Sunday, June 27, 2010

சுழன்று கொண்டேயிருக்கும் சக்கரங்கள் ; ஜெயந்தன்





















சமீபத்தில் நான் வாசித்த ஜெயமோகனின் அனல்காற்று, உரையாடல்கள் மிகுந்த ஒரு நாவலாகும். அந்நாவல் ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதை வடிவம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். தவிரவும் பாலுமகேந்திரா போன்ற தனித்த உளவியல் சிக்கலை முன் வைக்கும் இயக்குனருக்காக எழுதப்பட்டது என்கிற வகையில் அந்நாவல் சிறப்பானதுதான். ஆனால் நவீன கதையுலகு, உரையாடல்கள் மலிந்த, சூழல் விவரணைகள் மிக்கதாக இருக்கிறது. என்னை மிகவும் வசீகரித்த ஜே பி சாணக்யாவையும், நண்பர் திருச்செந்தாழையையும் உதாரணமாகச் சொல்லலாம்.

முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளின் தொனி வேறுவிதமான நேரடித்தன்மை கொண்டதாக இருந்திருக்கிறது. குறிப்பாக கிரா ஐயாவின் எழுத்து, ஊர் மடத்தில் ரெட்டினக்கால் போட்டுக் கிடக்கும் பரிச்சியமான கிராமத்தின் மனிதரின் பேச்சைப்போல் நெருக்கம் கொண்டது. அவருடைய நண்பரான கு அழகிரிசாமியும் பிடித்தமான குழந்தை மொழிக்காரர். தோப்பில் முகம்மது மீரானும் கிராவின் வழியிலே சிறந்த கதை சொல்லியாக உணர்கிறேன். மிகவும் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு நெருக்கமான சுயம்புலிங்கம். பிலேமிக் குட்டி வழியாக நெய்தல் நிலைத்தைப் பதிவு செய்த வண்ணநிலவன். ஞாபக்கிணறுகளின் படிக்கட்டுகளில் கூடுகட்டும் சிட்டுக்குருவி மொழிக்காரர் வண்ணதாசன். அலட்டலில்லாத் கதை சொல்லி பாவண்ணன். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

என்னளவில் இன்றைய நவீனக் கதையுலகின் சூழல் நம்முடைய இயல்பான வாழ்வியலிலிருந்து விலகியிருப்பதாக உணர்கிறேன். ஆனால், நம் முந்தைய தலைமுறை எழுத்துக்காரர்களில் பெரும்பாலோர், நாம் உழன்றுகொண்டிருக்கும் இந்த லெளகீக வாழ்க்கையைத்தான் தம் எழுத்துக்களில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜெயந்தனின்இந்தச் சக்கரங்கள்அவ்வகையானது.

அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக்கவுண்டருக்கு வயது 72”(துக்கம்). ”அத்தா, என் மோதிரம் காணாமப் போச்சு” (பாஷை) என ஜெயந்தனின் கதைகள் முதல் சொல்லிலே தொடங்கிவிடுவது சிறந்த வாசக அனுபவம். அவருடைய கதைகள், சொற்ச் சிக்கனத்துடன் இருப்பதுடன் எந்தப் புள்ளியும் கதையிலிருந்து வேறுபட்டிருக்காமல் கதையின் ஊடே பயணிக்கிறது. ”இந்தச் சக்கரங்கள்உரையாடல்கள் மிகுந்த எளிய வாசக அணுகுமுறையுடைய குறு நாவல். எனக்கு மிகவும் பிடித்த பிரபலமானபாஷையும் உரையாடல்களானது. அந்தச் சிறுகதை சிறந்த காட்சி வடிவம் மிக்கது. இக்தையை காட்சிப்படுத்த பாலுமகேந்திரா அதிக சிரமப்படிருக்கமாட்டார் என்றே எண்ணுகிறேன்.

ஜெயந்தன் தொடர்ந்து வெகுஜன இதழ்களில் இயங்கிய வந்ததாக அறிகிறேன். அவருடைய எழுத்தும் வெகுஜன தொனி கொண்டதாக இருப்பதால் இவர் எழுத்துக்களை அணுகுவதில் வாசகர்களுக்கு ஆரம்ப நிலைத் தடையேதும் இல்லை.

