ஈட: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்கண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’.
ஆஎ.எஸ்.எஸ். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை அரசியல் இயக்கமாக வலுப்பெறவில்லை. ஆனால் சி.பி.எம் தொழிலாளர்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வழியாக வலுவடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் கண்ணூர் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஆடூர் கோபாலகிருஷ்ணன், ராஜீவ் ரவி ஆகியோரது படங்களில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய பி.அஜித்குமார் இந்தப் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இவர் சிறந்த படத் தொகுப்புக்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

ஒரு ஊரடங்குப் போராட்டத்தில் தொடங்கும் இந்தப் படம் இன்னொரு ஊரடங்குப் போராட்டத்தில் முடிகிறது. பேருந்து ஓடாததால் ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்க்கும் பொறுப்பு ஒரு நண்பர் மூலமாக ஆனந்துக்கு வருகிறது. இளம் வயதிலிருக்கும் இருவருக்கும் இந்தப் பயணம் பரஸ்பர ஈர்ப்பை அளிக்கிறது. சிறு சந்தோஷம் சிறகசைக்கிறது. முதல் அறிமுகத்திலேயே ஐஸ்வர்யா, ஆனந்திடம் கோபித்துக்கொள்கிறாள். அவனும் பணிந்துபோகிறான். ஆனாலும் தொடர்பு எண்களைப் பரிமாறிக்கொள்ளாமல் பிரிந்து விடுகிறார்கள்.

ஒரு ரம்மியமான காதலைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இந்தப் படம் அடுத்த காட்சியிலே கைது, சிறை, கட்சி எனத் தீவிரமடைகிறது. ஐஸ்வர்யாவின் அண்ணன் அந்தப் பகுதியின் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். ஆனந்தின் தாய்மாமன் ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர். இந்தக் கதாபாத்திரங்களின் வழியாக கண்ணூரின் அரசியல் மூர்க்கத்தையும் படம் சொல்லிச் செல்கிறது. கண்ணூரின் அடையாளமான தெய்யம் என்னும் சடங்குக் கலையை இந்தப் படம் சித்திரித்துள்ளது. இந்தத் தெய்யம், கண்ணூர் மனத்திலிருக்கும் ‘போராளிக் கலாச்சார’த்துக்கான ஆதாரம் என்பதையும் படம் சொல்ல முயல்கிறது.
அரசியல்கொலை ஒன்றுக்குப் பொறுப்பேற்கச் செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ்.காரரைக் கொல்லத் திட்டமிடும் கம்யூனிஸ்ட்காரர்களின் முயற்சி தோல்வி அடைகிறது. இந்த நெருக்கடிக்குள்தான் இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். மலைமுகட்டின் பூவைப் போல் காதல் அரும்புகிறது. முகநூல் அவர்களை இணைத்து வைக்கிறது. வாட்ஸ்-அப் உறவை வளர்க்கிறது.
காதல் பள்ளதாக்கின் முனையில் ஐஸ்வர்யாவும் ஆனந்தும் அடிக்கடிச் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால் விழாமல் வீடு திரும்புகிறார்கள். அந்த ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களும் காதலின் விளிம்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சென்னையின் ஜாம்பஜார் போன்ற நெருக்கடியான மைசூர் சந்தை ஒன்றில் பலசரக்குப் பொருளைத் தவறவிடுவதைப் போல, ஐஸ்வர்யாவே தன் காதலை ஒரு கணத்தில் சொல்லிச் சென்றுவிடுகிறார்.
உடனடியாக ஆப்பிளைக் கடித்த முதல் மனிதர்களின் பாவ பாவனை இருவருக்கும் வந்துவிடுகிறது. இதுபோன்று காதலின் அபூர்வமான தருணங்களை படம் பிடித்துள்ளது ‘ஈட’.
இந்த ஆர்.எஸ்.எஸ்., கம்யூனிஸ்ட் எல்லாவற்றையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் இது ஒரு ரோமியோ-ஜூலியட் கதைதான். ஆனந்த், முன்னாள் காதலி யாராலும் ஏமாற்றப்படவில்லை. ஆனால் ஜூலியட்போல் ஐஸ்வர்யா, ஒரு வளர்ந்து வரும் ‘தோழரு’க்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். ரோமியோவைப் போல் ஆனந்தும் ஊருக்கு வெளியே துரத்தப்படுகிறான். ‘ஐயா’ ‘களவாணி’ போன்ற படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய படம்தான். ஆனால் சமகால அரசியலையும், அது சாதாரண மக்களின் வாழ்க்கையில் விளைவிக்கக்கூடிய பாதகமான பாதிப்புகளையும் சொல்வதன் மூலம் ‘ஈட’யை அஜித்குமார் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.
(தி இந்து, 12, ஜனவரி, 2018)