பெரும்பாலான படங்கள் எடிட்டிங் மேஜையில்தான் உருவாகின்றன - ப்ரியதர்ஷன் நேர்காணல்


தமிழ், மலையாளாம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் இயங்கிவருபவர் இயக்குநர் ப்ரியதர்ஷன். தேசிய விருதுபெற்றவர். மலையாளப் படமான  ‘மகேஷிண்ட பிரதிகாரத்’தை, ‘நிமிர்’ என்ற பெயரில் தமிழில் இயக்கி முடித்திருக்கிறார். படத் தயாரிப்புக்காக வந்திருந்தபோது அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் படங்களின் நகைச்சுவை ‘இங்கிலீஷ் நகைச்சுவை’ அது தமிழுக்குஏற்றதாகுமா?

நகைச்சுவை செய்தவற்காகப் படம் நான் எடுப்பதில்லை. என் கதாபாத்திரங்கள்அதைச் சிரித்துக்கொண்டு செய்வதில்லை. ‘கிண்ணர’த்தில் ஜெகதி ஸ்ரீகுமாரின் உண்ணுணித்தான் கதாபாத்திரம் தனது மனைவியுடன் தகாத உறவு கொண்டுள்ள போபி கதாபாத்திரத்தைப் பின் தொடர்வது உண்மையில் நகைச்சுவை இல்லை.  வேதனைதான். பார்வையாளர்களுக்குத்தான் அது நகைச்சுவை.  நகைச்சுவை என்பது இயல்பானதாக இருக்கவேண்டும். அப்படித்தான் இந்தப் படத்தையும் செய்திருக்கிறேன்.

‘முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குந்நு’, ‘சித்ர’ம் படம் தொடங்குவதற்கு இடையிலான10 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட்ட படம். அதுபோல இந்தப் படமும் குறுகிய காலஇடைவெளியில் எடுக்கப்பட்டடுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது?

36 நாட்கள் என்பதுதான் எனது திட்டம். இதற்குள் முழுப் படத்தையும் எடுத்துமுடித்துவிட வேண்டும். இப்போது சினிமா எடுக்க வரும் பலரும் சினிமாவை மட்டும் பார்த்து, சினிமா எடுக்கிறார்கள். அதனால் அளவுக்கு அதிகமாக எடுத்துவிடுகிறார்கள். இன்றைக்கு உருவாக்கப்படும் பெரும்பாலான படங்கள் எடிட்டிங்  மேஜையில்தான் உருவாகின்றன. நான் தேவையில்லாமல் ஒரு ஷாட் கூட எடுக்கமாட்டேன்.

மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் படமெடுத்து வருகிறீர்கள். நான்கு வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை எப்படிக் கையாள்கிறீர்கள்?

மொழி, கலாச்சாரம் ஆகிய இரண்டு அம்சங்களைத்தான் மொழி மாற்றம்செய்யும்போது கணக்கில் எடுத்துக்கொள்வேன். மூலப் படத்திலுள்ள ஆத்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு மொழி, கலாச்சாரத்துக்காகத் திரைக்கதையை  மாற்றியமைப்பேன். பிறகு நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இல்லை. உலகம் முழுவதும் உணர்ச்சி ஒன்றுதான் என்று நம்புபவன் நான்.

வெள்ளானகளுட நாடு, முகுந்தேட்ட சுமத்ரா விளிக்குந்நு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் உங்களுடன் துணை நின்றவர் ஸ்ரீனிவாசன். அவருடன் மீண்டும் பணியாற்ற வாய்ப்புள்ளதா?

புதிய புதிய விஷயங்கள் இன்றைக்கு சினிமாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. புதிய விஷயங்களுடன் இணைந்து பணியாற்றத்தான் எனக்கு விருப்பம். ஸ்ரீனிவாசனுடனுன் பணியாற்றக் கூடாது என்றில்லை. நல்ல கதை, சூழல் அமையும்போது பணியாற்றுவேன்.

மோகன்லால்-ப்ரியதர்ஷன் வெற்றிக் கூட்டணி பற்றி...

மோகன்லால் மட்டுமல்ல இந்தியில் அக்‌ஷய்குமாருடனும் இதுபோல் பல வெற்றிப்படங்களைச் செய்திருக்கிறேன். அவரது வளர்ச்சியில் என் படங்களுக்கு முக்கியப்பங்குண்டு. பொதுவாக ஒரே குழு நடிகர்களைவைத்துப் படம் செய்கிறேன் எனச்சொல்வதுண்டு. நமக்கு ஏதுவான வட்டாரத்தில் பணியாற்றுவதுதான் படத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும். வெற்றிக்கும் வழிவகுக்கும்.

