செல்வி கவிதைகள்: நிலத்தின் நினைவுகள் மீது பீரங்கி வண்டிகள்

மரபான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, புதுக்கவிதைச் செயல்பாடே ஒரு இயக்கமாகத் தமிழில் முன்னெடுக்கப்பட்டது. தனிமனித இருப்பு, சூழலின் அரசியல் என எந்த வகைப் பொருளையும் மறைமுகமாகச் சித்தரிப்பது ஒரு பாணியாகத் தமிழகத்தில் வலுப்பெற்றது. ஆனால், இலங்கையில் இதற்கு எதிராக வெளிப்படையாகச் சித்தரிப்பதே பெரும்போக்காக இருந்தது.

தமிழகத்திலும் அம்மாதிரியான கவிதைகள் எழுதப்பட்டன; அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மார்க்சிய இயக்கங்களின் பாதிப்பு, மொழிப் போராட்டம் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், இவை இலங்கையில் நடந்த இன விடுதலைப் போராட்டத்தைப் போல் காத்திரமானவையல்ல.

இலங்கையின் இன வெறுப்பு அவர்களின் இயல்பான வாழ்க்கையையே அச்சுறுத்தும் வகையில் சிதைத்துவிட்டது. இந்த அளவு தீவிரம் மிக்க சூழலைப் பிரதிபலிக்கும் மொழி தன்னளவில் வெளிப்படையாக ரெளத்திரமாகத்தான் வெளிப்படும். இந்தப் பின்னணியில்தான் இலங்கைக் கவிதைகளை அணுக வேண்டும். அப்படியான கவிதைகள் எழுதியவர்களில் கவிஞர் செல்வியும் ஒருவர்.

செல்வி, கவிஞர் சிவரமணியின் நெருங்கிய தோழி. இவர்கள் இருவரது கவிதைகளும் செல்வி-சிவரமணி கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிவரமணியைப் போலான எண்ணிக்கையில்தாம் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் கவிதைகளுக்குள் அன்றைய வட இலங்கையின் அரசியல் சூழலைப் பதிவுசெய்துள்ளார். சிவரமணியின் கவிதைகளைப் போல் செல்வியின் கவிதைகளும் வெளிப்படையானவை.

ஆனால், செல்வியின் கவிதையில் ரம்மியமான கிராமம் வருகிறது. அதுவும் நினைவில் பசுமையுடன் இருக்கும் ஒரு கிராமம். நிஜத்தில் சிதைந்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் வரப்போரம் சிறு பறவையைப் போல் அமர்ந்து ஒட்டுமொத்த இலங்கைப் போராட்டத்தையும் சித்தரிக்க அவர் முயல்கிறார்.

‘மீளாத பொழுதுகள்’ என்ற கவிதையில் ஒரு அழகான கிராமத்தை அவர் விவரிக்கிறார். சேரனின் ‘எனது நிலம், எனது நிலம்’ என்ற கூக்குரலைப் போல் இந்தக் கவிதையில் செல்வி தன் நிலத்தை விருப்பத்துடன் சொல்கிறார். சாதாரணமான காலைப் பொழுது அவர்களது கிராமத்தில் வசீகரிக்கும் காட்சியாக விரிகிறது. காகம் கரையும் ஓசையும் இனிமையான பாடலாக ஒலிக்கிறது. அந்தக் கிராமத்தின் தோட்ட வெளிகளில் தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவுகிறது.

இந்த இடத்தில் ‘எங்கும் அமைதி! எதிலும் இனிமை!’ எனச் சொல்கிறார். தேய்வழக்காகிவிட்ட இந்தச் சொற்களைத் தன் கவிதைக்குள் பிரயோகிப்பதன் மூலம் கவிதைக்குப் புது அர்த்தம் தருகிறார். துப்பாக்கிக் குண்டுகளின் முழுக்கம், ஹெலிகாப்டர்கள் பறக்கும் ஓசை, பூட்ஸ் கால்களின் அணிவகுப்பு, ராணுவ வாகனங்களின் இரைச்சல் என வட இலங்கையின் இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது இந்தச் சொற்பிரயோகத்தின் பிரயாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கிராமத்தின் இந்தக் காட்சிகள் சட்டென ஒருநாள் மாறிவிட்டன. பொழுது புலராக் கருமை வேளையில் வண்டிகள் தடதடத்து உறுமியபடி நுழைந்தன. வெளியே அதிர்ந்து நடுங்கின. அங்கே அவலக் குரல்கள் கேட்டன என்கிறார் செல்வி. அவை தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும் எனச் சொல்கிறார். இந்தப் பிரச்சினையையும் பெண்கள் பக்கம் நின்று பார்க்கிறார். ‘நேற்றுவரை அந்தக் காலைப்பொழுது அமைதியாக இருந்தது’ எனக் கவிதையை முடிக்கிறார். கடந்து சென்றுவிட்ட இறந்த காலத்தை செல்வி தனது கவிதைகள் வழியே கைகாட்டித் திரும்பத் திரும்ப அழைக்கிறார். அதற்கும் நிகழ்காலத்துக்குமான வேறுபாட்டைத் துயரம் மிக்கப் பாடலாகக் கவிதையாக்குகிறார்.

