சினிமாவுக்குத் திரைக்கதை தேவை இல்லை - சனல் குமார் சசிதரன் நேர்காணல்

சனல் குமார் சசிதரன்
சனல் குமார் சசிதரன், சமீபத்தில் வெளிவந்த ‘ஒழிவுதிவசத்தே களி’ படத்தின் இயக்குநர். ‘காழ்ச்ச’ என்னும் திரை அமைப்பை நிறுவிச் செயல்பட்டுவருகிறார். கேரள அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ஒராள்பொக்கம்’ இவரது முதல் முழு நீளத் திரைப்படம். ‘செக்சி துர்கா’ என்னும் அவரது அடுத்த படத்தின் வேலைகளில் இருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
‘ஒழிவுதிவத்தே களி’ ஒரு ஆஃப்-பீட் படம் (Offbeat film) இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். அப்படியானால் வெற்றிபெற்ற வணிகப் படங்களின் வரிசையில் ஒன்றா இது?
‘ஒழிவுதிவசத்தே களி’ சினிமாவுக்கு விருதுகள் கிடைத்தன என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதை ‘அவார்டு சினிமா’ என்ற அடைமொழிக்குள் அடைப்பது சரியல்ல என்பதைத்தான் அப்படிச் சொல்கிறேன். இந்தப் படத்தைப் பொழுபோக்காகவும் எல்லாத் தரப்பு ஆட்களும் ரசித்துப் பார்க்கலாம். இதைத் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டமாக ரசிப்பதைப் பார்க்கிறேன். விருது கிடைத்துவிட்டதால் இந்த சினிமா அறிவுஜீவிகளுக்கானது என்று சொல்லப்படுவது ஏற்புடையதல்ல.
திரைக்கதை சினிமாவுக்கு எதிரானது எனச் சொல்கிறீர்கள். திரைக்கதை இல்லாமல் சினிமா எப்படிச் சாத்தியம்?
திரைக்கதை எழுதி எடுப்பதன் மூலம் சினிமாவின் இயல்புத்தன்மை பாதிக்கப்படும் என நினைக்கிறேன். உதாரணமாக என்னுடைய படத்தில் பத்துக் கதாபாத்திரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொண்டால், இந்தப் பத்துக் கதாபாத்திரங்களுக்கும் நான் ஒருவனே வசனம் எழுதினால் எப்படி இருக்கும்? ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதில் ஆளுக்கு ஆள் உணர்ச்சிகள், வசனங்கள் வித்தியாசப்படும். அதுபோல்தான் காட்சிகளும். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சில இயல்பான விஷயங்கள் இருக்கும்; நடக்கும். அதை உள்வாங்கிப் படமாக்கும் வாய்ப்பு அங்கு உள்ளது. உதாரணமாக ‘ஒழிவுதிவசத்தே களி’யின் பலா மரக் காட்சி அங்கு போன பிறகு தீர்மானித்ததுதான். அது படத்தில் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. அதில்லாமல் திரைக்கதை எழுதிவிட்டோம் என்பதாலேயே அதற்கு நேர்மைசெய்யப் போனால் சினிமாவின் இயல்பு பாதிக்கப்படும்.
முழு ஸ்டோரி போர்டுடன் படப்பிடிப்புக்குச் செல்வதை இன்றைக்கு முன்னணி இயக்குநர்கள் பலரும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கீறீர்கள்.
ஒவ்வொருவக்கும் ஒரு முறை. நான் செய்வதுதான் சரியானது எனச் சொல்லவில்லை. நீங்கள் சொல்கிறபடி ஸ்டோரி போர்டுடன் ஷூட்டிங் போனால்தான் நல்ல சினிமா கொடுக்க முடியும் என அவர்கள் நினைத்தால், அவர்கள் அதைச் செய்ய வேண்டும். எந்த முறையில் வேண்டுமானாலும் நீங்கள் சினிமா எடுக்கலாம். நமக்குத் தேவை சினிமா நல்லதாக வரவேண்டும் என்பதுதான்.
