எழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள்


இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. தங்களுக்கெனத் தனித்த மொழியை இலங்கைத் தமிழ் இலக்கியம் சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. வேதனை நிரம்பிய அவர்களது வாழ்க்கையைச் சித்திரிக்க உணர்ச்சிகரமான மொழியே அந்த இலக்கியத்தை முதன்மையாக இயக்கியது. கவிதைகள், பாடல்களுக்கு அருகில் இருந்தன. ஆனால், சில அபூர்வமான விதிவிலக்குகள் உண்டு. புதிய சொல்லில், புதிய சுவையில் தமிழின் மிகச் சிறந்த கதைகள், இலங்கையிலிருந்து வந்துள்ளன. அம்மாதிரியான கதைகளை எழுதியவர்களுள் ஒருவர் எழுத்தாளர் குந்தவை.
குந்தவையின் முதல் கதை ‘ஆனந்த விகடன்’ இதழில் 1963-ல் வெளிவந்தது. தொடர்ந்து ‘கணையாழி’, ‘சக்தி’ போன்ற தமிழக இதழ்களில் எழுதியிருக்கிறார். தமிழின் முன்னோடிப் பெண் எழுத்தாளர் என அவரை முன்னிறுத்தலாம்.
இந்தியத் தமிழ் வாழ்க்கைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இலங்கை வாழ்க்கை. அசெளகரியங்கள் நிறைந்தது. அந்த வாழ்க்கை முறையிலிருந்து கதைகள் துளிர்ப்பது எளிது. ஆனால், அந்தத் துயரம் கதை சொல்லும் பாங்கில் ஒரு முடுக்கத்தைத் தந்துவிட அதிக வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சி வேகமும் மூர்க்கமும் கூடிவிடும். இந்த இடத்தில் குந்தவை விலகி நின்று பார்க்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரத்தைக்கொண்டு நம் காலத்தின் மிகக் கொடிய சண்டையைச் சித்திரித்துவிடுகிறார். இன உணர்வுக்கு அப்பாற்பட்டு சாமானிய மனுஷியைக் கொண்டு இதைச் சித்திரிக்க முயல்கிறார். 
அவரது ‘பெயர்வு’ கதையில் போரால் ஒரு ஜனக் கூட்டம் ஒற்றைப் படகில் இரவில் சிக்கிக்கொள்கிறது. யாழ்குடா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் சிவரஞ்சனி தன் மகனுடன் இருக்கிறாள். படகிலிருந்தவர்கள் மீது அலை நீரை வாரி இரைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் விளையாட்டாக இருந்த அது, அவளது சிறு பையனுக்குச் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படகுப் பயணத்துக்குச் சில நாட்கள் முன்பு சாம்பார் சமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களது சகஜமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
அவளது கணவன் ராணுவம் நெருங்கிவிட்டதாகச் சொல்கிறான். பிறகு ஒரே ஓட்டம்தான். நின்ற இடத்தில் உறங்கி, பறக்கும் ஹெலிகாப்டருக்குக் கீழே பதற்றத்துடன் உறங்கி, இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இடையில் இரு சிறு பிள்ளைகளின் உடல்களை வேறு இவள் பார்த்திருக்கிறாள். அவளால் கண்களை மூட முடியவில்லை. மூடும் அவள் கண்கள் வழிக் காட்சிகள்மூலம் இலங்கைப் போரின் பாதிப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குந்தவை.
குண்டுகள், கண்ணிவெடிகள் எதுவும் இல்லை. காவியத்தன்மையான விவரிப்புகளும் இல்லை. மக்களின் புழங்குமொழியில்தான் கதைகளைச் சொல்கிறார். கனமான சொற்களின் பயன்பாட்டால் வாசகனுக்குச் சுமை ஏற்ற அவர் விரும்பவில்லை. அதுபோல அவர் தேர்ந்தெடுக்கும் கதையில் அவருக்கு நல்ல பிடிபாடு இருக்கிறது. அதனால் கதையைப் பிரயாசம் இல்லாமல் சட்டெனச் சொல்லிவிடுகிறார். 
