
மைனா திரைப்படம் ஒரு பார்வை
சொற்களால் ஆனாது இவ்வுலகம். இங்குள்ள வரலாறும் பண்பாடும் நீதங்களும் அநீதங்களும் சொற்களால் கட்டமைக்கப்பட்டவை. சொல்லுக்குள் அடங்காதவை எதுவுமில்லை, அதன் விளைவுகள் தவிர.
சொற்களை வெறுப்பவராக இறுக்கமான முகபாவம்கொண்ட கிளைச் சிறையின் கண்காணிப்பாளரான பாஸ்கரின் வீட்டில் தொடங்குகிறது மைனாவின் முதல் காட்சி. சொல்லே உருவான அவரது மனைவியின் - அவளுடைய கூட்டுக்குடும்ப உறுப்பினர்களுடனான - தொலைப்பேசிப் பேச்சு அதன் முதல் உரையாடல்.
அடுத்த காட்சியில் சொற்களால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாத சுருளி கிளைச் சிறைக் கைதியாக அறிமுகமாகிறான். வெளியே சிறுவர்களின் விளையாட்டிலிருந்து தப்பிவந்த பந்துடன் சுவரில் எழுத்தாக இருக்கும் அரூபமான தன் மைனாவுடன் விளையாடி மகிழ்ந்துகொண்டிருக்கிறான்.
இந்த மைனா, சுருளி ‘மாகாராஜன்’, சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் இம்மூவரும் கதையின் முக்கியமான மாந்தர்கள். இக்கதையின் மையச் சரடுபோல் சிறைக் காவல்அதிகாரியின் பாத்திரமான ராமையா பலம் சேர்க்கிறார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் தொடங்கி அதற்கு அடுத்த நாள் முடியும் சவலான இக்கதையை மிகத் துல்லியமான திரைக்கதையின் மூலம் சுவாரஷ்யமாகச் சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன். இந்த மூன்று நாளுக்குள் ஒரு நூற்றாண்டுக் காதலும் துரோகமும் நெகிழ்வும் வன்மமும் ஒரு பெரும்மழைபோல் பெய்து ஓய்கின்றன.
கிளைச் சிறையில் அரூப மைனாவோடு விளையாடிக்கொண்டிருக்கும் சுருளியின் சொல்லிலிருந்து அவிழ்கிறது அவனது பால்யச் சித்திரம். இந்தச் சட்டம் முற்றிலும் புதிய சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் அபாரமான உழைப்பால் அற்புதமான காட்சியை நம் முன்னே நிகழ்த்துகிறார். சுருளி, நிரதரவான மைனாவுக்கும் அவளுடைய அம்மாவான குருவம்மாளுக்கும் ஓர் எளிய வாழ்வை ஏற்படுத்தித் தருகிறான். குருவம்மாளின் அதீதமான சொற்களால் மைனாவுக்கு எல்லாமும் தாந்தான் என்று உணர்கிறான். வாலைக் குமரியான மைனாமீது காதல் கொள்கிறான். அவிழ்ந்து பெண்ணான மைனாவின் உதட்டுச் சுழிப்பில், ஓரப் பார்வையில், பருக்கள் தங்கிய கன்னக் கதுப்பில், கோடேறிடாத வெள்ளை விழிகளில் உன்மத்தம் கொள்கிறான். சுற்றத்தோர் விதந்தோம்பும் அழகியான மைனாவின் எதிர்கால வாழ்வு குறித்து சிரத்தைகொள்ளும் குருவம்மாள் சுருளியை நிராகரிக்கிறாள். புறக்கணிப்பில் தன்னிலை மறந்து சந்நதம்கொண்டு குருவம்மாள்மீது பாய்கிறான். கொலை முயற்சி வழக்குப் பதிவாகிச் சிறைச்சாலையில் கிடக்கிறான்.
