பெண் முன்னேற்றம் என்பது உண்மைதானா?


சென்னையின் நெருக்கடியான சாலைகளில் வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட் அணிந்து பெண் காவலர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பது இன்று பழக்கமான காட்சி. பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள்; பேருந்து இயக்குகிறார்கள்; கனரக வாகனங்களையும் இயக்கத் தொடங்கிவிட்டார்கள். இவை மட்டுமல்லாது கடைநிலையில் இருந்து உயர் பதவி வரை பெண்களின் பங்களிப்புப் பெருகிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் நடந்து முடிந்த குடியரசு தின விழாவில் பெண் படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் முதல் குடிமகனும் குடிமகளும் அமர்ந்திருக்க பெண்கள் படைப்பிரிவு கம்பீரமாக அணிவகுத்து வந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் வரலாற்றில் இது முக்கியமான நிகழ்ச்சி. பெண்கள் படை அணிவகுப்பு குடியரசு தின விழாவில் வலம் வருவது இதுவே முதல் முறை. நாடெங்கும் இதற்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. ஒரு பெண்ணாகப் பார்க்கும்போது இது மகிழ்ச்சியளிக்கக்கூடிய நிகழ்வுதான்.
ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்ற பூஜா தாகூர் சொல்கிறார், “முதலில் நாங்கள் ராணுவ அதிகாரிகள். அதன் பிறகுதான் நாங்கள் பெண்கள்”. இந்த இடத்தில்தான் இந்த நிகழ்வைப் பெண் சுதந்திரத்துக்கான அடையாளமாகக் கொள்ளலாமா எனக் கேள்வி எழுகிறது. பெண் முன்னேற்றம் என உருவாக்கப்பட்டு வரும் விஷயம் வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியோ என எண்ணத் தோன்றுகிறது. பெண் சுதந்திரம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் பாகுபாட்டுடன் வளர்க்கப்படுகிறாள்.
நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் படித்து ஆண்களுக்கு நிகராகப் பல்வேறு பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் அவள் தன் தந்தைக்கும், திருமணம் ஆன பிறகு தன் கணவனுக்கும் கட்டுப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆணைவிட இரண்டு அடிகளாவது பின்னால் வந்தால்தான் அவளுக்குக் கல்வி, பணியாற்ற அனுமதி எல்லாம் கிடைக்கின்றன. அதே நேரம் இவற்றைத்தாம் புள்ளி விவரங்கள் பெண்களின் முன்னேற்றமாகச் சொல்கின்றன. இது வியந்து கொண்டாடப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள பெண்களின் நிலை வேறுவிதமாக இருக்கிறது. அவள், ஆணைவிடவும் அதிகமாக, கடுமையாக உழைக்கிறாள். ஆனால் அவளுக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது. மேலும் அவள் ஆதிக்கவர்க்கத்தின் பாலியல் சுரண்டலுக்கு மிக எளிதாக ஆளாகிறாள். அது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. புள்ளி விவரங்கள், பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.
எல்லா நிலைக் குடும்பங்களிலும் பெரும்பாலும் ஆண்தான் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவனாக இருக்கிறான். அவனது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டதே பெண்களின் வாழ்க்கை. நடுத்தர வர்க்க, அதற்கு மேம்பட்ட குடும்பப் பெண்கள் முன்னணி நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் குடும்பரீதியான முடிவுகளில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அத்துடன் பெண்கள் இந்தக் குடும்ப அமைப்புக்குப் பழகிவிட்டார்கள்; அதைப் பேணும் கடமையை தங்களை அறியாமல் ஏற்றிருக்கிறார்கள். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பெண்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த எல்லைக் கோடுகளை, கட்டுப்பாடுகளை ஆண்களைவிடப் பெண்களே அதிதீவிரத்துடன் காக்கிறார்கள். பல குடும்ப வன்முறைச் சம்பவங்களில் பெண்களுக்குப் பங்கிருப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.
பெண் பலவிதமான வன்முறைக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறாள். அவளுக்கு இருக்கும் சட்ட உரிமைகளும் பல சமயங்களில் பறிக்கப்படுகின்றன. அவளுக்குச் சொத்து உரிமைகள் இன்றும் சட்டபூர்வமானது மட்டுமே; நடைமுறையில் இல்லை.

இப்போது ஆர். எஸ். எஸ். அமைப்பு ‘லவ் ஜிகாத்’பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களைக் காதலித்து ஏமாற்றி மதமாற்றம் செய்விக்கின்றனர் எனக் குற்றம் சாட்டி வருகிறார்கள். கேரள உயர்நீதி மன்றம், ‘லவ் ஜிகாத்’ என்றொரு அமைப்பு உண்மையிலேயே இருக்கிறதா என விசாரிக்க உத்தரவிட்டதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பெண்ணை மறைமுகமாக ‘முட்டாள்’ எனச் சொல்கிறது. அழகைக் கண்டு அவர்கள் ஏமாந்துபோவார்கள் எனச் சொல்ல முயல்கிறது.
இவை எல்லாவற்றுக்குமான தீர்வு பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், அதிகாரம் பெறுதல்தான். சமீபகாலங்களில் அடிமைப்பட்டுக் கிடந்த பல ஜாதிகள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துக்காகத் தனி அரசியல் கட்சிகளைத் தொடங்கியுள்ளன. ஒருவிதத்தில் இதில் சில குறைகள் இருக்கலாம் என்றாலும் அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மூலம் உரிமைகளைப் பெற இது ஒரு காரணமாக இருக்கிறது. அதேபோல தங்களுடைய வாக்கை போராட்ட ஆயுதமாக பெண்கள் எடுக்க வேண்டும்.
பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க அரசு அமைப்பு வழிவகை செய்ய வேண்டும். ஆனால் ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க. அதற்கு மாறாக மதவாதத்தைத் தூக்கிப் பிடிப்பதில் கவனமாக இருக்கிறது. அது ‘பாரதம்’என்னும் பழம் பெருமையைக் காக்க விழைகிறது. பாரதமாதாவை மதவாதத்துடன் இணைக்க முயல்கிறது. மதவாதம் வலுவடையும் நாட்டில் பெண் உரிமைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது? மோடி அணிந்திருக்கும் கண்ணைக் கவரும் ஆடைகள் போன்றதுதான், இந்தப் ‘பெண் முன்னேற்ற விளம்பரங்கள்’ எனத் தோன்றுகிறது.
(பிப்ரவரி 1, 2015 தி இந்து பெண் இன்று)