மருங்கூர் சண்முகானந்தா நூலகம் - வரலாற்றுப் பொக்கிசம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கு அருகில் உள்ளது மருங்கூர். சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த சூழல். கோடைக்குக் குளிர்ச்சியாக ஓடைத் தண்ணீர் பாயும் கரையின் மீது பழமையின் குறியீடாக நிற்கிறது சண்முகானந்தா நூலகம். சுற்றுச் சுவருடன் கூடிய அழகான முகப்பு மண்படத்துடன் கூடிய கட்டிடம். முகப்பு மண்டபம் கிட்டத்தட்ட ஊர் மடம் போல இருக்கிறது. ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெறுமனே அமர்ந்திருக்கிறார்கள். படிக்கும் அறையில் நாளிதழ் படிப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் மேஜையில் சிலர் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். திறந்திருக்கும் கிழக்கு வாசல் வழியாகவும் பிரதான பழைய காலத்து ஜன்னல் வழியாகவும் பகல் வெளிச்சம் மேஜையின் மீது விழுந்துகொண்டிருக்கிறது. வெளிச்சம் படராத இருளுக்கிடையில் அந்த நூலகத்தின் பழமை மறைந்திருக்கிறது. சேமிப்பு நூல்கள் உள்ள பகுதி தாழிடப்பட்டு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நூலகரோ, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்; அரசு ஓய்வூதியத்திற்காக வங்கியில் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று சண்முகானந்தா நூலகம் உள்ளது.  

ஆனால் நூற்றாண்டைக் கண்ட சண்முகானந்தா நூலகம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அறிவுச் சுடரேற்றிய பயிலகம்; சுதந்திரப் போராட்டக் காலகட்ட தலைமுறைக்கு அரசியலைப் புகட்டிய கல்விச் சாலை. சென்னையில் கன்னிமாரா நூலகம் 1896-ல் தொடங்கப்பட்ட சில பத்தாண்டுகளுக்குள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமான மருங்கூரில் சண்முகானந்தா நூலகம் தொடங்கப்பட்டது. தோரயமாக 1920-1921 ஆண்டில் இந்த நூலகம் தொடங்கப்பட்டிருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்த முக்கியமான நூலகங்களில் ஒன்று சண்முகானந்தா நூலகம். மருங்கூர், இறைவிபுதூர் ஆகிய ஊர்களுக்குப் பொதுவான நூலகமாக இது உருவாக்கப்பட்டது.

இந்திய நூலக வரலாற்றில்கிரந்தசாலா சங்கம்என்ற பெயரில் கேரளத்தில் முன்னெடுக்கப்பட்ட நூலக இயக்கம் முக்கியமானது. 1940களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுப் பல கிராமங்களை நூலகங்களால் இணைத்தது. பி.என்.பணிக்கர் இந்த நூலக இயக்கத்தின் தந்தையாக மதிக்கப்படுகிறார். இந்த இயக்கம் கேரளத்தையும் தாண்டி இன்றைய தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் வந்தடைந்தது. தென் திருவிதாங்கூர் பகுதிகளில் சுப்ரமண்ய முதலியார், விஸ்வநாதன் ஆகிய இருவர்தாம் கிரந்தசாலா சங்க இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் என்கிறார் தெ.தி.இந்துக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மருங்கூர் வாசியுமான வேலப்பன். இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்த நூலகங்கள், நூலக இயக்கத்தால் பயன்பட்டன. அவற்றில் முக்கியமான இரு நூலகங்கள்; ஒன்று, நாகர்கோயில் பூங்கா நூலகம், மற்றொன்று மருங்கூர் சண்முகானந்தா நூலகம். இவற்றுள் பூங்கா நூலகத்திலிருந்த தமிழின் அரிய நூல்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு  அடிப்படைவாதிகள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டன.   

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசு சார்பாக நூலகங்களுக்கு உதவித் தொகை அளிக்கும் வழக்கம் இருந்துள்ளது. அந்த உதவித் தொகை சண்முகானந்தா நூலகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த உதவித் தொகை நூலகங்களில் தரத்தைப் பொறுத்து வேறுபடும். இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகமான உதவித் தொகையை இந்த நூலகம் பெற்றிருக்கிறது.  அம்மாதிரியான தரம்மிக்க நூலகமாக சண்முகானந்த நூலகம் திகழ்ந்துள்ளது. 