இந்தச் சக்கரங்களில், கனவில் லயித்துக் கிடக்கும் பெண்னாக கிருஷ்ணவேணி அறிமுகமாகிறாள். கிருஷ்ணவேணியின் பருவம் கனவுகளை சாப்பிட்டுக் கொண்டே ஜீவிக்கிற பிராயம். ஆனால் அவர்களுடைய வீட்டை வறுமை பீடித்திருக்கிறது. அவர்கள் பெற்றோர்களோ பரஸ்பர புரிதலின்றி எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச் சூழலிலிருந்து அவளை மீட்டுச் செல்ல ஒரு ராஜகுமாரன் வருவான் என அவள் கனவு கண்டுகொண்டிருக்கிறாள்.

இந்நாவலில் முக்கியமான காட்சியாக இதைச் சொல்லலாம், கிருஷ்ணவேணி கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கனவில் நிழலாடும் அப் பேரழகன் அவளை ரசித்துக் கொண்டிருக்கிறான். அவள் எதிர்பாராத கணத்தில் அவளை அணைத்துக் கொள்கிறான். இந்த இருவரும் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டவர்கள் என ஊரே மெச்சுகிறது. இவ்வேளையில் அவளுடைய பெற்றோர்கள் வாக்குவாதத்தில் அவள் அம்மாவிடமிருந்து தெறிக்கும் ஒரு சொற்றொடரால் இவளது கனவு உடைந்து சிதறுகிறதுஇன்னம் நான் போயிஅப்படிசம்பாதிச்சாதான் அப்புறம் நீ எதுக்கு”.

கனவுகளும் நம்பிக்கைகளும் எவ்வளவு நிதர்சனத்திலிருந்து விலகி இருந்தாலும் அவைகள் தரும் மயக்கம் நம்மை அந்த கணத்தில் சந்தோசப்படுத்துகிறது இல்லையா?

கிருஷ்ணவேணிக்கு திருமணம் ஏற்பாடாகிறது. மாப்பிள்ளைகள் பார்த்து விட்டுச் செல்கிறார்கள். அவளுடைய கனவில் நிழலாடும் அப் பேரழகன் அவளைக் கொள்ள வரவில்லை. அவள் விரும்பாத தோற்றம் கொண்ட மாப்பிள்ளைகளால்கூட வறுமையின் காரணமாக அவள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் தளர்வடைகிறாள். இறுதியாக ஜெயராமன் வருகிறான். அவன் மண்டிக் கடை கணக்குப் பிள்ளை. திருமணம் நடக்கிறது. அவள் நினைத்தற்கு மாறாக ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள் நுழைகிறாள். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. ’மாப்பிள்ளை லட்சாதிபதியாக இருப்பான் அப்படி இல்லை என்றாலும் இவளைக் கட்டிய பிறகு லட்சாதிபதியாகி விடுவான்என்கிற வடகரை ஜோசியனின் வாக்கு அவளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

சக்கரம் சுழல்கிறது. அவள் நினைத்தபடியே கூட்டுக்குடும்பம் சிதறுகிறது. ஊருக்கு வெளியே அவள் ஜாதகத்திற்கு உகந்த வீட்டில் மற்படியும் தொடங்குகிறார்கள். அவன் மண்டிக்குப் போகிறான். இவள் அரிசி வியாபாரம் செய்கிறாள். ஒரு வருடம் கழித்து ஒரு மாடு வாங்குகிறாள். ஒரு மாடு இரண்டாகிறது. இரண்டு மூன்றாகிறது. அவள் நிலை கொள்ளாது சந்தோசத்தில் திளைக்கிறாள். அவளுடைய கனவு எட்டி விடும் தூரத்தில்தான் என நிறைவு கொள்கிற சமயத்தில் அவள் கணவனை டி பி நோய் தாக்குகிறது. மூன்று மாடு ஒன்றாகிறது. அரிசி வியாபாரம் நின்றுவிடுகிறது.

அவளுக்கு நான்கு குழந்தைகள். மூத்த பெண் இவளுடைய லக்கனத்திலே ருதுவாகிறாள். ஜோசியன் வருகிறான். அவளும் அவள் அம்மாவைப் போல் கனவு காண்கிறாள். ஒரு மாடு இரண்டாகிறது. மூத்த பையன் வேலைக்குப் போகிறான். இளையவளும் ருதுவாகிறாள். மூத்தவளுக்குத் திருமணம் நடக்கிறது. மருமகன் வந்த யோகம் இரண்டுமாடுகள் இருபது மாடுகளாகப் போகிறது என நம்புகிறாள். அவளையும் டி பி தாக்குகிறது. இரண்டு மாடுகளும் இல்லாமல் போகின்றன. சக்கரங்கள் சுழல்கின்றன.

இது ஒரு குடும்ப நாவல். மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு சோக நாடகம் போல் தெரியும் இந்த ஆக்கத்தை தன்னுடைய நடையால் பரிகாசம் கலந்து சுவாரஷ்யமான நாவலாக்கியிருக்கிறார் ஜெயந்தன்.

லெளகீக வாழ்க்கையில் உள்ள சவால்களை சிறிய சொற்றோடரில் பதிவு செய்துவிடுகிறார், ”எந்த மூலையிலிருந்து எந்த மாயக்கை வந்து இருக்கிற காசைப் பிடுங்கும் என்று சொல்ல முடியவில்லை. குடும்பம் என்பது அட்சய பாத்திரத்திற்கு எதிர்ப்பதமாக இருந்தது. அட்சய பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறைவதே இல்லை. குடும்பத்தில் போடப்போட நிறைவதே இல்லை


''தங்கள் வறுமையை ஏதோ ஒரு பாவச் செயல்போல் பொத்திப் பொத்தி மறைப்பார்கள்இக் காட்சியை நாம் எல்லோரும் கடந்து வந்திருப்போம். அல்லது அதில் உழன்றுகொண்டிருப்போம்.

'அவளது அந்தக் கனவுகளும் நம்பிக்கைகளுமோ ஓர் உடலை அண்டி, அதை உண்டு முடித்ததும் வேறோர் உடலைத் தேடிப் போய்விடும் நோய்க் கிருமிகளைப் போல, தாயைக் கபளீகரம் செய்துவிட்ட திருப்தியில் இப்போது மகளை அண்டியிருந்தனஇப்படியாக இந்நாவல் முடிவில்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது.

9 comments:

Karthikeyan G said...

love this.. Publication name pls..

கிரகம் said...

சக்கரம் நாவல் பற்றிய தகவல் நன்றாகயிருந்தது.

நான் ஜெயமோகனின் 'அனல் காற்று' நாவல் படித்திருக்கிறேன். நாவலின் முடிவானது 'சதிலீலாவதி' படத்தின் முடிவைப் போலவே இருக்கும்.

நாவலை படித்தவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள்.

--கிரகம்.

மண்குதிரை said...

நன்றி கார்த்தி. தோழமை வெளியீடு முகவரி ஞாபகம் இல்லை விருபா அல்லது உடுமலையில் தேடினால் கிடைக்கும்

கிரகம், நன்றி நண்பரே

விஜய் மகேந்திரன் said...

.தோழமை,5D,பொன்னம்பலம் சாலை,K.K நகர்,சென்னை 78.
CELL:9444302967.
தோழமை பதிப்பாளர் பூபதி,எனது நண்பர்,மிகுந்த விருப்பத்துடன் கொண்டு வந்த குறுநாவல் இது.ஒரு நாவல் எழுதி தருவதாக சொல்லி எழுதவும் ஆரம்பித்தார்,ஜெயந்தன்,அவரிடம் இருந்து அந்த முற்றுபுள்ளி வராமல் இருந்திருந்தால் அந்த நாவல் நமக்கு கிடைத்து இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி,மண்குதிரை.

santhanakrishnan said...
This comment has been removed by the author.
மண்குதிரை said...

விஜய் மகேந்திரன்,
தங்கள் கருத்துக்க்கு நன்றி நண்பா

KarthigaVasudevan said...

ஜெயந்தனின் "நிராயுதபாணியின் ஆயுதங்கள்" தொகுப்பில் துக்கம் சிறுகதை வாசித்திருக்கிறேன்,சக்கரம் இன்னும் வாசிக்கவில்லை,சக்கரம் குறித்த உங்களது பார்வை எளிமை,கிருஷ்ண வேணிகளும் அவளின் கனவுகளும் நட்சத்திரங்களாய் பூமியெங்கும்.எண்ணத் தக்கவை அல்ல. யதார்த்தத்தை அதன் வெறுமையை கதைகளில் கையாள்வதில் ஜெயந்தனுக்கு நிகர் அவரே.பகிர்வுக்கு நன்றி மண்குதிரை .

மண்குதிரை said...

கார்த்திகா,

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

D.R.Ashok said...

பெரிய கவிஞர் D.R.Ashok பத்தி ஒன்னும் எழுதலையே ;)