Wednesday, May 25, 2011

ஒரு கணத்தின் நூற்றாண்டு அனுபவம்

மரபை உடைத்தெழுந்த முயற்சிகளுக்குப் பிறகு எண்பதுகளில்தாம் நவீனக் கவிதை அதன் முழுமையான வடிவத்தை எய்தியது. கவிதையின் தொழில்நுட்பம் பற்றிய கருத்துரையாடல்கள் மூலம் ஆழம் மிக்க நேர்த்தியான கவிதைகள் அப்போது வெளிவரத் தொடங்கின. வெறும் அனுபவங்களையல்லாமல் அவ்வனுபவங்களின் உளப்பதிவுகளை அத்தலைமுறைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் வெளிப்படுத்தினர். அவர்களுள் முக்கியமானவர் தேவதச்சன். அவரது ஹேம்ஸ் என்னும் காற்று சமீபத்தில் உயிர்மை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நவீன மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு புதிய பரிசோதனைகளை இத்தொகுப்பில் முயன்றிருக்கிறார்.


நாம் கடக்கும் சிறுகணங்களில் உணரும் ஒரு நூற்றாண்டுக் காதலை, ஒரு நூற்றாண்டு வன்மத்தை வெளிப்படுத்தும் வடிவமாகக் கவிதை இருக்கிறது. அந்த நூற்றாண்டு அனுபவத்தை இத்தொகுப்பின் முதல் கவிதை எத் துணை எளிதாக வாசகனுக்குக் கடத்துகிறது,


எப்போவெல்லாம்/மைனாவைப் பார்க்கிறேனோ/அப்போவெல்லாம் தெரிகிறது/நான்/நீராலானவன் என்று/அதன் குறுஞ்சிறகசைவில்/என் மேலேயே தெறிக்கிறேன் நான்.


இக்கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம். நிகழ்வில் ஒரு மைனாவைப் பார்க்கிறோம். அது நமக்குள் சிறகசைக்கும் வேறோர் அனுபவத்தை மீட்டெடுக்கிறது. நம்மீது நாமே தெறித்துக்கொள்வதென்பது விளக்க முடியாத பேருணர்வு. நாம் அறிந்த எளிய சொற்களாலானவைதாம் இக்கவிதையின் கட்டமைப்பு. ஆனால் அது நீர்ச் சுழியின் ஆதாரம் தேடி நம்மை அலையவைக்கிறது.


கீழைச் சிந்தனை மரபில் மெய்யியல் முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. அதன் மாபெரும் இலக்கியங்களிலும் இதை ஆழ்ந்துணரமுடியும். தமிழ் மரபிலும் இவ்வகையான கருத்தாக்கங்கள் இருந்திருக்கிறதென்றாலும் பிற் பகுதியில் முன்னிறுத்தப்பட்ட லாப நோக்குள்ள அடையாள அரசியலால் அவை மிகவும் அரிதாகிவிட்டன. ஆனாலும் ஆரம்பக் காலத்திலிருந்து நவீனக் கவிதைகளில் அவற்றின் கூறுகளை காண முடியும். தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகளின் மையச் சரடும் அதுதான். ‘சில வார்த்தைகளை’ என்னும் கவிதை, அசையாவிட்டாலும் அசை வற்று நீரோட்டத்தின் திசை மாற்றும் நம் தண்ணீர்பரப்பின் அடியில் இருக் கும் கற்களைப் பற்றிப் பேசுகின்றன.


தண்ணீருக்கு அடியில் இருக்கும் கற்களின்/சூரியன் வேறு/அவற்றின் மீது பறவைகள் வந்து அமர்வதில்லை. . . .
. . . பாறைகள் மக்குகள் அல்ல/மெல்லவே தம் கூர்மைகளை இழக்கின்றன/கூழாங்கல் ஆகின்றன/குழந்தை ஒன்று கைக்குள் மறைத்து வைத்திருக்கும்/இனிப்பு மிட்டாய் போல/பாதுகாக்கத் தொடங்குகின்றன /. . . .கண்வழியே பாய்ந்தபடி செல்லும் என்றுமுள்ள நீரோட்டத்தின் ரகசியங்களை.


இவ்வுலகம் சொற்களாலானது. உலகமென்பது நமக்குள் இருக்கும் கட்டமைப்பு. சில சொற்கள் உருவாக்கும் சித்திரமும் ஒரு சித்திரம் உண்டாக்கும் சொற்களும் நம் நீரோட்டத்தின் ஆழத்தில் கிடக்கும் கூழாங்கற்கள். இக்கவிதையில் ‘தண்ணீருக்கடியில்’ எனக் குறிப்பது நம் பால்யத்திலிருந்து நமக்கு நிகழ்ந்த, நாம் கடந்த காட்சிகளின் தொகுப்பு. ‘நீரோட்டம்’ என்பது கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் காட்சிகள். பால்யத்தின் தொகுப்பிலிருந்து கட்டமைக்கப்படும் நம் ஆளுமைதான் நீரோட்டத்தின் திசையைத் தீர்மானிக்கின்றன. அவ்வெளியில் பாயும் அந்நிகழ்வுகளின் ரகசியங்களையும் பாதுகாக்கத் தொடங்குகின்றன.


