மலையாள இலக்கியத்தில் ‘குஞ்ஞிக்கா’ என அறியப்படும் புனத்தில் குஞ்ஞப்துல்லா இரு தினங்களுக்கு முன் கோழிக்கோட்டில் காலமானார். மலையாள நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் அவர். “அவன் குஞ்ஞப்துல்லா அல்ல, வலிய அப்துல்லா” (அவன் சின்ன அப்துல்லா அல்ல, பெரிய அப்துல்லா) என மலையாளத்தின் மகத்தான எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரால் பாராட்டப்பட்டவர்.
புனத்தில் குஞ்ஞப்துல்லா 1950-களின் இறுதியில் தனது பதின்ம வயதில் கதை எழுதத் தொடங்கியவர். “கருவறையிலிருந்தபோது பேனா பிடிப்பதற்காக இரு கைகளை மூடிக்கொண்டு கதைகள் எழுதக் குதித்தவன் நான்” என புனத்தில் ஒரு நேர்காணலில் சொல்கிறார். எஸ்.கே.பொற்றேக்காடு, பி.கேசவதேவ், தகழி சிவசங்கரப் பிள்ளை, உறூப் ஆகியோர்களின் எழுத்துகள்தான் புனத்தில் என்னும் எழுத்துக்காரன் உருவாக உந்துதலாக இருந்தன. இவர்களுள் இஸ்லாமியர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு கதைகள் எழுதிய உறூபே, புனத்திலை மிகவும் பாதித்த எழுத்தாளர். உறூபின் கையிலிருந்து 38-ம் வயதில் கேரள சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதை புனத்தில் பெருமையாகக் கருதினார். வைக்கம் முகம்மது பஷீரை விடச் சிறந்த எழுத்தாளர் உறூப் என புனத்தில் அவரைக் கொண்டாடியிருக்கிறார். ஆனால், புனத்தில் தொட முடிந்த சிகரமாக விளங்கியவர் பஷீர்தான். பிற்கால நேர்காணல்களிலெல்லாம் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
எம்.டி.வாசுதேவன் நாயர் மூலம் மலையாள இலக்கிய உலகில் புனத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டார். எம்.டி. வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழ்ப்
பொறுப்பில் இருந்தபோது புனத்திலின் கதையை முதன்முதலில் பிரசுரித்தார்.
புனத்தில், அவரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றியும் வந்தார். “கதைகள்
எழுதும்போது, எம்.டி., என் மனத்தில் தோன்றி அதிலுள்ள அபத்தங்களைச்
சுட்டிக்காட்டுவார். அவருக்குப் பயந்து பயந்துதான் கதைகள் எழுதுவேன்” எனச்
சொல்லியிருக்கிறார் புனத்தில்.
தொடக்கத்தில் சிறுகதைகள் மூலம் கவனம்
பெற்றவர். நேரடியான கதை சொல்லும் பாங்கிலிருந்து விலகி நவீனக் கதைகளைப்
படைத்துள்ளார். ஒரே கதையில் காலத்தைக் கடந்து செல்லும் மனிதன் கடைசியில்
ஒரு குரங்காகி மணிக் கூண்டிலிருந்து விழுந்து மரிப்பான். ‘லோகாவசானம்’
என்னும் இந்தக் கதை மலையாளத்தின் சிறந்த கதைகளுள் ஒன்று. ‘ஜீவச்சவங்கள்’,
‘கத்தி’ இன்றும் மலையாள வாசகர்களால் ஓர்மைக்கப்படும் கதைகள்.
பொங்கும்
அதீத உணர்ச்சி வெளிப்பாடுகள், காவியங்களையொத்த விவரிப்புகள் என
நாடகத்தனமாக இருந்த மலையாள இலக்கியத்தைக் காத்திரமான யாதார்த்தத்தை நோக்கி
நகர்த்தியவர்களில் புனத்தில் முக்கியமானவர். அறிவார்த்தத்துக்கு
அப்பாற்பட்டு ஜனங்களின் மொழியை அவர் தன் கதைகளில் கைக்கொண்டார்.
கற்பனாசக்தி, தயவுதாட்சண்யமற்ற யதார்த்தம் இவற்றை அவரது படைப்பின்
அம்சங்களாகக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகரில் படித்த அனுபவம்
அவரை மலையாள உலகத்தை வெளியிருந்து பார்க்கவைத்தது. சொந்த நிலத்தை
வெளியிருந்து பார்க்கும் தன்மை, அவரது கதைகளுக்கு வலுசேர்த்தது.
இந்த
அம்சத்தால் அவர் மலையாளத்தின் தனித்தன்மை கொண்ட எழுத்தாளரானார். 36-ம்
வயதில் அவர் எழுதிய ‘ஸ்மாரக சிலகள்’ நாவல் அவரை மலையாள இலக்கியத்தின்
முக்கியமான ஆளுமையாக மாற்றியது. இந்த நாவலுக்காக அவர் இந்திய அரசின்
சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார்.
