Monday, June 9, 2014

சிவப்பும் வெண்மையும் ஒரே வண்ணம்தான் - கிம் கி டுக் நேர்காணல்உங்களுடைய ஸ்ப்ரிங் சம்மர்… படத்துடன் ஒப்பிடும்போது சமீபத்திய படமான மோயிபஸ்ஸில் வெளிப்படும் வன்முறை தனித்துவமானதாக இருக்கிறது...

என் பார்வையில் இரண்டும் ஒன்று. இரண்டிலுமே நான் சொல்ல விரும்புவது இந்த வாழ்க்கை மிக அழகானது என்பதைத்தான். முதல் படத்தில் நீங்கள் பார்ப்பது அழகை. இரண்டாவது படத்தில் பார்ப்பது தனித்துவமான வன்முறையை. என்னளவில் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே அழகானவை. ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்இல் மறுபடியும் ஒரு ஸ்ப்ரிங் வருகிறது. இதில் வாழ்க்கையின் சுழற்சியைச் சொல்கிறேன். மேலும் என் படங்களில் உடலின் விஞ்ஞானத்தை விவரிக்க விரும்புகிறேன்.

உடலின் விஞ்ஞானம் என்றால் என்ன?நான் ஒரு குடும்ப அமைப்பை உடலின் அமைப்பின் வழியாக, அதன் இயக்கத்தின் வழியாகச் சொல்கிறேன். எளிமையாகச் சொன்னால் இவையெல்லாவற்றையும் நான் பிறப்புறுப்பின் வழியாகச் சித்தரிக்க விரும்புகிறேன்.

நார்சிச மனநிலை ஒரு கலைக்கு முக்கியமானதாகக் கருதுகிறீர்களா?

ஆம். ஓர் இயக்குனராக அது எனக்கு முக்கியமானதுதான். மேலும் நார்சிசம் கலைகளின், வாழ்க்கையின் ஓர் அம்சமாகவும் இருக்கிறது.

ஸ்ப்ரிங்…இல் தொடங்கி மோயிபஸ் வரைக்குமான உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்?ஸ்ப்ரிங் லாங் ஷாட்டில் எடுத்த படம். அதில் நீங்கள் உலகத்தின் அழகைப் பார்க்க முடியும். லாங் ஷாட்டில் பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள் வழியாக வாழ்க்கையின் அழகு வெளிப்படுவது இயல்பானது. என் அடுத்த அடுத்த படங்களில் நான் குளோஸ் ஷாட்டிற்குப் போனேன். மனித வாழ்வை மிக நெருக்கமாகப் படம் பிடித்தேன். அவ்வளவுதான். அதன் இயல்பைப் போல அது வன்முறையாக இருக்கிறது.

உங்கள் படங்களில் புத்த தத்துவம் இருக்கிறது. நீங்களோ வன்முறையையும் படம் பிடிக்கிறீர்கள்.

வன்முறையும் புத்தமும் பார்ப்பதற்கு வெவ்வேறாகத் தெரிகிறது. ஆனால் நான் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். நல்லதைப் போலத்தான் கெட்டதும் இருக்கிறது. சிவப்பும், வெண்மையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரே வண்ணம்தான்.

உங்கள் படங்கள் வன்முறைகளைத் தத்ரூபமாகச் சொல்கின்றன. ஆனால் தீர்வுகள் சொல்லப்படுவதில்லையே?

குடும்ப அமைப்பில் உருவாகும் வன்முறைகளைச் சொல்கிறேன். அந்த வன்முறைகள் உருவாகும் பின்னணியையும் சொல்கிறேன். பலருக்கு வன்முறைகள் உருவாகுவதற்கான காரணங்கள் தெரிவதில்லை. அதை என் படங்கள் சொல்கின்றன. அதன் மூலம் கேள்விகள் எழும்புகின்றன இல்லையா? இவையே தீர்வு காணக் கூடிய வழிகள்.

புத்த தத்துவத்தின் நிர்வாணாவை அடையும் வழியாக வன்முறையைப் பார்க்கிறீர்களா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் பொருத்தவரை வாழ்க்கை என்பது வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது. துக்கத்திற்கும் இன்பத்திற்கும் இடையிலானது. அரி ரங் அரி ரங் பாடலைப் போல ஏற்ற இறக்கங்களுக்கிடையிலானது.

உங்களைப் பாதித்த சினிமா ஆளுமை யார்?

அப்படி யாரும் இல்லை. என்னைப் பாதித்த ஆளுமை என்றால் நான் என் அப்பாவைச் சொல்வேன்.

