சிவப்பும் வெண்மையும் ஒரே வண்ணம்தான் - கிம் கி டுக் நேர்காணல்



உங்களுடைய ஸ்ப்ரிங் சம்மர்… படத்துடன் ஒப்பிடும்போது சமீபத்திய படமான மோயிபஸ்ஸில் வெளிப்படும் வன்முறை தனித்துவமானதாக இருக்கிறது...

என் பார்வையில் இரண்டும் ஒன்று. இரண்டிலுமே நான் சொல்ல விரும்புவது இந்த வாழ்க்கை மிக அழகானது என்பதைத்தான். முதல் படத்தில் நீங்கள் பார்ப்பது அழகை. இரண்டாவது படத்தில் பார்ப்பது தனித்துவமான வன்முறையை. என்னளவில் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே அழகானவை. ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்இல் மறுபடியும் ஒரு ஸ்ப்ரிங் வருகிறது. இதில் வாழ்க்கையின் சுழற்சியைச் சொல்கிறேன். மேலும் என் படங்களில் உடலின் விஞ்ஞானத்தை விவரிக்க விரும்புகிறேன்.

உடலின் விஞ்ஞானம் என்றால் என்ன?



நான் ஒரு குடும்ப அமைப்பை உடலின் அமைப்பின் வழியாக, அதன் இயக்கத்தின் வழியாகச் சொல்கிறேன். எளிமையாகச் சொன்னால் இவையெல்லாவற்றையும் நான் பிறப்புறுப்பின் வழியாகச் சித்தரிக்க விரும்புகிறேன்.

நார்சிச மனநிலை ஒரு கலைக்கு முக்கியமானதாகக் கருதுகிறீர்களா?

ஆம். ஓர் இயக்குனராக அது எனக்கு முக்கியமானதுதான். மேலும் நார்சிசம் கலைகளின், வாழ்க்கையின் ஓர் அம்சமாகவும் இருக்கிறது.

ஸ்ப்ரிங்…இல் தொடங்கி மோயிபஸ் வரைக்குமான உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்?



ஸ்ப்ரிங் லாங் ஷாட்டில் எடுத்த படம். அதில் நீங்கள் உலகத்தின் அழகைப் பார்க்க முடியும். லாங் ஷாட்டில் பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள் வழியாக வாழ்க்கையின் அழகு வெளிப்படுவது இயல்பானது. என் அடுத்த அடுத்த படங்களில் நான் குளோஸ் ஷாட்டிற்குப் போனேன். மனித வாழ்வை மிக நெருக்கமாகப் படம் பிடித்தேன். அவ்வளவுதான். அதன் இயல்பைப் போல அது வன்முறையாக இருக்கிறது.

உங்கள் படங்களில் புத்த தத்துவம் இருக்கிறது. நீங்களோ வன்முறையையும் படம் பிடிக்கிறீர்கள்.

வன்முறையும் புத்தமும் பார்ப்பதற்கு வெவ்வேறாகத் தெரிகிறது. ஆனால் நான் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். நல்லதைப் போலத்தான் கெட்டதும் இருக்கிறது. சிவப்பும், வெண்மையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரே வண்ணம்தான்.

உங்கள் படங்கள் வன்முறைகளைத் தத்ரூபமாகச் சொல்கின்றன. ஆனால் தீர்வுகள் சொல்லப்படுவதில்லையே?

குடும்ப அமைப்பில் உருவாகும் வன்முறைகளைச் சொல்கிறேன். அந்த வன்முறைகள் உருவாகும் பின்னணியையும் சொல்கிறேன். பலருக்கு வன்முறைகள் உருவாகுவதற்கான காரணங்கள் தெரிவதில்லை. அதை என் படங்கள் சொல்கின்றன. அதன் மூலம் கேள்விகள் எழும்புகின்றன இல்லையா? இவையே தீர்வு காணக் கூடிய வழிகள்.

புத்த தத்துவத்தின் நிர்வாணாவை அடையும் வழியாக வன்முறையைப் பார்க்கிறீர்களா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் பொருத்தவரை வாழ்க்கை என்பது வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது. துக்கத்திற்கும் இன்பத்திற்கும் இடையிலானது. அரி ரங் அரி ரங் பாடலைப் போல ஏற்ற இறக்கங்களுக்கிடையிலானது.

உங்களைப் பாதித்த சினிமா ஆளுமை யார்?

அப்படி யாரும் இல்லை. என்னைப் பாதித்த ஆளுமை என்றால் நான் என் அப்பாவைச் சொல்வேன்.

(2013ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்படவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள கிம் கி டுக் வந்தபோது தி இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட மிகச் சுருக்கமான நேர்காணல்)