ராணுவச் சோதனைச் சாவடி அருகே பேருந்துக்காகக் காத்திருக்கும் இளம் பெண்ணின் மனத் திட்டுகளை ‘இறுக்கம்’ கதை சொல்கிறது. பதற்றம் மிக்க சூழலுக்கு இடையே இருக்கும் ஒரு சகஜமான வாழ்க்கையைச் சித்திரிக்க முயல்கிறது கதை. பேருந்து வரவே இல்லை. அவள் தனியாகச் சோதனைச் சாவடிக்கு அருகில் நிற்கிறாள். ராணுவத்தினரின் சோதனையைத் தனக்குள் கேலிசெய்து சிரித்துக்கொள்கிறாள். கோயிலடிவரை நடந்தால் அங்குப் பேருந்துகள் கிடைக்கும் என நடக்கிறாள். அங்கு நடக்கும்போது எல்லாவற்றையும் கேலியாகப் பார்க்கும் அந்தச் சின்னக் குமரிக்கு பதற்றம் வந்துவிடுகிறது. இதற்கு முன்பு அங்கு நடந்த சம்பவங்களின் நினைவு தரும் பதற்றம் அது. போரும் அதன் வன்முறைகளையும் இம்மாதிரி நினைவுகளாகவே பெரும்பாலான கதைகளில் வெளிப்படுகிறது. குருதிக் கரை படிந்த குழந்தைளின், பெண்களின் ஆடையை மட்டும் ஒரு போரின் குரூரத்தைச் சொல்ல விளையும் காணொளிக் காட்சிக்கு இணையாக குந்தவை கதைகளின் இந்த அம்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இலங்கை இலக்கியத்தைப் பொறுத்தவரை புலம்பெயர் இலக்கியம் என்ற தனிக் களமும் அதற்கு உண்டு. புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கையைப் பார்ப்பது, புறச் சூழலின் பண்பாட்டு முரண்களை எழுதுவது என அதையும் இரு வகைப்படுத்தலாம். இவற்றுக்கு முறையே எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். குந்தவை, புலம்பெயரவில்லை என்றாலும் புலம்பெயர் கதாப்பாத்திரங்களைக் கொண்டு அந்தப் பண்பாட்டு முரண்களையும் தன் கதைகளில் சித்திரிக்கிறார்.
‘திருவோடு’ கதையில் ஒரு பூப்புனித நீராட்டு விழா காணொளிமூலம், புலம்பெயர் வாழ்க்கையை விவரிக்கிறார். கனடாவில் நடந்த விழா அது. கதை சொல்லியின் சித்தியினுடைய பேத்திக்குத்தான் சடங்கு. அவர்கள் ‘வீடியோ பிளேயர்’ வழி அதைப் பார்க்கிறார்கள். பேத்தியான சிறுமி கட்டியிருக்கும் பட்டுச் சேலையை எடுக்க கனடாவில் தாங்கள் பட்ட பாட்டை சித்தி பெருமையாகச் சொல்கிறார். புலம்பெயர்ந்துவிட்டாலும் ‘பண்பாட்டைக் காக்க’ அவர்கள் படும் பாட்டை அவல நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். காஸெட்டில் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் கதைசொல்லி சொல்கிறாள், ‘விட்டுவிடு, ஸ்கிப்பிங் விளையாடப் போக வேண்டும் என்பது போன்ற பார்வை’ என்று. குந்தவையின் எல்லாக் கதைகளுக்குள்ளும் இம்மாதிரியான கேலிப் பேச்சுகள் உண்டு. வாழ்க்கையின் அபத்தங்களை ஒரு மேலான எள்ளல் வழியாகப் பார்க்கிறார். இதை அவரது விசேஷமான பண்பு என முன்மொழியலாம்.
இலங்கையின் போர் தந்த துயரம், புலம்பெயர் வாழ்க்கையின் பண்பாட்டுச் சிக்கல் என எல்லாவற்றையும் இந்தக் கதைகள் வழியாகப் பெண்கள் பக்கம் நின்று குந்தவை பார்க்கிறார். ஆனால், இதையெல்லாம் பெருங்கோபத்துடன் வெளிப்படுத்தவில்லை. மேலும் ஒருசார்பாகப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பெண்களின் அன்றாடச் செயல்களுக்குள் புகுந்து அது நிகழ்த்திய மாற்றம் என்ற ரீதியில், அதை அவர்களின் பார்வையில் சொல்ல முயல்கிறார். விசேஷமான இந்த அம்சம் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அவரை தனித்துவப்படுத்துகிறது.
...
யாழ்ப்பாணம் மாவட்டம் தொண்டைமானாறு கிராமத்தில் பிறந்தவர் குந்தவை. அவரது இயற்பெயர் சடாட்சரதேவி. ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ‘யோகம் இருக்கிறது’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, சென்னை எழுத்தாளார் சண்முகம் பொன்னுதரையின் (எஸ்.பொ.) முயற்சியால் அவரது ‘மித்ர பதிப்பக’ வெளியீடாக வந்துள்ளது. இவரது எழுத்து முயற்சிகளுக்கு லண்டன் பத்மநாப ஜயரும் ஊக்கியாக இருந்திருக்கிறார்.
                                                                                        (மே 06 2018, தி இந்து, பெண் இன்று)