ஒரு விநோதக் கனவு


மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் அதே எள்ளல் நடை கைவரப்பெற்றவர் மலையாளத்தின் இளம் தலைமுறை எழுத்தாளர் உண்ணி ஆர். மாத்ருபூமி இதழில் வெளிவந்த அவரது சிறுகதையான ‘லீலா’வை மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ரஞ்சித் திரைப்படமாக்கியிருக்கிறார். 

இலக்கியப் பிரதிகள் திரைப்படமாகப் பரிணாமம் பெறுவது மலையாளத்தைப் பொறுத்தவரை புதிதல்ல. ஆனால் உண்ணியின் இந்தக் கதை வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்டது; நடுத்தர வர்க்கத்தின் புனிதங்களை முற்றத்தில் இறக்கிக் கிண்டலுக்குள்ளாக்குவது. (இந்தக் கதை கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உயிர்மையில் வெளிவந்துள்ளது)

குட்டியப்பன், தந்தையும் தாயும் இல்லாத வசதி படைத்த குடும்பத்தின் வாரிசு; பணக்கார அநாதை. கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, மர்லின் மன்றோ, புருஸ் லீ ஆகியோர் படங்களை ஒரே ஃப்ரேமுக்குள் தலைக்கு மேல் மாட்டி வைத்திருக்கிறான். அதில் ஒரு அணையா மின்விளக்கு துடித்துக்கொண்டிருக்கிறது, குட்டியப்பனின் மனத்தைப் போல. ஒரு இடத்தில் நிற்காத கால்கள் அவனுக்கு.

இலக்கில்லாத வாழ்க்கையைக் கொண்டிருக்கும் குட்டியப்பனுக்கு இல்லாத பழக்கங்கள் இல்லை. குட்டியப்பனின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பவர் சூதுவாதறியாப் பிள்ளைச் சேட்டன். குட்டியப்பன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்பவர். அதனால் அவர் மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர். ஒருநாள் நள்ளிரவில் பிள்ளைச் சேட்டனின் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி, தனக்கொரு யானை வாங்க வேண்டும் என்ற ஆசையைக் குட்டியப்பன் வெளிப்படுத்துகிறான்; பிள்ளைச் சேட்டன் கூட வர வேண்டும் எனக் கேட்கிறான். குட்டியப்பன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத பிள்ளைச் சேட்டன் சம்மதிக்கிறார். காலையில் யானை தேடிச் செல்பவதற்குப் பதிலாக குமரகம் பகுதியில் பாலியல் தொழில் தரகரனிடம் ‘ஒருமுறை வாக்களித்த பெண்’ கிடைக்குமா, எனத் தேடியலைகிறான் குட்டியப்பன். பிள்ளைச் சேட்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. “யானை வாங்கினால் ஆரத்தி எடுக்கப் பெண் வேண்டாமா?” எனக் குட்டியப்பன் இடக்காகக் கேட்கிறான்.

யானையையும் பெண்ணையும் தேடிப் பசுமையான வயநாடு, குமரகம் பகுதிகளில் பயணிக்கிறது லீலா. சிறுகதையாக இருட்டான பகுதிகளைக் கொண்டது லீலா. சினிமா அந்த இடங்களில் விளக்கை ஏற்றியிருக்கிறது. சிறுகதையில் முதலிலேயே சொல்லப்பட்டுவிட்ட காரணத்தை மறைத்து, பார்வையாளர்களின் ஆவலைத் தூண்ட முயல்கிறது சினிமா. சிறுகதை, பிள்ளைச் சேட்டன் கதாபாத்திரத்தின் குரலில் விவரிக்கப்பட்டிருக்கும். சினிமா பிள்ளைச் சேட்டனைச் சாட்சியாகக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைக்கதையையும் உண்ணியே எழுதியிருக்கிறார்.

சிறுகதையில் வெளிப்படாத குட்டியப்பன் கதாபாத்திரத்தின் குணங்களை சினிமாவில் சித்திரித்திருக்கிறார். இறந்துபோன குட்டியப்பனின் சித்தி, அவனது மனசாட்சியாக, ஒரு தேவதையாக வருகிறார். உணர்ச்சிகரமாக உருப்பெற வேண்டிய இந்தக் காட்சியை, தேவதைகள் குறித்த கற்பனைகளைக் கிண்டலடிப்பதாக அமைத்திருக்கிறார்.

கதை வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்டது என்பதால் வசனங்களை நகைச்சுவைத் தெறிப்புகளுடன் உருவாக்கியிருக்கிறார்கள் எனலாம். மகாத்மா காந்தியிலிருந்து கேரளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.டி.சாக்கோவரை எல்லாரையும் வம்புக்கு இழுக்கின்றன வசனங்கள். குட்டியப்பன் பாத்திரத்தின் தனித்துவமான குணம் வசீகரிக்கும் வகையில் வெளிப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க மனநிலை கொண்டவர்கள் தாண்ட முடியாத புனிதங்களைப் போகிறபோக்கில் ஒரு எட்டில், ஒரு சொல்லில் தாண்டிச் செல்பவனாக, குற்றவுணர்வற்றவனாக குட்டியப்பன் இருக்கிறான். ஓய்வுபெற்ற பாலியல் தொழிலாளர்களை குட்டியப்பன் கவுரவிக்கும் காட்சியும் உள்ளது.

குட்டியப்பன் கதாபாத்திரத்துக்கான சிறந்த தேர்வு பிஜூ மேனன். ஏற்கனவே இதேபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்கு இதில் கைகொடுக்கிறது. நடக்கவுள்ள கேரள மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான நடிகர் ஜெகதீஸ் சொந்த மகளிடமே தவறாக நடந்துகொள்ளும் தந்தையாக நடித்துள்ளார். படத்தின் சிறப்பான நடிப்பு பிள்ளைச் சேட்டனாக நடித்திருக்கும் விஜயராகவனுடையது.

பிள்ளைச் சேட்டன் ஒரு தத்தி. அவருக்குப் புனிதங்களும் வேண்டும். திருட்டு ருசியும் வேண்டும். நடுத்தர வர்க்கத்தின் மன இருட்டை இந்தப் பாத்திரத்தின் வழியாக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜயராகவன். தன் மகளுக்கும் தந்தையால் பாதிக்கப்பட்ட பார்வதிக்கும் ஒரு வயது வித்தியாசம்தான் எனக் குட்டியப்பன் சொல்லும்போது, நடுத்தர வர்க்கத் தகப்பனாக விஜயராகவன் நுட்பமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். அதில் அதிர்ச்சி மட்டுமல்ல; பயமும் உள்ளது.

குட்டியப்பன் கண்ட ஒரு விநோதக் கனவுதான் லீலா. அவன் தேடிக் கண்டுபிடிக்கும் அந்தப் பெண்ணுக்கும் லீலா என்று பெயரிடுகிறான். ஒரு வார்த்தைகூடப் பேசாதவளான அவள், மொத்தக் கதையின் பாரமாக வருகிறாள். குற்றவுணர்வற்ற குட்டியப்பனின் என்றென்றைக்குமான பாவமாக ஆகிறாள்.
(தி இந்து ஏப்ரல் 29 2016)