மலபார் பகுதியில் வடகரையை
அடுத்துள்ள காரக்காடு என்னும் கிராமத்துக் கதைதான் இந்த நாவல். உலகின்
மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் காப்ரியேல் கார்ஸியா
மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுடன் ஒப்பிடத் தகுந்த ஒன்று.
மார்க்கேஸின் நாவல் மகோந்தோ என்ற கற்பனையான லத்தீன் அமெரிக்க கிராமத்தின்
கதையாக விரிகிறது. அதைப் போல் ‘ஸ்மாரக சிலகள்’ காரக்காடின் கதையைச்
சொல்கிறது. மாக்கேஸின் நாவில் ஒரு மிகப் பெரிய காலம் விரிவதுபோல், வாசகன்
முன்பு மிகப் பெரிய பரப்பாகக் காலத்தை புனத்திலும் விரித்துவைத்திருப்பார்.
பொருள்களுக்குப் பெயர் சூட்டப்படாத காலத்தைச் சேர்ந்தது மார்க்கேஸின்
நாவல். புனத்திலின் இந்த நாவல் திட்டமான நவீன வாழ்க்கை உருவாகாத
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது.
மார்க்கேஸின் நாவலில் மாயாஜால சம்பவங்கள் உள்ளதுபோல் இந்த நாவலிலும்
மந்திரக் கட்டளைக்கு ரயில் கட்டுப்படுகிறது; தேநீர் நிலையங்கள்
மறைந்துபோகின்றன. விநோதமான உறக்கமின்மை நோயால் மகோந்தோவாசிகள்
பீடிக்கப்படுவதுபோல காரக்காடின் மக்கள் காலராவுக்கு ஆளாகிறார்கள்.
எம்.டி.வாசுதேவன்
நாயர் கதைகளின் மையமான குடைசாயும் நிலக்கிழாரின் வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டதுதான் இதுவும். தனது பால்ய கால மனிதர்களின் கதை என புனத்தில் இதைப்
பற்றிச் சொல்கிறார். அந்தக் காலகட்ட வாழ்க்கையின் கஷ்டங்கள், வறுமை, நீதி,
அடிமைத்தனம், காமம் எனப் பல்வேறு அம்சங்களை இதில் விவரித்திருப்பார்.
தமிழில் தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் சில
அம்சங்கள் ‘ஸ்மார சிலக’ளுடன் ஒப்பிடத் தகுந்தவை. தங்ஙள் கதாபாத்திரம்
அந்தக் கதையில் உண்டு. ஆனால், மையம் அதுவல்ல. இஸ்லாமியக் கதை என்ற
விதத்தில் சில பொருத்தப்பாடுகள் உண்டு.
இந்த
நாவலின் தங்ஙள் கதாபாத்திரம் ஓர் அநாதைத் தாய்க்குப் பிறந்த குழந்தையைத்
தத்தெடுத்து தன் குழந்தையைப் போல் போற்றி வளர்க்கிறது. அதே சமயத்தில்
மீனவப் பெண்களின் மூலம் அவரது இன்னொரு குரூர முகமும் வெளிப்படுகிறது.
இந்தக் கதாபாத்திரம் வாசக மனத்தில் நன்மைக்கும் தீமைக்கும் இடையில்
ஊசலாடிக்கொண்டே இருக்கும்படி கதையை நகர்த்திச் செல்வார். ஒரு கிராம
சரித்திரம் அல்லது ஒரு நிலக்கிழாரின் வீழ்ச்சி என்பதற்கு அப்பாற்பட்டு இந்த
நாவலை நவீனத்துவத்தின் தொடக்கமாக புனத்தில் முடித்திருப்பார்.

‘இஸ்லாமியனாகப்
பிறந்த இந்து நான்’ என அறிவித்தவர். தனது பெண் தொடர்புகளையும்
பகிரங்கமாகத் தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னவர். ‘பாஜக அனுதாபி, ஆனால்
நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்’ என்றவர்.
இவற்றால் அவரது கடைசிக் காலத்தில் விமர்சனத்துக்கு
உள்ளானவர். இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு வாசகரை மனத்தில் கொண்டு
கதைகளை ஒழுக்க மதிப்பீட்டுடன் எழுதாமல், தன் மனச் சித்திரத்தைத் துணிந்து
எழுதி, அந்த எழுத்துடன் வாசகரைக் கூட்டிச் சென்ற எழுத்தாளர் அவர். இந்த
விதத்தில் அவரது மறைவு மலையாள இலக்கியத்துக்கு மாபெரும் இழப்புதான்.
குளச்சல் மு. யூசுப் மொழிபெயர்ப்பில் அவரது
‘மீஸான் கற்கள்’, ‘மஹ்ஷர் பெருவெளி’ நாவல்கள் காலச்சுவடு வெளியீடாகவும்
சு. ராமன் மொழிபெயர்ப்பில் ‘மருந்து’ என்ற நாவல் கிழக்கு வெளியீடாகவும்
வெளிவந்திருக்கிறது.
தி இந்து, 29.10.17