இன்னசண்ட், நெடுமுடி வேணு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் உங்கள் படத்தில் பணியாற்றும்போது நெருக்கத்தை உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்...

பொதுவாகப் படமாக்கும்போது நடிகர்களுடன் நட்பு பாராட்டுவதை முக்கியமாகக் கொள்கிறேன். இயக்குநர்-நடிகன் என்பதற்கு அப்பாற்பட்டு உருவாகும் நட்பு அவர்களை என்னிடத்தில் நெருக்கமாக்கும். அவர்கள் இயல்பாகப் பணியாற்ற இதுஅவசியம். அவர்களும் கடமைக்காக நடிக்க மாட்டார்கள். என்னுடன் உண்டானதுபோல ஒரு நெருக்கம் படத்துடனும் உருவாகும். இது, படத்துக்கும் வலுச் சேர்க்கும்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தயாரித்த ‘கோபுர வாசலிலே’ மூலம் அறிமுகம் தமிழில் அறிமுகமானீர்கள். இப்போது 25 வருடங்களுக்குப் பிறகு ‘நிமிர்’படத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினை இயக்குகிறீர்கள்...

கோபுர வாசலிலே 125 நாட்களுக்கு மேல் ஓடிய மிகப் பெரிய வெற்றிப் படம். ஆனால் இந்தப் படத்தை அப்படித் திட்டமிட்டுச் செய்யவில்லை. மகேஷிண்ட பிரதிகாரத்தைத் தமிழில் செய்ய முடுவெடுத்தவுடன் இந்தப் படத்துக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ளநாயகர் தேவையில்லை என்பதில் உறுதியுடன் இருந்தேன். மேலும்  அன்றாடம் நாம் வெளியில் பார்க்கக்கூடிய சாமானியன்தான் இந்தப் படத்தின் கதாபாத்திரம். அதற்குப் பொறுத்தமானவராக இருக்க வேண்டும்.  உதயநிதி பொறுத்தமாக இருந்தார். அவரைத் தேர்ந்தெடுத்ததும் பாதி வெற்றி உறுதியாகிவிட்டது.

மகேஷிண்ட பிரதிகாரம் தனித்துவமான ‘மலையாள நகைச்சுவை’ப் படம். அதைத்தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு படத்தை மாற்றம் செய்யும்போதுபொதுவாக மூலப் படத்தை அப்படியே எடுக்க மாட்டேன். உதாரணமாக ‘கிரீட’த்தை இந்தியில் செய்தபோது அதை அந்த மொழிப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகஇருக்கமாறு திரைக்கதையை மாற்றி அமைத்தேன். மகேஷிண்ட பிரதிகாரத்தை படத்தையும் அப்படியே எடுக்கவில்லை.


மகேஷிண்ட பிரதிகாரம் படத்தில் இடுக்கியும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். தமிழில் இதை எப்படி எதிர்கொண்டுள்ளீர்கள்?

குற்றாலம், தென்காசிப் பகுதிகளில் படமாக்கியிருக்கிறோம். மகேஷிண்டபிரதிகாரத்தில் எப்படி தனித்துவமான இடுக்கி பாஷையைச் சித்திரித்தார்களோஅதுபோல் இந்தப் படத்தில்  தென்காசி, திருநெல்வேலிப் பகுதிகளின் வட்டாரபாஷையைத் தத்ரூபமாகக் கொண்டுவந்திருக்கிறோம். இயக்குநர்கள் மகேந்திரன்,இயக்குநர் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இதற்குப் பக்க பலமாக இருந்தார்கள்.

பொதுவாக உங்கள் மலையாளப் படங்களே நிலத்திலிருந்து வேறுபட்டுத்தான் இருக்கும்.  பெரும்பாலும் ஊட்டியைக் கதைக்களமாகக் கொண்டுதான் உருவாக்கியுள்ளீர்கள். தமிழ் உங்களுக்கு அந்நியமான நிலம். இந்த நிலத்தைக் காண்பிப்பதில் சவால் இருந்ததா?

தமிழ் நிலக் காட்சிகளை இயக்குநர் பாரதிராஜாவின் படங்களின் மூலம்கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான என்னுடைய நிலம்போல் தமிழ் நிலத்தைஅவரது படங்கள் எனக்குச் சொல்லித் தந்தன. இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தஇன்னொரு பாக்யம் இயக்குநர் மகேந்திரனுடன் பணியாற்றியது. அவரது ‘முள்ளும்மலரும்’ ‘உதிரிப்பூக்கள்’ போன்ற படங்களைப் பார்த்தும் நிறையகற்றுக்கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு: மண்குதிரை,  இந்து, அக்டோபர் 28, 2017