வருடங்களுக்குப் பிறகு ஒரு கவிதை
காட்டாற்றுக் குட்டைகளில் 
நரிகள்   விழித்திருக்கும்
வேலிக் காடுகளைத் தாண்டி
நீரருந்த இறங்குகின்றன
மந்தையாடுகள்

ஆட்டிடையனும் இறங்குகிறான்
வண்டி மாடுகள் இறங்குகின்றன
கரிசல் பறவைகள் இறக்கை
நனைத்துப் படபடக்கின்றன
மண்வெட்டிகள்
கூடைகள்
சும்மாடுகள்
எல்லாம் இயக்கம் கொள்கின்றன
ஆறெங்கும் மணல்வெளிகளில்
பூத்து எழுகின்றன ஊற்றுகள் 

பிளாஸ்டிக் குடங்களும்
தவலைப் பானைகளும்
இறங்குகின்றன
மிதிவண்டிகளுடன் ஆண்கள்
பழக்கப் பேச்சுகளுடன்  பெண்கள்
இறங்குகிறார்கள்

கடைசியாக இறங்கிய
நீரள்ளும் அகப்பைகளில்
மிதந்து மிதந்து வருகின்றன
உனது நீர்க் கண்கள்