ஓணான் என்னும் கவிதையும் இவ்வகையானதுதான்,


வீட்டின்/முன்கதவு இரும்புக் கிராதியில்/செங்குத்தாய் படிந்து/நின்றுகொண்டிருந்தது ஓணான் ஒன்று/மெல்லவே கதவு திறந்து/வீட்டினுள் நுழைந்து/தூங்கிவிட்டேன்/காலை எழுந்து/கதவை நெருங்குகையில்/அங்கேயே அச்சு/அசைவற்று நின்றுகொண்டிருந்தது/ஓநான்.
இதிலுள்ள சொற்பிரயோகத்தை நுட்பமாகக் கவனிக்க வேண்டும். முதலில் ‘ஓணான்’ என்றும் பிறகு ‘ஓநான்’ எனவும் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. வேறொரு நானுக்குள்ளே நாம் கடந்து செல்கிறோம்.


நான் இப்போது சிறுபையன் இல்லை/ஓணானைக் கல்லால் அடிக்கும்/வயதையும் கடந்துவிட்டேன்/ராமருக்கு சிறுநீர்பானம் கொடுத்த அதன்மேல் கோபமும்/போய்விட்டது. . .


இவ்வரிகளில் சுவாரஸ்யம் அளிக்கும் இக்கவிதை, இறுதியில் மிக ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.


உவமை, உருவகம் என்பதைக் கடந்து இப்போது இவை இரண்டிற்கும் இடைப்பட்ட படிமம் நவீனக் கவிதையில் முக்கியமாக வடிவமாக முன்னிறுத்தப்படுகிறது. வாசகனைச் சார்ந்து, சூழ்நிலை சார்ந்து வெவ்வேறு நிறத்தை இவ்வடிவம் அளிக்கிறது. இது கவிதைக்குப் பன்முகத்தன்மையை அளிக்கிறது.


கடற்கரையைப் பார்க்கும்போதெல்லாம்/ நான் ஏன் ஒரு மீனைக் கற்பனை செய்துகொள்கிறேன். . . எனத் தொடங்கும் கவிதையையும் இவ்விதமாக அவதானிக்க முடிகிறது.


சிறைச்சாலைச் சுவர்களைப் பார்க்கும்போது சுதந்திரத்தை / சுதந்திரத்தைப் பார்க்கும்போது உன்னை/ உன்னைப் பார்க்கும்போது கடற்கரையை. இதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ‘உன்னை’ என்பது பிறரையல்ல. தன்னை, தான் தேடும் மெய்யுணர்வையே சுட்டுகிறது.


திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கிளர்ச்சியும் வடிவ நேர்த்தியும் மட்டும் கொண்டவையல்ல தேவதச்சனின் கவிதைகள். அவை தன் எளிய மொழியால் பற்பல வாசல்களைத் திறந்து, சிலருக்கு நிகழ்வை, சிலருக்கு அந்நிகழ்வைத் துளைத்துச் செல்லும் பேரனுபவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.


உடைகிறது கண்ணாடி டம்ளர்/அழகிய இளம் பெண்துறவியைப் போல்/ இருந்த அது/அல்லும் சில்லுமாய். . ./சுத்தம் பண்ணுகையில்/விரல் கீறி/ குருதி கொப்பளிக்கும் என்றாலும்/நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை/போட்டு உடைத்துவிட்டது என்றாலும்/இனிமையாகவே இருக்கிறது/ளிங் ஒலி.


இக்கவிதையை ஒரு க்ஷிவீsuணீறீ வீனீணீரீமீ வடிவத்தில் அமைத்திருக்கிறார். அழகிய இளம் பெண்துறவியைப் போல் என்னும் உவமை சிறப்பான காட்சிப்படுத்தல். இதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் வேற்றுமை உருபைத் தவிர்த்திருக்கலாம். நீர்மையின் அந்தரங்க ரகசியம் என்னும் வார்த்தையும் வசீகரிக்கிறது.


மொழி என்னும் கவிதையில், . . .விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றின்/இரும்புச் சிதறல்கள் அதில்/நேற்றைய மழை தேங்கியிருக்கிறது/ஆனால் நான்/ தனியாக இல்லை நல்லவேளை/ என் எண்ணங்கள் எப்போதும் கூட இருக்கின்றன. . .


இப்படிமம் சிலாகிக்கவைக்கிறது. கொண்டாட்டமாகத் தொடங்கும் இக்கவிதையின் மொழி அவருடையதல்ல. கூட இருக்கும் எண்ணங்களும்தாம். தேம்பலும் கொண்டாட்டமும் நமக்குத் தொடர்பில்லாததென்றாலும் கூச்சலிட்டுக்கொண்டாடுகிறோம். மருகி அழுகிறோம். இம்மொழி யாருடையது? ஆரம்பம் கவிதையின் ‘சமூகப் புன்னகை’ ‘அமுத அதிர்வுகள்’ என்னும் பயன்பாடுகள் வாசிப்பிற்குப் புதிதாக இருக்கின்றன.


தன்னோடான, பிறரோடான, சமூகத்தோடான அனுபவங்களின் தொகுப்பான இக்கவிதைகள் இவற்றுக்குள் இயல்பான மொழியால் வெவ்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.


கடந்து செல்லும் அனுபங்களில் சூல்கொள்ளும் இக் கவிதைகள் அவிழும் அந்தக் கணங்களிலே தோய்ந் தெழுபவரான தேவதச்சன், கவிதைகளை இத்துணை அவசரமாகத் தொகுப்பதைத் தவிர்த்திருக்கலாம். நிறைய பிழைகள். வடிவமைப்பும் சீரின்றி இருக்கிறது. அவை வாசிப்புக்குத் தடையாக இருக்கின்றன. இதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


ஹேம்ஸ் என்னும் காற்றுகவிதைகள்
ஆசிரியர்: தேவதச்சன். பக். 56 விலை ரூ.35வெளியீடுஉயிர்மை பதிப்பகம்11/29, சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம், சென்னை- 18

0 comments: