கூடங்குளம் : காத்திருக்கும் அபாயம்


அணு உலை வெடித்துக் கண்ணுக்குப் புலப்படாத கதிர்கள் காற்றிலேறி வருகின்றன. அபாய ஒலியைக் கேட்ட பெரும் மக்கள்திரள் வெளியேறிக்கொண்டிருக்கிறது. கூட்டத்தினிடையே தத்தளிக்கும் குடும்பத்தினருகே காட்சி மாறுகிறது. அதன் தலைவன் புகையாக வடிவமடைந்து வெளியேறும் அக்கதிர்களைக் காண்கிறான். அதனிடமிருந்து தன் குழந்தைகளைக் காப்பதற்காக மேலாடையைக் களைந்து அக்கதிர்களை அகற்ற முயன்று இயலாமையில் திணறித் தோற்றுக்கொண்டிருக்கிறான். “அணுமின் நிலையம் பாதுகாப்பானதென்று சொன்னவர்கள் தூக்கிலிடப்படவில்லை என்றால் அவர்கள் ஒவ்வொருவரையும் நானே கொல்வேன்’’ எனத் தன் குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவியின் குரல் ஒலிக்கும் அகிரா குரசோவாவின் புகழ்பெற்ற திரைப்படமான ட்ரீம்ஸ்இன் காட்சியை இச்சூழலோடு ஒப்பிட்டுத் தெளிவு பெறலாம். இப்படத்தைக் குறிப்பிட்டு இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் தெரிவித்து மேடையிறங்குகிறார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் ஜி. எஸ். தயாளன். இன்னும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தினமும் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனித உரிமைப் போராளி மேதா பட்கர் நம்பிக்கையளித்துச் சென்றிருக்கிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் தொல். திருமாவளவன் போன்றோர் நேரடியாகச் சென்று உற்சாகமளித்திருக்கிறார்கள். மத்திய அரசின் சார்பாக அமைச்சர் நாராயணசாமியும் தமிழக அமைச்சர்கள் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தென்மாவட்டம் வந்த முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் தான் மக்களின் பக்கம் இருப்பதாக உறுதி தந்திருக்கிறார். பாமகவும் இப் போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கிறது. சூழலியல் ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரின் தார்மீக ஆதரவும் இந்த முன்னெடுப்பை இன்னும் தீவிரமடையச் செய்திருக்கிறது.

சுப. உதயகுமார் போன்ற சூழலியல் ஆர்வலர்களின் தலைமையில், மிகச் சிலரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் இன்று இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு குடையின் கீழ் கூடுவதான இப்பெரும் எழுச்சி உலகமயமாக்கத்தால் மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் நம் சமூகச் சூழலில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தின் தொடக்கம்.

1988இல் அன்றைய சோவியத் யூனியன் அதிபர் மிகையில் கார்ப்பசேவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில் கூடன்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு இரண்டு வருடங்கள் முன்புதான் சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக இருந்த உக்ரைனில் செர்னோபில் என்னுமிடத்தில் அமைந்திருந்த RBMK தொழில்நுட்பம்கொண்ட அணு உலை விபத்துக்குள்ளானது. அது வரை நிகழ்ந்த விபத்துகளில் இவ் விபத்தே மிக மோசமான ஒன்றாகக் கருத்தப்பட்டது. கதிர் வீச்சுகளின் சீற்றம் உக்ரைனை மட்டுமின்றி அண்டை ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரரீதியாகவும் ரஷ்யா மோசமான பின்னடைவை எதிர்கொண்டது. ரஷ்ய விளைபொருள்களுக்கான இறக்குமதியைப் பெரும்பாலான நாடுகள் தடைசெய்தன. அதனால் ரஷ்யா தனது அடுத்த அணுமின் திட்டத்தைக் கைவிடும் நிலையிலிருந்தது. இந்தப் பின்ணனியில்தான் அன்றைக்கு ரஷ்யாவின் நட்பாக இருந்த இந்தியா இவ்வொப் பந்தத்திற்கு இசைந்ததெனச் சொல்லப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டத்திலிருந்து இதற்கான எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசு அதைப் பொருட்படுத்தவே இல்லை. பிறகு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. ராஜீவ் கொலைசெய்யப்பட்டார். இவை மட்டுமின்றி அமெரிக்காவின் ஆதரவின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு 1997இல் புதுப்பிக்கப்பட்டது. 2000இல் இத்திட்டத்தின் இறுதி வடிவம் வரையறுக்கப்பட்டுத் திட்ட மதிப்பீடு மூன்றரைக் கோடி அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டது.

