வைரஸ் வந்த கதை

ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து இறந்த பிறகுதான் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனை இந்த வினோதமான காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அடைந்தது.



அதன் பிறகு நடந்தது உலக சுகாதாரத்துறை வரலாற்றின் தீரம் மிக்கப் போராட்டம். மாநில சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து நடத்திய உணர்ச்சியும் நிபுணத்துவமும் மிக்க இந்தப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு வந்துள்ள ‘வைரஸ்’.

ஆஷிக் அபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தோமஸ், ஆஷிஃப் அலி, ரேவதி, பார்வதி, இந்திரஜித், பூர்ணிமா, ரீமா கலிங்கல், ரெம்யா நம்பீசன், ஜோஜூ ஜோர்ஜ், ரகுமான் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் அணி வகுத்துள்ளனர். ஒவ்வொரு பாத்திரமும் அதனளவில் முக்கியத்துவம் மிக்கதாகப் படம் சித்தரிக்கிறது.

இரு காட்சிகளில் மட்டுமே வரும் ரகுமான் கதாபாத்திரம்தான், ‘இது நிபாவாக இருக்கலாம்’ என முதன்முதலாகச் சந்தேகிக்கிறது. இது பேபி மெமோரியல் மருத்துவமனையின் மருத்துவர் அனூபை அடிப்படையாகக் கொண்டது. செவிலியர் லினிக்கு சிகிச்சை அளித்த டி.பி.ரஞ்சித் கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ளார். லினியாக ரீமா நடித்துள்ளார். நிபா வைரஸ் நோயாளிகள் சடலத்தை உடற்கூறு செய்ய யாரும் முன்வராத நிலையில் அதைத் தைரியத்துடன் செய்த மருத்துவர் கோபகுமாராக இந்திரஜித் நடித்துள்ளார்.

எல்லாக் கதாபாத்திரங்களும் நிஜ மனிதர்களின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேரள சுகாதாரத்துறை அமைச்சராக நடித்துள்ள ரேவதியின் தோற்றத்தைப் பார்த்த அமைச்சர் ஷைலஜா டீச்சர் அது தனது பழைய புகைப்படம் என நினைத்துள்ளார். இந்தத் தோற்றச் சித்தரிப்பு மூலம் படத்தை உண்மைக்கு அருகில் வைக்க ஆஷிக் முயன்றுள்ளார். இந்த இடத்தில் படம் மகேஷ் நாராயணனின் ‘டேக் ஆஃ’பை நினைவூட்டுகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை முக்கியக் களமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரியில் சந்தித்துக்கொள்ளும் எண்ணற்ற கதாபாத்திரங்களின் வழி கதை விரிந்து செல்கிறது. மருத்துவர் பிஜின் – மருத்துவர் சீது பொன்னுத் தம்பி தம்பதியின் நிஜக் கதையும் இதில் வருகிறது. இத்துடன் ஆஷிஃப் – தர்ஷனா போன்ற சில கற்பனைகளையும் படம் உருவாக்கியுள்ளது. இந்தக் கற்பனையும் நிஜமும் பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

தன் மனைவி லினியை, ஒரு முறை காண முடியாத கணவனின் நிலையை மின்தகன அறையிலிருந்து வெளிவரும் புகை வழி, படம் உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியே பரபரப்பான கோழிக்கோடு நகரம் வெறிச்சோடிப் போன சூழலையும் காட்சிப்படுத்தியுள்ளது. நிபா பீதி பரஸ்பர மனித சிநேகத்தை நஷ்டப்படுத்தியதையும் கவனத்துடன் செல்கிறது. ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தின் இணைக் கதையாசிரியர் மோசின் பராரி, ஷர்பு, சுகாஸ் ஆகிய இருவருடன் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.



மருத்துவர்களால் கணிக்க முடியாதபடி நிகழும் இந்த மரணங்களுக்குப் பின்னாலுள்ள வினோதம் நிபா எனக் கண்டுபிடிக்கப்பட்டதும் படம் ஒரு திரில்லராக மாறுகிறது; முதன்மை நோயாளியான முகமது சாபிதிலிருந்து ஒரு விசாரணையாக முன்னும் பின்னும் நகர்கிறது. மத்திய அரசின் பிரநிதிகள் இதை அந்நியத் தாக்குதலாகக் கருதுகிறார்கள். அதைத் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கவில்லை என்றால் பாதுகாப்பு அமைச்சகம் இதைக் கைக்கொள்ளும் வாய்ப்பு சுட்டிக்காட்டப்படுகிறது.  
அதனால் நிவாரணம் இல்லா இந்த நோய் எப்படி வந்தது, அதன் மூலம் என்ன? எனக் கண்டறிய வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்படுகிறது. மணிப்பால் வைராலஜி நிறுவனத்தின் மருத்துவர் அருண் குமாரும் கோழிக்கோடு முதுகலை மருத்துவ மனைவி சீது பொன்னுத் தம்பியும் இந்தப் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த இரு கதாபாத்திரங்களிலும் முறையே குஞ்சாக்கோ போனும் பார்வதியும் நடித்துள்ளனர்.

இந்த இரு கதாபாத்திரங்கள் வழி படம் ஒரு த்ரில்லராக விறுவிறுப்படைகிறது. பார்வதி, சாபித்திடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியைத் தன்னார்வமாக மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிபா குழு இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. போபன் இந்த வைரஸ் சாபிதுக்கு எப்படி வந்தது என்பதைக் கண்டறிய அறிவியல் பூர்வமான விசாரணையில் இறங்குகிறார்.

சாபித் தோட்டத்தினுடைய பழங்கள், வளர்ப்பு முயல்கள் என இந்த விசாரணை தொடர்கிறது. 2018 ஜூன் 10 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் நிபா பாதிப்பு இல்லை என அறிவிக்கும்வரை ஒரு மாதம் காலம் தொடர்ந்த இந்தப் போராட்டத்தின் உண்மை நிலையைப் படம் வெகு அருகில் சென்று காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் நாடகத்தனமான படத்தின் இறுதி மேடைக் காட்சியில் ஆஷிக் தான் ஒரு பழைய எஸ்.எஃப்.ஐ.காரன் என்ற ரீதியில் உணர்ச்சவசப்பட்டுவிட்டார்.

ஜெயகுமார்

தமிழ் இந்து, 21, ஜூன், 2019