யாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்



இலங்கையைப் பொறுத்தவரை 80-கள் முக்கியமான காலகட்டம். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தக் காலகட்டத்திலதான் வலுப்பெற்றது. திருநெல்வேலித் தாக்குதல்களைத் தொடர்ந்து கறுப்பு ஜூலைச் சம்பவமும் நடந்தது. கொழும்பில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய அமைதிப்படையும் அப்போதுதான் இலங்கைக்குள் நுழைந்தது. இவற்றுக்கெல்லாம் முன்பு பழமையான யாழ்ப்பாணம் நூலகம் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டது. வட இலங்கையின் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் கவிதைகள் எழுதியவர் சிவரமணி. இந்த அரசியல் சூழலே அவரது கவிதைக்கான ஆதாரமாகவும் இருந்தது.
இலங்கைத் தமிழ்ப் புதுக்கவிதை, இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுப்பட்டவை. ஆனால், தமிழ் மரபுக் கவிதையுடன் தொடர்புடையவை. உணர்ச்சியை அணுகும் விதத்திலும் விவரிப்பு மொழியின் ஓசை வெளிப்பாட்டிலும் மரபின் தன்மையை இலங்கைப் புதுக் கவிதைகள் இப்போதும் கைக்கொண்டுள்ளன. ஆனால், சிவரமணியின் கவிதைகள் அழகுணர்வுக்கு அப்பாற்பட்டுப் பாடுபொருளில் வேரூன்றியவை. அவரே தனது ஒரு கவிதையில் ‘கவிதை வெறிமுட்டி / நான் கவிஞன் ஆகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் வசந்த தென்றல் அல்ல நான்’ என்கிறார்.
சிவரமணி மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகக் குறைந்த கவிதைகளே எழுதியிருக்கிறார். 30-க்கும் குறைவான கவிதைகள்தாம் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ளன. 23 கவிதைகள் மட்டுமே வெளியாகியுள்ளதாக சிவரமணி குறித்த கட்டுரை ஒன்றில் இலங்கை எழுத்தாளர் சித்திரலேகா குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கவிதைகளின் காத்திரம் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஆக்கியுள்ளது.
அவரது ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை, போர் எப்படித் தலைமுறைகளைப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது. உளவியல்ரீதியிலான அதன் பாதிப்புகள் எப்படிக் குழந்தைகள் மனத்தைச் சிதைக்கின்றன என்பதையும் திருத்தமாகச் சித்தரிக்கிறது. போர்க் கால இரவில் திடீரெனத் துப்பாக்கிக் குண்டின் சப்தம் வந்து விழுகிறது. நுங்கு எடுத்த பனங்காயில் வண்டி செய்வது, கிளித்தட்டு விளையாடுவது, சதா கேள்வி கேட்பது எனக் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மறந்துபோகின்றனர்.
கிடைக்கும் மரக் குச்சிகளைத் துப்பாக்கியாகப் பாவித்து எதிரிகளைச் சுட்டு விளையாடும் புதுக் களியைக் கற்கிறார்கள். ‘எங்கள் குழந்தைகள் வளர்ந்தவர்கள் ஆயினர்’ என இந்தக் கவிதையை சிவரமணி முடிக்கிறார். ‘ஒரு சிறிய குருவினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின்’ மீது வீசப்படும் குருதி தோய்ந்த முகமற்ற மனித உடல்களால் ‘எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர்’ என மற்றொரு கவிதையிலும் சொல்கிறார்.
அகவயமான கவிதைகளும் சிவரமணி எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகளில் அவரது ஆளுமை தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. தனது இருப்பைக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப வலியுறுத்திவந்துள்ளார். ஆனால், அந்தக் கவிதையின் உட்பொருள் அதற்கு மாறான தனி மனித இருப்பு சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. இந்த இடத்தில் தனி மனித இருப்பு குறித்த ஆங்கில, 70 காலகட்ட இந்தியத் தமிழ்க் கவிதையுடன் இவரது கவிதைகளை ஒப்பிடலாம்.
‘கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்’
என்கிறது அவரது ஒரு கவிதை.
இலங்கையின் இந்தப் போர், அந்த மக்களின் அன்றாடங்களை அசாதாரணமானவையாக ஆக்கிவிட்டது. இதைத் தனது சில கவிதைகளில் திரும்பத் திரும்பச் சித்தரிக்கிறார். ‘எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சி’ எனத் தன் கவிதையில் சொல்கிறார். ‘எனக்கு உண்மைகள் தெரியவில்லை. பொய்களைக் கண்டுபிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை’ என மனிதர்களுக்குள் நிலவிய நம்பகமில்லாத் தன்மையைச் சொல்கிறார்.
இன வெறுப்பால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரலாக ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். ஆனால், ‘இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக’ அவள் வாழ்கிறாள் என்பதில் சிறு நம்பிக்கையை விதைக்கக் கவிதை முயல்கிறது. ஆனால், ‘கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்தத் தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை’ என்றும் தன் கவிதையில் விசனப்படுகிறார்.
1991-ல் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் கவிதைகள் பல, தற்கொலைக்கு முன்பு அவரால் கொளுத்தப்பட்டுவிட்டன எனச் சொல்லப்படுகிறது. ‘எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்’ என எழுதியிருக்கிறார் அவர். அவற்றுள் எஞ்சிய கவிதைகளுள் சில பின்னாளில் பிரசுரம் கண்டன. இப்போது நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கவிதைகள் 1985-1989 கால இடைவெளியில் எழுதப்பட்டவை. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை 1985-1986 கால இடைவெளியில் அவரது 17-வது வயதில் எழுதப்பட்டவை என சித்திரலேகா குறிப்பிடுகிறார். இந்த 23 கவிதைகளுக்குள் இன விடுதலை குறித்த தன் லட்சியத்தை சிவரமணி வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன் இருப்பு நிலை குறித்த மனப் பிரயாசத்தைச் சொல்லியிருக்கிறார். ‘என் இனிய தோழிகளே/இன்னுமா தலைவார/கண்ணாடி தேடுகிறீர்?’ எனப் பெண்களைப் போராட அழைத்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன விடுதலை குறித்த யதார்த்த முகத்தையும் சித்தரித்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்துத் தனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளையும் துணிச்சலுடன் முன்வைத்திருக்கிறார். அவரது தற்கொலை ஒருவகையில் அவரது நம்பிக்கைகளின் தோல்வி எனலாம். ‘நான் எனது நம்பிக்கைகளை தோற்றுக் கொண்டிருக்கிறேன்.’ என ஒரு கவிதையில் சொல்லியுள்ளார். இந்தத் தோல்வி இலங்கை விடுதலைப் போராட்டத் தோல்வியுடன் ஒப்பிடத் தகுந்தது.
...
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?

சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.

வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
வாருங்கள் தோழிகளே

நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
சிவரமணி, யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யிலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் படித்தவர். சிவரமணியின் கவிதைகளும் அவரது தோழியான கவிஞர் செல்வியின் கவிதைகளும் சேர்த்து ‘செல்வி சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் சென்னை தாமரைச்செல்விப் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சிவரமணி, 1991 மே 19-ல் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, பெண் இன்று, 03.06.18)