6 கோடிப் பெண்கள்
 எங்கே போனார்கள்?


உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படுகொலைகளைப் பற்றி நாம் வரலாற்றின் மூலம் அறிந்திருக்கிறோம். நம் கண் முன்னே ஒரு இனப் படுகொலையும் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் நம் நாட்டிலேயே காலங்காலமாக ஒரு இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சின்னச் சின்ன சம்பவங்களாகத்தான் இவை நமக்குத் தெரிந்தன. அவை ஒரு வரலாறாகப் பதிவுசெய்யப்படவில்லை. அது பெண்ணினப் படுகொலை. ஆனால் அந்த அஜாக்கிரதை இன்று ஒரு பேரிடரின் பாதிப்பைப் போல பல்லாயிரம் பெண்களைக் காணாமல் போகச் செய்துவிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை, 60 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். சமீபத்தில் வெளியான India Dishonoured என்ற தனது புத்தகத்தில் இதை அம்பலப்படுத்தியுள்ளார். இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்துகொண்டிருப்பதை முதலில் பதிவுசெய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடிப் பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார். இன்று 2014இல், அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்த 6 கோடிப் பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடிப் பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம்கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணமடைகின்றனர் என BETI என்னும் அரசுசாரா நிறுவனம் சொல்கிறது.

பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது நமது வழக்கத்தில் இருக்கிறது. முந்தைய தலைமுறை வரை இந்தப் பாகுபாடு மிக வெளிப்படையாகவே இருந்துவந்தது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாகச் சொல்கிறது.

பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றும் ஒரு காரணம் சிசுக் கொலை. ஸ்கேன் சோதனை செய்வது குற்றம் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்துவருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் 2000 ரூபாய்க்கு ஒரு கிராமத்துப் பெண், கருவில் இருப்பது பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்யத் துணிந்திருக்கிறார்.

ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. தேசத்தை, நதிகளை, மொழிகளையும் பெண் வடிவமாகப் பாவித்து வழிபட்டுவருவதும் இந்தியாவில்தான் இது நடக்கிறது என்பதும் மிகப் பெரிய முரண்.

இந்த விகிதச்சாரக் குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது. இது நேரடியாகப் பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. கலாச்சாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் குறித்து ஜனநாயக அரசு ஆக்கபூர்வமான எந்தச் செயல்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த விகிதச்சாரக் குறைபாடுதான் இதற்குப் பின்னால் உள்ள காரணம். கலாச்சாரத்தை மீறும் பெண்களைத் தன்னிச்சையாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் அதிகாரம் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள் வடமாநிலங்களில் மிகப் பரவலாக உள்ளன. இவற்றிற்கு ஆளும்வர்க்கத்தின் ஆதரவும் இருக்கிறது. இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தாலும் அது ஆதிக்கசக்திகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை அரசும் சமூகமும் எப்படிக் கையாண்டன என்பதையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பிரதமர் மன்மோகன் சிங், அது குறித்து ஒரு வாரம் கழித்தே பேசினார். சில மத அமைப்புகள் மேலை நாகரீகத்தைக் கடைபிடிப்பதால் வந்த விபரீதம் இது என்றன. மொத்த ஆதிக்க சமூகமும் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதற்குக் காரணமாக, இந்த பெண்கள் எண்ணிக்கை குறைவு இருப்பதாக சன்னி ஹண்டல் குறிப்பிடுகிறார்.

இந்தியா வெற்றிகரமாக 15 பொதுத் தேர்தல்களை நடத்தி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பாலினப் பாகுபாடு இந்தியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் அவமானகரமானதாகவும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் 33% சதவிகித இடஒதுக்கீட்டு மசோதா இதற்குச் சிறந்த உதாரணம். இனி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். அவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே இப்போது இருக்கும் பெண் வாக்காளர்கள் பலரும் தேர்தல்களில் சுய முடிவுடன் வாக்களிப்பதில்லை. தங்கள் வீட்டு ஆண்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வாக்களிப்பதாகப் பல ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன. இது பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.

(பிப்ரவரி 2014இல் எழுதியது)