சண்முகானந்தா நூலகம், மருங்கூர், இறைவிபுதூர்  ஆகிய இரு ஊர்களுக்கும் பொதுவான ஆபத்துக் காத்தவள் என்னும் அம்மன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. இந்தக் கோயில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வெள்ளாளச் சமூகத்திற்குப் பாத்தியப்பட்டது. இந்த நூலகத்தின் செலவுகளை அவர்களே ஏற்று நடத்தியுள்ளனர். இன்றும் இந்த நூலகத்தை வெள்ளாளச் சமூகத்தினரே பராமரித்து வருகின்றனர். இங்கு பதினாந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. புதின நூல்கள் மட்டும் ஆறாயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றன. இந்த நூலகத்தைக் கட்டுவதற்கு அந்நாளைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசு உதவி நல்கியிருக்கக்கூடும். ஆனால் அதற்காக உறுதியான சான்றுகள் கிடைக்கவில்லை. நூலகக் கட்டிடத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் யானைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து இது திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என எண்ணத் துணியலாம். மேலும் நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு நூலக நுழைவு மண்டபத்தின் மேலே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள எழுத்துகளில் மலையாள ஆண்டும் தமிழ் மாதமும் குறிப்பிடப்பட்டுள்ளன. தை 16-ம் நாள் கொல்லம் 1096-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது ஆங்கில வருடம் 1921- வாக்கில்.

கோயில் நுழைவுப் போராட்டம், தேவதாசி ஒழிப்பு போன்ற மாபெரும் சமூக நிகழ்வுகள் நடக்கும் முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம். கல்வியறிவில் சிறந்து விளக்கிய இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் எட்டுத் திக்கும் சென்று அறிவுக் களஞ்சியங்களை இங்கு வந்து சேர்த்துள்ளனர். பொதுவாக நூலகங்கள் அதன் வாசகத்தன்மையுள்ள புத்தகங்களை மட்டுமே வைத்திருக்கும். ஆய்வு நூல்களுக்கென்று தனி நூலகங்கள் உண்டு. இந்த நூலகம் பல ஆய்வு நூல்கலையும் தன் சேகரிப்பில் கொண்டுள்ளது. மேலும் பல நல்ல இலக்கண நூல்களும் இந்த நூலகத்தில் இருந்துள்ளது. சமூக விழிப்புணர்வு தமிழகத்தில் பரவலாக்கம் பெறும்  முன்னே அது தொடர்பான எழுத்துகள் சண்முகானந்தா வாசகர்களுக்குக் கிடைத்திருக்கிறது.  மருங்கூரைச்  சேர்ந்த சித்திரகுப்த பிள்ளை உள்ளிட்ட பலரும் இந்த நூலகத்தின் நூல் சேகரிப்பில் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர்.   

இந்த நூலகத்தில் தமிழின் முக்கியமான இதழ்கள் பலவும் வந்திருக்கின்றன. சில பத்தாண்டுகள் முன்பு பழமையான பல இதழ்களின் கருவூலமாக இருந்துள்ளது. 1915-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆனந்த போதினி இதழ் இந்த நூலகத்திற்கு வந்துகொண்டிருந்தது. தமிழின் முன்னோடி புதின எழுத்தாளர்களின் ஒருவரான ஆரணி குப்புசாமி முதலியாரின் பல ஆக்கங்கள் இந்த இதழில்தான் தொடராக வெளிவந்தது. இவை மட்டுமல்லாது பெரியாரின் குடி அரசு, ஆரிய சமாஜம், சுதேசமித்திரன், விடுதலை ஆகிய பல இதழ்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் உள்ள இந்த நூலகத்தைத் தேடி வந்துள்ளன. மலையாளம் தமிழ் என இருமொழி இதழ்களாக வெளிவந்த வெள்ளாள மித்ரன் பத்திரிகையும் இங்கு வந்து கொண்டிருந்தது. அரசு வெளியிட்ட பாரதி நூல்களின் முதல் பதிப்பு இந்த நூலகத்தில் இருந்தது. மேலும் பல முக்கியமான நூல்கள் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.

