“பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல” - நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள் நேர்காணல்
அ.கா.பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இவரது பங்களிப்புகள். அம்மானை வடிவத்தில் இருந்த பல நாட்டார் கதைகளை உரைநடையில் தொகுத்துள்ளார். வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து குறித்த இவர் ஆய்வுகள் முக்கியமானவை. கல்வெட்டுகள், இலக்கியங்கள் அடிப்படையில் இவர் குமரி மாவட்டத்தின் 2000 ஆண்டு வரலாற்றை எழுதியுள்ளார். அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாகர்கோவிலில் வசிக்கிறார். தற்போது கேரளத்தில் கண்ணகி வழிபாடு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பறக்கைதான் என்னோட சொந்த ஊர். அது ரொம்பப் பழமையான கிராமம். அங்கு ஒரு பெருமாள் கோயில் உண்டு. அதற்குப் பக்கத்தில்தான் என் வீடு. சுற்றிலும் குளங்கள், தெப்பக்குளம், வயல், தேரோடும் வீதி என அந்த ஊர் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. என்னுடைய இளங்கலைப் படிப்பு முடியும் வரை அங்குதான் இருந்தேன். பள்ளிப் படிப்பு, பறக்கையிலும், சுசீந்திரத்திலும் படித்தேன். 

நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் வந்தது எப்படி?

எங்கள் வீட்டுக்கு எதிரே திருவாவடுதுறை ஆதினம் மடம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அங்கு முருகலிங்கத் தம்பிரான் என்று ஒரு தம்பிரான் இருந்தார். நல்ல தமிழ் படிச்சவர். பத்து பன்னிரெண்டு வயதில் இருந்து அந்த மடத்தில் அமர்ந்து பாடப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் அந்தத் தம்பிரானைத் தேடி ரொம்ப வயசானவர்கள் வருவார்கள். அவர்களில் படித்தவர்கள் உண்டு; படிக்காதவர்கள் உண்டு. அவர்கள் அங்கு வந்து சொல்லும் தகவல்களைக் கவனமாகக் கேட்பேன். நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு வர ஒருவிதத்தில் இதுதான் அடிப்படைக் காரணம் என நினைக்கிறேன். உதாரணமாக அங்கு ஒரு பெரியவர் சுசீந்திரம் கோயில் கோபுரம் கட்டிய வரலாற்றைச் சொன்னார். 1894-ல் கோபுரம் கட்டும்போது அந்தப் பெரியவரின் அப்பா அதைப் பாத்திருக்கிறார். அதைப் பற்றி அவர் தன் பையனிடம் சொல்லியிருக்கிறார். அவரிடமிருந்து அந்தத் தகவல் என்னிடம் வந்தது.

இளங்கலை முடித்தவுடன் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைத் தொடங்கிவிட்டீர்களா?

இல்லை. இளங்கலைக் கல்வி முடித்த பிறகு குடும்பச் சூழல் காரணமாக மேற்படிப்பை என்னால் தொடர முடியாத சூழல். என்னுடைய 19 வயதிற்குள் தாய், தந்தையை இழந்திருந்தேன். குடும்பச் சூழல் காரணமாக இளங்கலை முடித்த பிறகு ஒரு நான்கு மாதம் திருச்சி தினத்தந்தி பத்திரிகையில் வேலை பார்த்தேன். அந்தக் காலத்தில் தமிழ் இளங்கலைப் படித்தவர்களைத் தினத்தந்தியில் வேலைக்கு எடுத்தனர்.

பத்திரிகைக்காக ரிப்போர்டிங் செய்த அனுபவம் உண்டா?

அப்போது எல்லாவற்றுக்கும் தனித் தனி ஆள் கிடையாது. கோயில் தர்மர்த்தா, பூசாரி எல்லாம் ஒரே ஆள்தான். ரீபோர்ட்டிங் செய்யச் சொன்னால் செய்ய வேண்டும். ப்ரூப் பார்க்க வேண்டுமென்றான் பார்க்க வேண்டும். எனக்கு ரிப்போர்ட்டிங் செய்வது குறித்து 'அனாஆவன்னா' தெரியாது. என்றாலும் 'குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் போய் பார்த்து எழுதிட்டு வா' எனச் சொன்னால், நான் போய் அந்த நிகழ்ச்சியைப் பற்றி முழுமையாக எழுதி வந்து கொடுத்துவிடுவேன். உதாரணமாக நடிகை பத்மினி காங்கிரஸ் சேர்ந்த புதிதில் திருச்சியில் ஒரு கூட்டம். அங்கு ஏதோ காங்கிரஸ்காரர் பத்மினியைப் பாரதமாதா எனக் குறிப்பிட்டுப் பேசினார். நான் அதையும் முழுமையாக ரிப்போர்ட் செய்தேன். திமுககாரர்கள் சினிமா நடிகைகளைக் கொண்டுவருகிறார்கள் எனச் சொன்ன காமராஜர் இதையும் அனுமதிக்கிறார் என மறுநாள் செய்து வந்தது.


பத்திரிகை அனுபவம் உங்கள் மொழியைச் செறிவுபடுத்தியதா?

நிச்சயமாக. ஆதித்தனர் பத்திரிகை குறித்துப் பல விஷயங்களைச் சொல்லித் தந்தார். அதிகமான சொற்களே வேண்டாம். ஒரு பத்திரிகையாளனுக்கு ஒரு 500 சொற்களே போதுமானது என்பார். பத்திரிகையில் 'Lead' எனச் சொல்வார்களே அதையும் அவர் கற்றுத் தந்தார். ஒரு பத்தியிலேயே செய்தியைச் சொல்லிவிட வேண்டும் என்பார். இன்னொரு வகையில் நாட்டார் வழக்காற்றியலுக்கு வர இந்தப் பத்திரிகை அனுபவமும் ஒரு காரணம். பத்திரிகையில் பணியாற்றியவர்களின் எழுத்துகள் வெற்றிபெறும். ஏனெனில் அது சமகால மொழியாக இருக்கும்.
உதாரணமாக மறைமலை அடிகள், உ.வே.சாமிநாதய்யர் இருவரையும் எடுத்துக்கொண்டால் உ.வே.சாவின் எழுத்துகளை மட்டும்தான் இன்றைக்குப் படிக்க முடிகிறது. மறைமலை அடிகளின் மொழியைப் படிக்க முடியவில்லை. காரணம் உ.வே.சா. கலைமகள் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். உ.வே.சாவின் எழுத்து எளிமையானதற்கு அதுதான் காரணம். இது ஒரு உதாரணம்தான். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன.

இலக்கிய வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது?

என் அண்ணனுக்கு வேலை கிடைத்த பிறகு அவர் என்னை முதுநிலைப் படிப்புத் தொடரச் சொல்லி எனக்கு எழுதினார். அந்தச் சமயத்தில் எல்லாக் கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கியிருந்தன. அதனால் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள சித்தூர் கல்லூரியில் என்னுடைய உறவினர் ஒருவர் முதல்வராக இருந்தார். அந்த சிபாரிசில் அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ்த் துறையில் பணியாற்றினார். எனக்குத் தற்கால இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். புதுமைப் பித்தன் அவர் ஒரு நல்ல ஆசிரியர். ஒரு கவிதையை எப்படிப் படிக்க வேண்டும் எனச் சொல்லித் தந்தார். எனக்கு புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். புதுமைப்பித்தனோட கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கொடுத்து படிக்கச் சொன்னார். சுந்தர ராமசாமியின் பிராசாதம் சிறுகதைத் தொகுதியைப் படிக்கச் சொன்னார். 1986 வரை தற்கால இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்தேன். அதற்குப் பிறகு படிக்கவில்லை என்றே சொல்லலாம்.

தற்கால இலக்கியத்தைத் தீவிரத்துடன் வாசிக்கும்போது உங்களுக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையா?

வந்தது. நான் முன்பே சொன்னதுபோல என்னுடைய 19 வயதிற்குள் அம்மா, அப்பா இருவரையும் இழந்துவிட்டேன். என்னைப் படிக்க வைத்த மூத்த அண்ணன் என்னுடைய 30 வயதில் இறந்துபோனார். இந்த என் குடும்பச் சூழலை வைத்து ஒரு நாவல் எழுதினேன். அதைக் கொண்டுபோய் சுந்தர ராமசாமியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அவர் வாசித்துப் பார்த்துவிட்டு, "உங்க டைரி மாதிரி இருக்கு" எனச் சொன்னார். அச்சுதன் அடுக்கா என்ற பெயரில் எழுதும் என் நண்பன் சீனிவாசனும், "இது சரியா வரலை" என்றான். இதுமட்டுமல்ல எனக்கே அவநம்பிக்கை இருந்தது. நான் ஒரு ஆராய்ச்சியாளன் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது.