ஒழிவுதிவசத்தே களி

கிரவுட் ஃபண்டிங் (crowd-funding) மூலமாகத்தான் உங்கள் முந்தைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த யோசனை எப்படி வந்தது?
ஏனெனில் சினிமா எடுக்க நான் எடுத்துக்கொண்ட கதைகள் அந்த மாதிரியானதாக இருந்தன. என்னுடைய குறும்படங்களாக இருக்கட்டும், என்னுடைய முதல் முழு நீளத் திரைப்படமான ‘ஒராள்பொக்கம்’ சினிமாவாக இருக்கட்டும். இந்த மாதிரியான கதைகளுக்குத் தயாரிப்பாளர் என்று ஒருவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் என் சினிமா மீது நம்பிக்கையுள்ள நண்பர்கள் மூலம் சினிமா தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன். பிறகு ஆன்லைன் மூலமாகப் பரவலாக நிதி திரட்டினேன்.
இதற்கு இயக்குநர் ஜான் ஆப்ரகாம் உங்களுக்கு முன்மாதிரியாக இருந்தாரா?
எனக்கான சினிமாவைத் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள் என்பது எனக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது. இந்நிலையில் ஜான் ஆப்ரகாம் பெருவரியாக மக்களிடம் பணம் திரட்டி சினிமா எடுத்ததைக் குறித்து நான் படித்தது என் ஞாபகத்தில் வந்தது. அந்த முறையில் நாமும் முயன்று பார்க்கலாம் என நினைத்தேன்.
மனோஜ் கனாவின் சாயில்யம் போன்று ஐந்தாறு படங்கள் இப்போது மலையாளத்தில் கிரவுட் ஃபண்டிங்கில் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இதற்கு உங்கள் முயற்சி ஒரு முன்மாதிரியாக இருக்கிறது எனச் சொல்லலாமா?
அது மட்டுமல்லாமல் சுதேவனின் ‘க்ரைம் நம்பர்: 89’-ம் கிரவுட் ஃபண்டிங்கில் தயாரிக்கப்பட்ட படம்தான். இந்த முறையில் எங்களுக்கு எல்லாம் முன்பே ஜான் ஆப்ரகாம் படம் எடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். நாங்கள் ‘காழ்ச்ச’ திரை அமைப்பில் யார் யாரிடமிருந்து எவ்வளவு வாங்கினோம், எவ்வளவு செலவு செய்தோம், வருமானம் எவ்வளவு என்பதையெல்லாம் முறையாக வெளியிட்டுவருகிறோம். இதைப் பெரும்பாலானவர்கள் செய்வதில்லை.
அறியப்பட்ட நடிகரை, நடிகையை வைத்துப் படம் எடுப்பதில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
திறமைகள் நிறைந்த கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். மோகன்லால், முரளி கோபி, மஞ்சு வாரியர் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் கமல் ஹாஸன் இருக்கிறார். ஆனால், சினிமா குறித்தான அவர்களின் நம்பிக்கைகளுக்கும் என்னுடைய நம்பிக்கைகளுக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அதுதான் பிரச்சினை.
உங்களது லட்சிய சினிமா எது, அல்லது லட்சிய ஆளுமை யார்?
‘இதுபோல் ஒரு சினிமா எடுக்க வேண்டும்’ ‘இவர் மாதிரி இயக்குநர் ஆக வேண்டும்’ என்றெல்லாம் எனக்கு லட்சியமில்லை. தொடக்கத்தில் சினிமா குறித்து இருந்த என் அபிப்ராயங்கள் இப்போது மாறியிருக்கின்றன. நான் எடுத்த குறும்படங்களிலிருந்து மாறுபட்டுத்தான் இன்றைக்கு சினிமா எடுத்திருக்கிறேன். நாளைக்கு இதுவும் மாறலாம். இதில் எனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
(தி இந்து, ஆகஸ்ட் 2016) சந்திப்பு மண்குதிரை