இரு துர்காக்கள்


நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ‘செக்ஸி துர்கா’வுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ‘எஸ் துர்கா’ எனப் பெயர் மாற்றப்பட்டுத் திரைக்கு வந்திருக்கிறது. ‘ஒழிவு திவசத்த களி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற சனல்குமார் சசிதரனின் அடுத்த படம் இது.
‘எஸ் துர்கா’, ஆவணப் புனைவு (Docufiction) வகையைச் சேர்ந்த திரைப்படம். அதாவது ஒரு கதையைச் சொல்வதன் வழி ஒன்றை ஆவணப்படுத்தல் எனச் சொல்லலாம். ஒரு கதையின் வழி துட்டி வீட்டை ஆவணப்படுத்திய விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மலையாளத்தில் டாக்டர் பிஜூவின் ‘வலிய சிறகுள்ள பட்சிகள்’ உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
இந்தப் படம், கேரளத்தின் பிரசித்திபெற்ற அம்மன் வழிபாட்டுச் சடங்கான கருடன் தூக்கத்தை ஆவணப்படுத்துகிறது. கேரளத்தின் நெடுஞ்சாலையில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை இன்னொரு பக்கமாகத் தொகுத்துள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் அடுத்தடுத்த அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
படத்தின் மையக் கதாபாத்திரமான துர்காவும் கபீரும் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் நிற்கிறார்கள். சாலையில் வேகமாக நடந்துகொண்டே வாகனங்களுக்குக் கைகாட்டிக்கொண்டு நடக்கிறார்கள். ஒரு வாகனம் நிற்கிறது. அது ஒரு ஆம்னி வேன். அதற்குள் இளைஞர்கள் இருவர். இந்தப் பயணம்தான் படம்.
துர்கா, கபீர், ஆம்னியில் ஏறிக்கொள்ளும் மேலும் இளைஞர்கள் இருவர், துர்க்கை ஆகிய இவர்கள்தாம் படத்தின் மையக் கதாபாத்திரங்கள். இவர்கள் அல்லாமல் வெள்ளைச்சட்டைக்காரர்கள் இருவர், போலீஸ்காரர் மூவர், வாகன ஓட்டி ஆகியோர் வந்துசெல்கின்றனர். இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை அமானுஷ்யமானவை. த்ரில்லர் படத்தின் கொலைகாரனைப்போல், பக்திப் படத்தின் தெய்வத்தைப் போல் சட்டென்று இதில் அவதரிக்கின்றன. பின்னணியைச் சொல்லாமல் கதையிலிருந்து மறைந்தும் போகின்றன. துர்கா, கபீர் உள்பட இந்தக் கதாபாத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன, என்ன செய்கின்றன, என்ன செய்யப் போகின்றன எல்லாமும் அமானுஷ்யம்தான். இது பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சமாகப் படத்தில் வெளிப்பட்டுள்ளது.
துர்கா என்ற மையப் பாத்திரம் வட இந்தியாவைச் சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருப்பது படத்துக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. துர்கா உணரும் அந்நியத்தன்மை அவளது பதற்றம் ஆகிறது. அது பார்வையாளர்களின் பதற்றமாகவும் மாறுகிறது.
சனல் குமார் சசிதரன்

படத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு கதையைப் படிக்கக்கூடிய அனுபவம்போல் இருக்கிறது. நெடுஞ்சாலையில் துர்காவும் கபீரும் நடந்துசெல்லும்போது கேமரா சாலையில் ஒரு பக்கமாகப் பின்தொடர்கிறது. இது பார்வையாளர் சாலையில் நின்று இந்தக் காட்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. ஆம்னி வேனுக்கும் இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வேனிலிருந்து இறங்கி, நடுச்சாலையில் கபீரும் துர்காவும் ஓடும் காட்சிகளில்செயற்கை விளக்குகள் உபயோகிக்கவில்லை. அதனால் பார்வையாளர்களுக்கு சப்தம் மட்டும் கேட்கிறது. அது தரும் பதற்றம் கூடுதலாக இருக்கிறது. இந்த ஒளிப்பதிவுக்காக ரஷ்யாவில் தர்க்கோவெஸ்கி சர்வத் தேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை இதன் ஒளிப்பதிவாளர் பிரதாப் ஜோசப் பெற்றிருக்கிறார்.
நெதர்லாந்து, அர்மெனியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட 50 சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
நெடுஞ்சாலையில் மக்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். ஒரு காட்சியில் தனியாக நெடுஞ்சாலையில் நடப்பவர்களைத் தடுத்து கேள்வியாகக் கேட்கிறார்கள் வெள்ளைச்சட்டைகாரர்கள் இருவர்.
துர்கா, கபீரின் சப்தம் கேட்டு விளக்கிட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்க்கும் ஒரு வயதான தம்பதியினர், கொட்டாவியுடன் மீண்டும் தூக்கத்துக்குத் திரும்புகிறார்கள். இந்தக் காட்சிகள் வழியே ஜனநாயக அமைப்பின் காவலர்கள், கலாச்சாரக் காவலர்கள், மிஸ்டர் பொதுஜனம் என சமூகத்தின் எல்லா அவலங்களையும் வசனமில்லாமல் படம் விமர்சிக்கிறது.
இருக்கும் வசனங்களும் யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளன. கதையில்லாத படம் எனச் சொல்லப்படும் இதற்கு முடிவும் இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சினிமா முடிந்த பிறகும் துர்கா ஆம்னியில் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
ஒரு துர்கா நள்ளிரவில் துணிச்சலான ஒரு சாகசப் பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்க, இன்னொரு துர்கா, கடவுளாக வலம்போக அலங்காரம்செய்துகொண்டிருக்கிறாள். பயபக்தியுடன் ஆண்கள் நூற்றுக்கணக்கானோர் நேர்த்திக் கடனுக்காக தங்கள் உடல்களை ஊசியால் துளைத்துச் சன்னதம் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத் துர்க்கையை ஆண்கள் ‘செக்ஸியாக’ பார்த்துக் கடக்கிறார்கள்.
இந்த இரு துர்க்கைகளையும் ஆண் சமூகம் எதிர்கொள்வதில் உள்ள வேறுபாட்டைத் தான் ‘எஸ் துர்கா’ சித்திரிக்க முயன்றுள்ளது. அதில் அபூர்வமான வெற்றியையும் பெற்றுள்ளது.
(30, மார்ச், 2018, தி இந்து)