அசோகமித்திரனின் பெண்கள்

 எழுத்தாளர் அசோகமித்திரன் காலமாகிவிட்டார். தமிழ்ப் புனைவு கதைகளில் பெரும் சாதனைகளைச் செய்தவர் அவர். அவரது கதைகள், நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடப் பாடுகளை மையமாகக் கொண்டவை. நடுத்தரவர்க்க மக்கள் கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகள், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டையும் துன்பங்களையும் அசோகமித்திரன் அளவுக்குக் கதைகளில் யாரும் சொன்னதில்லை.

இந்த நடுத்தரவர்க்க ஒழுக்கங்களில் மிகப் பெரிய பங்கு பெண்களுக்கு இருக்கிறது. இவற்றைப் பராமரிப்பவர்களாகவும் அதனால் உண்டாகும் துன்பங்களைச் சுமப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். இந்த அம்சத்தையும் அசோகமித்திரன் தன் கதைகளின் மூலம் சொல்லியுள்ளார். அவரது கதைகளில் பெண்கள் காதல் தேவதைகளாகவோ தெய்வீக அவதாரங்களாகவோ இல்லை. பெண்கள் குடும்ப அமைப்பின் அங்கமாக வருகிறார்கள். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவாக, நள்ளிரவில் குழந்தை அழுவதற்காகக் கணவனிடம் முரட்டுத்தனமாக அடிவாங்கும் மனைவியாக, தாய் தவறிவிட குடும்பப் பொறுப்பை ஏற்கும் மகளாக வருகிறார்கள்.

பெண்களை அழகுப் பதுமைகளாக வர்ணிக்கும் அலங்கார வார்த்தைகள் எதுவும் அசோகமித்திரனிடம் இல்லை. சக மனுஷனாக அவள் படும் பாடுகளை அருகிலிருந்து பார்த்துப் பகிர்கிறார். மேலும், பெண்களின் உலகத்தைச் சொல்லும்போது, அவர்களது சந்தோஷங்களைவிடத் துன்பங்களையே பிரதானமாக்குகிறார். அவர்களுள் ஒருவராக இருந்து பேசுகிறார். அவள் ‘இதைப் போல இப்படிச் செய்தாள்’ என்ற ஒப்பீடுகளை அசோகமித்திரன் தவிர்க்கிறார். ஒரு பெண்ணின் தனித்துவமான இயல்புகளுடனே காட்சிப்படுத்துகிறார்.

‘தண்ணீர்’ நாவலின் ஜமுனா, ‘மணல்’ குறுநாவலின் சரோஜினி, ‘விமோசனம்’ சிறுகதையின் சரஸ்வதி ஆகிய கதாபாத்திரங்களை அசோகமித்திரனின் முன்னுதாரணப் பெண்களாகக் கொள்ளலாம். ‘விமோசனம்’ சரஸ்வதி ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் தன் கணவனுடனும் கைக்குழந்தையுடனும் வசிக்கிறாள். அரிசிக்கும் பருப்புக்கும் திண்டாடும் வாழ்க்கை ஒரு பக்கம், முரட்டுக் கணவனின் அடிகள் போன்ற துன்பங்கள் ஒரு பக்கம், என்றாலும் வாழ்க்கை போகிறது. கணவனின் அடிக்குப் பதில் பேசாமல், அடி வாங்கிக்கொண்டே இருப்பவள், ஒருநாள் லேசாக மூஞ்சியைத் திருப்பிக்கொள்கிறாள். அவ்வளவுதான் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. செவிடாகும்படி அடிகளை வாங்கிக்கொண்ட பிறகுதான் என்றாலும் அவள் பாவம் செய்துவிடுகிறாள். குழந்தை, பால், அப்பளம், சாதம், வத்தல் குழம்பு, கடன், காபி என்ற இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் மன்றாடுகிறாள். ஆனால், நிராகரிக்கப்படுகிறாள். கணவனே சரணாகதி என்னும் நிலையிலிருக்கும் பெண்கள் பலரின் பிரதிநிதியாக சரஸ்வதியை உருவாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

‘தண்ணீர்’ ஜமுனாவும் சரஸ்வதியைப் போல் ஒண்டுக் குடித்தன வீட்டில் வசிப்பவள். சினிமா நாயகியாக ஆசைப்பட்டவள். பாஸ்கர்ராவ் என்னும் சினிமா ஆளால் ஏமாற்றப்பட்டு, தன் தங்கை சாயாவுடன் வசித்துவருகிறாள். சாயா, ஜமுனாவின் குடும்பப் பெண் தன்மையின் மீதமாக கூடவே இருக்கிறாள். ஜமுனா ஒழுக்கத்தை மீறும்போதெல்லாம் அவளைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறாள். சாயாவுக்குக் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கைகள் உண்டு. அவளுக்கு ஒரு குடும்பம், ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், அவளும் அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் இருக்கிறாள். ஜமுனா எல்லாவற்றையும் மீறுபவளாக இருக்கிறாள். பாஸ்கர்ராவ் ஏமாற்றுபவனாக இருந்தாலும் அவனிடமே திரும்பத் திரும்ப செல்பவளாகவும் இருக்கிறாள். இறுதியில் சரஸ்வதிக்கு நேர்வது போன்ற ஒரு துன்பத்தைச் சந்தோஷமாக ஜமுனா முன்வந்து ஏற்கிறாள்.

‘மணல்’ சரோஜினி, பெரிய குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண். அண்ணன்கள், அம்மா, அப்பா, அக்கா எனக் குடும்ப அரவணைப்பில் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் இருப்பவள். ஆனால், அவளுடைய அம்மா ஒரு நாளில் தவறிவிடுகிறாள். விசேஷம் கழிந்த மறுநாள் வேலைக்குப் புறப்படும் அண்ணனுக்காக, அப்பாவுக்காகச் சமைக்கப் போகிறாள். பிறகு அவள் சமைத்துப் போடும் இயந்திரமாக மாறிவிடுகிறாள். அவளது டாக்டர் கனவு கலைந்துபோகிறது. கடைசியில் பி.எஸ்சி.கூடப் படிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இவளையும் வாழ்க்கை, குடும்ப அமைப்பிலிருந்து பிரித்துவிடுகிறது. ஒழுக்கம், நேர்மை போன்ற நெறிகளுக்கு உதாரணமானவள் அதிலிருந்து பிறழ்கிறாள். மைதானத்தில் காத்திருக்கும் போட்டோ ஸ்டூடியோக்காரனுடன் செல்லத் தயாராகிறாள்.

பல்வேறு குணநலன்கள் கொண்ட இந்த மூன்று பெண்களைக் கொண்டே அசோகமித்திரனின் மொத்தக் கதைகளின் பெண் கதாபாத்திரங்களை மதிப்பிட முயலலாம். பெண்களுக்கென்று தனித்துவமாகக் கட்டுப்பாடுகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்தக் குடும்ப அமைப்பின் நெறிகளையும் மறுபரீசீலனை செய்யலாம்.

(26, மார்ச், 2017)