வங்காள மொழிபெயர்ப்புகள், இந்தி மொழிபெயர்ப்புகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் பலவும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே மருங்கூரிலும், இறைவிபுதூரிலும் வாசிக்கப்பட்டுள்ளன. பக்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாரா சங்கரர் பானர்சி ஆகியோர்களின் நாவல்களின் பாத்திரங்களின் பெயர்களை எங்களூர்ப் பெண்கள் மிகச் சாதரணமாக உச்சரிப்பார்கள் என்கிறார் வேலப்பன். பக்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை மருங்கூரில்தான் முதலில் கண்டதாகச் சொல்கிறார். நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள். சண்முகானந்தா நூலகத்திற்கு ஆய்வுக்காகப் பல முறை சென்றவர் அ.கா.பெருமாள். தன் நாட்டார் வழக்காற்றியலுக்கான சில ஆபூர்வமான புத்தங்களை இங்கே கண்டெடுத்தாகச் சொல்கிறார். 

சுசீந்திரம் கோயிலுடன் சம்பந்தமுடைய  ‘அப்புக் குட்டன் யானையை அடக்கிய கதை’, ‘பிள்ளையைக் கொன்றான் பாட்டு’, ‘கன்னியாகுமரிக் களவு மாலை’ ஆகியவை இந்த நூலகத்தில் கிடைத்த முத்துகள் என்கிறார் அ.கா.பெருமாள். இந்த மூன்றும் தனித்துவம் மிக்கவை. வேறெங்கும் இது போன்ற நூற்களைப் பார்க்க முடியாது எனச் சொல்கிறார். இவற்றுள் கன்னியாகுமரிக் களவு மாலை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த ஒரு திருட்டையும், அதன் விசாரணையையும் விவரிக்கிறது. இது போன்ற நூல் சமூக வரலாற்றுக்கே முக்கியமான ஓர் ஆவணம். 

பெ.சு.மணியின் கட்டுரை ஒன்றுக்காக இங்கு கட்டுரைகள் எடுத்துக் கொடுத்ததாகச் சொல்கிறார் கல்வெட்டாய்வாளர் செந்தீ.நடராசன். வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் தொகுப்பு நூலுக்காக இந்த நூலகத்திற்கு வந்துள்ளார். புதுமைப்பித்தன் கதைகளின் முதல் பதிப்பும் அவரது சில கட்டுரைகளும் இந்த நூலகத்தில் கிடைக்கப் பெற்றன. தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு முதல் பதிப்பு இந்த நூலகத்தில் கிடைக்கப்பெற்றது. சேரநாடும் செந்தமிழும் நூல் ஆசிரியரான செ. சதாசிவம் மருங்கூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நூலகம்தான் அவர் ஆளுமையாக உருவாக உசாத்துணையாக இருந்தது என்கிறார் வேலப்பன். 

இந்த நூலகத்தில் எழுருக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சந்தா எதுவும் வசூலிப்பதில்லை. வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் ரூ. 5 வசூலித்திருக்கிறார்கள். இப்போது இந்த நூலகம் முழுச் செயல்பாட்டுடன் இயங்கவில்லை. நூல் சேகரிப்புப் பகுதியில் ஆள்கள் நுழைந்த சுவடே இல்லை. பக்தவத்சலம், ஈ.வே.ரா.பெரியார், ம.பொ.சிவஞானம் கையொப்பமிட்ட ஏடுகள் காணாமல் போய்விட்டன. இதழ் தொகுப்புகள், அபூர்வமான சேகரிப்புகள், மொழிபெயர்ப்பு நாவல்கள் எனத் தனித் தனியாக அடுக்கப்பட்டிருந்த அலமாரிகளில் புத்தகங்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. அலமாரியின் மேலும் புத்தகங்கள் செருகப்பட்டுள்ளன. 

சில நாட்களுக்கு முன்பு புத்தகங்கள் சிலவற்றை விலைக்குப் போட்டுவிட்டதாக நூலகர் சொல்கிறார். இப்போது புதினங்கள், வெகுஜன வாசிப்பு நூல்கள் மட்டுமே வரிசையாக, நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த நூலகத்திற்குச் சில காலம் அரசின் மானியம் கிடைத்திருக்கிறது. பிறகு தனியார் அமைப்பின் நூலகம் என்பதால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. இன்று மருங்கூர் ஆபத்துக் காத்த அம்மன்தான் இந்த நூலகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறாள்.
 தி இந்து, 2015