கூடன்குளம் கட்டடப் பணிகள் தொடங்கிய காலத்தில்தான் எதிர்ப்புப் போராட்டம் சற்றுத் தீவிரமடைந்தது. உலக அளவிலான சூழலியல் ஆர்வலர்கள் பலர் கூடன்குளத்தில் முகாமிட்டு அணு உலையின் பாதக அம்சங்கள் குறித்துப் பேசி அம்மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்க முயன்றிருக்கிறார்கள். அதே வேளையில் அரசும் அப்பகுதி மக்களைக்கொண்டே குழுக்கள் அமைத்து இத்திட்டத்தால் அப் பகுதியினர் அடைக்கூடிய நன்மைகள் குறித்து வாக்குறுதியை அளித்திருக்கிறது. அரசு சொன்னதுபோல அப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அணுமின் நிலையம் அமைவதால் அங்கே புதிய தொழில்களுக்கு வாய்ப்பு உருவாகும்; வர்த்தகமும் வளர்ச்சிபெறும் என அம்மக்கள் நம்பத் தொடங்கினர். நில மதிப்பும் அதிகரித்தது. பனை, மீன்பிடித்தல், சிறு வியாபாரம் ஆகியவை தவிர வேறு மாற்றுத் தொழில்களற்ற அம்மக்கள் எழுந்து வந்துகொண்டிருந்த இந்த அணு உலைகளைத் தங்கள் வாழ்வை மீட்டெடுக்க வந்த புதிய கடவுளர் எனக் கற்பிதம் கொண்டனர்.

முதற்கட்டமாக அணு உலை அமைக்கும் கட்டடப் பணிகளுக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வட இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். உணவு, உறைவிடம் போன்ற அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சுற்றியிருந்த சிற்றூர்களையே சார்ந்திருக்க வேண்டியிருந்ததால் அம்மக்களின் நம்பிக்கைக்கேற்றார்போல் அவர்களின் அன்றாட வருவாய் அதிகரித்தது. இச் சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட எந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அவர்கள் உள்வாங்கவில்லை. அவை யாவும் மக்கள் ஆதரவில்லாத தெருமுனைப் பிரச்சாரங்களாகவே இருந்தன. மக்கள் அவற்றை வேடிக்கை பார்த்தார்களன்றி அவற்றில் தங்கள் பங்கு பற்றிச் சிந்திக்கவே இல்லை. தொடக்க காலத்தில் இப்பிரச்சாரம் தன்னலம் சார்ந்த உத்தியாகவே இருந்திருக் கிறது. அதன் மூலம் திடீர் செல்வந் தர்களானவர் நிறையப் பேர் என்னும் ஆதாரமில்லாத தகவல் ஒன்று இப் பகுதியில் உலவுகிறது. இத்தகவலும் அவர்களது அவநம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அணுமின் திட்டத்திற்கு எதிராக உண்மையாகவே குரலெழுப்புபவர்கள்மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் உண்டு என்பது வருத்தமளிக்கக் கூடியது.

1989இல் தூத்துக்குடியில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைமையில் திரண்ட பெரும் மக்கள்திரள் இத் திட்டத்தைக் கைவிடக்கோரித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிறகு மீனவ அமைப்புகள் சில தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தியிருந்திருக்கின்றன. அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் ஒரு முதலாளித்துவ அரசாகச் சமரசங்களை மட்டுமே மேற்கொள்ள முயன்றிருக்கின்றன. இன்றைக்கும் அவர்களுக்கு மக்களின் நலன்மீது எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது தவிர வேறு எந்த அரசியல் தலைவர்களின் ஆதரவும் அன்றைக்கு இப்போராட்டத்திற்குக் கிடைக்கவில்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளும் இவ்விஷயத்தில் மௌனமே சாதித்திருக்கிறார்கள். சோவியத் யூனியனின் திட்டம் என்பதுதான் அதன் காரணமென்றால் நாம் இந்த இந்திய இடதுசாரிச் சித்தாந்தத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

