சினிமாவில் கதைகளை வரைந்தவர்இருப்பம் வீடு சசிதரன் என்ற இயற்பெயர் கொண்ட ஐ.வி.சசி 1948-ல் கோழிக்கோட்டில் பிறந்தவர். நடிகை சீமாவை 1980-ல் மணந்தார். 1970களில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி 2009 வரை  ஐம்பது வருடங்களில் ஏறத்தாழ 150 படங்களை உருவாக்கியுள்ளார். கேரள அரசின் உயர்ந்த சினிமா விருதான ஜே.சி.டாணியல் விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். சென்னை வடபழநியில் வசித்துவந்த இவர், இறப்பதற்கு முந்தைய நாள் வரை தனது புதிய சரித்திரப் படமான ‘Burning Wells’க்கான கதை ஆலோசனையில் இருந்துள்ளார். 

...
 மலையாள சினிமாவின் முழுமையான நடிகராக (Complet Actor)மோகன்லால் முன்னுறுத்தப் படுவதுண்டு. அதுபோல முழுமையான இயக்குநர் (Complete Director) என்ற கூற்றுக்குப் பொருத்தமானவர் ஐ.வி.சசி. ‘உல்சவம்’ படத்தில் இயக்குநராகி அறிமுகமாகி, கதை சொல்லலில் அத்தனை சாத்தியங்களையும் தனது சினிமாக்கள் மூலம் முயன்று பார்த்தவர் சசி.  கதை சொல்லும் ஊடகம் என்பதாக இருந்த மலையாள சினிமாவை கதை நிகழ்த்துதலாக மாற்றிக் காண்பித்தவர். சசி வந்த பிறகுதான் பிரம்மாண்டமான காட்சிகள் அதிகம் உருவாக்கப்பட்டன எனச் சொல்லப்பட்டன. மிகப் பெரிய கூட்டத்தை இயக்கும் ஆற்றல் உள்ள இயக்குநர் சசி என மோகன்லால் சொல்லியிருக்கிறார்.
மலையாள சினிமா தொடக்கத்தில் பிரேம் நசீர், சத்யன், மது என நடிகர்களால்தான் அறியப்பட்டது; எல்லா மொழி சினிமாக்களையும் போல் நடிகர்களைக் கொண்டுதான் கொண்டாடப்பட்டது. மலையாள சினிமாக்களை இயக்குநருக்காக அறியப்படச் செயதவர் சசி. அதற்கும் முன் ராமு காரியத், சேது மாதவன், பி.பாஸ்கரன் போன்ற இயக்குநர்கள் மலையாள சினிமாவின் சிறந்த படங்களை உருவாக்கித் தந்திருந்தார்கள். என்றாலும் தொடர்ந்த தனது இயக்கம் மூலம் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர்போல சசி, நட்சத்திர அந்துஸ்து பெற்றவர் இயக்குநராக ஆனவர். 

ஐ.வி.சசி, கலைத் துறையில் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். சினிமா இயக்க வேண்டும் ஆர்வமில்லாதவராக கலை இயக்கத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தி வந்தவர். சசியின் நண்பரான மலையாள இயக்குநர் ஹரிஹரன் அப்போது உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்தார். இன்றைக்கு உள்ளதுபோல் உதவி இயக்குநர்கள் அதிகம் இல்லாத காலகட்டம் அது. அந்தச் சமயத்தில் ஏ.பி.ராஜ் இயக்கிய ‘கண்ணூர் டீலக்ஸ்’ என்ற படத்துக்கு உதவியாளர்கள் தேவைப்பட, ஹரிஹரன் கேட்டுக்கொண்டதால் சசி அதில் உதவி இயக்குநர் ஆனார். ஆனால் அந்த வேலையை அவரால் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அதனால் தயாரிப்பாளரின் விமர்சனத்துக்கு ஆளானார். இந்த அனுபவத்தால், ‘தான் ஒரு படம் இயக்கிக் காட்ட வேண்டும்’ என்ற பிடிவாதம் கொண்டார். அதுதான் அவரை இயக்குநராகவும் ஆக்கியது. தான் இயக்குநர் ஆனதற்கான காரணமாக இந்தச் சம்பவத்தையும், இயக்குநர் ஹரிஹரனையும் நடிகர் கமல் ஹாசனையும் எப்போதும் அவர் நினைவுகூர்வதுண்டு. 
கமல் ஹாசன், சசியின் ‘அவளுட ராவுகளி’ல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சசியின் ‘அலாதீனும் அல்புத விளக்கும்’, ‘விருத்தம்’, ‘அனுமோதனம்’ உள்ளிட்ட பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். ரஜினிகாந்தை மலையாளத்தில் அறிமுகம் செய்த பெருமையும் சசிக்கு உண்டு. தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இந்தியில் ராஜேஷ் கன்னா ஆகியோரை வைத்து நேரடிப் படங்களையும் சசி இயக்கியுள்ளார். 

 ‘இன்ஸ்பெக்டர் பல்ராம்’ என்ற கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு மூன்று வெற்றிப் படங்களை மம்மூட்டிக்குப் பெற்றுத் தந்ததுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘தேவாசுரம்’ மோகன்லாலுக்கு மிகப் பெரிய ரசிகத் திரளைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார்களாக நிலைபெற்றுவிட்ட மோகன்லாலுக்கும், மம்மூட்டிக்கும் இந்த இடத்துக்கு வந்துசேர சசியின் படங்கள், எண்பதுகளில் ஏணிப்படிகளாக இருந்தன. 

