ழான் லுக் கோதார்த் : சினிமா என்பது ஓர் அரசியல் பிரகடனம்

பிரான்ஸின் புகழ்பெற்ற இயக்குநர் ழான் லுக்  கோதார்த்  அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டார். ஸ்டுடியோ படப்பிடிப்பு கோலோச்சிய காலகட்டத்தில், கொம்பன் யானையைப் போல் சினிமாவை இழுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தவர் அவர். உறுதியான திரைக்கதை, புதுமையான வசனம், புதிய காட்சிக்கோணங்கள், சுதந்திரமான ஷாட்கள் ஆகிய அம்சங்களுடன் கோதார்த் தன் படங்களைத் தனித்துவப்படுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1946இல் கையெழுத்தான பிரான்ஸ் - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ப்ளம்-பைரன்ஸ் ஒப்பந்தம், பிரெஞ்சு சினிமாவில் பாதிப்பை விளைவித்தது. இதனால் அமெரிக்கப் படங்கள் பிரான்ஸில் திரையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்தன. இந்த மாற்றத்தின் தொடர்ச்சி என கோதார்த் படங்களை வரையறுக்கலாம். 1960இல் அவரது முதல் படம் ‘பிரெத்லெஸ்’ இதைத் திருத்தமாக எதிரொலித்தது. ‘பிரான்ஸில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அமெரிக்கப் படங்களைப் போல் ஒரு படம்’ என்கிறரீதியில் மிக லாகவமாக இந்தப் படத்தை கோதார்த் உருவாக்கியிருப்பார். படத்தின் நாயகி, அமெரிக்கப் பெண். நாயகனோ அமெரிக்க சூப்பர் ஸ்டார் போகர்ட் போல் தன்னைக் கருதுபவன். ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக்கொண்டு, கோதார்த் இந்தத் திரைக்கதையை எழுதியிருந்தார். காவல் துறையால் தேடப்படும் ஒருவன், தன் காதலியைத் தேடிச் செல்லும்போது சுடப்பட்டு இறக்கிறான். இதுவே அந்தச் செய்தி.

பிரெத்லெஸ்
தன் முதல் படத்திலேயே சர்வதேச சினிமாவில் பெரும் தாக்கத்தை விளைவித்தவர் கோதார்த். வெகு அண்மைக் கோணம், வெகு அகலக் கோணம், ஜம்ப் கட் ஷாட்கள் என அந்தப் படத்தை ஒரு படிப்பினைபோல் உருவாக்கியிருந்தார். நாயகனும் நாயகியும் பாரீஸ் நகரச் சாலைகளில் வலம்வரும் காட்சி, ஜம்ப் கட் ஷாட்டுக்கான முன்னுதாரணமாக எடுத்துக்காட்டப்படுகிறது. இதன் நாயகன் பார்வையாளர்களை நோக்கிப் பேசும் ‘ஃபோர்த்வால் பிரேக்கிங்’ என்று சொல்லக்கூடிய நுட்பத்தையும் கோதார்த் இதில் பயன்படுத்தியிருந்தார்.

அமெரிக்கக் கலாச்சாரம் பிரான்ஸில் ஏற்படுத்திய தாக்கத்தை நாயகக் கதாபாத்திரம் வழி பகடிசெய்திருப்பார். அமெரிக்க ராணுவ அதிகாரியின் காரைத் திருடி வரும்போது, பின் தொடர்ந்துவரும் ஒரு காவலரை, அந்த காரில் உள்ள துப்பாக்கியையே எடுத்து நாயகன் சுடும் காட்சி, சினிமா உருவாக்கத்துக்கான முன்னுதாரணம். ‘சஜெஷன் ஷாட்’ இல்லாமல் ஐந்து கட் ஷாட்டுகளில் காவலர் விழுகிறார். இதில் வெகு அண்மைக் காட்சியைப் பயன்படுத்தியிருப்பார். ஒரு ஷாட்டில் துப்பாக்கி மட்டும் வெகு அண்மைக் காட்சியில் காட்டப்படும்.