மற்றோர் பாதி, அடுத்த நாள் தீபவாளிக்காக ரோட்டரி விழாவிற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் கிளைச் சிறை. பாஸ்கர் உள்ளே நுழையும்போது இன்கேலர் உபயோகிக்கும் காவலர், விழாவிற்குக் குந்தைகளை அழைத்து வந்திருக்கும் மற்றோரு காவலர், ஓய்வுபெறவிருக்கும் இன்னொருவர் என சிறைச் சாலையின் வேறொரு முகம் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில்தான் ராமையாவும் அறிமுகமாகிறார். விழாவின் சிறப்பு விருந்தினரின் உரையிலிருந்து சொற்களாலான ஒரு வாக்கியம் - ‘எல்லோரும் சுழ்நிலைக் கைதிகள்தாம்’ - அந்தச் சட்டகங்களில் ஊடே மிதந்து செல்கிறது. அதற்கு முந்தைய காட்சியில் தன் மனைவியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு விழா நிகழ்ச்சியிலிருந்தவாறே பாஸ்கர், தான் இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாகத் தாழ்ந்த குரலில் சொல்கிறார்.
நீதிமன்றக் காவலிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் விடுதலையாகும் சந்தோசத்திலிருக்கும் சுருளி, மைனாவிற்குத் தீபாவளி அன்றே திருமணப் பெண்ணழைப்பு நடைபெறவிருக்கிறது என்பதைத் தன் நலம் விரும்பும் சிறுவன் மூலம் அறிகிறான். அதனால் ரோட்டரி விழாவிலே தப்பிவிடுகிறான். விசாரணைக் கைதியொருவன் தப்பிச் செல்வதிலிருந்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் சுவாரஷ்யமாக நகர்கின்றன. உயரதிகாரியிடம் சிறப்பு அனுமதி பெற்றுத் தீபாவளி விடுமுறைக்குள் அவனைக் கைது செய்துவிடும் முஸ்தீபுகளோடு கிளம்புகிறார்கள் பாஸ்கரும் ராமையாவும்.
தேனி மாவட்டம் குறங்கணி வட்டத்திற்குட்பட்ட செவங்குடி, ஜீப்போக்குவரத்து தவிர முற்றிலும் தொடர்பற்ற மலைக் கிராமம். இத்தேடும் பயணத்தின் சூழல், திரைக்கதையின் முக்கியமான அங்கமாகி சுவரஷ்யமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
சுருளியைக் கைதுசெய்து அழைத்துவரும்போது அவன் தன்னுடன் மைனாவையும் அழைத்து வருகிறான். திரும்பும் அந்த ஜீப் பயணத்தில் அவர்கள், தங்கள் எதிர்கால வாழ்வு குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். மைனா தனக்கு ஆப்பம் சமைக்கத் தெரியுமென்கிறாள். ஆப்பம் விற்று மாதம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என கணக்குப் போடுகிறார்கள். காதல் பருவம் கனவுகளால் ஜீவிக்கும் பருவமல்லவா? அவர்கள் தங்கள் எளிய வாழ்வு பற்றி சிறிய கனவு காண்கிறார்கள். அதில் ஆப்பக் கடை திறக்கிறார்கள். வீடு கட்டுகிறார்கள். மனம் மாறி வரும் குவமம்மாளை ஏற்றுக்கொள்கிறார்கள். நிதர்சனம் ராமையாவிடமிருந்து நகைச்சுவையாக வெளிப்படுகிறது.
அதிகம் சொற்களைப் பிரயோகிக்காமல் இறுக்கமாக இருக்கும் பாஸ்கர் மூணாறு உணவகத்தில் உதிர்க்கும் சொற்கள், சுருளி-மைனாவின் வாழ்வு குறித்த நம்பிக்கைகளை தகர்க்கிறது. அதன் ஊடே பயணிக்கும் பார்வையாளனும் கலவரமடைகிறான். தலை தீபாவளி கொண்டாட முடியாததாலும் தன் மனைவியிடமிருந்து/மனைவி வீட்டிலிருந்தும் வரும் அழைப்புகளாலும் அடையும் மன உளைச்சலாலும் ஒரு இன்பச் சுற்றுலா பயணம்போல் சுருளியும் மைனாவும் இதைக் கொண்டாடி வருவதை ஏற்கமுடியாமல் தெறிக்கின்றன சொற்கள். இதேபோல் குழந்தைகள் இல்லாத ராமையாவுக்கும் தன் மனைவி செந்தாமரையுடன் கொண்டாட முடியாத வருத்தம்.
