சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம்
என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். ஆனால் பாரதிக்குப் பிறகான
புதுக்கவிதையின் மற்றொரு கிளையாக இருந்த ந.பிச்சமூர்த்தியின் அபிப்ராயம் மாறுபட்டு
இருந்தது. அவர் மரபின் அலங்காரங்களைத் தக்கவைக்க விரும்பினார். க.நா.சு.
முன்மொழிந்த மரபற்ற தன்மையைத்தான் இன்று புதுக்கவிதை தன் இலக்கணமாகச் சுவீகரித்துக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய நவீன கவிதையின் முகம்
மாறியிருக்கிறது. பிச்சமூர்த்தியும்
க.நா.சு.வும் முரண்பட்ட மையத்திலிருந்து அது முளைத்தெழுந்திருக்கிறது. இந்த
இடத்தில் வெயிலின் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.
வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன்
சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார்.
நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர்
க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில
அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண
சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள
இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.
தொண்ணுறுகள் வரை பெரும்பாலான கவிதைகளை இம்மாதிரியான கோட்பாட்டுக்குள்
வரையறுக்க முடியும். தொண்ணுகளின் தொடக்கத்தில்தான் இந்தியா உலகமயமாக்கலுக்குள்
நுழைகிறது. இந்தச் சமூக நிகழ்வு, தமிழ்க் கவிதையை வெகுவாகப் பாதித்தது.
உலகமயமாக்கலால் நெருக்கடிக்குள்ளான வாழ்க்கையை வெவ்வேறுவிதமான வெளிப்படுத்தும்
களமாகக் கவிதைகள் பயன்பட்டன. உலகமயமாக்கலாலின் பாதிப்பு நூதனமானதாக இருந்தது.
தீர்மானிக்க முடியாததாகவும் இருந்தன. அதுவரை காத்துவந்த ஒழுக்க நெறிகள், பண்பாடு
எல்லாம் கேள்விக்குள்ளாயின. இந்த இடத்தில்தான் கவிதைகளுக்கு ஒரு மூர்க்கம்
தேவைப்பட்டது. அதனால் கவிதை எஞ்சிய கட்டுப்பாட்டுகளையும் தகர்த்து எறிந்தது.
அதற்காக அவை எல்லாம் உலகமயாக்கலுக்கு, நகரமயமாக்கலுக்கு எதிரான கவிதைகள் எனக் கொள்ள
முடியாது. ஆனால் அதுதான் நிமித்தமாகச் செயல்பட்டது என்பதைத் திடமாகச் சொல்ல
முடியும். அதன் வழியே பலதரப்பட்ட மக்களின் குரல் கவிதைக்குள் ஒலிக்கத் தொடங்கின.
இந்தக் காலகட்டத்தில்தான் அதற்கு முன்பு வரை கவிதைகளில் ஆதிக்கம் செலுத்திவந்த தனி
மன வெளிப்பாடு குறைந்து சமூக மனம் வெளிப்படத் தொடங்கியது. வடிவ ரீதியில் கவிதை
தனது அசாதாரணத்தைத் தளர்த்திக்கொண்டது. மாறாக மூர்க்கம் அடைந்தது. இதன்
தொடர்ச்சியாக வெயிலின் கவிதைச் செயல்பாட்டை அணுக வேண்டும்.
தொண்ணுறுகளில் தொடங்கிவிட்ட உலகமயமாக்கல் என்ற சமூக நிகழ்வின் பாதிப்பு இரண்டாயிரத்திற்குப்
பிறகு தீவிரமடைகிறது. வெய்யிலும் அப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். அதன்
விநோதமான பாதிப்புகள்தாம் அவரது கவிதையின் பாடுபொருள்களாக ஆகின்றன. குடிநீர்
விற்பனைக்கு வந்துவிட்டதைச் சொல்லி வெய்யிலின் கவிதை ஒன்று விசனப்படுகிறது. தூக்க மாத்திரைகள், பொக்லைன்
எந்திரங்கள், வற்றும் ஜீவ நதி ஆகியவை எல்லாம் இந்தச் சமூக நிகழ்வின்
பாதிப்புகளாகக் கவிதைக்குள் வருகின்றன. மருத்துவம் ஒரு தொழிலாக வளம்
பெற்றிப்பதையும் வெய்யிலின் கவிதைகளில் காண முடிகிறது. சம்சாரியின் வீடு மாத்திரை,
மருந்துகளால் நிறைந்துகிடக்கிறது.
