தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்


தேவதச்சன்

கவிதை, இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் பழமையானது; அலங்காரங்களுடன் ஆனது. மொழி வரிவடிவம் பெற்றதும், இலக்கியம் அலங்காரங்களைக் களைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டது; நாவல், சிறுகதை வடிவங்கள் பிறந்தன. கவிதையின் தேவை கேள்விக்குள்ளானபோது அதுவும் தன் ஒப்பனைகளைக் களைந்து உரைநடையானது; புதுக்கவிதை தோன்றியது. ஆனால் இதற்குப் பிறகும், புதுக்கவிதை பிறந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும், ‘கவிதையின் தேவை என்ன?’ என்ற கேள்வி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1970-களில் எழுதத் தொடங்கி இன்றுவரை புதுமையைத் தக்கவைத்திருக்கும் தேவதச்சனின் கவிதைகளைத் வாசிக்கும்போது இந்தக் கேள்விக்கான பதிலை உணர்ந்துகொள்ள முடிகிறது.‘கொக்கின் வெண்ரோம’ சிலுசிலுப்பு போன்ற மென் உணர்வுகள் கவிதை வழியாக மட்டுமே வெளிப்படக்கூடியவை. உரைநடைக்கு அந்தத் திராணியில்லை என்றுதான் தோன்றுகிறது. தேவதச்சனின் கவிதைகள், ‘கவிதையின் தேவை’-க்குத் தற்காலச் சான்று.

...

தேவதச்சனின் கவிதைகள் அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவர் ‘இமைகளின் மொழி’யிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). இந்த நெருக்கமான காட்சி இடுக்குகளின் வழியாக நமக்குப் புலப்படாத ஒரு கணத்தை எழுப்பிவிடுவார். இதன் மூலம் கவிதை ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது. இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது. உதாரணமாக இந்தக் கவிதையின் காட்சி,
70களில் தேவதச்சன்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று

ஏதாவது ரயில்வே கேட்டில் பார்த்திருக்கக்கூடிய ஒரு பழக்கப்பட்ட காட்சி. ஆட்டிடையன் ஒருவன்தான். ஆனால் தூக்குவாளியும் தொரட்டியும் தலைப்பாகையும் எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன. மழையும், காற்றும்கூடப் பன்மையாகின்றன. இதுதான் அசாதாரணம். யாளிகள் கொண்டும், புரண்டு கிடக்கும் மலைத் தொடர்கள் கொண்டும் உருவாக்க முடியாத கவிதைக்குரிய விநோதம். புதுக்கவிதைக்கு இந்த அசாதாரணம் அவசியம் என்கிறார் அதன் தந்தையாகப் போற்றப்படும் க.நா.சுப்ரமண்யம். ‘எண்ணிலிறந்த பகல்கள்’ என்ற சொல்லில் இந்தக் கவிதையைத் திறக்கச் செய்கிறார். அதே ரயில்வே கேட். ஆனால் காட்சி, தினம் தினம் புதிதாக நிகழ்கிறது. ‘எப்படா திறக்குமென்று’ அலுப்புடன் தினமும் காத்திருக்கிறான் இடையன்.

...

தேவதச்சனின் கவிதைமொழியும் எளிமையானது; மிக நெருக்கமானது. ஒருவிதத்தில் பார்த்தால் இது கவிதைக்கு நேர் எதிரான தன்மை. மக்கள் மொழியில்தான் கவிதை எழுதுகிறார். ‘பேருந்து நிலையம்’ என்ற சொல்லுக்கு மாறாக ‘பஸ் நிலையம்’ என்றே பயன்படுத்துகிறார். அவர் வாழும் கரிசல் நிலத்தின் சில ‘வழக்குச் சொற்க’ளும் அப்படியே கவிதைகளில் வெளிப்படுவதும் உண்டு. மேற்சொன்ன கவிதையிலும் ‘எப்படா திறக்குமென்று’ சொல்கிறார். ஆனால் எளிய மொழி, நெருக்கமான காட்சி வழியாக ஒரு புதிர் அனுபவத்தை உருவாக்கிவிடுகிறார். அது வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்தும் அனுபவம்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கவிதைகள் இப்போது மூன்றாம் தலைமுறையில் இருக்கின்றன. இந்த இடைவெளியில் பல முக்கியமான சமூக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இவற்றை தேவதச்சனின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆண்டாளும், சிபிச்சக்கரவர்த்தியும், பாரதியும் கவிதைகளுக்குள் புத்தாக்கம் பெறுவதுபோல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கையும் பதிவாகிறது. பஸ், முரட்டு லாரி, ரயில், சைரன் ஒலி, ரவுண்டானா, சிக்னல், வாகனச் சோதனை எல்லாமும் வருகின்றன. கண்ணாடி பாட்டில் உடையும் க்ளிங் ஓசை, சைக்கிள் பெல்லின் க்ளிங் க்ளிங் சத்தம், காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் இரைச்சல் எல்லாமும் இருக்கின்றன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை, தற்கொலை செய்துகொண்ட நகைச்சுவை நடிகை, அடிக்கடி நிகழும் மின்வெட்டு போன்ற சமகாலமும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் இந்தச் சமகாலச் சுமையை தேவதச்சனின் கவிதைகள் இலகுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றன.

...

சிறகு அசையும் மென்மையும், நிசப்தம் உண்டாக்கும் சப்தமும் தேவதச்சன் கவிதை அம்சங்களில் முக்கியமானவை. இவை தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே வருபவை.‘துவைத்துக் கொண்டிருந்தேன்/ காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்/அடுத்த துணி எடுத்தேன்/காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்’ இதே சப்தம் மற்றொரு கவிதையில் காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் சப்தமாக ஒலிக்கிறது. பூட்டப்பட்டிருக்கும் பானு வீடு உருவாக்கும் சப்தமாக கேட்கிறது. நிசப்தம் போடும் குருவிகளின் சப்தத்திற்கும் பானு வீட்டின் சப்தத்திற்கும் ஆன கால இடைவெளி சில ஆண்டுகள் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அனுபவத்தை தேவதச்சன் புதிதாகத்தான் சந்திக்கிறார். இல்லாமை உருவாக்கும் இருப்பு அவரது கவிதைகளில் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் ஓர் அம்சம்.

...

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்/நீராலானவன் என்று
அதன் குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே தெறிக்கிறேன் நான்

இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை அவர் மற்றொரு கவிதையில் வெண்ரோமச் சிலுசிலுப்பு என்கிறார். ஒரு மைனாவைப் பார்க்கிறோம். அதன் சிறகசைவு நம் நினைவில் இருக்கும் வேறோர் அனுபவத்தைத் தூண்டுகிறது. அந்த நினைவு உண்டாக்கும் சிலுசிலுப்பால் நம் மீது நாமே தெறித்துக்கொள்கிறோம். இது விளக்க முடியாத ஒரு பேருணர்வு, பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி, பல்லாயிரம் காட்சிகளில் ஒரு காட்சி. இதுதான் தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்.