மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம்


உலகத்து இருளையெல்லாம் ஒன்று திரட்டிய பேரிருள் போன்றது மனத்தின் இருட்டு. அதன் சஞ்சலங்கள், தாபங்கள் போன்ற வெளிப்பாட்டு உணர்ச்சிகள் எல்லாம் மின்னல் கீற்றுகள். இந்த இருளிலிருந்து விடைபெற்று விடியலில் சாசுவதம் கொள்ளத் துடிக்கும் மன எழுச்சியை மெளனியின் கதைகள் எனலாம்.
தமிழில் உரைநடை பதமாகிவந்த காலகட்டத்தில் கதைகள் எழுதத் தொடங்கியவர் மெளனி. 1936-ல் அவரது முதல் கதை வெளிவந்தது. அவரது கடைசிக் கதை 1971-ம் ஆண்டு வெளிவந்தது. சில காலம் மெளனி எழுதாமலும் இருந்திருக்கிறார். மொத்தம் 24 கதைகளே அவரது இலக்கியப் பங்களிப்பு. ஆனால் அவற்றுக்குள் தன் புழங்கு மொழியை நெருப்பிலிட்ட பொன்னைப் போல் பொலிவேற்றியிருக்கிறார். கதை வடிவத்தையும் புடம்போட்டிருக்கிறார். நேராகக் கதை சொல்லும் பாங்கிலிருந்து விலகி ஒரு அரூபத்தை விதைத்துப் பார்த்திருக்கிறார். இந்தத் தன்மைகள் அவரது கதைகளுக்கு விநோதத்தை அளித்திருக்கின்றன. இந்த விநோதம் வாசகனை விலகச் செய்வதல்ல; உள் நோக்கி ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
மெளனியின் கதைகள் பெரும்பாலானவை மனத்திற்குள்ளேயே நிகழ்பவை; ஒற்றைத்தன்மையிலானவை. ஆனால் படர்க்கையில் மொழியப்பட்டிருக்கும் கதைகளும் தன்னிலை விவரிப்பாக மாறக்கூடிய விசேஷ குணம் கொண்டவை. உதாரணமாக ‘காதல் சாலை’, ‘ஏன்’, ‘பிரபஞ்ச கானம்’ ஆகிய கதைகள் வேறு ஒருவரின் கதையைச் சொல்வதுபோலத்தான் தொடங்குகின்றன. ஆனால் கதையோட்டத்தில் கதைசொல்லிக்கும் கதைமாந்தருக்குமான இடைவெளி குறைந்து, படர்க்கை, தன்னிலையாக ஆகிவிடுகிறது.
மெளனிக்குக் கதைகளை உரையாடல் மிக்கதாக உருவாக்க விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் தாக்கத்தால் பரவலான இந்த மாற்றத்தை மெளனி முன்பே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். உரையாடல்களால் ஆன கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அதன் வெளிப்பாடு பலவீனமானது. மன எழுச்சியை விவரிப்புகளுடன் சித்திரிப்பதில்தான் மெளனி சுதந்திரமாக உணர்கிறார் எனலாம். அதில்தான் அவரது ஆற்றலும் வெளிப்படுகிறது.
மெளனியின் கதைகள் நடுத்தரவர்க்கக் குடும்பச் சூழலைப் பின்னணியாகக் கொண்டவை. ஆனால் ஜீவிதக் கவலைகள் எல்லாம் அவற்றுக்குப் பெரிதாக இல்லை. அந்தக் காலகட்டத்தின் சமூக நிலை சார்ந்த கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கதைகள் அகப் பாய்ச்சலுக்கானவை என்பது என் துணிபு. காக்கை கரைவது, மரங்களின் நிழல்கள் நீரில் ஆடுவது போன்ற வெளியுலகச் சூழலைத் தன் மனநிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் மெளனியின் கதைகள் தமிழ்ச் சங்க இலக்கியக் காட்சிகளுடன் ஒப்பிடத்தகுந்தவை. அக்ரஹார இருட்டில் உள்ள பெண்களை, ஜன்னல்வெளி ஒளியைப் போல் சித்திரிக்கிறார். பெண்கள், நோவு தரும் அழகுப் பதுமைகள் மட்டும்தானா? என இந்த நூற்றாண்டில் கேள்வி எழுப்பினால், அவர்களின் பாடுகளையும் மெளனி விவரித்திருக்கிறார். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ அதற்கு ஓர் உதாரணம்.
மெளனியின் ‘பிரபஞ்சகானம்’ அவரது சிறந்த கதைகளுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. மனப் பிரவாகத்தின் ஆவேசமான வெளிப்பாட்டைக் கொண்டது இக்கதை. அவள் எதிர் வீட்டிலிருக்கிறாள். நன்றாகப் பாடக்கூடியவள். வீணையும் வாசிப்பாள். இவன் இங்கு இருக்கிறான். அவளைப் பார்க்கிறாள். அவள் எப்போதாவது இவனைப் பார்த்தாளா?