அதுவரை பசுமையாக இருந்த சட்டகங்களில் கருமை சூழ்கிறது. ஏதோ அசாதாரணம் நிகழப்போவதாக காட்சிகள் விரைகின்றன. சுருளியும் மைனாவும் தப்பிக்கிறார்கள். பாஸ்கர் ஆவேசமடைகிறார். ராமையா ஒரு சூழ்ச்சி பின்னுகிறார்.
நால்வரும் திரும்பும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. இப்படத்தின் ஒரு இறுதிக் காட்சிபோல் பார்வையாளனை பீடிக்கச்செய்யும் இந்த விபத்துக் காட்சியில் சுருளி, பாஸ்கரையும் ராமையாவையும் மீட்கிறான். எல்லோரும் நெகிழ்வுகொள்கிறார்கள். மீண்டும் கனவு துளிர்க்கிறது. யுகபாரதியின் சந்தோசமான பாடல் விரிகிறது.
அதன் பிறகான ஒவ்வொரு காட்சியும் சிறிய பதற்றத்துடனே நகர்கின்றன. சுருளி சிறைக்குச் செல்கிறான். அவன் நாளை விடுதலையாகிவிடுவான், கனவுகள் நிஜமாகிக்கொண்டிருப்பதாக மைனா காத்திருக்கிறாள். சிறு தொடுதலில் உடைந்துவிடக்கூடிய ஒரு நீர்க்குமிழ் சுற்றிகொண்டிருக்கிறது.
இப்படத்தின் இறுதிக்காட்சியில் சுருளியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக அவனோடு பாஸ்கரும் ராமையாவும் ஆட்டோவில் வரும்போது ரயில்வே கிரஸிங் அருகே ஒரு பெண்பிண்ம் கிடப்பதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் முதியவர் கூறுகிறார். பாஸ்கருக்கு, சண்டையிட்டுச் சென்ற மனைவி நினைவுக்கு வருகிறாள். சென்று பார்க்கும் ராமையா அதிர்ந்து, ’பாஸ்கர் சார்’ என்றழைக்கிறார். சுருளி, பாஸ்கர் இருவரும் ஓடி வருகிறார்கள். பார்வையாளர்கள் மிகுந்த வலியில் ஆழ்ந்து திரும்புகிறார்கள். இதற்குப் பிறகும் தொடரும் காட்சிகள் வலிந்த புனைவு.
இப்படத்தில் பாஸ்கரின் மைத்துனராக அறிமுகமாகியிருக்கும் கலை இயக்குனர் வைரபாலன், அவர் மனைவியிடம் “ இந்தச் சேலல கொஞ்சம் எடுப்பாதாண்டி இருக்கே” எனச் சொல்லும்போது நிகழும் காதல், இக்கதையின் மையப் பாத்திரங்களான சுருளி-மைனாவிடம் நிகழவில்லை. எதிர்பார்ப்புகளோடு விரியும் சுருளியின் பால்யக் காட்சிகள் ஏமாற்றமளிக்கின்றன. இது போன்ற சில குறைகள் இருந்தாலும் நுட்பமான கதைப்பின்னலுடைய பிரபு சாலமனின் இந்த மைனா சமீபத்தியத் தமிழ்த் திரையில் நிகழ்ந்த முக்கியமான முயற்சி.
-ñ‡°F¬ó
6 comments:
நல்ல விமர்சனம்!!
நன்றி சக்தி.
நல்லா இருக்கு மண்குதிரை விமர்சனம்.
என்னால் சில காட்சிகள் கதையமைப்பு பருத்தி வீரனுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை நண்பா
ஒரு சிறுகதையாளனின் நேர்த்தியுடன் படத்தின் கதையையும், அது தரும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். சிறப்பு.
பொதுவாக நோக்கம் கொண்டு தேடுவதில்லை.. இருப்பினும் தென்பட்டன, இவையும் இன்னமும். டைப்பிங்கில் வரும் தவறுகள்தாம், ஆயினும் களையலாம்.
மாகாராஜன்// நிரதரவான// விதந்தோம்பும்// குந்தைகளை// சுழ்நிலை// பெண்பிண்ம்//
thanks vel kannan
thanks for valuable comment athimulakrishnan
அருமையான விமர்சனம்
Post a Comment