லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் என்ற 1986-ல் வெளிவந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்றவர் ஆர்.சிவகுமார். ‘மீட்சி’ இதழ் வழியாகத் தொடர்ந்து இயங்கியவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் மொழிபெயர்த்த மொத்த சிறுகதைகளின் தொகுப்பு ‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ என்ற தலைப்பில் ‘பாதரசம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ஆர்.சிவகுமாருடன் பேசியதிலிருந்து...
உங்கள் முதல் மொழிபெயர்ப்பு எப்போது வெளிவந்தது?
1982-ல் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து அவருக்கு உலகமெங்கும் பரவலாக ஒரு வாச கவனம் கிடைத்தது. அப்படித்தான் நண்பர்கள் மணிக்கண்ணன், பிரம்மராஜன், நான் எல்லோரும் அவரது கதைகளை மொழிபெயர்க்க முடிவெடுத்தோம். அப்படித்தான் 1983-ல் ‘செவ்வாய்க் கிழமை மதியத் தூக்க’த்தை மொழிபெயர்த்தேன்.
பிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ உங்களுக்கு அடையாளமாக ஆனது இல்லையா?
கிட்டத்தட்ட எனக்கு நெருக்கமான கதைதான். நான் அப்போது வேலையில்லாமல் இருந்தேன். சகோதரிகள் இருந்தார்கள். மற்ற சூழல்களையும் தொடர்புபடுத்திக்கொண்டேன். ஆனால், அந்த அப்பா மாதிரி இல்லை என் அப்பா. அது ஒன்றுதான் வித்தியாசம். இந்த நெருக்கம்தான் என்னை மொழிபெயர்க்க வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மொழிபெயர்த்தேன். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
வெவ்வேறு விதமான கதைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். கதைகளைத் தேர்வுசெய்ய என்ன அளவுகோல் வைத்துக்கொண்டீர்கள்?
முதலில் கதை எனக்குப் பிடிக்க வேண்டும். நம்முடைய கதைகளிலிருந்து வேறுபட்டு ஏதோ ஒரு அம்சத்திலாவது புதிதாக இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்படியான கதைகளைத் தமிழுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்குத் தோன்ற வேண்டும். இவைதாம் என் அளவுகோல். சில சமயங்களில் நண்பர்கள் தேர்வுசெய்து அனுப்புவார்கள். அப்படியும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் மொழிபெயர்ப்புகள் தமிழ்ப் படைப்பு மொழியில் என்ன மாதிரியான மாற்றத்தை விளைவித்தது?
‘மீட்சி’யின் மொழிபெயர்ப்புகள் பெரிய சலசலப்பை விளைவித்தன. ‘மீட்சி’ வெளியீடாக வந்த என்னுடைய ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ நூலும் அந்த அளவுக்குக் கவனிக்கப்பட்டது.
எழுத்தாளர்கள் பலரும் என் மொழிபெயர்ப்புகள் வழியாக விவரிப்புமொழியின் மாற்றத்தைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது தமிழ் விவரிப்புமொழி வளர்ச்சி அடைய ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், அதை நான் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுக் காலத்தில் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்புக்கு இப்போதைய தேவை என்ன?
இன்றைக்குத் தமிழ்ப் படைப்புமொழி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அது ஏற்கெனவே இருந்த மொழியின் தொடர்ச்சிதான். அந்த வகையில் இந்த மொழிபெயர்ப்புகளையும் தமிழ்ப் படைப்புமொழி வரலாற்றின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
மொழிபெயர்ப்பதில் எந்த எழுத்தாளர் உங்களுக்கு சவாலாக இருந்தார்?
அமெரிக்க எழுத்தாளர் கான்ரட் எய்க்கின் ‘மெளனப் பனி ரகசியப் பனி’ கதை உணமையில் சவால்தான். ஒரு கனவு உலகத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். சற்றுப் பின்தங்கிவிட்டாலும் கதை நம்மை விட்டு விலகிவிடும். இந்தச் செயல்பாட்டில் மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். எனக்கு உதவினார்.
பொதுவாக வாசிக்கும்போது கதையின் தொனி ஒரு 50% பிடிபட்டுவிட்டாலே போதும். மொழிபெயர்க்கத் தொடங்கிவிடலாம். மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் மரபுத் தொடர்களை (idioms) மொழிபெயர்க்கும்போது சறுக்கிவிடுவார்கள். நமக்கு எவ்வளவு தெரிந்தாலும், சலித்துக்கொள்ளாமல் அகராதிகளைப் புரட்ட வேண்டும்.
மூல மொழி அல்லது மொழிபெயர்ப்பு மொழி எதற்கு விசுவாசம் காட்டுவீர்கள்?
மொழிபெயர்ப்புக்குப் பல புதிய கோட்பாடுகள் இன்றைக்கு வந்திருக்கின்றன. பின்நவீனத்துவத்தில் மூலமொழிக்கு விசுவாசம் காட்ட வேண்டிய அவசியமில்லை எனக் கூறுகிறார்கள். இதில் நான் பழைய பள்ளியைச் சேர்ந்தவன்தான். மூல மொழிக்குத்தான் விசுவாசம் காட்டுவேன். மொழிச் சிக்கல் வரும் இடங்களில் ஒரு வார்த்தைக்கு, இரு வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மொழிபெயர்ப்பு மொழிக்கு நியாயம் செய்வதற்காக மூல மொழியின் பிரதியை விட்டு விலகிச்செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எழுத்தாளருக்கு இணையானவர் மொழிபெயர்ப்பாளர் என்ற கோட்பாடும் வந்திருக்கிறது?
அதில் எனக்கு உடன்பாடில்லை. படைப்புகள் வாசிக்கும்போதும் ஏற்படும் பிரமிப்பு இன்றைக்கும் நீங்குவதில்லை. அவர்கள்தான் அதை உருவாக்குகிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் அதை நகலெடுக்கத்தான் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர்கள் ஒருபடி கீழ்தான்.
ஆங்கில இலக்கியம் இன்றைக்கு எப்படி இருக்கிறது?
விவரிப்பு மொழியில் நிறையவே மாறியிருக்கிறது. விவரிப்பு மொழி, உரைநடையிலிருந்து பேச்சு வழக்காக மாறியிருக்கிறது. இது கதைகளில் மட்டுமல்ல. கட்டுரைகளிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. எழுத்தாளருக்கும் வாசகருக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.
எழுத வேண்டும் எனத் தோன்றியதுண்டா?
அது எப்படித் தோன்றாமல் இருக்கும்? ‘அஃக்’ இதழில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ‘ரெண்டுபேர்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு தொடரவில்லை.
(தி இந்து, 20, ஜனவரி, 2018)