தமிழில் உரைநடை வடிவம் மேற்குலகிலிருந்து அறிமுகமாகியிருந்தாலும் அதன் நவீனக் கூறுகள் நம்முடைய சொல் வழக்குக் கதைகளில் புதைந்துகிடக்கின்றன. த. அரவிந்தன், இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளையும் வெவ்வேறு கூறுகளைக் கொண்டமைத்துள்ளார். முதல் தலைமுறைக் கதைகளில் ஸ்திரமான ஒரு கதைசொல்லி அமர்ந்திருப்பார். பிறகு உரையாடல் மிகுந்த தொனி. இப்போது உரையாடல் மலிந்து முற்றிலும் விவரணைகள் மிகுந்த தொனி. இவற்றைத் தவிர்த்து அரவிந்தன் தனக்கெனப் புதிய தொனியைக் கொண்டிருக்கிறார். அவர் தூரிகையின் ஓட்டத்தில் புலப்படும் சித்திரம் அவதானிக்க முடியாத வேறு உலகில் நம்மை நிறுத்திவிடுகிறது. கதைமொழியின் நுட்பங்கள் வியக்கவைக்கின்றன. சில குறியீடுகளில் அங்கதச் சுவை மிதக்கிறது. யதார்த்தமான கதைகளும் காத்திரமான கேள்விகளை முன்வைக்கின்றன.
இன்றைய செய்தி ஊடகங்கள் வணிக நிறுவனங்களாகக் குறுகிப்போய்விட்டன. தங்கள் கட்டங்களுக்குள் செய்திகளைப் ‘பொட்டலம்’ மடிக்கிறார்கள். இத்தொகுப்பின் முதல் கதை, ஊடகங்களின் வேறொரு பக்கத்தைப் பேசிச் செல்கிறது. புதைமனங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் குற்றறிவியலாளருக்கு அனுப்பப்படும் கடிதங்களின் தொகுப்பே இக்கதை. இக் கடிதங்களில் இதழியலாளரான பெனீட்டாவின் கடிதம் சுவாரஸ்யமானது. ‘சரித்திரம் படைக்கும்’ கனவுகளோடு இதழியல் பணிக்கு வருபவள் கேஎம்சிக்கும் அரசுப் பொது மருத்துவமனைக்கும் செய்தி சேகரிக்கப் பணிக்கப்படுகிறாள். மரணச் செய்தி எதுவும் உண்டா என்பதை விசாரிக்கும்போது, ‘கேஎம்சியில் எதுவும் விசேஷம் உண்டா?’ என்று கேட்பது வழக்கமாம். இழவுச் செய்தி அவளுக்கு விசேஷச் செய்தியாகிவிடுவதையும் நாளிதழ் வாசகனின் கிளர்ச்சிக்காக இழவு வீட்டில் - இறந்தவரின் புகைப்படத்தைத் - திருடத் துணிந்ததையும் தன் அக்காவிடம் தெரிவிக்கும் பெனீட்டாவின் கடிதம் மூலம் விரியும் காட்சிகள், ஊடகச் சூழல்மீதான விமர்சனமாக எழுகின்றன. இச்சேகரிப்பில் உள்ள நீதிபதியின் இரண்டாம் மனைவி அதிதியின் கடிதம், தன் காதல் கணவனின் வன்கலவியின் உக்கிரத்தையும் தாங்க முடியாமல் பீறிட்டெழுந்த மூர்க்கத்தில் நீதிபதியைக் கொன்ற வன்மத்தையும் விவரிக்கிறது. கட்டாயமான கருக்கலைப்பால் பெருக்கெடுக்கும் அதிதியின் ரத்தம் நம் மூளைக்குள் படிந்துவிடுகிறது. வெளிவர முடியாமல் அவள் யோனியில் சிக்கிக்கொள்ளும் துணுக்கு குரல்வளையை அடைக்கிறது. சிகிச்சையிலிருக்கும்போது மரணமடையும் அதிதியின் செய்தியைப் பெனீட்டா சேகரிக்கிறாள். பெனீட்டா மர்மமான முறையில் தன் அறையில் தொங்கும் செய்தியை, அவளே சொல்வதுபோல் ‘வேறொரு பத்திரிகையின் செய்தியாளர் முத்து’ எடுத்திருப்பார்போலும். நம் மனம் இரு கூறுகளால் ஆனது. சமூகக் கட்டமைப்பு. இவற்றில்தான் நீதி, அநீதி, வரலாறு, பண்பாடு, அடையாளமும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அகமென்பது மெய்ம்மையின் தேடல். ‘உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்களி’ன் குறியீடு