லா.ச.ராவின் புத்ர: நினைவுகளின் தேரோட்டம்



நன்கு வளர்ந்த யானைக்கு எத்தனை நகங்கள் உள்ளன என்ற அடிப்படையில் அதன் லட்சணமும் விலையும் தீர்மானிக்கப்படுகின்றன. நமக்கு ஸ்தூலமாகும் பிரம்மாண்டமான யானையின் ஆகிருதியே நம் உணர்ச்சிகளை ஆட்கொண்டுவிடுகிறது. அந்தப் பேருவைக் கண்டு வியக்கிறோம்; திகிலுணர்வுடன் அணுகிறோம். ஆனால் அந்த ஆகிருதியின் நுட்பமான அம்சங்களும் திறன்களும் அதன் வியாபகத்தின் முன்னால் நம் புலன்களால் பிரித்தறிய முடியாதவையாக ஆகின்றன. ஆனால் பிரம்மாண்டத்தின் அச்சம் விலக, விலக அதன் தலையசைப்பும் நுட்பமான செயல்களும் நம்மைச் சிலாகிப்பில் ஆழ்த்துகின்றன. யானையின் இருபத்தியொன்றாம் நகத்தை நம்மால் காண முடிகிறது. யானையின் பேருவுடன் லா.ச.ரா.வின் படைப்புகளை ஒப்பிடலாம். காட்டின் பிரம்மாண்டத்துடன் நுழையும் யானையின் ஆகிருதியைப் போன்றது லா.ச.ராவின் மொழி.

தமிழில் உரைநடை இலக்கியம் உருவாகிய ஐம்பது ஆண்டுகளுக்குள் லா.ச.ரா. தன் முதல் கதையை எழுதியிருக்கிறார். அதுவரை தமிழில் புழங்கிய படைப்புமொழியை அவர் பதம் பார்த்துப் பழக்கியிருக்கிறார். இந்தப் பழக்கத்தால் தமிழின் உச்சபட்சமான ஒரு படைப்பு மொழியை உருவாக்கியிருக்கிறார்.

பாரதிக்குப் பிறகு தமிழில் உருவான கவிதையின் படைப்புமொழியைப் போல் ஒரு வீச்சை லா.ச.ரா. உரைநடை மொழியாகக் கொண்டிருக்கிறார். அந்த மொழிக்கு சமத்காரம் உண்டு. வேதாந்தம் முன்னிறுத்தும் புருஷத்துவம் உண்டு. மந்திரங்களின் உச்சாடணத் தன்மையும் உண்டு. மரபின் வேர்களும் புதுமையின் பசுமையும் உண்டு.

லா.ச.ரா.வின் இந்தப் படைப்புமொழிக்கு முன்னோடிகள் இல்லை. அதன் சொல் வண்ணம் சமகால எழுத்தாளர்களிடமிருந்து அவரைத் தனித்துவமிக்கவராக்கியது. உதாரணமாக தி.ஜானகிராமனின் மொழி சலனமில்லாத நதியைப் போன்றது. ஆனால் அது ஓர் இடத்தில் பிரவாகம் எடுத்து, சாசுவதம் அடையும். ஆனால் லா.ச.ராவின் மொழி பொங்கிக்கொண்டே இருக்கும் நீரூற்று; ப்ரகிருதியின் சந்நதம்.

வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட புத்ர தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். இம்மாதிரியான ஐதீகம் இந்தியச் சமூகங்களில் தலைமுறை தலைமுறைகளாகக் கிளைபரப்பி நிற்கிறது. இந்த நாவலில் ஐந்தாம் தலைமுறையில் மூதாட்டி ஒருத்தி “அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது! பிறந்தாலும் தக்காது!” எனச் சபிக்கிறாள். அவள் வாயிலிருந்து பறவையைப் போல் சிறகு விரிக்கும் சாபம் தலைமுறைகளைத் தாண்டிப் பின்னோக்கிப் பறக்கிறது; அதன் காரணகாரியத்தைத் தேடியலைகிறது. லா.ச.ரா. அந்தப் பறவையைப் பின்தொடர்கிறார். இதுவே இந்நாவவின் பணியாகத் தொழிற்படுகிறது. கதை, கதையின் கதை, கதையின் மூலம் என அடுக்கடுக்காக நாவல் விரிந்துகொண்டே செல்கிறது.

