ஒரு திருட்டுப் பொருள், நான்கு வாழ்க்கை


மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் தங்கள் சமீபத்திய படங்கள் மூலம் மலையாள சினிமாவை மசாலா மயமாக மாற்றிக்கொண்டு வருகையில், இளம் தலைமுறை இயக்குநர்கள் அதை யதார்த்தத்தை நோக்கி நகர்த்திவருகிறார்கள். அவர்களுள் ஒருவர் கடந்த ஆண்டு வெளியான ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் இயக்குநர் திலீஷ் போத்தன். தனது புதிய படமான ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை வைக்கம் அருகே உள்ள தாவணக்கடவு, காசர்கோடு அருகே உள்ள ஷெனி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ‘மலைமேலே திரிவச்சு’ பாடல் இடுக்கியின் தேசிய கீதமாக ஆகிவிட்டது. அதைப் போல இந்தப் படத்தில் ‘கண்ணிலே பொய்கையிலே’ பாடல் வேம்பநாடு ஏரிக் கரையிலுள்ள தாவணக்கடவின், வைக்கத்தின் வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால், முதல் படம்போல் கதை, நிலத்தை மட்டும் பதிவுசெய்யவில்லை; சாமானிய மனிதர்களின் வாழ்க்கைப் பிடிப்புகளை, அவர்களது எளிய நம்பிக்கைகளை நாயக பிம்பத்துக்கு அப்பாற்பட்டு கையாண்டுள்ளது.

தாவணக்கடவில் காய்கறி வியாபாரம் செய்துவரும் பிரசாத்திற்கும் (சுராஜ் வெஞ்சாரமூடு), அதே ஊரைச் சேர்ந்த, வைக்கத்தில் வேலைசெய்யும் ஸ்ரீஜாவுக்கும் (நிமிஷா சஜயன்) இடையில் காதல் உருவாவதை, காயல் கரையின் மஞ்சள் வெயில் நகர்வதைப் போல் இயல்பான காட்சிகளால் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
திலீஷ் போத்தன்

தொடக்கக் காட்சிகளிலேயே இந்த இரு கதாபாத்திரங்களும் தங்கள் இயல்பான மன இயல்புகளுடன் திருத்தமாகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அதில் முக்கியமான அம்சம் , நாயகன் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர், நாயகி உயர் ஜாதியாகக் கருதப்படும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீஜா, மனத் திடம்கொண்ட பெண்ணாக இருக்கிறாள். ஸ்ரீஜா உள்ளிட்ட இந்த வாழ்க்கையை ஒரு கண்ணாடிப் பொருள்போல் கையில் ஏந்தியிருக்கிறார் பிரசாத்.  தங்க மாலையைப் பறிகொடுத்துத் திண்டாடும்போது அவர்களது ஆளுமைகள் உடைபடுகின்றன. இந்த இடத்தில் முன்பே அவர்களது பலவீனங்கள் துலக்கமாகியிருப்பதால் அதைப் பார்வையாளர்களால் இயல்பாக எதிர்கொள்ள முடிகிறது.

பிரசாத்-ஸ்ரீஜா தம்பதியினர் ஒருநாள் காசர்கோட்டுக்குப் பயணிக்கும்போது பேருந்தில் நடக்கும் திருட்டுதான் படத்தின் மையம். ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ என்றால் ‘திருட்டுப் பொருளும் கண்ட சாட்சியும்’ எனப் பொருள். ஆனால், பத்மராஜனின் ‘கள்ளன் பவித்ரன்’, லால்ஜோஸின் ‘மீச மாதவன்’ போன்ற படங்களைப் போல் இந்தப் படம் திருடனின் வாழ்க்கையைப் பின்பற்றி, அந்தத் தரப்பு நியாயத்தைச் சொல்லி ஒற்றைத் தன்மையுடன் நின்றுவிடவில்லை.

தாலி மாலையைப் பறிகொடுத்த தம்பதி, அவர்களது பணத் தேவை, இந்த வழக்கு போய்ச் சேரும் காவல் நிலைய உதவி ஆய்வாளர், அவருக்கு ஆய்வாளரிடமிருந்து வரும் நெருக்கடிகள், துணை உதவி ஆய்வாளர், தண்டனைப் பணிமாற்றத்திலிருக்கும் அவர் இந்த வழக்கின் வழி எதிர்கொள்ளும் சவால், திருடன், அவனுடைய திடமான மறுப்பு எனப் பல பாகங்களாக விரிவுகொள்கிறது.

