கதையெல்லாம் தித்திப்பு

 

 
 
 
வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள்தாம் தமிழில் அதிகம். கி.ராஜநாரயணன், தோப்பில் முகமது மீரான் போன்ற கதைசொல்லிகள் பலரும் தன்னனுவத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் கதைகள் எழுதினர். இதற்கு வெளியில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்கள் தன்னனுபவத்தையும் கற்பனாசக்தியையும் கொண்டு கதைகள் எழுதினர். இந்த இருவிதமான போக்குக்கும் இடையில் இயங்கியவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

சிறுகதை இலக்கியத்தின் சாதனையாளர்களுள் ஒருவர் முத்துலிங்கம். எழுத்துலகில் அவருக்கு இது 60-வது ஆண்டு. இடையில் சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறார். 1995 வெளிவந்த அவரது ‘திகடசக்கரம்’ தொகுப்புக்குப் பிறகு தொடர்ந்து அதே ஆற்றலுடன் இயங்கிவருகிறார். 1958-2016 காலகட்டத்தில் அவர் எழுதிய மொத்த கதைகளின் தொகுப்பு நற்றிணை வெளியீடாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

முத்துலிங்கம் கதைகளின் அமைப்பு, அசோகமித்திரனுடன் ஒப்பிடத்தகுந்தது. எந்தப் பின்னணியில் இருந்தாலும், எந்தவிதமான கருத்தியலைப் பேசினாலும் அவரது கதைகள் அடைய நினைக்கும் இலக்கு சுவாரசியம்தான். ‘சுவாரசியம்தான் தன் கதைகளின் லட்சியம்’ என்கிறார் அசோகமித்திரன். ஆனால் முத்துலிங்கத்தின் சுவாரசியம், வெகுளியானது. இந்தப் பூமிப் பிரதேசத்தின் ஒவ்வொரு பொருளையும் உயிரையும் பேரார்வத்துடன் அணுகும் குழந்தையின் தன்மை அதற்குண்டு. சுவாரசியத்தின் வெளிப்பாடாக இருவரும் சிரிப்பைக் கதைகளுக்குள் வைத்திருப்பார்கள். அதிலும் அசோகமித்திரனின் நகைச்சுவை, கதைகளுக்குள் புதிர்போன்றது. தேர்ந்த வாசகனால் மட்டுமே அதை அவிழ்க்க முடியும். முத்துலிங்கம் அந்தச் சிரமத்தை வாசகனுக்கு அளிப்பதில்லை.

கி.ரா.வின் கதைகள், கரிசக்காட்டு விவசாயிகளின் பாடுகள். அசோகமித்திரன், வண்ணநிலவன் ஆகிய இருவரின் கதைகளும் ஒரு குறிப்பிட்ட நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாடுகள். அதுபோல இவர்களது கதைகளின் நிலக் காட்சிகளுக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். இப்படி முத்துலிங்கம் காலகட்டத்து எழுத்தாளர்களை ஒரு வரையறைக்குள் வகுத்துவிட முடியும். ஆனால் முத்துலிங்கம் இதற்குள் அடங்காதவர். பாடுபொருள்களிலும் சரி, நிலக் காட்சிகளிலும் சரி, முத்துலிங்கத்தின் கதைகள், ஒன்று மற்றொன்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுபவை.

தமிழ் வாசகனுக்கு முற்றிலும் புதிய நிலக் காட்சிகளை, மனிதர்களை முத்துலிங்கம் தனது கதைகளுக்குள் சித்தரித்துள்ளார். அவர்களுக்கும் மையமான ஓர் ஒற்றுமையைக் காண முடியாது. அவரது கதைகள், ஒரு நவீன கவிதையைப் போல் அன்றாடத்தின் ஒரு துண்டு. உண்மையில் அவை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடியாத வெகுளித் தன்மை கொண்டவை.