பிரெஞ்சு - அமெரிக்கக் கலாச்சார முயக்கத்தை முதன்மைக் கதாபாத்திரங்கள் வழி சொன்ன வகையில், தன் அரசியல் கணக்கை முதல் படத்திலேயே தொடங்கிவிட்டார். மாவோயிஸ்ட் இளைஞர்களைப் பற்றிய ‘லா சைனீஸ்’, சர்வதேச அளவில் இளைஞர்கள் கொண்டாடிய படமாக அமைந்தது. மாவேயிஸம் மீது கோதார்த்துக்கு இருந்த பிடிப்பு இதில் வெளிப்பட்டிருக்கும். ‘வியட்நாம் எரிகிறது, நான் உரக்கச் சொல்வேன் மாவோ மாவோ/ஜான்சன் சிரிக்கிறார், நான் உரக்கச் சொல்வேன் மாவோ மாவோ’ என்கிற இந்தப் படத்தின் பாடல் இளைஞர் மத்தியில் பெரும் முழக்கமானது. படத்தில் வியட்நாம் போர் குறித்த காத்திரமான உரையாடல் மாவோயிஸ்ட் இளைஞர்களுக்கு இடையில் நடக்கிறது. அதில் நேரடியாக அமெரிக்காவை கோதார்த் விமர்சித்திருக்கிறார்.

வியட்நாம் போர் குறித்த அமெரிக்க, ரஷ்ய, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடுகளை ஒரு நவீன நாடகத்தின் காட்சியைப் போல் விவரிக்கிறது இந்தப் படம். இதில் சீனாவின் நிலைப்பாடு ஒரு சிவப்புப் புத்தகத்தை வாசிப்பதன் வழி அரசியல் பிரகடனம்போல் பார்வையாளர்களை நோக்கிப் படமாக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் நிலையைப் போராளிகளின் பக்கம் நின்று பார்க்கிறது இந்தப் படம். ஷாட்களுக்கு இடையிலும் இந்த நாடகீயத்தை வெளிப்படுத்துவதே அவரது தனித்துவம். ஜம்ப் கட்டில் காலத்தைக் கடப்பதுபோல் ஷாட்டுகளுக்கு இடையிலான ஒழுங்கை இந்த நாடகத்தனத்தின்வழி கோதார்த் கடக்க நினைத்தார் எனலாம்.

லா சைனீஸ்

அமெரிக்க எதிர்ப்பு: ‘பெய்ரூட் தி ஃபூல்’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் வியட்நாம் போருக்குக் காரணமான அமெரிக்காவைக் கடும் சொற்களில் விமர்சிக்கின்றன. அதுபோல் ‘தி லிட்டில் சோல்ஜர்’ படத்திலும் அர்ஜென்டினா போரை, ஒரு வீரனைச் சாரமாக எடுத்து விமர்சித்துள்ளார். இந்தப் படத்துக்குச் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது, அதை அமெரிக்கா சென்று வாங்க கோதார்த் மறுத்துவிட்டார். பொருள்மய உலகைக் குறித்த மார்க்ஸியக் கருத்துகளைத் தொடர்ந்து தன் படங்களில் வெளிப்படுத்திவந்தார். ‘சினிமா அரசியல் பற்றியதாக இருக்கக் கூடாது; அரசியலாக இருக்க வேண்டும்’ என அவரே சொல்வதுபோல் அரசியலை கோதார்த் தீவிரமாக வெளிப்படுத்தினார். பிற்காலத்தியப் படமான ‘ஃபிலிம் சோசலிஷம்’ வரை தன் அரசியல் கருத்தில் உறுதியுடன் அவர் இருந்தார்.

மூன்று தலைமுறைகளில் பெருமளவு மாறிவிட்ட சினிமா ஊடகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் அவர் பணியாற்றினார். சினிமாவுக்காக அரசியலையும் அரசியலுக்காக சினிமாவையும் விட்டுக் கொடுக்காதவர் கோதார்த். இந்தத் தனித்துவமான அம்சம்தான் கோதார்த்தின் மரணத்தைச் சர்வதேச சினிமாவுக்கான பேரிழப்பாக்குகிறது

-மண்குதிரை

(செப், 18, 2022)