இலங்கைப் போராட்டத்தில் போராளி இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் செல்வி தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். ‘விடைபெற்ற நண்பனுக்கு’ என்ற கவிதையில் இனப் போராட்டத்துக்குச் சென்றுவிட்ட, முகவரி அறியாத பால்ய சிநேகிதனுக்கான மடலாக அது விரிகிறது. இந்தக் கவிதையிலும் அவரது நிலத்தின் தேமாவும் கொண்டைகட்டிய குரக்கன்களும் (சோளக் கதிர்) வருகின்றன. இவற்றினூடே போராளி இயக்கங்கள் மீதான தனது புகார்களை உவமையாகச் சொல்லியுள்ளார்.

செல்விக்கும் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை வன்முறையிலானவை அல்ல. அமைதியின் மூலம் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பியுள்ளார் என்பதை அவரது கவிதைகள் மூலம் அறிய முடிகிறது. அந்த முறைப்பாட்டில் அவருக்குச் சில தடைகள் இருந்தன என்பதையும் கவிதைக்குள் சொல்கிறார். ‘மானுட நேயம் நோக்கிய பாதை’யைக் கவிதைக்குள் அவர் சுட்டுகிறார். செல்வியும் சிவரமணியும் சில காலம் சென்னையில் இருந்துள்ளனர். தனது சென்னை அனுபவத்தை ஒரு வரியில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.

செல்வியின் கவிதைகளில் ஒரு கதைத் தன்மை உண்டு. அவை கவிதைக்கான திறப்பைத் தன்னகத்தே கொண்டவையல்ல. ஒரு கடிதத்தின் தொடக்கத்தைப் போலவே பெரும்பாலான கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. கவிதை எழுதுவதற்கான முன் பிரயத்தனங்கள், திணறல்கள் அற்ற மொழி அவருடையது.

தனது நெருக்கடியை, தனது நிலத்தின் அரசியல் சூழலைப் பகிர்வதே அதன் தொழில் என்பதில் அவர் தெளிவாக இருந்துள்ளார். அதே நேரம் தனது சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் தந்த வெளிப்பாட்டு மொழியையும் அவர் கவனத்துடன் பார்த்து உள்வாங்கிக்கொண்டுள்ளார். அந்த விதத்தில் சேரனின் தொடக்க காலக் கவிதைகளுடன் பொருத்தப்பாடுகள் கொண்டவையாகவும் செல்வியின் கவிதைகள் இருக்கின்றன.

செல்வியின் கவிதைகளில் நிலமும் காலமும் திரும்பத் திரும்ப அதன் அழகின் நினைவுகளுடன் படைக்கப்படுகின்றன. காலைப்பொழுதைப் போல அந்தியையும் அதன் அழகுடன் இன்னொரு கவிதையில் விவரிக்கிறார். அதிலும் குளம், குளத்தோரப் புல், மதகு, மதகினிடையே பாயும் நீர், வயல்வெளிகள், மாமரம், அதன் கிளையிலிருக்கும் சிறு பறவை, கூழா மரம், அதன் பசுமை என அந்தக் கிராமத்தின் காட்சிகளைத் திருத்தமாகச் சித்தரிக்கிறார்.

இந்தக் காட்சியும் இறந்த காலத்தின் நினைவுகள்தாம். நிகழ்காலத்தில் இந்தக் காட்சிகளின் மீது போர் நடந்துசெல்கிறது. ஆனால், இந்தப் போரின் பாதிப்புகளை மிஞ்சிய வன்முறையுடன் சொல்ல செல்வி விரும்பவில்லை. குளத்தோரப் புல்லின் கருகிய நுனி கொண்டு இலங்கை இன விடுதலைப் போராட்டத்தின் மோசமான வன்முறையைச் சொல்ல அவர் முயல்கிறார்.

 ....

பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல
இந்த வாழ்க்கையும்
நாய்களின் ஊளையும்
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்கும்
வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.
இரவின் தனிமையில்
என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ
அறையிலே,
தூங்கும் எனது தோழியின் கனவிலே
சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.
இப்போது,
தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு
பரிச்சைக்காய்
புத்தகங்களை முத்தமிட்டபடி
முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.

...

கவிஞர் செல்வியின் இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. இலங்கையின் வட மாகாண நகரான வவுனியா அருகிலுள்ள சேமமடு கிராமத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நாடகத் துறை மாணவி. அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். சிவரமணியின் கவிதைகளுடன் சேர்ந்து இவரது கவிதைகளை ‘செல்வி-சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் தாமரைச்செல்வி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1991-ல் அவர் இறுதியாண்டு மாணவியாக இருந்தபோது கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றுவரை வீடு திரும்பவில்லை.
-மண்குதிரை