அசோகமித்திரனின் படைப்புகளைப் போல் கட்டுரைக்கும் கதைக்கும் இடைப்பட்டவை முத்துலிங்கத்தின் படைப்புகள். இருவரும் தன்னிலையில் சொல்லும் கதைகள், ஒரு சுய அனுபவக் கட்டுரையின் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. முத்துலிங்கம், ஐ.நா. அதிகாரியாகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் பணியாற்றியபோது உளவாளி ஒருவர், இவரைக் கண்காணிப்பதற்காக ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இஸ்லாமாபாத் தெருக்களில் வழி தடுமாறி, குழம்பிப் போய்விடுகிறார். திரும்பித் தங்குமிடம் வரத் தெரியாததால், தன்னை வெகுநேரமாகப் பின்தொடர்ந்து வரும் உளவாளியிடமே கேட்டுவிடலாம் எனக் கேட்கிறார். ‘அவரும் என்னைத் பின்தொடருங்கள், உங்கள் தங்குமிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். உலக உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு உளவாளியை, உளவுபார்க்கப்படுவன் பின்தொடர்ந்த சம்பவம் நடக்கிறது. முத்துலிங்கம் தனது தனித்துவமான நகைச்சுவையுடன் இந்தச் சம்பவத்தை எழுதியிருப்பார். இது கட்டுரையா, கதையா என அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி தங்கியிருக்கிறது.

முத்துலிங்கம் கதைகளில் தீர்க்கமான அரசியல் இல்லை என விமர்சிக்கப்படுவதுண்டு. அவரது கதைகள், உரத்துச் செல்லும் இலங்கையின் பெரும்போக்கிலிருந்து விலகியே இருந்தது, இந்த விமர்சனத்துக்கான காரணமாக இருக்கலாம். அவரது ‘நாளை’ சிறுகதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போரால் அநாதையான சிறுவர்கள் - அண்ணனும் தம்பியும் - இறைச்சிக்காக ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு வேலி தாண்டிச் செல்லும் சம்பவம்தான் கதை. ஆனால் அவர்களுக்கு ரொட்டி மட்டும்தான் கிடைக்கிறது. நாளை இறைச்சி கிடைக்குமா, என்ற சிந்தனையில் உறங்கிப் போகிறார்கள். இதில் ஒரு இடத்தில் அண்ணன்காரன் ஒரு கட்டையை எடுத்துத் துப்பாக்கி பிடிப்பதுபோல் பாவனை செய்கிறான்.

முத்துலிங்கம், இலங்கையில் பிறந்து உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அதன் மூலம் நாம் அறியாத நிலத்தைப் பண்பாட்டுப் புலத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது பல கதைகளின் மையமும் இந்தப் பண்பாட்டு முரண்தான். ஆனால் அவர் இந்த முரணை வெறுப்புடனோ கேலியுடனோ அணுகுவதில்லை. அது வாசகருக்கு அளிக்கக்கூடிய சுவாரசியத்தையே அவர் கவனத்தில் கொள்கிறார். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நிகழ்வதற்கும் நிகழாமைக்கும் இடையில் வாசகர் அடையும் மன எழுச்சியையும் அவர் ஓர் அம்சமாகக் கொண்டிருக்கிறார். படர்க்கையில் கதை சொன்னாலும் வாசக நெருக்கத்துக்காக அதில் ஓர் தன்னிலை விவரிப்புத் தன்மையை முத்துலிங்கத்தின் கதைகளில் உணர முடிகிறது. வாசகர்களிடம் நெருங்கிவர ஒவ்வொரு கதைகளிலும் அவ்வளவு பிரயாசம் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று இது. அதனால் கதைகளை வாசகர்களை முன்னிறுத்தியே எழுதினார். அதனால் கதைகளுக்குள் தத்துவ விவரிப்பைத் தவிர்த்தார். அதற்கான முகாந்திரம் உள்ள கதைகளிலும் அதை ஒரு சுவாரசியமான நகைச்சுவையாக்கவே முயன்றுள்ளார். முத்துலிங்கத்தின் எழுத்துகளை ஒரு காடு எனக் கொண்டால் ஜெயமோகன் சொல்வதுபோல் அதன் ஒவ்வொரு இலையும் தித்திப்பே. அதுவே அவரது கதைகளின் லட்சியமும்கூட.
(இந்து தமிழ் திசை, 04.03.2018)