Sunday, March 27, 2011

காலச்சுவடு கவிதை

கவிதை
மண்குதிரை
ஓவியங்கள்: ரவி

வெண்கடலின் சிவப்பில்
நாட்கள் உறைந்துபோகின்றன
இலைகள் உதிர்த்த
முதல்மரத்திலிருந்து
வருடங்கள் உதிர்ந்துவிழுகின்றன
அமிர்தம் தேடியலையும்
ஆதிசேஷன்
உன் முனகலின் தெறிப்பில்
படமெடுத்து ஆடுகிறான்
இன்னும் விழித்துக்கொள்ளாத
நம் ஆழங்களின் சிப்பி
நூற்றாண்டுகளை விழுங்கிச் செரிக்கிறது
மனிதர்கள் அழிந்து மனிதர்கள் தோன்றுகிறார்கள்
சமுத்திரம் குடித்த வெண்குதிரை உமிழ்ந்து
உருவாகிறது ஒரு மகா சமுத்திரம்
காற்று திணறுகிறான்
காலன் நடுங்குகிறான்
சூரியன் நடந்து நடந்து சோர்ந்துபோகிறான்
தேவர்கள் யாகம் வளர்த்துத் தோல்வியடைகிறார்கள்
பதற்றமடைந்த கடவுளரின் தந்தை
இறுதியாக
நம் கதவு தட்டத் தொடங்கிவிட்டார்

(Inspiration of KA by Roberto Calasso)


....

இரவை உண்டு
பகலைப் பருகி
நடந்துகொண்டிருக்கிறேன்

என்னை ஏன் பின்தொடர்கிறாய்?

ஓடும் நீர்ப்பரப்பினுள்
மறைத்துவைத்திருக்கும்
என் கூழாங்கல்லை
அபகரிக்க முயல்கிறாய்

என்னை நெருங்க முடியாது
நான் சொற்களுக்குள் மறைந்துகொள்வேன்

கட்புலனாகாத அந்த மலைகளுக்குப் பின்னே
காத்திரு
நானே உன்னைத் தேடிவருவேன்
அப்போது என்போல்
என்னை நிராகரித்துவிடாதே.

..........

பல்லாயிரம் ஆண்டுகள்
பழமையானது மலர்கள்
விழுந்தோடும் நீர்வீழ்ச்சியும்

பல்லாயிரம் ஆண்டுகள்
பழமையானது ஜீவன்
ஊர்ந்து செல்லும் எச்சமும்

பல்லாயிரம் ஆண்டுகள்
பழமையானது சமுத்திரம்
மிதக்கும் தாமரை இலையும்

பல்லாயிரம் ஆண்டுகள்
பழமையான காட்சிகளிலிருந்து
பிறந்துகொண்டேயிருக்கிறேன் நான்.


....

வாகனங்கள் விரைந்துகொண்டிருக்கின்றன

உற்சாகமான பாடலை
உச்சரித்தபடி ஆப்பிரிக்க இளைஞர்கள்
கடந்துசெல்கிறார்கள்

காத்திருந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள்
இரு கன்னங்களிலும்
முத்தமிட்டு முகமன் கூறிக்கொள்கிறார்கள்

நகரும் ஓர் அங்காடியில்
தக்காளி விற்பனைத் துரிதமாக நடக்கிறது.

எந்தச் சலனமும் இல்லாமல் இயங்கும்
இச்சாலையில்

தன்னுள் உண்டாக்கிய
ஒலி அதிர்வின் நினைவிற்காக
மரணமடைந்திருந்த ஒரு பறவையை
குழந்தையின் பிடிவாதத்தோடு
எழுப்பிப் பதற்றமடைகிறதென் காற்று.


.........

o

வினோத விலங்காக உருமாறிய
எல்லோரும்
வீதியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்

பார்வை இழந்தவனின் அச்சத்தோடு
வாகனங்கள்
ஊர்ந்து செல்கின்றன

ஒரு குடியானவன்
கவலைகொள்கிறான்

சந்தையிலிருந்து திரும்பும்
எளிய மனிதர்கள்
கடவுளைச் சபிக்கிறார்கள்

சேமித்துவைத்திருந்த கிழங்குகள்
தம்மைத்தாமே உண்ணத் தொடங்குகின்றன

நேரத்திற்கு முன்பே
அங்காடிகள் தாழிடப்படுகின்றன

இரவின் கைகள் நீளும் முன்
தத்தமது கூட்டுக்குள்
அடைந்துகொண்டு
எல்லோரும் தேவனை வேண்டிக்கொள்கிறார்கள்

பிரார்த்தனைக்கு உகந்த
ஞாயிற்றுக்கிழமை காலையில்
தேவதூதனைப் போல்
மீண்டெழுந்து
சாத்தானின் பிடியிலிருந்து
அவர்களை விடுவிக்கிறது சூரியன்

தோல்வி முகங்கொண்டு
விலகி மறைகிறது
மொரீசியஸின் பனிக்காலம்.


| காலச்சுவடு |


1 comments:

Vel Kannan said...

வாழ்த்துகள் நண்பா
எப்பொழுதும் போல் அடர் செறிந்த கவிதை