கோட்சே ஜனநாயகம் vs காந்திய ஜனநாயகம்



மூன்றாண்டுகளுக்கு முன்பு ‘டெமாக்ரசி’ என்னும் மலையாளக் குறும்படம் ஒன்று யூடியூப்பில் தனிக் கவனம் ஈர்த்தது. காதல், த்ரில்லர் எனக் குறும்பட முயற்சிகளும் எல்லைகளுக்குள் சுருங்கிவரும் காலகட்டத்தில் இந்தப் படம் சுதந்திரத்துடன் வெளிப்பட்டிருந்தது. பேருந்துப் பயணம் ஒன்றை உருவகமாகக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை விமர்சித்திருந்தது அந்தப் படம். அதன் இயக்குநர் ஜூபித் நம்ராடத். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அது முழுநீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதுதான் ‘ஆபாசம்’. இந்துத்துவம் முன்னிறுத்தும் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் (Aarsha Bharatha Samskaram) என்பதன் சுருக்கம்தான் ‘ஆபாசம்’.
பெங்களூரில் இயங்கும் டெமாக்ரசி (ஜனநாயகம்) என்னும் தனியார் பேருந்து நிறுவனம், காந்தி, கோட்சே, அம்பேத்கர், ஜின்னா, மார்க்ஸ் ஆகிய பெயர்களில் கேரளத்துக்குப் பேருந்துகளை இயக்குகிறது. இந்தப் பேருந்துகளும் அவற்றின் பயணிகளும்தான் கதைக் களம்.
ஜின்னா பேருந்து தொடக்கக் காட்சிகளிலேயே படத்திலிருந்து வெளியேறிவிடுகிறது. மிச்சமிருக்கும் காந்தி, மார்க்ஸ், அம்பேத்கர், கோட்சே ஆகிய பேருந்துகளுக்காக ஜனநாயக ஆட்காரர்கள் ஆள் பிடிக்கிறார்கள்.
காந்தியப் பேருந்தின் வயதான ஓட்டுநர், கிடைக்கும் நேரத்திலெல்லாம் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படம் பார்க்கிறார். எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் ஜியோ சிம்மை அவர் வாங்கியிருக்கிறார். அவரது கிளீனருக்குப் பெண் பித்து. கையில் மஞ்சள் கயிறு கட்டியிருக்கும் அவர், கோட்சே ஜனநாயகப் பேருந்தில் ஓட்டுநராக முயன்றுவருகிறார். கோட்சே ஜனநாயகத்தினர், காந்திய ஜனநாயகத்தின் நேரடிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். காந்தியைத் தோற்கடிக்கப் புதிய பேருந்து வாங்கும் திட்டமும் அவர்களுக்கு இருக்கிறது.

எல்லாப் பேருந்துகளும் போன பிறகு கடைசியாகத்தான் காந்திய ஜனநாயகப் பேருந்து வருகிறது. முழுக் குடிகாரர், மத்திய சர்காரால்தான் நாடு நலமாக இருக்கிறது என நம்பும் ஒரு இந்து பக்தர், கிறிஸ்துவப் பிரச்சாரத் தம்பதி, ஒரு திருநங்கை, சொந்த மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் ஒரு சிறுமி, பொதுக் கலாச்சாரத்தில் தனித்திருக்கும் ஒரு யுவதி, எஸ்.எஃப்.ஐ.லிருந்து டி.ஒய்.எஃப்.ஐக்குப் போய்க் கடைசியில் சோத்துக் கட்சியிலிருக்கும் ஒரு குடும்பஸ்தன், கிறித்துவரான உம்மன் சாண்டி ஆட்சி இன்னும் நடந்துவருவதாகவும் அதனால்தான் கேரளம் நன்றாக இருப்பதாகவும் நம்பும் ஒரு கிறித்துவ மூதாட்டி, ஒரு ஐடி இளைஞன், விருப்பமில்லாத தனது திருமண நிச்சயத்துக்குச் செல்லும் ஐடி பெண், கடும் பசி இருந்தும் நோன்பிலிருப்பதால் சாப்பிடாமல் இருக்கும் ஆச்சாரமான முஸ்லிம் கணவன், (அவனது மனைவியைப் பிறர் பார்ப்பதை விரும்பாத அவன் அவர்களிடம் கோபப்படாமல் மனைவியிடம் சீறுகிறான்.) சில வெளிநாட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு மாணவர், ஒரு நோயாளித் தொழிலாளி இவர்கள்தாம் காந்திய ஜனநாயகப் பேருந்தின் பயணிகள்.

இவர்களுள் தொழிலாளிக் கதாபாத்திரம் கடைசியாக வந்து சேர்கிறது. காந்திக்கும் முன்பு சென்ற மார்க்ஸ் ஜனநாயகப் பேருந்தில் அவருக்கு இடம் கிடைக் காமல் போய்விடுகிறது. முறையில்லாத வேலையாலும் கூலியாலும் கடும் உடல், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் அம்பேத்கரில் முன்புபதிவு செய்துவைக்கிறார். ஆனால், அம்பேத்கர் பேருந்துக்கு ஆட்கள் சேராததால் அதை நிறுத்திவிடுகிறது ஜனநாயக நிறுவனம். வேறு வழியில்லாமல் ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து காந்திய ஜனநாயகப் பேருந்தில் ஏறிக்கொள்கிறார்.
காந்திய ஜனநாயகப் பேருந்துக்குள் நடக்கும் சம்பவங்களும் குழப்பங்களும் படத்தின் மையக் கதை. இந்தப் பல தரப்பட்ட மனிதர்கள் ஒரே குடையின் கீழ் கூடும்போது இயல்பாக ஏற்படும் முரண்பாடுகளை அப்படியே இயக்குநர் விவரிக்கிறார்.
இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. அவர்கள் பயணத்தின் ஊடே அதைத் துழாவிப் பார்க்கிறார்கள். திருநங்கை, தனது துணிச்சலான முடிவால் சமூகத்தில் சந்திக்க நேர்ந்த அவமானங்களை நினைத்து விசனப்படுகிறார். ஐடி பெண்ணுக்கு ஒரு தமிழ்ப் பையன் மீது மையல் இருக்கிறது. அந்த ‘சொல்லாத’ காதல் வந்துபோகிறது. பயணியான பழைய கம்யூனிஸ்டுகாரனின் ஓட்டலில் மாட்டுக் கறி விற்பதால், பிரச்சினை வரலாம் என அவனுடைய சமையல்காரன் தொலைபேசி வழியாக எச்சரிக்கிறான். இனி மாட்டுக்கறியை ‘மாயாமோகினி’ (பேருந்தில் காட்டப்படும் திலீபின் படம்) எனப் பெயர் மாற்றி மெனு கார்டில் அச்சிடச் சொல்கிறான்.
ஜூபித் நம்ராடத்

இவர்கள் அல்லாது காந்திய ஜனநாயகப் பேருந்தில் மாறுவேடமிட்டு இரு நக்சலைட்கள் ஏறிக்கொள்கிறார்கள். அவர்களைத் தேடிவரும் போலீஸ் பேருந்தைப் பாதி வழியில் நிறுத்திவிடுகிறது. ஆனால் வழக்கம்போல் அதற்கு முன்பே அவர்கள் தப்பிவிடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ‘கோட்சே’வில் ஐடி இளைஞர், ஐடி பெண், இந்து பக்தர் எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். காந்திய ஜனநாயகம் மட்டும் நடு வழியில் நிற்கிறது.
சமகால அரசியலை இவ்வளவு துணிச்சலாகச் சொன்ன படம் சமீபத்தில் இல்லை எனலாம். தணிக்கைக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருந்தது என்பதிலிருந்தே இதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். தெறிப்புகளாக இந்தப் படம் ஜனநாயகத்தின் முன் வலுவான கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், கதையாக அது சொல்லும் தீர்வு, இந்திய ஜனநாயகத்தைப் போல் பலவீனமானதாக இருக்கிறது.

(20, ஜூலை, 2018, இந்து தமிழ் திசை)