பிரபஞ்சத்தின் கானமான அவள் பாடக் கூடாது என டாக்டர் சொல்லிவிடுகிறார். அவள் பாடாமல் இயற்கையே குறைவுபட்டதுபோல் ஆகிவிடுகிறது என்கிறார் மெளனி. இங்கே மனத்தின் குறை இயற்கையின் குறையாக ஆகிறது. பாடினால் இறந்துபோய்விடுவாள் என்றாலும் இயற்கை சாசுவதம் கொள்ள அவள் பாட வேண்டும். இயற்கையின், மனத்தின் சாசுவதத்துக்காக அவள் பாடத் தொடங்குகிறாள். அவளது சங்கீதம், பிரபஞ்சம் கானமாக எங்கும் வியாபகம் கொள்கிறது. இந்தக் கதையின் காட்சிகள் செவ்வியல் தன்மை கொண்டவை. அவள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆடைகளை நனைத்துக் கொண்டிருக்கும்போது இவன் செல்கிறான். ஒரு குடியானவள் சாணி தட்டிக்கொண்டிருக்கிறாள். இவன் தலைக்கு மேலாகப் பறக்கும் மீன்கொத்தியொன்று, மீனைக் கொத்தி எழுகிறது. மறு கரையில் நாரைகள் நீரில் தங்கள் உருவம் பார்த்துக்கொண் டிருக்கின்றன. இந்தப் புறக் காட்சிகளை மெளனி தன் மன எழுச்சியின் ஸ்தூல வடிவாகக் கதையில் பிரதிஷ்டை செய்கிறார்.
‘ஏன்’ கதையிலும் ஒரு எதிர் வீட்டுப் பெண் வருகிறாள். அவள் மீதும் இவன் காதல் கொள்கிறான். காலங்கள் கடக்கின்றன. அவன் மேற்படிப்புக்காக வெளியூர் போய்விடுகிறான். அவளுக்குக் கல்யாணமும் ஆகிவிடுகிறது. ஒரு விடுமுறைக் காலத்தில், திண்ணையில் அவள் குழந்தையுடன் அவளைப் பார்க்கிறான். அவளும் புருவம் உயர்த்திப் பார்க்கிறாள். அவன் குழம்பிப் போகிறான். அவனது சந்தோஷம் போய்விடுகிறது. அவன் ஜுரம் கொண்டு படுக்கையில் விழுகிறான். அவன் பிரேதத்தைக் கொண்டுபோகும்போது அவள் அதே திண்ணையில் அதேபோல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கவிதைக்குரிய விநோதங்களைக் கொண்டவை இந்தக் கதைகள்.
இறுக்கமும் உவமைக் கட்டுகளும் நிறைந்த மொழிநடை மெளனியுடையது. மரபிலிருந்து விலகிய கவிதைகளை முன்மொழிந்த க.நா.சுவையும் மரபின் பாதிப்பை ஆழமாகப் பிரதிபலித்த பிரமிளையும் கவர்ந்தவராக மெளனி இருந்திருக்கிறார். இது கவனிக்கதக்கது. மெளனியின் மொழிக்கு அந்த ஆற்றல் இருந்திருக்கிறது. பிரபஞ்சப் பூவைப் போல உதயத்தையும் அந்தியையும் விவரிக்கிறார். இது பிரமிளைக் கவரக்கூடியது. சொல் வண்ணத்தில் புதுமையைப் புகுத்திப் பார்க்கிறார். இது, க.நா.சு.வை அபிப்ராயப்படவைப்பது.
மெளனியின் கதைகளில் சித்திரிக்கப்படும் இயற்கை விவரிப்புகள் விஷேசமானவை. மேகங்களைக் கூட்டி வைத்த தீ என அந்தியைச் சொல்கிறார். காட்சி மயக்கம் கொண்ட அந்தியும் புலரியும் அவருக்கு ஒன்றுதான். அவற்றை அவர் பாணியில் மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம் எனலாம். அவற்றைத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்துகிறார். அந்தியின், புலரியின் காட்சி மயக்கத்துடன் மெளனியின் மொத்த கதைகளின் விநோதத்தையும் ஒப்பிடலாம். அவரது கதைகளின் இந்தச் சூழ்ச்சி வாசகனை வசீகரிக்கக்கூடியது.
இந்த மேகக் குவியல்கள் போன்ற மனத் திணறல்களிலிருந்து சூரியனைப் போல் வெளிப்படுவதுதான் மெளனி என்னும் கதை மனத்தின் பிரயாசம். ஆனால் அந்த மனத்தின் நோக்கம், சூரியோதயம் என்னும் சாசுவதம் அல்ல; மேக மூட்டத்திலேயே உழலும் அசாசுவதம்தான்.
- மண்குதிரை (ஜூன் 12, 2016)