மலையாள சினிமாவின் முக்கியமான கதையாசிரியர்களான டி.தாமோதரன், எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன்  ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். எம்.டி.வியின் கதையில் வெளிவந்த ‘ஆள்கூட்டத்தில் தனியே’ சசயின் தனித்துவமான படமாக அறியப்படுகிறது. மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து நடித்த இந்தப் படம் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியது. அவரது மனைவியான சீமா மையப் பாத்திரமாக நடித்திருப்பார். ஒரு வணிக சினிமா இயக்குநர், ‘உதிரிப்பூக்கள்’ செய்ததுபோல் இந்தப் படம் காலம் கடந்து வியக்கவைக்கிறது.

சசியின் மிகத் துணிச்சலான படமாக இன்றும் போற்றப்படும் ‘அவளுட ராவுகளி’லும் சீமாதான் கதாநாயகி. இந்திய தணிக்கைத் துறையின் ஏ சான்றிதழ் பெற்ற முதல் மலையாளப் படமான இதனால் சசி டும் விமர்சனத்துக்கு உள்ளானார். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆபாசப் படமாகத் தோன்றும் இந்தப் படத்தில், வறுமை, தீவிரமான காதல், அதனால் உருவாகும் பதற்றம், குற்றவுணர்வு, அதனால் உருவாகும் காதல் என மனித மனத்தின் உணர்ச்சிகளை சசி தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்.

லோகிததாஸின் கதையிலான ‘மிருகயா’ ஊருக்குள் வரும் சிறுத்தை,  அதைக் கொல்ல வரும் வேட்டைக்காரன் இருவரையும் மையப்படுத்தியது. வேட்டைக்காரனாக மம்மூட்டி நடித்திருப்பார். இன்றைக்குள்ள அறிவியல் வளர்ச்சியில்லாத காலகட்டத்தில் நிஜ சிறுத்தையைக் கொண்டு முழுப் படத்தையும் எடுத்திருப்பார். மம்மூட்டியும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளும் படத்தில் உண்டு. அதேசமயம் தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘கும்கி’ போல யாதார்த்தை விட்டுவிலகாமல், மோகன்லாலின் ‘புலிமுருகன்’ போல் சகாசக் கதைபோல் அல்லாமல் இந்தப் படத்தை சசி உருவாக்கியிருப்பார். சிறுத்தையைப் போல் வேட்டைக்காரனும் மனிதர்களால் வேட்டையாடப்படும் இந்தக் கதையின் மைய உணர்ச்சியை படம் முழுக்கத் தக்கவைத்திருப்பார் சசி.

 ரஞ்சித்தின் கதையில், சசி இயக்கிய ‘தேவாசுரம்’ மலையாளத்தின் கிளாசிக்குகளில் ஒன்று. கதையாக வாசிக்கும்போது ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் சண்டியர்த் தனம் எனச் சுருங்கித் தெரியக்கூடிய இதை சசி தன் இயக்கத்தால் காவியமாக்கியிருப்பார். ராமாயணப் பாத்திரமான ராவணனுடன் சிலப்பதிகார நாயகியான கண்ணகியை மோதச் செய்திருப்பார். பாண்டிய மன்னனின் சபையில் கண்ணகியைப் போல், பானுமதி, மங்களசேரி நீலகண்டன் சபையில் சிலங்கையை ஏறிவாள். பார்வையாளர்களின் உணர்ச்சிகள் வீசி எறியப்பட்ட சலங்கையிம் மீது குவியம் விதமாக அந்தக் காட்சியை சசி எடுத்திருப்பார். அதன் இறுதிக் காட்சியில் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்வையாளர்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் காட்சி அவரது ஆளுமைக்கு ஓர் உதாரணம்.
 ‘தேவாசுரம்’ மட்டுமல்லாது அவரது சினிமாக்களின் காட்சிகள் வரைந்து வைத்த ஓவியத்தைப் போன்றவை. பொருளோ கதாபாத்திரங்களோ பின்னிருப்பவர்களோ அவர் தீர்மானித்த அளவுகளில்தான் இருப்பார்கள். சற்று விலகிவிட்டால் சசி என்கிற ஓவியனின் மனம் பதற்றமடையத் தொடங்கிவிடும். இந்தப் பண்பால் சசியை சினிமாவில் கதைகளை வரைந்தவர் எனலாம்.


இயக்கம் என்ற ஒரு துறையை மட்டும் எடுத்துக்கொண்டு இயங்கியவர் சசி. சரித்திரம், காதல், குடும்பம், த்ரில்லர், நகைச்சுவை போன்ற பல தரப்பட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கியவர். இந்தப் படங்களின் மூலம் பலதரப்பட்ட ரசனைகள் கொண்ட ரசிகர்களின் இயக்குநராக இருந்தார் சசி. இந்தக் காரணத்துக்காக முழுமையான இயக்குநர் என ஐ.வி.சசி கொண்டாடப்படுகிறார்.

ி இந்து, க்டோபர் 24, 2017