இந்த நாவலின் சொல்முறையில் லா.ச.ரா. எந்த ஒழுங்கையும் கடைப்பிடிக்கவில்லை. திறனாய்வாளர்கள் சிலர் அவர் நனவோடை உத்தியில் கதைகள் எழுதினார் என நிறுவ முயன்றிருக்கிறார்கள். ஆனால் நனவோடையில் கதை சொல்லும் உத்தியிலும் கதை மாந்தர்கள் தங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஓர் ஒழங்கு வெளிப்படும். ஆனால் லா.ச.ரா. எந்த ஒழங்கிற்குள்ளும் தன் கதையைச் சிறைப்படுத்துவதில்லை. ஒழுங்கின்மையில் அழகியல் செய்தவர். நனவோடை உத்தி என்று வரையறுத்தாலும் அதிலும் தன் தனித்துவத்தை நிரூபித்தவர் லா.ச.ரா.

தாயின் வயிற்றில் இருக்கும் சாபம் பெற்ற கருவின் விவரிப்பில்தான் கதை தொடங்குகிறது. அந்த விவரிப்பு, தனக்குச் சாப வரம் அளித்தவளைத் தேடிக் கரடு முரடான சாலையில் பயணிக்கிறது. திடீரென அந்த மூதாட்டி ஐந்து வயதுக் குழந்தையாக ஆகிறாள். இங்கே ஆசிரியன் குரலில் கதை விரிகிறது. பின் ஜகதாவே தன் கதையைச் சொல்கிறாள். அவள் மாமியார் வருகிறாள். அவள் விவரிப்பிலும் கதை செல்கிறது. மாமனாரிடமும் கதை கையளிக்கப்படுகிறது. மீண்டும் கதை கருவில் இருக்கும் வேரொரு குழந்தையிடம் விளையாட்டுப் பொருளாக ஆகிறது. இந்த உத்தித் தமிழுக்குப் புதிது. இந்தக் கையளிப்பும் ஒரே நேர்க்கோட்டில் நடைபெறவில்லை. திட்டுத் திட்டாகத் தேங்கி ஓடுகிறது.

இந்த உத்தியின் மூலம் அதுவரை தமிழில் புழக்கத்திலிருந்த ஒரு வழக்கிலிருந்து கதை சொல்லும் போக்கை வேறு பக்கமாக மடை திருப்பி வெற்றி காண்கிறார். கதை எழுதுவதற்கு முன்பு மனம் உருவாக்கும் வரையறைகள், இலக்கணங்கள் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிப் பார்க்கிறார் லா.ச.ரா. ஒரு கதை வெளிப்பட இவ்வளவு பிரயாசையா, என்பதுபோல தனது கதையைச் சட்டெனத் தொடங்கிவிடுகிறார். அவர் மனத்தில் உருவாகும் எண்ண ஓட்டங்களே திரண்டு திரண்டு காட்சிகளாக சிருஷ்டி பெறுகின்றன. ஆனால் இந்தக் காட்சிகள் வாசகனைப் பிரயாசப்படவைக்கின்றன; எண்ணிக்கையில் அடங்காத ஆயிரமாயிரம் கற்பனைகளைத் துளிர்க்கச் செய்கின்றன.

புத்ர பாக்கியம் இல்லாத பெண்கள்களுக்கு மோட்சம் கிட்டுவதில்லை எனச் சொல்லப்பட்டுவந்த ஒரு நம்பிக்கையை இந்த நாவல் நினைவில் துழாவிப் பார்க்கிறது. அந்த நம்பிக்கையின் மீது விமர்சனமாகவோ ஆதரவாகவோ ஒரு பக்கத்தில் நிற்கவில்லை. உறங்கும் ஜகதாவை எழுப்பிவிட்டு ஒரு சர்ப்பம் வந்த வெளியே திரும்பிச் செல்வதைப் போல இவற்றை இந்நாவல் சொல்லிச் செல்கிறது. புத்ர பாக்கியத்தைப் புனிதமாகக் கருதும் பெண்கள் இந்த நாவலில் வருகிறார்கள். கணவனையும் குடும்பத்தையும் பேணும் கடமையும் சகிப்புத்தன்மையும் பெண்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்கள் எனக் கதை மாந்தர்கள் பேசுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் தங்களைச் சிருஷ்டிக்கும், பேணும் கடவுளர்களாகக் கருதுகிறார்கள்.

‘நான் பூமி

நான் பூமியின் பிரளயம்

நான் பாற்கடல்…’

என்கிறாள் ஒரு குழந்தைக்குப் பிறப்பை அளித்த ஜகதா.

