சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன - கல்வெட்டாய்வாளர் செந்தீ. நடராசன் நேர்காணல்

செந்தீ நடராஜன், கல்வெட்டு ஆய்வாளர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர். ‘பண்பாட்டுத்தளங்கள் வழியே’ ஆய்வுக் கட்டுரை நூல் இவரது முக்கியமான ஆக்கம். கல்வெட்டு எழுத்துக்களைப் புரிந்துகொள்வது குறித்த இவரது ‘தொல் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ கல்வெட்டுத் துறைக்கே சிறப்புச் செய்யும் நூல். அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் நாகர்கோவிலில் வசிக்கிறார். குமரி மாவட்டக் கல்வெட்டுகளின் அடிப்படையில் அம்மாவட்டத்தின் முழுமையான வரலாற்றை எழுதும் முயற்சியில் இருக்கிறார்.அறிவியல் பட்டதாரியான நீங்கள் இத்துறைக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் முன்னோடிகள் யார்?

என் கல்லூரித் தோழரான எழுத்தாளர் பொன்னீலன் மூலமாக நாட்டார் வழக்காற்றியலாளர் நா.வானமாமலையின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம்தான் வரலாற்றுத் துறையில் ஆர்வம் வந்தது. நாட்டார் வழக்காற்றியல் துறையில் முக்கியமான கட்டுரைகள் எழுதினேன். கல்வெட்டுத் துறைக்கு வரக் காரணம் தே. கோபால். அவர்தான் கல்வெட்டு எழுத்துகளை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். 

கல்வெட்டுகளில் என்ன மாதிரியான எழுத்து வடிவங்கள் இருக்கின்றன?

முதலில் மொழியையும் அதன் வரி வடிவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வரி வடிவத்தைப் பொறுத்தவரை தமிழுக்கு ஆதியில் இருந்த வடிவம் பிராமி. அதற்கு முன்னால் வேறு வடிவம் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு பிராமி வரிவடிவம் சான்றாகக்  கிடைக்கின்றன. கி.மு. 5-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி.2-ம் நூற்றாண்டு வரை பிராமிதான் இருக்கிறது. அதற்குப் பிறகு மெல்ல அது வட்டெழுத்து வரி வடிவமாக மாறுகிறது. 

கிடைக்கப் பெற்றவற்றுள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு எது?

பழனிக்கு அருகில் பொருந்தலில் தொல்லியலாளர் கா.ராஜன் மேற்கொண்ட அகழாய்வு மண் ஜாடியில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ஜாடியில் பரப்பில் தமிழ் பிராமி வரிவடிவம் எழுத்துகள் இருந்தன. அதற்குள்ளிருந்த நெல் மணிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வுசெய்தபோது அது கி.மு. 450 கி.மு. 490 ஆண்டுகளுக்கு இடையிலானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது கல்வெட்டுகளில் இதுதான் பழமையானது. 
இந்த வரிவடிவங்கள் என்பது கல்வெட்டுகளுக்காக உருவாக்கப்படுபவையா?
தோலில் எழுதியிருக்கிறார்கள். துணியில் எழுந்திருக்கிறார்கள். ஓலைச்சுவடியில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவற்றில் ஆயுள் காலம் மிகக் குறைவுதான். கல்வெட்டுகள் அப்படிப்பட்டதல்ல. அவற்றை நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ் கிரந்த வரிவடிவம் எப்போது வருகிறது?

அதே காலகட்டத்தில் கி.பி.5-ம் நூற்றாண்டில் வருகிறது. சமணர்களின் மொழியான சூரகேணியும் பவுத்தர்களின் மொழியான பாலியும் பிராகிருத குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த பிராகிருத மொழிகளைச் சொல்ல தமிழ் எழுத்துகளில் ஒலி போதாது. பிராகிருதத்தின் உயிர் எழுத்து, மெய் எழுத்துத் தன்மைகள் வேறு. ‘எ’ குறில் கிடையாது. ‘ஒ’ குறில் கிடையாது. தமிழில் ‘க’வர்க்கம் ‘ச’வர்க்கம் கிடையாது. ’அம்’ ‘அஹ்’ கிடையாது. ஆக இந்த எழுத்துகளையும் சேர்த்துத் தமிழில் எழுத உருவானதுதான் க்ரந்த வரிவடிவம். பல்லவ ஆட்சியில் வந்ததால் அது பல்லவ க்ரந்தம் எனச் சொல்லப்படுகிறது.

அப்படியானல் இந்தக் காலகட்டத்தில்தான் சமணம் இங்கு வருகிறதா?  

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே சமணர்கள் வந்துவிட்டார்கள்.  இந்தக் காலகட்டத்தில் மெளரி மன்னன் சந்திரகுப்தனின் குரு பத்திரபாகு முனிவர் தலைமையில் சமணர்கள் நாற்பதாயிரம் பேருடன் தெற்கு நோக்கி பெங்களூருக்கு அருகில் சரவண பெலகோலாவுக்கு வந்தார்கள். அங்கிருந்து வைசாக முனிவர் தலைமையிலான சமணர்கள் சோழ, பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பினர். இதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் அசோகர் மூலம் கிழக்குக் கடற்கரை ஓரமாகப் பவுத்தம் வருகிறது. தமிழ்ச் சங்க காலம் எனச் சொல்லப்படும் காலகட்டத்திலேயே தமிழர்களுக்கு சமணமும் பவுத்தம் தெரியும். 

அதற்கு முன்பு இங்கு என்ன சமயம் இருந்தது?

எல்லா சமயங்களும் இருந்தன. பொதுவான சமயம் என்ற ஒன்று இல்லை.  சங்க இலக்கியத்தில் யாகங்களைச் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வைதீகம் இருந்திருக்கிறது. சமணமும் பவுத்தமும் இருந்திருக்கிறது. ஆசிவகம் இருந்திருக்கிறது. ஆனால் பின்னால் சங்க இலக்கியத்தை சைவர்கள் தொகுக்கும்போது இந்த சமண, பவுத்த தடங்களை நீக்கிவிட்டார்கள். அதையும் மீறிச் சில இடங்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது.

உதாரணம் சொல்ல முடியுமா?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்னும் கனியன் பூங்குன்றனாரின்  வரிகள் ஆசிவக சமயத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிப்பது.  ‘நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவ ராடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ எனும் ஒளவையின் பாடல் பவுத்ததின் தம்மபதத்தை அப்படியே சொல்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு இந்த இரண்டு சொற்களும் இல்லை. ஒரு இடத்தில் முக்கண்ணன் என்ற சித்திரிப்பு வருகிறது. அது இந்திரனனைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் மூன்று கண்கள். மேலும் இந்திரன் இந்து சமயத்துக்கு மாத்திரமான தெய்வமல்ல. 

தற்காலத் தமிழ் வரிவடிவம் எப்போது உருவானது?

கி.பி.5-ம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து வரிவடிவம்தான் கல்வெட்டுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் அதே காலகட்டத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கிட்டதட்ட இன்றைக்குள்ள தமிழ் வரிவடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கி.பி. 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வாக்கில் சோழர்களின் எழுச்சிக்குப் பிறகுதான்  தமிழ் வரிவடிவம் பரவலாக்கம் பெறுகிறது. ராஜராஜ சோழனின் காலகட்டத்தில்.

ராஜராஜசோழனின் காந்தளூர்ச் சாலைப் போர், ஒரு போரே அல்ல என்கிறீர்கள்...

காந்தளூர்ச் சாலை என்பது பிராமணர்களுக்கான ஒரு கல்விச் சாலை. ராஜராஜனின் மெய்கீர்த்தியில் உள்ளபடி ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய..’ என்பதில் கலம் என்ற சொல்லைக் கப்பல் எனக் கொண்டு அது கப்பற்படைகளுடனான போர் எனச் சொல்லப்படுகிறது. கலம் என்பது இங்கு ‘Stipend- கல்வி உதவித் தொகையை’த்தான் குறிக்கிறது. அருளிய என்பது மாணவர் ஒவ்வொருவருக்கும் சரியான விகிதத்தில் பிரித்துக்கொடுத்ததைத்தான் குறிக்கிறது.  ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். கி.பி. 866 ஆண்டைச் சேர்ந்த இந்தப் பட்டயம், இன்றைய குமரி மாவட்டக் கேரள எல்லையில் உருவாக்கப்பட்ட பார்த்திவசேகரபுரம் சாலை  என்னும் கல்விச் சாலையைப் பற்றிச் சொல்கிறது. பார்த்திவசேகரபுரம் முழுக்க முழுக்க வேதங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாலை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் காந்தளூர்ச் சாலையை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்ற தகவலும் உள்ளது.  

புலைப்பேடி குறித்தும் ஆய்வுசெய்து எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

குறிப்பிட்ட சில மாதங்களில் குறிப்பாக அறுவடைக்காலத்தில் உயர்ஜாதி மக்கள் எனச் சொல்லப்படுகிறவர்களின் பெண்கள் விளக்கு வைத்த பிறகு வெளியே வந்துவிட்டால் புலையர், வண்ணார் போன்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் பார்த்து, ஒரு குச்சியையோ கல்லையோ எறிந்துவிட்டால் அந்தப் பெண் அவர்களுடன் சென்றுவிட வேண்டும். இது ஒரு சமூக வழக்கமாக இருந்திருக்கிறது. மாட்டைப் பிடித்துக்கொண்டு போனாலேயே சண்டை பிடிப்பார்கள். பெண்ணை இழுத்துக்கொண்டு போனால் இதை அவர்கள் தடுக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தடுத்தமாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இது தீட்டு. இதில் இழுத்துக்கொண்டு போன பெண் கருவுற்றிருக்கும்பட்சத்தில் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அவள் திரும்ப வந்துவிடலாம். பெண் குழந்தையாக இருந்தாள் இழுத்துக்கொண்டு போனவனுடன்தான் வாழ வேண்டும். அதே சமயம் அந்தப் பெண் அருகில் உள்ள ஒரு பனை மரத்தைத் தொட்டாலோ அருகில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் இருந்தாலோ புலைப்பேடி இல்லை. இவையெல்லாம் சொல்லக் கேட்டவைதான்; ஊகங்கள்தான். வீரகேரள வர்மா காலத்தைச் 1606-ம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு இன்றுமுதல் புலைப்பேடி ம்ண்ணாப்பேடி இல்லா என்கிறது. பத்மநாபபுரம் அரண்மனையின் இந்தக் கல்வெட்டு இருக்கிறது. இந்த வினோத வழக்கம் குறித்து இன்னும் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம். 

தமிழ்நாடு முழுக்க சிற்பங்களை ஆய்வுசெய்திருக்கிறீர்கள். சிற்பங்களை வைத்து வரலாற்றை அறிந்துகொள்ள முடியுமா?

சிற்பங்களும் கால காட்டும் கருவிகளாகும். இரண்டாவது சிற்பங்கள் வழியாகத் தொன்மங்கள் வெளிப்படும். அதாவது சமயம் சார்ந்த தொன்மங்களைச் சிற்பங்கள் சித்திரிக்கின்றன. ஒரே ஒரு சிற்பத்திலேயே ஒரு பெரிய தொன்மக் கதையைச் சித்திரிக்க முடியும். சுசீந்திரம் கோயிலின் கோபுர அடிவாரத்தில் ஒரே ஒரு சட்டகத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. இது 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் சிற்பங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துபவை அல்ல. குகைகளில் ஒரு மானை வேட்டையாடுவதைப் போல ஓவியங்களை வரைகிறான் என்றால் அது அழகுக்காக வரையப்படுபவை அல்ல. நாளை அவன் வேட்டையாடப் போவதை முன்னால் செய்து பார்த்துக்கொள்கிறான். மாந்திரிகச் சடங்கை என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்ககென ஒரு தனித்துவமான கோயில் கட்டிடக் கலை எனச் சொல்ல முடியுமா?

அப்படிச் சொல்வது சரியல்ல. தென்னாட்டுச் சிற்பக் கலை என்று பிரிக்கலாம். கோயில்களைப் பொறுத்தவரை அது காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டு வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. திருவட்டார் கோயிலில் உள்ள ஒரு மூன்று வரிக் கல்வெட்டு குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியைச் சொல்கிறது. அதற்கு முன்பு உள்ள கல்வெட்டுகள் எங்கே போயின? ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கோயில் வேலைப்பாடுகளைக் கலைத்து மீண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். தமிழகக் கோயில் கட்டிடக் கலையில் ஆந்திரம், கன்னடம், தமிழகம், பல்லவம் எனப் பலவிதமான பங்களிப்புகள் உள்ளன.

சிற்பக்கலையிலும் தனித்துவப்படுத்த முடியாது அல்லவா?

காலகட்டத்தைப் பொறுத்து தனித்துவப்படுத்தலாம். கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வளை சிற்பங்கள் கிடையாது. சிற்பங்கள் நேரடியாக நிற்கக்கூடிய சிற்பங்கள்தான் உணடு. விஜயநகரப் பேரரசு காலகட்டச் சிற்பங்கள் மிகவும் வளைந்த சிற்பங்கள். 

தென்னாட்டுக் கோயில்களில் மட்டும் காணக் கிடைக்கும் யாளி எதைக் குறிக்கிறது?

அது ஒரு தொன்ம விலங்குதான். பிரம்மாண்டமான ஒரு உருவச் சித்திரிப்புதான் யாளி. சிங்க முகமும், யானையின் துதுக்கையும் கொண்டு இருக்கும் யாளியின் பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அதன் காலடியில் ஒரு யானையும் செதுக்கப்பட்டிருக்கும். இதில் சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி எனப் பல வகை உண்டு.

சிற்பங்கள் வரலாற்றைச் சித்திரிக்க முயல்கின்றனவா?

சிற்பங்கள் வழிபாட்டு வடிவங்களாக இருந்திருக்கின்றன. இதன் வழியாக ஒரு சமய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தாயார் சந்நிதிகள் கிடையாது. சரஸ்வதி சிற்பம் 11-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன. அதற்கு முன்பு சரஸ்வதி வழிபாடே கிடையாது. வாக் தேவி என்னும் பவுத்த தெய்வம் பின்னால் இந்து சமயம் உள்வாங்கிக்கொள்கிறது. மேலும் வழிபாட்டு தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்பதையும் இன்றைக்குக் கிடைக்கும் சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது. இது போன்ற வரலாறு இந்தச் சிற்பங்கள் வழியாகத்தான் கிடைக்கின்றன. 

கல்வெட்டு அடிப்படையிலான வரலாறு ஓரளவு முழுமை பெற்றிருக்கிறதா?

இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய கல்வெட்டுகள் இருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல இன்னும் படிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றில் சில காணாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுதான் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். 

சந்திப்பு: மண்குதிரை (ஜெய்குமார்)