(2013ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்படவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள கிம் கி டுக் வந்தபோது தி இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட மிகச் சுருக்கமான நேர்காணல்)

Saturday, June 7, 2014

பசுமை வாழ்க்கை தரும் புதிய தரிசனம்

‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றொரு பிரபல பைபிள் வசனம் உண்டு. அதன்படி பாவம் செய்தவர்கள் எல்லாம் இறந்துபோவார்கள் எனக் கொண்டால், புண்ணியம் செய்தவர்கள் மட்டும் வாழ்ந்துகொண்டே இருக்கப் போகிறார்களா? அவர்களும் ஒரு நாள் இறந்துதான்போவார்கள். அப்படியானால் இந்த பைபிள் வசனம் பொய்யானதா? இந்த வசனத்தின் உண்மைப் பொருள்தான் என்ன?

பைபிள் வசனம் குறிப்பிடுவது ஒட்டுமொத்த மனித சமுதாயம் செய்த பாவத்தைத்தான். அதாவது இயற்கை என்னும் அற்புதத்தைச் சிதைத்துக்கொண்டிருப்பதே, மனிதச் சமுதாயம் செய்த மிகப் பெரிய பாவம். அந்தப் பாவம் பெருகப் பெருக, ஒரு நாள் அதற்கான சம்பளத்தை நாம் பெறுவோம் என்கிறார் பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்.

பேராசிரியர் ஜான்சி ஜேக்கப், 1936ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்ற இவர், பல ஆண்டுகளாகக் கேரளத்தில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக ‘இயற்கையுடன் இருத்தல்’ என்னும் முகாமை நடத்தினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தி, 2008ஆம் ஆண்டு தான் இறக்கும் காலம் வரை செயல்பட்டு வந்தவர். தன் பேச்சின் மூலம் இயற்கையை ஓர் ஆன்மிக உணர்வாக மாற்றும் இவரது கருத்தில், பொதுவுடைமைத் தத்துவத்தின் சாரமும் உள்ளது.

நாம் நலமாக இருக்கிறோம் என்று சொல்கிறோம். இந்த ‘உடல்நலம்’ என்பது ஒரு மனநிலையே என்கிறார் ஜான்சி ஜேக்கப். ‘உடல்’ என்னும் ஸ்தூலமான ஒரு பொருளை ஒட்டியே இந்த மனநிலை அமைகிறது. இந்த உடல் என்பது நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று, மண், நீர் ஆகியவற்றால் ஆனது. உடலில் உள்ள நீரைப் பிரித்தால், அது ஒன்றுமில்லாமல் உருக்குலைந்துவிடும்.

அதே நேரம் நம் உடலுக்குள் இருக்கும் நீரை, ‘நம்முடைய நீர்’ எனச் சொந்தம் கொண்டாட முடியாது. அது பிரபஞ்சத்தின் ஓர் அம்சம். ஆக, உடலும் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாகிறது. முழுமையான பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் நம் உடல்.


ஆக, நமக்கென்று இங்கே தனியான வாழ்க்கை இல்லை. விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இல்லை. இவையெல்லாம் வாழும் இந்தப் பூமிக்கும் தனி வாழ்க்கை இல்லை. மனிதர்களும், விலங்குகளும், தாவரங்களும், பூமியும், கோள்களும், நட்சத்திரங்களும், பால் வெளி என அனைத்துமே பிரபஞ்சம் என்னும் முழுமையான பொருளின் பகுதிகள்தாம். பேராசிரியரின் இந்தக் கருத்து மிக முக்கியமானது; நாம் சிந்திக்க வேண்டியது.

ஆனால், மனிதர்களாகிய நாம் இந்தப் பிரபஞ்சத்தையே நமக்கான ஒன்றாக மாற்ற முயல்கிறோம். இதன் வளங்களை நமக்கானதாக மாற்றிக்கொள்கிறோம். விலங்குகளைக் கொன்று அழிக்கிறோம். மரங்களை வெட்டிச் சாய்க்கிறோம். பூமியைத் துளையிடுகிறோம். பால்வெளியில் உள்ள கோள்களில் எல்லாம், விண்கலங்களை அனுப்பிச் சோதனையிடுகிறோம். இயற்கையின் மிக இயல்பான அம்சத்தை நாம் வலிந்து திருகுகிறோம். பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, நாமே அதைச் சிதைப்பது வேதனைக்குரிய வேடிக்கைதான்.

நம் உணவு முறை குறித்துப் பேராசிரியர் சில புதிய கருத்துகளை முன்வைக்கிறார். இன்று நாம் நெல், கோதுமை போன்ற ஒரு சில தானியங்களுக்கு மட்டுமே நம் உடலைப் பழக்கப்படுத்தியிருக்கிறோம் என்கிறார். ஆனால், ஆதியில் நம் உணவு முறை இப்படி இருக்கவில்லை. நம் முன்னோர்கள் நூற்றுக்கணக்கான தானியங்களை உண்டார்கள். இலைகளை, பூக்களை, மொட்டுகளை, காய்களை, கனிகளை, கனிகளில் உள்ள பூச்சிகளையும் புழுக்களையும் உண்டிருக்கிறார்கள்.