பேனா, பேப்பர் உள்ளிட்ட வழக்கு எடுப்பதற்குண்டான பொருள்களை வாங்கிவரச் சொல்வதிலிருந்து முக்கால்வாசிப் படம் காவல் நிலையத்தில் அதன் நடைமுறையுடன் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்ப் படமான ‘விசாரணை’ போல் இறுக்கமாக அல்லாமல் யதார்த்தமான தளர்வுடன் படமாக்கப்பட்டுள்ளது.

திருடனாக ஃபகத் பாசில் படத்தின் பின்பாதியில் அறிமுகமாகிறார். பேருந்தில் தாலி மாலையைத் திருடுகிறார். காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் மாலையைப் பறிகொடுத்து நிற்கும் பிரசாத்தின் பெயரையும் திருடிக் கொள்கிறார். பறிகொடுத்த பிரசாத்தை போலீஸ் அழைக்கும்போதெல்லாம் ஃபகத்தும் திரும்பிப் பார்க்கிறார். காவல் துறை முதலில் இந்த வழக்கைப் பதிவுசெய்யாமல் சமரசத்துடன் முடிக்க நினைக்கிறது. ஆனால், சம்பவம் ஆய்வாளருக்குத் தெரியவர, வழக்கைத் தனக்குச் சாதகமாக ஜோடிக்கிறது காவல் துறை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உறுதி திரும்பப் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. ஆனால், காவல் துறையின் நடைமுறைகளால் மிரண்டிருக்கும் சாமானியனான பிரசாத்தின் மனம், திருடனுக்கும் காவல் துறைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது.


தனது முதல் படத்தை முழுமையாக உருவாக்கியதன் மூலம் ‘போத்தேட்டன் ப்ரில்லியன்ஸ்’ என்னும் ஒரு வழக்குக்குச் சொந்தக்காரர் திலீஷ். உதாரணமாக பேபியின் கடையில் சாப்பாட்டு வேளையில் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்கும் இரும்பு நாற்காலியின் பின்புறத்தில் திட்டுத் திட்டாகத் தெரியும் பெயரிலிருந்து அந்தக் கடையின் வயதை, அவரது அனுபவத்தை உணர்த்தியிருப்பார். கதாநாயகனின் மனநிலையைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் கால் வளைந்த ஒரு நாயை இந்தப் படத்தில் வளர்த்திருப்பார். இந்த போத்தேட்டன் ப்ரில்லியன்ஸ் இந்தப் படத்திலும் தொடர்கிறது. 

இந்தப் படத்திலும் பலவற்றைக் காட்சிகளாகவே போத்தன் சித்திரித்திருக்கிறார். உதாரணமாக ஃபகத் தன்னை வேற்று மனிதனாக போலீஸில் அறிமுகப்படுத்திக்கொகிறார். ஆனால், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பதை ஒரு நாயைக் கொண்டு பார்வையாளர்களுக்கு மட்டும் உணர்த்திவிடுகிறார். மனித மனத்தின் பலவீனங்களை, வாழ்வதற்கான மனப் போராட்டங்களை, ‘உயிருக்கு உயிராய்’ இருக்கும் கணவன்-மனைவிக்கு இடையில் ஒளிந்திருக்கும் அபூர்வமான அவநம்பிக்கைகளை படம் முழுக்கச் சிறு சிறு காட்சித் தெறிப்புகளாகக் கோத்திருக்கிறார். 

தனது முதல் படத்திலிருந்த சினிமாவுக்குரிய சுவாரசியங்களையும் போத்தன் இதில் குறைத்திருக்கிறார். நமக்கு முன்னே நிகழும் ஒரு வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார். குணச்சித்திர/நகைச்சுவை நடிகரான சுராஜை நாயகனாக்கி, நாயகனான ஃப்கத்தை திருடனாக்கிப் புதிய பரிசோதனையையும் செய்து பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் அலென்சியர் லே லோபஸுடன் நிஜ போலீஸ்காரர்களையும் நடிக்க வைத்திருக்கிறார். இவ்வளவு யதார்த்தமான படத்தின் மையப்பகுதியை நகர்த்திச் செல்ல நகைச்சுவையை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் நகைச்சுவையைத் திரைக்கதை வடிவமாக எழுதியெடுக்காமல் யதார்த்த வாழ்க்கையின் அபத்தங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்.

இந்த யாதார்த்த சித்திரிப்புகளின் வழியாக நிமிடத்துக்கு நிமிடம் கடிகார மணியைப்போல் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஆடிக்கொண்டிருக்கும் மனித மனத்தையும் சாமனியர்களுக்கான நீதியையும் சொல்ல முயன்று வெற்றிபெற்றிருக்கிறது இந்தப் படம்.
(தி இந்து)