இந்த அம்சத்தில் லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரை வெய்யிலுடன்
ஒப்பிட்டுப் பார்க்க முடியும். யவனிகாவின் அந்நியத்தன்மை இன்றைக்குப் பெரும்பாலான
கவிஞர்களைப் பாதித்திருக்கிறது. அந்தளவுக்கு மணிவண்ணனின் கூர்மையும் அசாதாரணமும்
இன்றைய கவிஞர்களைப் பாதிக்கவில்லை. இன்றைக்குள்ள கவிதைகள் பெரும்பாலானவை
யவனிகாவிலிருந்து வேர் பிடித்துள்ளன. அவற்றுக்கு தமிழ்ப் புதுக்கவிதை மரபுடன்கூடத்
தொடர்பில்லை. ஆனால் வெய்யில் கவிதைக்கான மையமாக இந்த மூன்று அம்சங்களும் உள்ளன.
பாடுபொருளின் தீவிரம் கூடியிருக்கும் கவிதைகளுக்குள் வெய்யில் அசாதாரணத்தைத்
திணிப்பதில்லை. அதன் போக்கில் சுதந்திரத்தைத் தருகிறார். ஆனால் கூர்மை, அவரது
கவிதைகளில் திடமாகத் தொழிற்படுகிறது.
°
அரசியல் தொடக்க காலத்திலிருந்தே கவிதையில் தொழிற்பட்டுவந்துள்ளது. ஆனால்
தொடக்கத்தில் கவிதைகள் அரசியலின் பாகமாகத் தங்களைக் கருதிக்கொண்டதில்லை. இதை
‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாரதியின் வரிகளுடன் ஒப்பிடலாம். அல்லது இயக்கம்
சார்ந்த கூக்குரலாக வெளிப்பட்டன. ஆனால் நிலத்தை, மரங்களை, கால்நடைகளை இழந்த
சம்சாரியின் குரல்கள் அதற்குப் பிறகுதான் நேரடியாக வெளிப்பட்டன. அப்படியான
குரல்களுள் ஒன்று வெய்யிலினுடையது.
தொழிற்சாலை கன்வெயர் பெல்ட்டில் காத்திருக்கும் தொழிலாளியாக, நிலத்தை இழந்த
சம்சாரியாக, வாழ்க்கைப்பாட்டை இழந்த ஒரு நாட்டார் கதை சொல்லியாக எனப் பல நிலைகளில்
கவிதைக்குள் ஓர் அங்கமாக வெய்யில் வருகிறார். அதனால் இயல்பாக அவருக்கும்
வெளிப்பாட்டுக்குமான இடைவெளி கவிதைகளில் இல்லை. இந்த இடத்தில்தான் கவிதைக்குரிய
லட்சணங்களாக முன்னிறுத்தப்பட்ட சில அம்சங்களை வெய்யிலின் கவிதைகள் புறக்கணிக்கின்றன.
அல்லது திட்டமிட்டு உருவாக்கவில்லை எனலாம். மறைபொருளையோ அசாதாரணத்தையோ வாசக
அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வெய்யில் உருவாக்கவில்லை. ஆனால் திறந்த சொற்களுடன்
முன்னேறும் கவிதையில் கூர்மையான உருவகத்தை
உருவாக்கிக் காட்டுகிறார். அதிலே கவிதை பிரம்மாண்டமாக எழுந்துவிடும் அனுபவம்,
வாசகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் தன் தொழில் அதுவல்ல எனக் கவிதையைத் தொடர்கிறார்.
‘பாட்டாளிகளின் சூதாட்டம்’ என்ற கவிதையில் கன்வெயர் பெல்ட்டுடன் காலத்தைக்
கழிக்கும் ஒரு தொழிலாளியாகக் கவிதையைச் சொல்கிறார். கன்வெயர் பெல்ட்டுகள் வல்லமையுடன்
அவனை இயக்கின்றன. அவற்றிடமிருந்து விடுதலைபெற்று வீடு திரும்பும் அவன்,
தார்ச்சாலையை நீண்ட கன்வெயர் பெல்ட்காகக் கற்பனைசெய்கிறான். அதில் ஒரு சாதனமாக
அவன் நடந்துபோகிறான். கன்வெயர் பெல்ட், ஆலை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு
வீட்டுக்கு வந்து உறங்குகிறான். இந்த இடத்தில் வெய்யில், ‘ஒரு கடல் நாகம்
எல்லையின்மையின் அமைதியில் நீந்துகிறது’ என்ற ஒரு உருவகத்தை எழுப்பிக்
காட்டுகிறார்.
வெய்யிலின் மொழிப் பிரயோகம் சுயம்புலிங்கம், என்.டி.ராஜ்குமார் ஆகியோரின் கவிதைகளில் வெளிப்பாட்டு
மொழியுடன் ஒப்பிடத்தகுந்தவை. சுயம்புலிங்கத்தின் வெள்ளந்தித்தனமும் ராஜ்குமாரின்
சந்நதமும் இவரது கவிதைக்குள் விநோதமாகச் சுருண்டு கிடக்கின்றன.