சில காலத்துக்கு முன்பு வரை நமது உணவு முறை ஓரளவு குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத்தான் இருந்தது. ஆனால், பேராசிரியர் சொல்வதுபோல நுட்பமாகப் பார்த்தால், இந்த மாற்றம் ஒரு சுயநலத்தால் விளைந்தது. மனிதன் தனக்காக வளங்களைப் பதுக்கத் தொடங்கியபோதுதான் அது நடந்தது.

உணவு, உயிர்களின் அடிப்படைத் தேவை; உணவு அனைவருக்குமான தனிப்பட்ட உரிமை. ஒரு மரம் இருக்கிறது என்றால், அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதில் உள்ள கனிகளில் குரங்குகளுக்கு, பறவைகளுக்கு, அணில்களுக்கு, சிறு பூச்சிகளுக்கும் உரிமை உள்ளது. நாமும் எடுத்துச் சாப்பிடலாம். ஆனால், அதைப் பசிக்குச் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்யாமல், அதைப் பதுக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. நவீன விவசாய முறை கண்டுபிடிக்கப்பட்டதும் சிக்கலுக்கான முக்கியக் காரணம் என்கிறார் ஜான்சி ஜேக்கப்.

இந்த விவசாய முறையில் மனிதர்கள், அவரவர்களுக்கான உணவைத் தனித்தனியாகப் பயிரிட்டுக்கொண்டார்கள். பலமானவர்கள் உணவைச் சேமித்துக்கொண்டார்கள். அதனால் பலவீனமானவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு வந்தது. பலமானவர்கள் தங்கள் உணவைப் பாதுகாக்கக் காவலர்களை நியமித்தார்கள். உணவு கிடைக்காத சிலர், காவலைத் தாண்டி உணவைக் கைப்பற்றினர்.

திருட்டு என்ற ஒன்று வந்தது. திருட்டைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் கையில் வாள் கொடுக்கப்பட்டது. திருடர்களும் ஆயுதம் ஏந்த வேண்டிவந்தது. வாள், நவீன ரகத் துப்பாக்கியாக, பீரங்கியாக மாறியது. போர் வந்தது. ஆக, யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் மூல காரணம் வெறும் சுயநலம். இதுதான் இந்த இயற்கையை அழிக்கும் நவீன ஆயுதமாக மாறிவிட்டது.
இன்றைக்குள்ள ஒரு விவசாயி என்ன செய்கிறான்? தனக்கான நிலத்தில் ஒரு தானியத்தை விதைக்கிறான். அவை வளர்ந்து கதிராகின்றன. அது அவனது நிலம். அதற்கு எல்லைகள் இருக்கின்றன. அதற்குள் வரும் எலியைக் கொல்கிறான். மைனா வருகிறது, அதை விரட்டுகிறான்.

வெட்டுக்கிளிகளையும், சின்னச் சின்னப் பூச்சிகளையும் மருந்தடித்துக் கொல்கிறான். ஆனால், அந்த நிலம் தரிசாக இருந்தபோது யாருக்கும் சொந்தமானது அல்ல. இதனால் பறவைகளும் பூச்சிகளும் விலங்குகளும் குழம்புகின்றன.

இதற்கு என்ன தீர்வு? நாமெல்லாம் ஒரே சமூகமாக மாற வேண்டும் என்கிறார் பேராசிரியர். அதற்கென்று அவர், நம்மைக் கற்காலத்துக்குத் திரும்பிப் போகச் சொல்லவில்லை. எஸ்கிமோக்கள்போல ஒரு சமூகமாக வாழச் சொல்கிறார். எஸ்கிமோக்கள் எல்லோரும் இணைந்து தங்கள் சமூகத்துக்குத் தேவையான உணவை வேட்டையாடுகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைத்ததும் தங்கள் இடத்துக்குத் திரும்பி, அதைச் சரி பாதியாக வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்குப் பங்கு வைத்துக்கொள்கிறார்கள். இதுபோல வாழலாம் என்கிறார்.

முதலில் இதை மாற்றியமைக்கலாம். இயற்கை எல்லோருக்குமானது என்ற புரிதலை நாம் ஏற்க வேண்டும். இது சரிதான், ஆனால் இது எதுவும் இப்போதுள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று நீங்கள் கருதலாம். அதற்கு மாவோவின் கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர், “நெடும் பயணத்தைத் தொடங்கலாம். அது ஆயிரம் வருடப் பயணமாகக் கொள்ள வேண்டாம். ஐம்பது வருடப் பயணமாகக்கூட இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியும் களிப்பும் ஏற்படுகிறது என்பதை உணரும் போது, மற்றவர்களும் இதை நடைமுறைப்படுத்துவார்கள்."

 (பேராசிரியர் ஜான்சி. ஜேக்கப்பின் உரையாடல்களின் தொகுப்பு. தமிழில் எழுத்தாளர் யூமா வாசுகியால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. தொடர்புக்கு: புலம் வெளியீடு, சென்னை. தொலைபேசி: 94867 31840)