காதல்கள்

காதல் என்னும் உணர்ச்சி விளக்கவே முடியாதது. அந்தத் தீவிரத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கடந்தவர்கள் சிலர் எதிர்மறையான அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலின் புனிதங்கள், பாசாங்குகள், கற்பனைகள் இவை எல்லாமும் விளக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் அப்பாற்பட்டவை. காதல், ‘சரி, தவறுக’ளுக்கு அப்பாற்பட்டதும்கூட. காதல்கள், அவற்றின் பாசாங்குகளை இயல்பான காட்சிகளின் விவரிக்க முயலுகிறது ‘அருகே’.


2012இல் வெளிவந்த இப்படம் வங்க எழுத்தாளர் சுனில் கங்காபாத்யாவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. திலீப், சம்ருதா சுனில், மம்தா மோகன்தாஸ், இன்னோசண்ட், வினித் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, மலையாளத்தின் முன்னணி இயக்குனர் ஷியாம்பிரசாத் இயக்கியுள்ளார்.

சாந்தனு மொழியில் துறை ஆராய்ச்சி மாணவன். முன்பு விரிவுரையாளனாகப் பணியாற்றியவன். மென்மையான உணர்வு கொண்டவன். தன்னுடைய முன்னால் மாணவியான கல்பனாவுடன் அவனுக்குக் காதல். அந்தக் காதல் தொடர்பான பதற்றங்களுடன் எப்போதும் இருக்கிறான். கல்பனா உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்கவள். இளமையின் முழு வனப்பும் அவளின் உடலில், தெத்துப் பல் சிரிப்பில் வெளிப்படுகிறது. சாந்தனுவின் வெகுளித்தனங்களை, மென்மையுணர்வை, அவனது பண்டிதத் பின்னணியைக் கல்பனா ரசிக்கிறாள். சின்னச் சின்னதாக அவனை ஏமாற்றி அவனுடைய பரிதவிப்புகளை ரசிப்பவளாகவும் இருக்கிறாள்.

அவள் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தின் ஒரே மகள். அப்பா அரசு வங்கி ஒன்றின் உயர் அதிகாரி. சாந்தனு பிராமணன் அல்ல. மேலும் அவனுக்கு என்று யாருமே இல்லை. அதனால் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஆனால் கல்பனா தன் வசதியான வாழ்க்கை, பாசமான அம்மா, அப்பா இவை எல்லாவற்றையும் துறந்து வர வேண்டும். இது சாத்தியமா? அவனுக்குள் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இவை பலவீனமான ஆண் மனத்தின் பதற்றங்கள். இந்த உறவையே ஆதாரமாகக் கொண்டிருக்கும் சாந்தனு அது உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையால் காதலில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறான். ஆனாலும் இடையிடையே மனமும் குழம்புகிறது; கேள்வி எழுப்புகிறது. தனக்காக அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருவாளா என அவள் தோழி அனுராதாவிடம் கேட்கிறான். “நீ உண்மையிலேயே என்னை நேசிக்கிறாயா” என்று கல்பனாவிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் தெரிந்திரும் கல்பனாவின் பெற்றோர் கல்பனாவைக் கண்டிக்காமல் கூடுதல் பாசத்துடன் அணுகுகிறார்கள். சமயங்களில் சாந்தனுவையே கட்டிவைப்பதாகச் சொல்கிறார்கள். சமயங்களில் உணர்ச்சிபூர்வமாகப் பேசி அவள் மனத்தை மாற்ற முயல்கிறார்கள். சாதுரியமான நடுத்தரவர்க்க மனநிலையை இப்பாத்திரங்களின் வழியாக இயக்குனர் ஷியாம் பிரசாத் சித்தரித்துள்ளார். இவை கதையின் ஒரு பகுதி. 

இன்னொன்றில் அனுராதா வருகிறாள். அவள் கல்பனாவின் தோழி. விரிவுரையாளர். இருவரது காதலின் சாட்சியாக இவள் இருக்கிறாள். அவர்களின் எல்லாச் சந்திப்புகளிலும் உடன் இருக்கிறாள். அனுராதா இந்தப் படத்தின் மையப் பாத்திரம். எப்போதும் சாம்பல் படிந்த முகத்துடன் இருக்கிறாள் அவள். தனக்கு முன்னே எப்போதும் இருக்கும் ஜன்னல்களின் வழியாக உலகையே ஒரு வேடிக்கைப் பொருளாக்கி வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த ஜன்னல்களில் காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தீண்டாத நீர்ப் பரப்பு, சின்னச் சின்னச் சலனங்களையும் உள்வாங்குவதைப் போல மனிதர்களின் செயல்பாடுகளை அவளால் உள்வாங்க முடிகிறது.

அவளை ‘சேச்சி’ என அழைக்கும் கல்லூரி மாணவன் ஒருவனுக்கு அவள் மீது மோகம். சுற்றிச் சுற்றி வருகிறான். வழி மறிக்கிறான். அனுராதாவின் பக்கத்து வீட்டுக்காரரான நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் அனுராதாவுக்குச் சின்ன சின்ன உதவிகள் புரிகிறார். வாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் தன் மனைவியின் நிலையை அனுதாபமாக்கி அனுராதாவை அடைய நினைக்கிறார்.

அனுராதா இருவரையும் நிராகரித்துத் தன் உலகிற்குள் சுருண்டுகொள்கிறாள். குழந்தைமையின் ஈரம் விலகாத பதின்ம வயதில் அவளது கிராமத்து வீட்டில் வந்து தங்கும் முறைப் பையன் வாக்குறுதியுடன் அவளுக்குள் நுழைந்துவிடுகிறான். உறவுகொள்கிறான். அவனது பிரிவும் ஏமாற்றமும் அவள் ஆளுமையில் தாக்கத்தை விளைவித்துவிடுகின்றன. இளமையின் எந்த வண்ணங்களும் இல்லாமல் இருக்கிறாள். முறைப் பையனின் கடிதத்தை நோக்கி அவளும் அவளது தந்தையும் தனித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே கல்பனா ஒரு கார் விபத்தை எதிர்கொள்கிறாள். அவளது உடலும் மனமும் பாதிப்படைகின்றன. காளிதாஸனின் காவியப் பாத்திரமான சகுந்தலாவின் பாதத்துடன் சாந்தனுவால் ஒப்பிட்டுப் பேசப்படும் கல்பனாவின் பாதம் முறிந்துவிடுகிறது. தன்னைச் சந்திக்க வரும் சாந்தனுவைப் பார்க்க மறுத்துத் திரும்பிக்கொள்கிறாள். சாந்தனும் அனுராதாவும் கடற்கரையில் சந்தித்துக்கொள்கிறார்கள். அருகருகே நின்று பேசுகிறார்கள். கல்பனாவைவிட அவள் தனக்கு எழுதும் பதில் கடிதங்களையே தான் நேசித்தாகச் சொல்கிறான் சாந்தனு. கல்பனா கேட்டுக்கொண்டதற்காக அனுராதாதான் அவன் கடிதங்களுக்குப் பதில் எழுதியிருப்பாள். இந்தக் காட்சியுடன் திரைப்படம் முடிவடைகிறது.

(2014 ஜனவரியில் எழுதியது)