அப்பா தற்கொலை செய்துகொள்ள வாங்கிய பூச்சிமருந்து பாட்டிலில் சாக்குத்
தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயும் கொண்டு
அம்மா ஒரு விளக்கை உருவாக்குகிறார். அதுபோல் பதின் மூன்று விளக்குகள். பதின்
மூன்று தற்கொலைகள் (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி). ஒரு சம்சாரியின் தற்கொலையைச்
சொல்லும் இந்தக் கவிதை தாழ்ந்த குரலில் ஒரு முனகலாக வெளிப்பட்டுள்ளது. அதேசமயம்
‘என் மூதாதையின்/ திரமான முதுகெலும்பால் செய்யப்பட்ட/ கூடிய அம்பு / பெருந்தாகம்
கொண்டிருக்கிறது/ …மண்டியிடு/ என் வரண்ட பூமியில் ரத்தம் சிந்து’ (குற்றத்தின்
நறுமணம்)’ என்ற கவிதையில் குரலை இறுக்கிக் கட்டியிருக்கிறார். இந்தக் கவிதையின்
வடிவமும் பனையேறி உடலைப் போல் முறுக்கேறியிருக்கிறது. அற்புத விளக்குகள் கவிதை,
நோய்மையின் தளர்வுடன் இருக்கிறது.
இந்த இரு கவிதைகளுமே சம்சாரியிடமிருந்துதான் வெளிப்படுகிறது. ஒன்று
யாதார்த்தத்துக்குச் சிரம் கொடுத்துச் சாய்கிறது. மற்றொன்று யாதார்த்துக்கு
மாறாகச் சிரமெடுக்கத் துணிகிறது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வெய்யிலின்
கவிதைகள் இந்த முரண்பாட்டில் இயங்குபவைதாம்.
அவரது கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பான ‘குற்றத்தின் நறுமணம்’ என்னும் தலைப்பே
ஒருவிதத்தில் அவரது கவிதைகளின் ஆதாரம் எனலாம். குற்றத்தின்பால் அவரது கவிதைகளுக்கு
அளவில்லாத ஈர்ப்பிருக்கிறது. குற்ற உணர்வைத் தரக்கூடிய அறத்தின் கழுத்தை ஒரு
கவிதையில் அறுத்துவிடுகிறார். கை, கால்கள், அடிவயிறு, தசை, இருதயம் என உடலின் மற்ற
பாகங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குற்றத்தின் பொருட்டு
கவிதைக்குள் நடக்கின்றன. ஆனால் இவை சமூகப் பின்புலத்துடன் ஆராயப்பட வேண்டியவை என்பதைத்
தன் கவிதைகள் மூலம் சொல்கிறார் வெய்யில்.
காமமும் குற்றத்தின் அம்சமாக வருகிறது. சேரனின் கவிதைகளின் காமத்தைப் போல்
வன்முறையாக, வாதை தருவதாக வெளிப்பட்டுள்ளது. கைக்கிளை, பெருந்தினை, காரைக்கால்
அம்மையார், கண்ணகி எனக் காமத்தைப் பிரயாசையுடன் பலவிதமாக அடையாளப்படுத்த
முயல்கிறார் வெய்யில். அதுபோலக் காமத்தை வெய்யிலின் கவிதைகள் புனிதமானதாக, வேதாந்த
ரகசியமாகப் பார்க்கவில்லை. ‘கஞ்சா புகைக்கும்போது ஏற்படும் மூளைச் சுர்’ எனத் தன்
உசரத்துக்கு அதை வளைத்துப் பார்க்கிறது. அவரது இந்தக் காமத்திற்குக்
குற்றவுணர்வும் கள்ளத்தனமும் உண்டு.
ஒருவிதத்தில் பார்த்தால் பாவமான யதார்த்தைக் கவிதைக்குள் மீண்டும் மீண்டும்
நிகழ்த்துவதை வெய்யிலின் கவிதைகள் விரும்பவில்லை. ஒரு மந்திரவாதியைப் போல்
யதார்த்திற்கு மாறான குரூரமான அபூர்வங்களைக் கவிதையின் மூலம் நிகழ்த்த
முயல்கிறார். கவிதைக்குள்ளிருக்கும் ஈர்ப்பூட்டும் கொலைகள், குருதி சொட்டும் ஒரு
புரட்சி, கைகூடாக் காமங்கள் என எல்லாம் அந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகள் எனலாம்.
- மண்குதிரை
அம்ருதா, செப்டம்பர், 2018
அம்ருதா, செப்டம்பர், 2018