இந்த எண்ணம் எப்போது வந்தது?

சுந்தர ராமசாமியைச் சந்தித்தது ஒரு முக்கியமான விஷயம். 1972-ல் ஜூன் கடைசியில் அவரைச் சந்தித்தேன். அப்போது அவரது எதிர் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். அதன் பிறகு தினமும் அவரைச் சந்திப்பேன். அங்குதான் நா. பார்த்தசாரதி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, க.நா.சுப்ரமண்யம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் பலரையும் பார்த்தேன். மேலும் சுந்தர ராமசாமி ஒரு நல்ல நூலகம் வைத்திருந்தார். அடியார்க்கு நல்லார் நூல்களை முதன்முதலில் பார்த்தது சுந்தர ராமசாமியின் வீட்டில்தான். அவர், நூல்களையெல்லாம் ஒரு பத்து பத்து புத்தமாக எடுத்துப் படிக்கச் சொன்னார். அப்படித்தான் பல புத்தகங்களைப் படித்தேன். இந்த அடிப்படையில்தான் க.நா.சு எழுத்துகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்யலாம் என முடிவுசெய்தேன்.

ஆனால் 'தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு'தான் உங்கள் முதல் ஆய்வுநூல் அல்லவா?

ஆம். இந்த க.நா.சு. எழுத்துகள் குறித்த ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சம்மதிக்கவில்லை. அதனால் அதைப் பாதியில் விட்டுவிட்டு வையாபுரிப்பிள்ளையை எடுத்து ஆய்வுசெய்தேன். ஆய்வு எல்லாம் முடிக்கும் தறுவாயில், "வையாபுரிப்பிள்ளை ஒரு தமிழ்த் துரோகி' என அந்த ஆய்வும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆய்வுக்காக எழுதியவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டு, சுந்தர ராமசாமி மூலமாக க்ரியா பதிப்பகத்திற்கு விற்பனை உரிமத்தைக் கொடுத்தேன். இந்த ஆய்வுக்கு நல்ல எதிர்வினைகள் வந்தன. திமுக தலைவர் கருணாநிதி இந்த நூல் குறித்து 'குங்குமம்' பத்திரிகையில், "ஒரு தமிழ்த் துரோகி குறித்து ஒரு தமிழ்ப் பேராசிரியரே எழுதிகிறாரே' என விமர்சித்திருந்தார். அதனால் க்ரியாவில் அத்தனை புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கு எப்போது வந்தீர்கள்?

1978-79 வாக்கில் அம்மாணை வடிவத்தில் இருந்த சில கதைகளை எளிய உரைநடை வடிவத்தில் மாற்றித் தொகுத்து வெளியிட்டேன். தீவிரமான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கட்டுரைகளை முதன்முதலில் ‘யாத்ரா’வில்தான் எழுதினேன். வெங்கட்சாமிநாதன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த யாத்ரா இதழ் தயாரிப்பில் சிறிது காலம் ஈடுபட்டேன். அவர் இதழுக்காக உள்ளடக்கங்களை அனுப்பிவிடுவார். நான் அதைத் தயாரித்து புத்தகமாகக் கொண்டு வந்துவிடுவேன். அந்த இதழில் வெங்கட்சாமிநாதன் என்னை ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொன்னார். அவரது ஊக்கத்தின் பேரில் இசக்கி அம்மான் வழிபாடு, கணியான் கூத்து பற்றிச் சில கட்டுரைகள் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பேராசிரியர் நா. வானமாமலை அதைப் பாராட்டிப் பேசினார். அதே காலகட்டத்தில் (1987) கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் ஆய்வுசெய்தேன். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் முதல் ஆய்வு.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை, உங்களது நூலில் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளராக முன்னிறுத்துகிறீர்கள்...

கவிமணியை ஒரு சாதாரண கவி மட்டும் அல்ல. அவர் முக்கியமான கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்பதை விளக்கி, 'கவிமணியின் இன்னொரு பக்கம்' என்னும் ஒரு நூலை 1990-ல் கொண்டு வந்தேன். Kerala Society Papers இதழில் 1910-1915 வாக்கில் கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை இதற்குச் சான்றாக முன்வைத்தேன்.

காந்தளூர்ச் சாலைப் போர் குறித்தும் கவிமணி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார் அல்லவா?

