாவல்கள் படிப்பவர்; அழகான குழந்தைகள்; வீடும் காரும் பேரும் உண்டு. ஆனால், அந்த வீட்டின் குடும்பத்துப் பெண் ஒரு மெக்கானிக்குடன் சட்டனெ இறங்கிப் போய்விடுகிறாள். மெக்கானிக்குக்கோ தொடுப்புகள் அதிகம். இது ஏன் நடக்கிறது என்று அந்தப் பெண்ணின் பக்கம் நின்று, இந்தக் குடும்பத் தலைவனைக் கூண்டில் ஏற்றுகிறார் ஜோர்ஜ். இது ‘மற்றொராள்'.

ஆதமிண்ட வாரியெல்லு
‘ஈ கண்ணி கூடி'யிலும் ஒரு பாலியல் தொழிலாளியின் கொலையின்வழி, அவளது துக்ககரமான வாழ்க்கையை விசாரித்துப் பார்க்கிறார். பலதரப்பட்ட சமூகப் பெண்களின் நிலையைச் சொல்லும் ‘ஆதமிண்ட வாரியெல்லு’வில் அந்தப் பெண்கள் அந்தப் படத்தைப் படமாக்கும் ஜோர்ஜின் கேமராவைத் தாண்டிச் செல்வார்கள். ஜோர்ஜ் அதிர்ச்சியுடன் இதைப் பார்ப்பார். ‘ஃபோர்த்வால் பிரேக்கிங்’ நுட்பத்துக்கான இந்திய முன்னுதாரணம் இந்தக் காட்சி.

ஜோர்ஜின் ‘இரகள்’ சினிமாவின் உச்சம் தொட்ட படம். ஒரு வீட்டை மையக் கதாபாத்திரமாக்கிக் குடும்பம் என்னும் நிறுவனத்தின் விழுமியங்களை விசாரிக்கும் படம். இது படமாக்கப்பட்ட விதம், சினிமாக் கலைஞர்களுக்கான பாடம். ஒற்றை கேமராவை வைத்து நகராத ப்ளாக்கில் படத்தைப் படமாக்கும் விதமும் அதை எடிட்டிங்கில் கோக்கும் விதமும் ஜோர்ஜின் விசேஷமான அம்சங்கள். இந்தப் படத்தின் முதல் காட்சி இருளில் தொடங்குகிறது. படத்தின் நாயகன் ஒரு சிவப்பு வயரை மிகக் கூருடன் வெட்டி எடுக்கிறான். அதை ஒரு தூக்குக் கயிறாகத் தன் கழுத்திலேயே பாவிக்கிறான்.

இரகள்

இரண்டு, மூன்று கட்களாக விவரிக்கப்படும் இந்தக் காட்சியில், அவனது அறையின் வழி அவனைக் காண்பித்திருப்பார் ஜோர்ஜ். வன்முறையின் மீது மனிதனிக்கு இயல்பிலேயே இருக்கும் பெருவிருப்பம் இதில் சொல்லப்பட்டிருக்கும். உயிரற்ற ஒரு பெரிய வீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த வீட்டின் மனிதர்களை அடுத்தடுத்த காட்சிகளில் சித்தரித்திருப்பார். காட்சிகளில் கேமரா நிலைநிறுத்தப்பட்ட இடம், கதாபாத்திரங்களுக்கான நிகழ்த்துக் களம், அவர்கள் வெளியேறும் வழி என எல்லாம் தீர்க்கமான திட்டமிடலுடன் படத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஜோர்ஜின் கேமரா நிலைநிறுத்தலுக்கு மாற்றே இல்லை என்கிற வகையிலும் அவரது சினிமா மொழி திடமானது. தொடக்கத்தில் காண்பிக்கப்பட்ட சிவப்பு வயர் துண்டு, இதெல்லாம் செய்யுமா என அதற்கு முந்தைய காட்சி வரை பார்வையாளர்கள் எதிர்பார்க்காததாக இருக்கும். படத்திலும் சிவப்பு வண்ணம் ஓர் அம்சமாகக் காட்சிகளில் துலங்கும். ஃபிரேமில் இல்லாதவர்களின் இருப்பையும் அவர்களது உடைமைப் பொருள் வழி சித்தரிப்பதையும் இந்தப் படத்தின் காட்சிகளில் உணரலாம்.

அரசியல் பகடியான ‘பஞ்சவடிப்பால’த்தில் கேலிச் சித்திரங்களைப் போல் கதாபாத்திரங்களைச் சித்தரித்திருப்பார். இதன் பிரதான கதாபாத்திரம்  சட்டையை வேஷ்டிக்குள் இன் செய்திருக்கும். பெயரோ துஷ்யந்தன். அவரது மனைவி மண்டோதரி. ஒழுங்காக இருக்கும் பாலத்தை இடித்துப் புதிய பாலத்துக்கான சதி தீட்டும் கதாபாத்திரத்தின் பெயர் சிகண்டி. இப்படி முழுப் படத்தையும் கேலிச் சித்திரமாக்கியிருப்பார். ஒரு நாடக ஆசிரியரின் கதாபாத்திரமே இறங்கி அவனிடம் உதவி கேட்கும் ‘கதைக்குப் பின்னில்’, நடிகை ஷோபாவின் தற்கொலை குறித்த ‘லேகயுட மரணம் ஒரு ஃபிளாஷ்பேக்’ என வேறுபட்ட களங்களில் பல படங்களை எடுத்துள்ளார் ஜோர்ஜ்.

அடூர் கோபாலகிருஷ்ணன், ஜோண் ஆப்ரகாம் போன்று தீவிரச் சூழலிலும் கவனிக்கப்படாத இயக்குநர் கெ.ஜி.ஜோர்ஜ். ஆனால், அவர்களைவிடவும் தனித்துவம் மிக்கவர். மலையாளத்திலும் ஜோர்ஜின் பார்வையாளர்கள், சினிமா கலைஞர்களும் அறிவுஜீவிகளும்தான். மம்மூட்டி, திலகன், ஷலஜா போன்ற முன்னணி நடிகர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு ஜோர்ஜுக்கு உண்டு. ஆனாலும் பொதுப் பரப்பில் ஜோர்ஜின் படங்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. மலையாள எழுத்தாளரும் இயக்குநருமான பி.பத்மராஜன் ஒரு பழைய நேர்காணலில் “என்னுடைய படங்கள் இன்றைக்குக் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஏனென்றால், என்னுடைய படங்களுக்கான தலைமுறை இனிமேல்தான் உருவாகப்போகிறது” எனச் சொல்லியிருப்பார். அது கெ.ஜி.ஜோர்ஜுக்கும் பொருந்தும்.


- மண்குதிரை                                                                                                    அக்டோபர் 1, 2023