அணுமின் நிலையப் பாதுகாப்பிற்காகவும் கட்டுமானப் பணிகளுக்காகவும் கூடன்குளத்தில் சிறிய துறைமுகமொன்று 2004இல் நிறுவப்பட்டது. முதற்கட்டமாக VVER 1000 அணு உலைகள் இரண்டை நிறுவும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி இத் திட்டம் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரண்டு அணு உலைகளில் ஒன்றை டிசம்பர் 2009இலும் மற்றொன்றை மார்ச் 2010இலும் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தள்ளிவைக்கப்பட்டு ஒன்று 2011இன் இறுதியிலும் மற்றொன்று 2012இன் தொடக்கத்திலும் செயல்படத் தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் 2008இல் இன்னும் நான்கு அணுமின் உலைகள் நிறுவுவதற்கும் இந்திய அணுமின் சக்திக் கழகமும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. செயல்பட ஆயத்தமாகவிருக்கும் இவ்விரண்டு அணு உலைகளும் இந்தியாவில் இதுவரை நிறுவப்பட்டுள்ள அணு உலைகளில் அதிக மின் உற்பத்தி சக்தி (1000விகீ) கொண்டவை. நிறுவப்பட உள்ள நான்கு உலைகளும் அவற்றைவிட 200MW அதிக உற்பத்தித் திறன்கொண்டவை. உதாரணமாகக் கல்பாக்கத்தில் கனடா தொழில் நுட்பத்துடன் செயல்பட்டுவரும் PHWR அணு உலைகள் இரண்டும் 220MW உற்பத்தித் திறன் கொண்டவைதாம். அங்கே நிறுவும் பணியிலிருக்கும் மற்றொன்றின் உற்பத்தித் திறன் 500MW தான்.

கூடன்குளம் அணுமின் நிலைய உற்பத்தி மூலம் நாட்டின் மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தத் தீர்வு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் அணு மின் நிலையத்திற்கு எதிரான பிரச்சாரம் மக்கள் போராட்டமாக வலுப்பெற்றிருக்கிறது. இதற்கான முதற்காரணம் புகுஷிமா அணு உலை விபத்து. வளர்ந்த நாடான ஜப்பானின் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட அணு உலைகள் பாதிப்புக்குள்ளானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுவரை பதிவானதிலேயே பெரும் வீச்சு கொண்ட சுனாமிப் பேரலையால் புகுஷிமா மின் நிலையத்தின் உலைகளைக் குளிர்விக்கும் எந்திரப் பகுதி பாதிப்படைந்தது. அணுக்கதிர் கசிந்து நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்தது. இன்றும் அதை அகற்ற ஜப்பான் அரசு போராடிக்கொண்டிருக்கிறது. நம்பகமிக்க ஜப்பான் அரசே கையறுநிலையில் அதன் மக்களிடமே உண்மையான பாதிப்பை மறைக்க முயன்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பின் புள்ளி விவரங்கள் அறிவித்ததைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என்பதே அவற்றின் ஊகம்.

அணு உலைகளைக் குளிர்விக்கவும் அதன் நீர்மக் கழிவை வெளியேற்றவும் உலைகள் கடற்பகுதியில் அல்லது வற்றாத ஜீவநதிக்கருகில் அமைவது அவசியமாகிறது. புகுஷிமா விபத்திற்குப் பிறகு ஜப்பான், இந்தியா போன்ற சுனாமி ஆபத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அணு உலைகளை நிறுவுவதென்பது அபாயகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் கூடன்குளம் பிரச்சினையையும் அணுக வேண்டும். அணுமின் திட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தங்கள் முன்னெடுப்பிற்கு ஆதரவான சான்றாக இந்த விபத்தையும் சுனாமி பாதிக்கக்கூடிய வாய்ப்பையும் மக்களிடம் கொண்டுசென்றனர். மேலும் இயல்பிலேயே அரசின் மீது நம்பிக்கை இல்லாத நம் மக்களின் மனநிலையும் இதற்குச் சாதகமாக அமைந்தது.

இதற்கு மற்றொரு காரணம் கூடன்குளத்தில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி. இந்தியாவிலுள்ள அணுமின் நிலையம் எல்லாவற்றிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வொத்திகை நிகழ்ச்சிகள் அங்குள்ள மக்களுக்கு இயல்பான ஒன்று. கூடன்குளத்திலும் அந்நிகழ்ச்சிகளை முறைப்படுத்த அணுமின் நிலைய அதிகாரிகள் மக்களைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்திகை குறித்து விளக்கமளித்திருக்கிறார்கள். ஓர் அபாய ஒலி அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு நகர்த்தப்பட்டுச் சில மணி நேரம் கழித்து அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்ப வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒத்திகைகளை இதுவரை சந்தித்திராத அம்மக்களுக்கு இது பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆபத்து நம் அருகே வந்துகொண்டிருப்பதன் சமிக்ஞையாக இதை உணர்ந்த அவர்கள் இப்போராட்டத்தில் தீவிரத்துடன் பங்குகொள்ளத் தொடங்கிவிட்டனர். மேலும் உலையின் நீர்மக் கழிவைக் கடலில் கலப்பதால் உருவாகும் மீன்வளப் பாதிப்பு, ஒப்பந்த நிறுவனங்களின் தரமின்மை இவை போன்று சொல்லப்படும் மற்ற காரணங்களும் இப்போராட்டத்திற்கு வலுசேர்த்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான எவ்வித விபத்தும் நிகழாமல் இந்தியாவில் பல அணு உலைகள் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அணு உலைகளின் நீர்ம, வாயுக் கழிவுகள் உலக அணு சக்திக் கழகத்தின் முறைப்படி சேதம் விளைவிக்கக்கூடிய கூறுகளைக் களைந்து தினந்தோறும் வெளியேற்றிக்கொண்டிருந்தாலும் அதனால் பெரும் பாதிப்பு இதுவரை எதுவும் நிகழவில்லை. இதன் திடக் கழிவு பற்றி இங்கே உலவிக்கொண்டிருக்கும் தகவல் வெறும் வதந்திதான். ஓர் அணுமின் நிலையத்தின் திடக் கழிவை அதன் ஆயுட்காலத்தில் சில முறைகள்தாம் - இருமுறையோ மும்முறையோதான் - வெளியேற்றுவார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மின்னாற்றல் மிக அவசியம். அதற்கு அணுமின் திட்டமே சிறந்த வழி. மேலும் இந்த நவீன அறிவியல் என்பதே இயற்கைக்கு எதிரானதுதான். ஆனால் நாம் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டோம். அதன் துணையின்றி இனி எதுவும் சாத்தியமல்ல எனும்போது நாம் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அணு மின் திட்டம் தவிர்த்த மற்ற திட்டங்களும் இயற்கைக்கு எதிரானவைதாம். சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடியவையும் பக்க விளைவுகளுடையவையும்தாம். மேலும் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் சொல்வது போலக் கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள உலைகள் செர்னோபில் விபத்திற்குப் பிறகு ரஷ்யாவால் கைவிடப்பட்ட அணு உலைகள் அல்ல. அது RBMK தொழில்நுட்பம் கொண்டது. இது VVER தொழில்நுட்பம் கொண்டது. இவை எல்லாம் திட்ட ஆதரவாளர்களின் கருத்துகள்.

ஆனால் குளிர்விக்கும் முறையில் மட்டும்தான் சிறு வேறுபாடு உள்ளது மற்றபடி தொழில்நுட்பம் அதேதான் என்பது அதன் எதிர்ப்பாளர்களின் கருத்து.

அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரிடம் இதை எதிர்ப்பதற்கான திடமான காரணம் ஒன்று இருக்கிறது. அது அணுமின் நிலையங்களின் அணு ஆயுத உற்பத்தி. இதை யாரும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக 1998இல் இந்தியா நிகழ்த்திய பொக்ரான் சோனைக்கான அணு ஆயுதம் கல்பாக்கத்தில்தான் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதை வதந்தி என முற்றிலும் மறுக்க முடியாது. எனவே இத்திட்ட எதிர்ப்பைப் பழமைச் சித்தாந்தத்தின் தொடர்ச்சியெனப் பொதுச் சமூகப் பார்வையிலிருந்து அணுகுவது முறையற்றது. காலதாமதமானாலும் மக்களின் இவ்விழிப்புணர்வை வரவேற்க வேண்டுமே தவிர விமர்சித்துப் புறந் தள்ளுவது ஆரோக்கியமானதல்ல.

கூடன்குளம் அணுமின் நிலையம் செப்டம்பர் 28ஆம் தேதியில் செயலாற்றத் தொடங்குமென அதன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அறிவித்தார். அதைத் தொடர்ந்து எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி செப்டம்பர் 11இல் நூற்றுக்கும் மேற்பட்டோர், அங்கே திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர் போன்ற ஒருசாராரின் பங்களிப்புடன் தொடங்கிப் பின்னர் எல்லாத் தரப்பு மக்களும் இவ் வெதிர்ப்பு நிலைப் போராட்டத்திற்குள் ஒருங்கிணைந்தனர். கிறித்துவ அமைப்புகளும் இப்பகுதியில் பெரும்பான்மைச் சமூகத்தின் குருவான அய்யா வைகுண்டரின் வழிவந்த பாலபிரஜாபதியும் இதற்கு ஆதரவளித்ததோடு இப்போராட்டப் பந்தலுக்கு வந்து அவர்களை ஊக்குவித்ததும் இந்த ஒன்றிணைவிற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஐந்துநாள் தொடர் உண்ணா விரதத்திற்குப் பிறகுதான் தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு அமைச்சர்கள் பி. செந்தூர்பாண்டியன், சி. த. செல்லப்பாண்டியன், எஸ். பி. சண்முகநாதன் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை இடிந்த கரைக்கு அனுப்பிவைத்தது. ராதாபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டப் பிரநிதிகளுக்கும் இக் குழுவுக்கும் இடையிலான இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றைத் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்ற வேண்டுமென்பது போராட்டப் பிரதிநிதிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு மாற்றாக, மக்களின் இக்குழப்பங்களைத் தீர்க்கும்வரை அணுமின் திட்டப் பணிகளை நிறுத்துவைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் சாதுர்யமான தீர்மானம் ஒன்றைத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்குப் பிறகு உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்பிரச்சினை பற்றிய முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்திற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சர் நாராயணசாமியை இடிந்தகரைக்கு அனுப்பிவைத்தார். ராதாபுரத்தில் தன்னைச் சந்திக்க வருமாறு நாராயணசாமி விடுத்த வேண்டுகோளைப் போராட்டக் குழு நிராகரித்து அவரை இடிந்தகரை போராட்டப் பந்தலுக்கு வரச் சொல்லி போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. களத்திற்கே சென்று திடமிக்க அம்மக்களைச் சந்தித்த அவர் தோல்வியுடன்தான் திரும்பியிருக்கிறார்.

பிரதமரைச் சந்திப்பதற்காகத் தமிழக அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள்மீதும் போராட்டக் குழுவினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. தொடக்கத்திலிருந்தே முன்னெடுப்பிற்குப் பெரும் ஆதரவு தெரிவித்து வரும் தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனின் பெயர் நீக்கப்பட்டு போராட்ட முன்னெடுப்பைக் கண்டுகொள்ளாமலிருக்கும் நடிகர் சரத்குமார் பெயர் சேர்க்கப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாமக போன்ற கட்சிகளுக்கு இடமளிக்காமல் எதிர்நிலை கொண்டுள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்த்திருப்பது தங்கள் போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசுக்கு அறிவுருத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு தமிழக அரசின் ஆலோசனையின்படி அக்டோபர் ஏழாம் தேதி பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்தின் முஸ்தீபுகள் எல்லாம் சமரச முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன. பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதை அடுத்து அறிவித்தபடி அக்டோபர் ஒன்பதாம் தேதி இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். எவ்வித இடையூறுமின்றி இன்னும் சொன்னால் முன்பைவிடத் தீவிரமாக மக்கள் அதில் ஈடுபட்டனர். இச்சமயத்தில் அரசியல் கட்சிகளும் அரசும் உள்ளாட்சித் தேர்தலில் கவனம்கொண்டிருந்ததால் இப்பிரச்சினை குறித்து தீர்க்கமான முடிவை எடுக்கத் துணியவில்லை. மக்கள் தங்கள் அடுத்த போராட்ட வடிவமான முற்றுகைப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய நான்காம் நாள் கிழக்குக் கடற்கரைச் சாலையை மறித்துக் கூடன்குளம் பணிக்குச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பினர். முற்றுகை தீவிரமடைந்ததை அடுத்து அணுமின் நிலையத்தின் முக்கியப் பொறியாளர்கள், விஞ் ஞானிகள் ஆகிய யாரும் பணிக்கு வர முடியாதபடி பதற்றம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டத்திற்கு எதிராக எந்நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த காவல் துறையினரின் வன்முறையும் உள்ளாட்சித் தேர்தலும்தான் இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு எல்லோரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கேதுவாகப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக சுப. உதயகுமார் தலைமையில் கூடிய ஆலோசனைக் குழு முடிவெடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கான ஊடகப் பங்களிப்பு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது ஜெயலலிதாவின் சூளுரைகள் தவிர்த்து இம்மக்கள் போராட்டம் பற்றி விரிவான செய்திகள் எவற்றிலும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் செய்தித்தாள்களில் அது மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்படுகிறது. இன்னும் சில ஊட கங்கள் முரணான தகவல்களுடன் இதைச் சிறுமைப்படுத்துகின்றன. இப்போராட்டம்மீதான அரசியல்வாதிகளின் கவனமும் மேலோட்டமாகவே உள்ளது. நாராயணசாமி இம்முற்றுகைப் போராட்டத்தை வன்முறை என எச்சரிக்கிறார். கிழக்கிந்திய மாநிலங்களில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் செயலுக்குப் பெயர்தான் வன்முறை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரின் நிலைப்பாடும் இவ்விஷயத்தில் ஒன்றுதான். ஜெயலலிதா மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென ஓர் உயர்ந்த தொனியில் மத்திய அரசை எச்சரிக்கிறார். கருணாநிதி அதையே தாழ்ந்த குரலில் சொல்லிவருகிறார். தா. பாண்டியனும் தங்கபாலுவும் இதையேதான் வேறு குரல்களில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போராட்டம் மகத்தான மக்கள் போராட்டமாக மாறியிருப்பதே நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதுவே அதன் வெற்றியை உறுதிசெய்வதாகவும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான எளிய மக்கள் அன்றாடப் பணிகளை விட்டு விட்டுத் தங்கள் சிறுசேமிப்பைக் கொண்டு தங்களுக்காகத் தாங்களே போராடிவருகிறார்கள். இதற்குப் பின்னால் எந்த ஆடம்பர அரசியலும் நிறுவனங்களின் முதலீடும் இல்லை. ஊழல் ஒன்று மட்டுமே நாட்டின் தேசியப் பிரச்சினை அல்ல. இம்மாதிரியான போராட்டங்களில் நாடு தழுவிய ஒத்துழைப்பைத் தர எல்லாத் தரப்பினரும் முன்வருவது போராட்டத்திற்கு இன்னும் வலு சேர்க்கும். அடையாள அரசியலை முன்னிறுத்திப் போராடும் இளைஞர் அமைப்புகள் இப்போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போராட்டத்தை அப்பகுதிக்கு மட்டுமானதாகச் சுருக்கிவிட முடியாது. அரசியல்வாதிகளை மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரையும் இதற்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும்படியான முறைகளைப் போராட்டக்குழு முன்னெடுக்க வேண்டும்.

அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகையே திரும்பத் திரும்பப் பெரிதாகச் சொல்லப்பட்டுவருகிறது. தொடக்கத்திலிருந்து சூழலியல் ஆர்வலர்கள் அணுமின் திட்டத்தை எதிர்த்துக்கொண்டிருந்தாலும் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அது தீவிரமடைந்து பல நாடுகள் தங்கள் புதிய அணுமின் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகளை வேறு மின் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தால் கொஞ்சம் இழப்பை ஈடுசெய்யலாம். அரசியல் தலைவர் ஒருவரின் தனிப்பட்ட நலனுக்காக நாடு ஓர் இடைத்தேர்தலைச் சந்தித்து, பல்லாயிரம் கோடி நஷ்டமாகியிருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் எதிர்பாராத இழப்புகளும் நேர்கின்றன. இது போன்ற தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக அரசு இதை எடுத்துக்கொண்டு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். மேலும் மக்களுக்கான திட்டம் என்பது மக்கள் ஆதரவின்றிச் சாத்தியமல்ல.

யுரேனியம் நிரப்பப்பட்ட உலை ஒன்று செயலாற்ற ஆயத்தமாகியிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் வந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு 18ஆம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. முற்றுகைப் போராட்டத்திற்கஞ்சி தங்கள் பாதுகாப்பிற்காக மத்திய விரைவுப் படையினரை அனுப்புமாறு அணுமின் நிலைய அதிகாரிகள் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. இக்கோரிக்கை ஏற்கப்படுவதும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக அரசின் நிலைப்பாடும் தாம் இப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீவிரத்தைத் தீர்மானிக்கும். ஆனால் காணும் எவர் ஒருவரையும் கிளர்ந்தெழச் செய்யும் உணர்ச்சி மிக்க இம்மக்கள் போராட்டத்தின் அலைகள் எளிதில் ஓய்ந்துவிடக் கூடியவையுமல்ல.

(2011 நவம்பரில் காலச்சுவடு இதழுக்காக எழுதிய  கட்டுரை)