அது ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரை. அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைதான். அவை பின்னால் ஒரு தனிப் புத்தகமாகவே வந்தது. 1909-ல் Malabar Quarterly Review இதழில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்த ஆதாரங்களை எல்லாம் முன்பு காரைக்குடி அருகே கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா நூலகத்தில் சேகரித்தேன். ரோஜா முத்தையா செட்டியாரே இந்த ஆதாரங்களை எனக்கு வழங்கினார். அச்சில் வராத இன்னும் பலவிதமான கவிமணியின் ஆக்கங்கள் என்னிடம் உள்ளன.

நாட்டார் வழக்கற்றியல் ஆய்வுகள் எந்த விதத்தில் அவசியமானவை?

உதாரணமாக வரலாறு எழுதிய எல்லோரும் இந்தியச் சுதரந்திரப் போராட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். சுதந்திர போராட்டம் குறித்த சாமானியனின் மனநிலை என்ன என்பதை இதுவரை எழுதப்பட்ட வரலாறு பதிவுசெய்யவில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாட்டுகள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன. 'ஐ பை அரைக்கா பக்கா நெய், வெள்ளக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை' என்று ஒரு நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் விட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் காலகட்டதில் சாமானிய மக்களிடம் உருவான ஆங்கில ஆட்சிக்கு எதிரான மனநிலையை இந்தப் பாடல் சித்திரிக்கிறது. கட்டபொம்மன் கதைப் பாடலிலும், மருது சகோரதர்கள் கதைப் பாடலிலும் இதை நீங்கள் பார்க்க முடியும்.

கட்டபொம்மன் குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கின்றனா அல்லவா? அப்படியால் கதைப் பாடல்களை எப்படிச் சான்றாகக் கொள்வது?

ஆம். ஆனால் கதைப் பாடல்களைப் பொறுத்தவரை நீங்கள் நூற்றுக்கு நூறு யதார்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கதைப் பாடலில் அவன் பொய் சொல்லமாட்டேன். அவன் எதை உண்மை என நம்புகிறானோ அதைச் சொல்வன். கட்டபொம்மனைச் சுதந்திரப் போராட்ட வீரன் எனச் சித்திரித்தது எல்லாம் மா.பொ.சி.தான். கட்டபொம்மனுக்குக் கதைப் பாடல் கொடுத்த இடம் வேறு. வெள்ளைக்காரனை எதிர்க்க வேண்டிய சூழலில் எப்படி எதிர்த்தான், எப்படி வீரனாக இருந்தான் என்பதைத்தான் கதைப் பாடல் பதிவுசெய்தது. தேசிங்கு ராஜாவைப் பார்த்தோமானால், அவன் 90 பேரை வைத்துக்கொண்டு ஹைதராபாத் நிஜாமுடன் சண்டையிடப் போனான். போகாதே எனப் பலர் சொன்னாலும் கேட்காமல் போய் செத்துப்போனான். வரலாறு அவனைத் திமிர் பித்தவன் என்கிறது. ஆனால் கதைப் பாடல் அவனைக் கொண்டாடுகிறது. போரிட்டுச் சாகிறவனுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கதைப் பாடல் அவனுக்கு வழங்குகிறது.

நாட்டார் வழக்காற்றியலின் வகைகள் என்னென்ன?

வாய்மொழி மரபு மட்டுமல்ல. நாட்டார் வழக்காற்றியல் என்பது சமுத்திரம். நாட்டார் ஓவியங்கள் இருக்கின்றன. இதை வைத்து 17, 18-ம் நூற்றாண்டில் ஒரு கலாச்சாரத்தை நீங்கள் உருவாக்க முடியும். ஒரு பெண் அப்போது எப்படி ஆடை அணிந்திருந்தாள், சுற்றுப் புறம் எப்படி இருந்தன என்பதை இந்த ஓவியங்கள் மூலம் அறிய முடியும். நம் ஊர்களில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் மேல் பகுதியில் நாட்டார் ஓவியங்கள் இருந்தன. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பல கோயில்கள் இடிக்கப்பட்டு புதிதாகக் கான்கீரிட் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர்.

நாட்டார் இசைக் கருவிகள்..?

அவற்றில் பெரும்பாலனவற்றை நாம் இழந்துவிட்டோம். உதாரணமாக தோல்பாவைக் கூத்தில் இன்றைக்கு Casio வைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் ஒரு வெங்கலச் சாப்பாடு தட்டில் மஞ்சன மெழுகை ஊற்றி மேலே ஆம்பல் பூவின் தண்டை வைத்து ஊதி ஓசையை உண்டுபண்ணுவார்கள். இதுதான் ஸ்ருதிப் பெட்டி. அனுமன் கடன் தாண்டும்போது ஒரு வித்தியாசமான சத்தம் கொடுக்க பவுரா என்ற ஒரு இசைக் கருவி இருந்தது. இதுபோல பல நாட்டார் இசைக் கருவிகள் இருந்தன. ஆனால் இவை எதுவும் வரலாற்றில் பதிவுசெய்யப்படவில்லை. அண்மையில் நாட்டார் வழக்காற்றியல் படித்தவர்கள் வரலாறு எழுதவந்தபோதுதான் இவை பதிவுசெய்யப்படுகின்றன.


இந்தக் கலைகளின் அழிவைத் தடுக்க என்னசெய்ய வேண்டும்?

சில தனித்துவமான கலைகள் தனிப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஆடக்கூடியவை. கணியான் ஆட்டம் ஆடுபவர்களின் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அதனால் அடுத்த தலைமுறையினர் இந்தக் கலையில் இருந்துவிலகிவிடுவார்கள். அதனால் இதைத் தடுக்க முடியாது. ஆனால் பறையாட்டத்தை அந்தச் சமூகத்தினர் தங்களின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள். பல்வேறு நிகழ்வுகளில் இன்றைக்கும் பறையாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு சமூகமும் கலைகளைத் தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

நாட்டார் வழக்காற்றியல் எம்மாதிரியான வாழ்வியலைப் பதிவுசெய்கின்றன?

ஒரு பெண் தனது பல்வேறுவிதமான தேவைகளுக்காக மற்றோர் ஆணுடன் தொடர்பு வைத்திருப்பாள். அதை இவை எல்லாம் இயல்பாக நாட்டார் வழக்காற்றியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மாமியர் மருமகன் தொடர்பு குறித்த நாட்டார் வழக்காற்றியல்தான் பதிவுசெய்துள்ளது. மானுடவியலில் Taboo (விலக்கு) எனச் சொல்வோம். போன தலைமுறை வரை நம்மிடம் வரை மாமியார் - மருமகன் உறவில் விலக்கு இருக்கிறது. விலக்கு எங்கு இருக்கிறதோ அங்கு ஒரு முறை தவறிய உறவு இருந்துள்ளது என இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். இதற்கான சான்றை நாம் கொலைச் சிந்துகளில் பார்க்கலாம். ஆனால் இம்மாதிரியான வாழ்வியல் ஒரு கல்வெட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை.

கல்வெட்டு அடிப்படையிலான வரலாற்றுக்கு நம்பகத்தன்மை இல்லை என்கிறீர்களா?

நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை; ஆனால் அவை முழுமையான வரலாறு இல்லை என்கிறேன். இன்னும் சொல்லப்போனால் மொத்த இந்தியாவில் உள்ல கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கும் இன்னும் வெளியிடப்படவில்லை. கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் வரலாறு எழுதப்பட்டுள்ளது. 1950களுக்குப் பிறகு வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைத் திரும்ப எழுத வேண்டும் என்கிறீர்களா?

வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி ( Historical Reconstruction Theory) நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும்பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்.

என்ன மாதிரி விஷயங்கள்?

உதாரணமாக ரஜினிகாந்திற்கு ஏன் பாலபிஷேகம் பண்ணுகிறோம், குஷ்புவுக்கு ஏன் கோயில் கட்டுகிறோம்? இதற்கெல்லாம் காரணத்தை பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் அறிய முடியும். 

சுசீந்திரம், திருவட்டார் கோயில்களைப் பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதற்கு என்ன தேவை இருக்கிறது?

கோயில்ககளைப் பற்றிச் சொல்லப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை வைத்து ஜோதிடர்களும், குருக்களும் பணம் பறிக்கும் வேலைதான் நடந்து வருகிறது. அல்லது கோயிலுக்கு எதிராகப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒரு கோயிலில் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பல அம்சங்கள் இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுத வேண்டும் என நினைத்தேன். ஒரு சிற்பத்தில் ஒரு புராண அல்லது சமூகக் கதை இருக்கிறது. இவற்றையெல்லாம் என் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன்.​
சந்திப்பு: மண்குதிரை