பெண்களே நாவலின் மையமாக வேர் பிடிக்கிறார்கள். ஆண்கள், பெப்பர் மிண்ட் கடைக்காரனைப் போல், வண்டி மாடுகளைப் போல், பூவரசு தேடித் திரியும் ஆட்டுக் கிடாவைப் போல் வெளியில் நிற்கிறார்கள்; அவர்கள் சாபத்தின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். விவரிப்பின் மொழியும் பெண்களைக் கூர்மையாகச் சித்திரிக்கும் அளவுக்கு ஆண்கள் மேல் படரவில்லை. ஈனும் பெண் ஆட்டை ஒரு மாதிரியாகவும் கிடாவை வேறு மாதிரியாகவும் லா.ச.ரா. சித்திரிக்கிறார்.

‘ஒரு நாள், கொல்லையில் கிணற்றடியில் ஒரு பூக் கிடக்கக் கண்டாள். ஒரு சிறிய சொம்பளவுக்குக் கண்ணைப் பறிக்கும் சிவப்பான இதழ்கள் தென்றலில் நலுங்கி, பூ அவளை வா வா என்றழைத்தது. அதை வியந்து கையிலெடுத்ததும், திடீரென்று உடல் பரபரத்தது. சொல்லொண்ணாப் பீதியும் பழக்கமில்லா வெட்கமும் கண்டது’


இது இந்த நாவலில் ஜகதா பூப்பெய்தும் காட்சி. நான்கு பிரசவக் காட்சிகளும் வருகின்றன. நான்காம் தலைமுறைப் பெண்ணொருத்தி பிரசவிக்கிறாள். ஒரு ஆடு பிரசவிக்கிறது. ஒரு குறத்தி பெரும் சத்தத்துடன் பிரசவிக்கிறாள். ஜகதாவின் பிரசவம் நடக்கிறது. இந்தப் பிரசவக் காட்சிகள் திரும்பத் திரும்ப விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரசவத்தின் பல்வேறு நிலைகளுடன், வலிகளுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு சிசு கருவிலேயே மரித்துவிடுகிறது. ஒவ்வொரு விவரிப்பும் பசலையின் ஈரத்துடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கருவறையின் இருளைப் போன்ற நிழல் இந்த நாவல் முழுவதுமே படிந்து கிடக்கிறது. பூமியே ஒரு கருவறைதான். ஒரு கருவிலிருந்து இன்னொரு கருவிற்குள் குழந்தைகள் வந்து விழுகின்றன என்கிறார் லா.ச.ரா.

லா.ச.ரா.வின் புத்ரவும் அகவயமான நாவல்தான். இந்த நாவலில் நிலக் காட்சிகள் அவ்வளவு துலக்கமாக வெளிப்படவில்லை. நினைவின் வெண் பனி, காட்சிகளில் அடந்திருக்கிறது. அசோகமித்திரனின் எழுத்துகள்போல காலம் பின்னோக்கிச் செல்லச் செல்ல காட்சிகள் துல்லியமடையவில்லை. ஆனால் இது ஒரு பாணி. புறவுலகின் யதார்த்தங்களும் சித்திரிப்பின் வழியாகத் துலக்கம் பெறுகின்றன. ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறுதான் இந்தக் கதை. நிலவுடைமையாளராக அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள்தாம் மாந்தர்களாக நாவலுக்குள் உயிர் பெறுகிறார்கள். இதற்கு வெளியே பெப்பர் மிண்ட் கடைக்காரன், ஆட்டிடையன், இடச்சி, குறத்தி, தாசி ஆகியோர்கள் வருகிறார்கள். ஒரு கடைவீதி, வண்டி மாடுகள், இசைக் கச்சேரி, பாம்பு, கிடா, சினையாடு, ரயில் ஆகியவை வருகின்றன. இவர்கள் எல்லோரும் தாங்கள் சார்ந்த சமூகப் பின்புலங்களுடன் இதில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு அத்தியாத்தில் இடச்சியான துரைக்கண்ணிக்கும் அவளது இடையனுக்குமான காதல் வாழ்க்கைச் சிலாகிப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியைக் கருவில் உள்ள சிசு விவரிக்கிறது. ‘கடலையே காணாத துரைக்கண்ணியின் கண்களுக்கு எப்படிக் கடல் நீலம் வந்தது?’ எனக் கேட்கிறது சிசு. இந்த நாவலில் தீண்டாமை, பிராமண ஆச்சாரங்கள், சமூகக்கட்டுகள், பெண்மைக்கான இலக்கணங்கள் எல்லாமும் இருக்கின்றன.

கவிதைக்குரிய சில நுட்பங்களுடன் தம் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச.ரா. இது இவரது புனைவு மொழியின் பலம். இந்தப் பாங்கு உரைநடையின் திராணிக்கு அப்பாற்பட்டது. சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவமும் சிருஷ்டித்த குழந்தை புத்ர எனலாம்.

வெள்ளி மணிகளின் கிண்ணி

மலரின் செங்குகை’

ஈரத் திரியில் நீலச்சுடர்ப் பொறி

மீனின் அடிவயிற்றின் ஒளிமருட்சி

எண்ணாயிரம் நட்சத்திரச் சொரி

தெரிகின்றன

இந்த விவரிப்பில் மேலோங்கும் கவித்துவம் தமிழ்க் கவிதை மரபின் சொல்லாட்சியுடன் வெளிப்படுகிறது. இது மரபின் அம்சத்துடன் கவிதைகள் எழுதிய ந.பிச்சமூர்த்தி, பிரமிள் ஆகிய கவிகளின் சொற் திறத்துடன் ஒப்பிடத்தகுந்தது. அவரது கவிமொழிக்கு வேதாந்தத்தன்மையும் உண்டு. அது பிறப்பை, வாழ்வை, மரணத்தையும் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

எண்ணற்ற ‘நான்’களின் தலைகவிழலில்

ஒரு ‘நானாய்’ நின்ற ஆண்டவனும்

மோனத்தின் ஒரு உச்சம்

அந் நானையும் விழுங்கித் துப்பி

நான் அற்று

நானே எல்லாம்

எல்லாம் நானே ஆய

நானின் சிரிப்பு மோனத்தின் நாண்

“பூம்” என்கையில்

நான், என் அஷரங்கள் அதிர்ந்து குலுங்குகிறேன்

நான் தோன்றுகிறேன்

நான் தோற்றுவிக்கிறேன்

நான் அழிகிறேன்

நான் அழிக்கிறேன்

நானே எமன் என்கிறேன் – அந்த எமன்

எந்த எமன்?

ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரிரீயைப் போல் ஒலிக்கச் செய்ய லா.ச.ரா. இக்கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். அவரது உரைநடையும், இந்த நாவலில், மஞ்சள் கண்களில் ஓயாத பசி எரிந்துகொண்டிருக்கும் ஆட்டுக் கிடாபோல் தாவித் தாவி, பூவரசு என்னும் கவிமொழியைப் புசிக்க யத்தனித்துக்கொண்டே இருக்கிறது.

இவரது நடையில் ததும்பும் உவமையும் உருவகமும் வார்த்தைகளைக் கூர்மையாக்குகின்றன. எழுச்சி கண்ட முலையை, ‘பச்சைத் தேள்’ என்கிறார். ஒரு கிடயாட்டின் தாபத்தை, ‘சிந்தத்துடிக்கும் பிந்துவின் உள்தெறிப்பு’ என்கிறார். அவரது இந்தச் சொல்லாட்சிகள் வாசகனை வசீகரித்து ஆட்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. பிரசவப் பெண்ணின் காலடியில் ‘இ-ட-று-கி-ற-து’ குழந்தை என்கிறார். இது காட்சி வடிவக் கவிதை. யாதார்த்த மொழி என்றாலும், கவிதை மொழி என்றாலும் ஓர் உரையாடலாக வாசகனுடன் தன்னை வெளிப்படுத்தும் இந்த நாவல், ஓர் உச்சாடணமாக வாசகனின் குரல் மீது எதிரொலிக்கிறது.


இது ஒருவகையில் லா.ச.ரா. சொல்வதைப் போல புத்ர அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். அது விடுத்து வேறு நோக்கம் இல்லையா, என்ற கேள்வியை இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எழுப்பிப் பார்க்கலாம். ஆனால் கதைகள் சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. இதன் மூலமாக அவர் முழுமையாக ஓர் இலக்கிய அனுபவத்தை அளிக்க முயன்றிருக்கிறார்; படைத்திருக்கிறார். இதுதான் இலக்கிய சிருஷ்டியின் முதன்மையான நோக்கமும்கூட. இதன் வழியாக மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது, தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார். நாளையைப் போல், மற்றொரு நாள், வாரம், மாதம், ஆண்டுகள் என இடையறாது தொடரும் கால இயக்கம் இவற்றுடன் ஒப்பிடப்படுகின்றன.

நம்மை உற்சவ மூர்த்தியாக்கிய அவர் நடத்தும் நினைவுகளின் தேரோட்டம் இந்த நாவல் எனலாம். தேரோட்டம் முடிந்ததும், அவரே சொல்வதைப் போல ‘பூமாதேவியின் அசதி மூச்சை’ நம்மால் கேட்க முடிகிறது.


-மண்குதிரை                                                                                               28, அக்டோபர், 2015

(காலச்சுவடு ‘புத்ர’ கிளாசிக் பதிப்புக்கு எழுதிய முன்னுரை)