
(புகைப்படம் நன்றி : என் மதிப்பிற்குரிய செழியன் அவர்கள்.)
"வேறன்ன வேல இருக்கு உனக்கு"
எளிய கேள்விதான்
என்னை இயக்கமிழக்கச் செய்கிறது
அலைவரிசைகளில் தாவித்தாவி
பசியாறாத சிட்டுக்குருவியைப் போல்
களைத்துத் திரும்புகிறேன்
உடனடியாக மீட்க வேண்டும்
என்னை.
நல்ல நகைச்சுவை படமாக இருந்தால் நல்லது.
கொஞ்சம் காமம்
பெண்களைத் தவிர்க்க வேண்டும்
நிழல்ப் படங்களே நெருக்கமானவை.
என் இருப்பும், இயக்கமும்
அர்த்தமற்றுப் போன
வீட்டிலிருந்து இறங்குகிறேன்.
வெயிலைப்போல்
கேள்விகளில் அடர்ந்து கிடக்கிறது
வெளி.
அத்தனை சுலபமல்ல
கேள்விகள் அடர்ந்த
சாலையைக் கடப்பதென்பது
சிறிய புன்முறுவலில்
மறைந்திருக்கும் கேள்விகள்,
குழந்தையின் அழுகையைப்போன்ற
வெகுளியான கேள்விகள்,
எதிரியின் ஆயுதத்தைப் போன்ற
கூர்மையான கேள்விகள்,
துரோகியின் வஞ்சத்தைப் போன்ற
அசூசையான கேள்விகள்,
குதறி இன்புறும்
அஃறினைக் கேள்விகள்.
பிரயோகிப்பது யாராகினும்
வலிகள் மாறுவதில்லை
கேள்விகள்! கேள்விகள்! கேள்விகள்!
கேள்விகள் இல்லாத உலகத்துக்குப்
புலம் பெயர வேண்டும்
எவ்வளவு முயற்சித்தாலும்
தாவி, என்மனதிலேறி
தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறது
பசியைப்போல்
ஓயாத இந்தக் கேள்விகள்.
16 comments:
பிறழ்வு கவிதை நன்றாக இருக்கின்றது.
//அத்தனை சுலபமல்ல
கேள்விகள் அடர்ந்த
சாலையைக் கடப்பதென்பது
//
உண்மை நண்பரே! ரணமான மனத்தின் வலி சொல்லும் கவிதை.
-ப்ரியமுடன்
சேரல்
மண்குதிரை,
எனக்கு மிகவும் நெருக்கமான, பிடித்த கவிதையிது.
இதில் விளக்கப்பட்டுள்ள மனநிலை எனக்கும் மிகப்பொருந்துகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல விதமான கேள்விகளால் அயர்ச்சியுறுபவன் நான். பிடிக்காதவற்றை பற்றி பேசுவதும், கேள்விகள் கேட்கப்படுவதும், வெட்டிப்பேச்சில் வீணடிப்பதும் சலிப்பு ஏற்படுத்துபவை.இவற்றிலிருந்து ஒதுங்கி விலகி நின்றால்,பிறழ்வாகத்தான் நம்மைப் பார்ப்பார்கள்.இதேமன நிலையை நானும் கவிதையாக்கிப்பார்த்தேன்.பிரசுரம் பெறாததால் விட்டுவிட்டேன்.
நல்லாயிருக்கு நண்பரே.
கவிதை அருமையாக இருக்கிறது
மண்குதிரை, கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
இந்தக் கேள்விகள் ஏற்படுத்துகிற வலி மிகக் கொடுமை. காதை செவிடாக்கிக் கொண்டு மௌனத்தை பதிலாக்குவோம். அந்தக் கேள்விகளை அந்தந்த கணங்களில் தூக்கி வீசியெறிந்துவிட்டு கடந்து கொண்டேயிருப்போம்.
பிரவின்ஸ்கா தளத்தில் இருந்த அந்தக் கவிதையை நான் ஏறகனவே முத்துவேல் அவர்களுக்கு குறிப்பிட்டிருந்தேன், மறுபடியும் இங்கு படித்ததில் மகிழ்ச்சி, மண்குதிரை பிரவின்ஸ்கா எழுத்தாளர் கழனியூரான் அவர்களின் புதல்வர்.
அடிக்கடி கேள்விகள் இப்படிப் படுத்துவதுண்டு....நல்ல வெளிப்பாடு...
அன்புடன் அருணா
அழுத்தமான கருத்துடைய சாதாரண மொழிக் கவிதைகள் எப்போதுமே அழகு.
"கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது சந்தேகமின்றி இந்த நிபந்தனையுடன் வெற்றுதாளில் நீ முன்னேற வேண்டும்."
-- நிக்கனார் பாரா
இந்த வரிகளை நான் கவிஞர். சுகுமாரன் அவர்களின் "பூமியை வாசிக்கும் சிறுமி "
கவிதை தொகுப்பில் , கவிஞர். சுகுமாரன் முன்னுரையில் வாசித்தேன்.
கவிஞர். சுகுமாரன் அவர்களுக்கு நன்றி சொல்லுவது மிகவும்
பொருத்தமாக இருக்கும் என்று நினைகிறேன்.
பிரியமுடன் ,
பிரவின்ஸ்கா.
சும்மா சொல்லக் கூடாது ... உங்கள் மொழி பிரயோகம் பிரம்மிக்க வைக்கிறது ...
முத்துராமலிங்கம், மிக்க நன்றி நண்பரே.
சேரல், உங்கள் ஊக்கத்துக்கும் நன்றி
முத்துவேல், அப்படியா? அதை நீங்கள் ப்ளாக்கில் பதிவிட்டால் நாங்கள் வாசிப்போம் அல்லவா? பிரதியிடுங்கள். அப்புறம் என்ன பதிவையே காணவில்லை. எழுதுங்கள் நண்பரே கத்திருக்கிறோம்.
யாத்ரா, அறிவேன். தனக்கென்று ஒரு தனித்த நடையை உருவாக்கிக் கொண்டு சிறப்பாக எழுதிவருகிறார். அவருடைய ப்ளாக்கில் உங்களுடைய கருத்துக்களைக் காணவில்லை? verfication problem? அதை நீக்குமாறு கேட்டிருக்கிறேன். உங்களுடைய ஊக்கம் அவரை உற்சாகப்படுத்தும்.
அருணா, மிக்க நன்றி !
காந்தி, தங்கள் ஊக்கத்துக்கும் நன்றி !
பிரவின்ஸ்கா, அப்படியா ? இப்போதுதான் கவனித்தேன். உணர்த்தியதற்கும் என் நன்றி.
கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் என் நன்றி.
நந்தா, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.
'வேறென்ன என்ன வேலை' இங்கே இன்னொரு 'என்ன' தேவையா...
/பெண்களைத் தவிக்க வேண்டும்/
தவிர்க்க? அல்லது தவிக்க விட வேண்டும்?
பாருங்கள், பிறழ்வாயிருந்தாலும் இப்படித் துல்லியமான பிறழ்வைத் தேடும் என்னை என்ன செய்ய :(
@ஜ்யோவ்ராம் சுந்தர்
உங்களைத்தான் எதிபார்த்துக் கொண்டிருந்தேன்.
நீங்கள் சொன்ன பிழைகளை நீக்கி விட்டேன்.
கவிதை எப்படி இருக்கிறது என்று சொல்லவில்லையே?
அருமையாய் இருக்கிறது
Kelvigalin mudivu......
Thedalin mudivu...
Miga miga arumai nanbare!
முரளிகண்ணன் மற்றும் விக்டர் இருவரின் ஊக்கத்துக்கும் என் நன்றி.
//எளிய கேள்விதான்
என்னை இயக்கமிழக்கச் செய்கிறது//
மிக ஆழமான வரிகள்.உண்மையும்.
திரு.செழியனின் இந்த புகைப்படம் பலமுறை பார்த்திருக்கேன்.
இந்த கவிதைக்கு மிகப்பொருத்தம்.
Post a Comment