இதுவல்ல என்றே அவதானிக்க முடிகிறது. இதில் நாக்கு - உள்நாக்கு இவற்றிற்கிடையில் யுத்தம் நடக்கிறது. இப்புனைவு தமிழுக்குப் புதிது. உறங்கும் தலைவன், தலைவி, குழந்தை ஆகியோரின் வாயிலிருந்து எழும் மூன்று உள்நாக்குகளின் உரையாடல் பிரமிக்கும் கதையாக விரிவுகொள்கிறது. உள்நாக்குகளுக்கென்று புதிய உலகமொன்றைப் படைத்திருக்கிறார். அவர்களின் குருஷேத்திரம் வெற்றியடைந்தவுடன் மாநாடு நடத்துகிறார்கள். கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. தீர்மானம் நிறை வேற்றப்படுகின்றன. பழைய நினைவுகளை ஏக்கத்துடன் துழாவும் கதை தமிழுக்குப் புதிதல்ல என்றாலும் இத்தொனி புதிதுதான். லண்டனிலிருந்து wiki-mapia வழியாகத் தன் ஆனந்தத் தாண்டவபுரத்துக்குப் பிரயாணிக்கும் மாடஷின் ஏக்கங்கள் நம்மையும் நினைவில் ஆழ்த்துகின்றன. கிராம வாழ்வில் குளம் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். எல்லாக் குளங்களிடமும் பல கதைகள் இருக்கும். ஆனந்தத்தாண்டவபுரம் சின்னக்குளமும் தன் கதைகளுள் ஒன்றைச் சொல்கிறது. கணினி இயக்கிக்கொண்டிருக்கும் பேத்திகளிடம் தன் சின்னக்குளத்தைக் காண்பிக்குமாறு மாடஷ் சொல்லும் இடத்துக்கான உவமை சிலாகிக்க வைக்கிறது. ‘சிறிதாய்த் தலைதூக்கி நீந்திப்போகும் தண்ணீர் பாம்புபோல் மெல்லத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் மாடஷ்.’ ‘சேற்று எரிமலை’ என்னும் சொல்லிலிருந்து விரிந்திருக்கும் ‘பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்’ புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. மனஎழுச்சியளிக்கும் ‘சொற் புணர்ச்சியின் சொற்திரளி’ன் காட்சிகள் துலக்கமாகாமல் வாசிப்புக்குத் தொனியே இடையூறாகிறது. ‘மன்னியுங்கள் தோழரே’ கதையின் உத்தி அவ்வளவு உவப்பானதாக இல்லை. ‘மூடுமணல்’ முக்கியமான கதை. ஆனால் அதில் செறிவான மொழிதல் இல்லை. ஓர் அனுபவம் நம்மைப் பாதிக்கிறது. படைப்பாளன் அந்தக் கணத்துக்காகத்தான் ஒவ்வொரு கணத்திலும் வேர் பரப்பி நிற்கிறான். ஆனால் நிகழ்வுகள் எல்லாம் படைப்பாகி விடமாட்டா. இந்த நிகழ்வில் இருக்கும் உண்மை வாசகனை நோக்கி வரவில்லை. உணர்ச்சிகரமான தருணங்களில் பிர யோகிக்கப்பட்டிருக்கும் உவமை தவிர்க்கப்பட வேண்டியது. வழக்கொழிந்துவிட்ட பிரயோகங்கள் கதைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சில கதைகள் செம்மை கோரி வலுவிழந்து நிற்கின்றன. புத்தக வடிவமைப்பும் வாசிப்பதற்குத் தடையாக இருக்கிறது. எளிய வாசகன் நுழைவுக்கான சாத்தியத்தை அரவிந்தன் ஏற்படுத்தித் தர வேண்டும். இது கவனிக்கப்பட வேண்டியதாகும். ‘ இறுதி எல்லையைத் தொடவே முடியாதோ என்று கருதிய நிலையிலேயே திருத்துவதை நிறுத்திக்கொண்டு’ அரவிந்தனே வெளியிட்டிருக்கும் அவரது முதல் தொகுப்பை அவ்வகையிலேயே வரவேற்கலாம். | |
| நன்றி : காலச்சுவடு |
Tuesday, January 25, 2011
நவீனத் தூரிகையின் கற்பிதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment